Showing posts with label oz தமிழ் ஆளுமைகள். Show all posts
Showing posts with label oz தமிழ் ஆளுமைகள். Show all posts

Monday, 13 May 2019

OZ தமிழ் ஆளுமை - 1 - இராமலிங்கம். அம்பிகைபாகர் ( கவிஞர் அம்பி)

                     கவிஞர் அம்பி (SBS)

கீழ் வரும் தொடரை அழுத்தி SBS வானொலியில் 21.4.2019 அன்று ஒலிபரப்பான கவிஞர் அம்பி குறித்த சுருக்க விவரணத்தைக் கேட்கலாம்.


( அதன் முழுமையான எழுத்துப் பிரதி கீழே பிரசுரமாகிறது.)

1980ளில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த அம்பிக்கு இவ்வருடம் அகவை 90.


ஈழத்தைச் சேர்ந்த அம்பி என அழைக்கப்படும் இராமலிங்கம் அம்பிகைபாகர் இலங்கையில்  பிரித்தானியர்கால ஆட்சியின் போது அமெரிக்க மிசனறிமார்களின் ஆதரவோடு, யாழ்ப்பாணம் வந்து, தமிழ் கற்று, தமிழ்மொழி மூலம் வைத்தியநூல்களையும் தமிழ் வைத்தியர்களையும் உருவாக்கிய  டாக்டர் கிறீன் என்பாரைத் தமிழ் சமூகத்துக்கு இனங் காட்டியது மட்டுமன்றி அவரின் முத்திரை வெளியீட்டுக்கும் காரணராய் இருந்து, தமிழ் மக்களின் கவனத்தைத் தன்பால் திருப்பியவர்.

அதற்குச் சமனான வகையில் அவர் கவிதை உலகிலும் குழந்தைக் கவிஞன் என்றும் ஈழத்தின் தேசிகவிநாயகம் பிள்ளை என்றும் போற்றப்படுபவர்எளிமையும் தமிழின் அழகும் ஒருங்கே கூடியமையும் அவர் பாடல்கள் பல குழந்தைகளின் நாவில் இன்றும் தவழ்வன. யாழ். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பாடசாலைக் கீதம் ஐயா அவர்களின் மனதில் உருப்பெற்று  இன்றும் யூனியன் கல்லூரி மாணவர்களின் நாவில் நாளாந்தம் பாடப்பட்டு வருகிறது; இனியும் வரும்.

அவரது படைப்புகளில் 1967இல் வெளியான கிறீனின் அடிச்சுவடு, 1969ல் வெளியான அம்பி பாடல், குழந்தைகளுக்காக 1970ல் மேடைநாடகமாக வெளிவந்த வேதாளம் சொன்ன கதை, சிறுவர் பாடல்களின் தொகுப்பாக 1992ல்வெளிவந்த  கொஞ்சும் தமிழ் , அந்தச் சிரிப்பு, யாதும் ஊரே; ஒரு யாத்திரை, 1995ல் வெளிவந்த  மருத்துவத் தமிழ் முன்னோடி ,1998ல் வந்த Scientific Tamil Pioneer Dr Samuel Fisk Green, 99ல் பிரசுரமான உலகளாவிய தமிழர்,  பாலர் பைந்தமிழ், ஆங்கிலம் மூலம் தமிழைக் கற்கும் தமிழ்க் குழந்தைகளுக்கான Lingering Memories  என்ற கவிதை நூல், The World Wide Tamils போன்றவை குறிப்பிடத்தகுந்த அவரது படைப்புகளில் சில.
               
மேலும், உலகத்தமிழாரராய்ச்சி மாநாட்டு விருது 1968 அவரை வந்தடைந்தது.
இலங்கை இந்து கலாசார அமைச்சின்தமிழ்மணி விருது 93ல் அவருக்குக் கிடைத்தது. கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கான இலங்கை சாகித்திய விருது 94ல் அவருக்கு உரித்தானது. அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன்நம்மவர்விருது 97லும், கனடாவில் சி.வை. தாமோதரம் பிள்ளை விருது 98லும் அவுஸ்திரேலியா கன்பராவில் தமிழ் இலக்கிய  கலைச்சங்கத்தின் விருது 2004லும், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் சான்றோர் விருது 2015லும் அவருக்குக் கிட்டின. பல கெளரவங்களை அவர் பெற்றவர். அவுஸ்திரேலியக்  கம்பன் கழகத்தாரின் சான்றோன் விருது  பெற்ற போது அது குறித்து SBS கண்ட பேட்டியில் அவர் சான்றோன் யாராய் இருக்கலாம் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்.


அவர்  புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த போது புலத்தில் நிகழும் மாற்றங்கள் குறித்து தன் கவிதையில் இவ்வாறு தன் சிந்தனையைப் பதிகிறார்.
மரபு என்ற கவிதையின் இறுதியில்
’....தளிரொன்று எழுங்கால்
சருகொன்று உதிர்ந்தே கழிவது போல
பழமை கழிந்து
புதுமை மலர்ந்து இப்புவி வளரும்
எழுமின் விழிமின்
எனவுள்ளச் சேவல் குரல் கொடுக்க
பொழுது புலரும்
புதுநாள் மலரும் மரபதுவே

இவ்வாறு கூறும் கவிஞர் மாற்றங்கள் இயல்பே எனினும் அது தன் சுயத்தை இழந்து விடக்கூடாத அதே நேரம் பல்கலாசார சூழலிலே முரணின்றி இணங்கி வாழும் சால்பும், தங்கள் தனித்துவத்தைப் பேணும் அதே வேளை, மற்றய கலாசாரத்தினரிடையே ஊடாடி உறவு பூண்டு வாழும் கலையை வளர்த்தலும் வேண்டும் என்றும் கூறுகிறார்.

உண்ண உணவும் உறங்க ஒரு குடிலும்
எண்ணின் முதற் தேவை ஏதிலர்க்கு - கண்ணென்ற
கல்வி கலைகள், நம் கலாசாரம் அன்ன பிற
மெல்லவெழும் பின்பென்றால், மெய்

என்பது அவரது துணிபு; கவி வரி. மெய்ப்பாடு. அதே நேரம்  நம்மவர் மனப்பாங்கு மாறவேண்டும் என்பதையாதும் ஊரே என்ற புத்தகத்தில் விரிவாகப் பதிவு செய்யும் அவர், பல உதாரணங்களோடு பயனற்றுப் போயிருக்கும்  ’பழைய பாதையைஇனம் காட்டுகிறார். படிப்புக்கேற்ற தொழில் தேடும் மனப்பாங்கில் வரவேண்டிய மாற்றமும், உள்ளூர் மொழி பேசும் புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவையும்  (slang), சூழலுக்கேற்ப தம்மைத் தயார் செய்யும் இயல்பும், பழகும் முறையில் ஏற்படுத்தப்படவேண்டிய மாற்றமும்முதல் தோற்றத்தில்கவனம் செலுத்தவேண்டிய காரணமும், மக்கள் தொடர்பில் மனம் கொள்ள வேண்டிய விடயங்களும் என அவர் முன்வைக்கும் கருத்துக்கள் வளர்ந்த தமிழர்கள் கவனத்தில் எடுக்கத்தக்கன.( யாதும் ஊரே, பக் 112 -127)

இருந்த போதும்,தமிழ் குழந்தைகளே அவர் கண்டெடுத்த கரிசனைக்குரிய செல்வங்களாகும். அதனால்

சின்னவர் நாவில் இன்றே
செந்தமிழ் இல்லையென்றால்
பின்னவர் அடியில் தோன்றும்
பரம்பரை தமிழா பேசும்?

என்று கவிதையில் வினா தொடுக்கும் அவர்,

ஓய்வுறக்கம் இல்லாமல்
ஓடி டொலர் தேடுகையில்
மாய்வதற்கு வைத்த மனமூசல் ஆட,
பால முறுவலுடன்
பாதையிலே நின்றவரின்பேர்
கோலஞ் சுவைப்பதற்கு
கொடுத்து வைத்தோர்
யாருமில்லைஎன்றும்;

பேச்சுவரா மக்களினம்
பெருலோகயந்திரம் போலஓர்
பாய்ச்சல் நடை பயின்று
பாதை தொடர்வதைக் காணுமிடத்தும் தமிழர் தம் அடையாளங்களை இதற்குள் தொலைத்து விடுவரோ என அச்சம் கொள்கிறார். அதனால்,

ஓடி ஓடிச் செல்லு கின்ற தம்பி கேள்
ஓடி நாடிச் செல்வ தெங்கே நின்று கேள்
வீடு வாசல் காணி பூமி விற்றுநீ
விட்டில் போல்ச் செல்வ தெங்கே என்று சொல்

ஐந்து பத்து லட்சம் என்று வீசி நீ
ஆறு மாதம் அங்கும் இங்கும் நின்று நீ
நொந்த நெஞ்சு தந்தை தாயை விட்டுநீ
நூறு கோடி ஆசை கொண்டு செல்கின்றாய்!

நாட்டை விட்டு அப்பர் அன்று துரத்தினார்
நமது நாடு நமதே என்று விரட்டினார்
ஓட்டி விட்ட அந்த மக்கள் நாட்டிலே
ஒன்றி ஆகி இன்று நீயே நிற்கிறாய்

ஒன்று பட்டு சோவியத்து நின்றதும்
ஒவ்வொன் றாகி மோதி மாய்ந்து நிற்பதும்
நின்று நாளை என்ன கோலம் கொள்ளுமோ
நெஞ்சில் இந்த நிலைகள் எண்ணிச் செல்க நீ

விகடம் அல்ல பகிடி அல்ல தம்பி கேள்
வெந்த நெஞ்சில் வெண்ணை வீளச் சொல்கிறேன்
சகடக் காலின் அசைவு கொண்ட உலகிலே
தமிழன் என்ற தனித்துவத்தைப் பேணுநீ! (2:2)

என்ற உரிமைக் கோஷத்தை குழந்தைகளுக்கு அவர் நம்பிக்கையோடு முன்வைக்கிறார். அதற்காக நேரடியாக கவிதைகள் வழியாக குழந்தைகளைச் சென்றடையும் கவிஞர் அவுஸ்திரேலியத் தமிழ் குழந்தைகளுக்கான தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் நூல் ஆக்கக் குழுவில் ஆலோசகராக இருந்து பாடநூலை ஆக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அது குறித்து 2015இல்SBS இல் அவர் இவ்வாறு தெரிவிக்கிறார்.


மேலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான பாடப்புத்தகங்களை எழுதும் போது வந்த நடைமுறைச் சிக்கல் ஒன்றையும் அவர் இவ்வாறு விபரிக்கிறார். அது குறித்த கருத்தை அவர்  கீழ்வருமாறு கூறுகிறார்.
தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் எழுதுகிற போது,

*ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்கள்
*நாற்காலியில் உட்கார்ந்தார்கள்
*காப்பி சாப்பிட்டார்கள்
*ஆப்பிள், ஆரஞ்சு ஆகிய பழங்களை விரும்பினார்கள்
*டி.வி. பார்த்தார்கள்
*ஆபீசுக்குச் சென்று வேலை பார்த்தார்கள் என்று எழுதுவது அவர்பாணி என்றும்

அதேநேரம் ஈழத்தில் இருந்து வந்தவர்களோவெனில்,

* அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள்
*கதிரையில் இருந்தார்கள்
*கோப்பி குடித்தார்கள்
*அப்பிள், தோடை ஆகிய பழங்களை விரும்பினார்கள்
*ரீ.வி. பாத்தார்கள்
*கந்தோருக்குச் சென்று வேலைபார்த்தார்கள்

என்றே எழுதுவர் என்றும் பாடநூலை எழுதும் போது தான் எதிர்கொண்ட உள்ளகச் சிக்கலை அடையாளம் காட்டுகிறார்.

இருந்த போதும், அவுஸ்திரேலியத் தமிழர் குடியேற்றத்தின் ஆரம்பகால வாழ்க்கைக் கோலத்தையும் பதட்ட நிலையையும் அடையாளம் குறித்த இரண்டக நிலையையும் *{அந்தர உலகம்’ என அடையாளப்படுத்தும் அம்பி,

‘தந்தை தாய் சேய் என்ன
தாரம் இருந்தென்ன – நம்
அந்தரத்தில் வாழுகிற அவல உலகம் அது

குழந்தை அழுதென்ன
குட்டி குரைத்தென்ன
அளந்த அளவென்னும் அந்த உலகம் அது

மூத்தோரைப் பேணுகிற
முன்னைப் பணி சிரமம் – நாம்
பார்த்தோர் முதுமனையில்
பல்சுகமும் காண் என்பர்.

பெறாத மகவல்ல
பெற்றவையே என்றாலும் - ஓர்
‘கிறானி ஹவு’சே
கிழவயதில் மேல் என்பார்

அந்த உலகொன்று
அந்தரத்தில் வாழ்கிறது – என்
சொந்த உலகொன்று
தூரத்தில் மாழ்கிறது

அலையலையாய் எண்ணம்
அகத்தில் புரளுகையில் – நான்
பலகணியின் ஊடாகப்
பார்த்துத் தனித்து நின்றேன்

என்று அந்தர உலகத்தை குறித்து வைக்கவும் மறக்கவில்லை.

அம்பி தன்  கலை கண்ணோட்ட வழியாகவும் கட்டுரைகள் வழியாகவும் புத்தகங்கள் வாயிலாகவும் பல்வேறு வாழ்க்கைக் கோலங்களையும் வரலாற்றுக் கோலங்களையும் நமக்குக் காட்டி நிற்கின்றார். அவை அழகியல் வரலாற்றுப் பெறுமதிகள் மிக்கவை. காலத்தால் நின்று நிலைக்க வல்லவை.

13.35 – 15.13) நினைவழியாக் கோலம் அவர் குரலில் அவர் கவிதை)

மாநிலம் வாழ்கவென மழைபொழிகிறது. இருந்தும் உலக மக்களிடம் இருந்து அது எதுவித பிரதி உபகாரத்தையும் எதிர்பார்ப்பதில்லை... கைமாறு வேண்டாமல் மனித சமுதாயம் பயன்பெற தம் வாழ்வை அர்ப்பணிப்பவரே உண்மையில் உயிர் வாழ்பவராவார்... அதனால் அவர்கள் காலத்தால் சாவதில்லை. காலத்தின் கோரத்தால் ஏலத்தில் போவதில்லைஎன்று ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அம்பிகைபாகருக்கும் அது பொருந்தும். அதனாலேயே அவுஸ்திரேலிய தமிழ் சமூகம் அவரைக் கொண்டாடி மகிழ்கிறது. அவருக்கான பாராட்டு நிகழ்வு 28.4. ஞாயிற்றுக் கிழமை சிட்னி யாழ்நிகழ்வரங்கில் 4 மணிக்கு ஆரம்பமாகிறது.

அவருக்கு SBS இன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

https://www.youtube.com/watch?v=-zwui3MtCpQ      

நூறாண்டு காலம் வாழ்க…..

யசோதா.பத்மநாதன்

19.3.19
.................................................

28.4.2019 அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை பெண்டில்கில் யாழ் நிகழ்வரங்கில் அம்பி அவர்களுக்கான பாராட்டு நிகழ்வொன்று சிட்னித் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தருணம் அவரின் வாழ்வும் பணிகளும் குறித்த விழா மலர் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது. அதில் இடம் பெற்ற கட்டுரை கீழே பிரசுரமாகிறது.


       அம்பியின் படைப்புகளில் ’OZ தமிழ்’ அடையாளங்கள்

1980களில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தவர் அம்பி.

கட்டவிழந்த எலுமிச்சை மூடை போல் ஈழத்தமிழினம் உலகில் பரவிச் சிதறி விட்டது. அவ்வாறு சிதறி விட்ட எமது சமூகத்தின் வாழ்க்கைக் கோலங்களை பதின்நான்காண்டுகள் புலம்பெயர்வாழ்வால்  நேருக்கு நேர் கண்டறிந்ததிரவநிலைச் சரிதம் என் கவிதைகள்எனத் தன் கவிதைகளைக் குறிப்பிடும் கவிஞர் அம்பி ( அம்பி கவிதைகள்;என்னுரை,பக் 18 - 19 மித்ரா வெளியீடு, 1994)ஈழத்தின் தேசிகவிநாயகம்பிள்ளைஎனப் போற்றப்படுபவர்.

இவ்வருடம் தன் 90வது அகவையைக் கொண்டாடும் அம்பி அவர்கள் அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் சொத்தெனில் மிகையில்லை. அவரைக் சிட்னி தமிழ் சமூகம் கொண்டாடும் இந்நாளில் அவர் புலம்பெயர்ந்த நம்முடய அடையாள மாற்றங்கள் குறித்துத் தன் கவிதைகளில் குறித்து வைத்துள்ள விடயங்களைத் தனியாக நோக்குதல் பொருத்தமுடயதாகும்.

குழந்தை ஒன்றைக் காண்கிறார் கவிஞர். அக்குழந்தை தன் தாய்மொழி விட்டு வந்த நாட்டு மொழியைப் பேசுவதை கேட்க நேரிடுகிறது. அது இயல்பே எனினும் தமிழ் குழந்தையின் நாவில் தமிழ் வரவில்லையே என கவிதாநெஞ்சு பதறுகிறது. அது சுயந்திரிபடையும் ஒன்றாகத் தெரிகிறது. அவர் கவிதையில் அது இவ்வாறாக உருப்பெறுகிறது.

எனருகாற் சென்ற பிள்ளை - ஆமாம்
எங்கள் தமிழ்குல கிள்ளை
தன் அருந் தாய் முகம் பார்த்து - மம்மி
ஷால்வீகோ நவ் என நின்றாள்!

சின்னவள் சொல்லலைத் தட்டிஎன்
சிந்தை உயிர்க்கின்ற வேளை
அன்னைஅப் பால் முகம்பார்த்து  - டாலிங்
ஆஸ்க்டடி என்று முன் சென்றாள்!

சென்றனள் அம்மணி முன்னே - சின்னன்
சேர்ந்து நடந்தது பின்னே
நின்றதக் காட்சி என் நெஞ்சில் - சுற்றி
நித்தம் சுழல்வதும் என்னே!

ஆங்கிலம் மட்டுமா இல்லை - மொழி
ஆறல்ல நூறையும் கற்போம்
நாங்களும் நாங்களாய் வாழ - தமிழ்
நாவில் வளர வேண்டாமோ?

...................எனத் தொடர்கிறது அக்கவிதை.  (- சூழலும் சுயமும் பக்.137, யாதும் ஊரே ஒரு யாத்திரை,மித்ரா வெளியீடு, 2002) மாற்றங்கள் இயல்பே எனினும் மொழிவழி வரும் ’சுயத்தை’ அது இழத்தல் விடுதல் கூடாது என்பது கவிஞரின் வாதம். இதனால் போலும், இந்த தமிழ் அடையாளம் குறித்து தீவிரமாக சிந்தித்த அம்பி தன் கவிதை வழியாகக் குழந்தைகளை நேரடியாகச் சென்றடைகிறார்.

மேலும் அம்பியின் கவிதைகள் அடையாளச் சிக்கல்களின் பல பரிநாமங்களைத் தொட்டுக் காட்டுகிறது. பாரம்பரிய அளவுகோல்களின் மாறுபாடு, பெரியோரைப் பெயர் சொல்லி அழைத்தல், கட்டுப்பாடற்ற பாலியல், (Dating), உணவுருசி மாறுபாடு, முதியோர் தனிமை, ஆடை மாற்றம், ஆர்வ வேறுபாடுகள், தீர்மானம் எடுக்கும் உரிமை மீதான அத்துமீறல்கள் என அவை பல்வேறு தளங்களில் பலவாறாகப் பரிநமிக்கிறன. இவைகளை அவர் அடையாளம் காணுகின்ற போதும் எமது அடையாளம் தமிழ்; அதனை ஊட்டிவிட மறக்காதே என்ற உரிமைக் கோஷம் அதன் அடிநாதமாக எங்கும் எதிரொலிக்கக் காணலாம்.
குழந்தைகளை உன்னிப்பாகக் கவனித்து

*நானுக்கு
நாலு சிறுசுகள் முன்
நம் தமிழில் பேச எண்ணிக்
கோலக் கிளிகள் முகம் பார்த்து -
பாலரிடம்
யாருக்கு வேண்டும்
இது என்றார் கையினிலே
ஓர் அப்பிள் தூக்கி உறுபாட்டன்.
பேரர், இஸ்
நானுக்கு நானுக்கு
நானுக்குத் தா என்று
தான் சிந்தி னான் தன் தமிழ்.

*ஏமாற்றம்
பிஆர் கிடைத்துப்
பெரும் ஆர்வம் பொங்கி வர
ஆறுமுகத்தார் அருமையென
வாய் ஊறும்
பாணிப்பனாட்டும்
பனங்கட்டிக் குட்டானும்
பேணிக் கொணர்ந்தார் தம் பேரருக்கு -
வாணி என்று
நாடி அவர் கொஞ்ச
நப் என்றாள் வாயில் அதைப்
போடுகையில் யக் என்றாள் பெண்!

*லெற் மீ டிசைட்
இன்று குளிர்நாள்
எது நல்ல புள்ஓவர்
என்று ஆய்ந்த பத்து வயதினளை
சென்று அணைந்து
அன்னை தனது அன்பால்
ஆஷா... இதைப் போடேன்
என்று சொன்ன சொல்லைச் சகியாமல் -
 சின்னவளோ
லெற்மீ எலோன் மம்மி...
லெற்மீ டிசைட்... என்றாள்
சற்றே மயங்கினாள் தாய்!

*மம்மி, மற
கல்யாணம் பேசி
கனடாவால் வந்தவர் முன்
நில்கழுத்தை நீட்டென்றால் நீதியோ-
இல்லை மம்மி
டேற்பண்ணல்... வாழ்வில்
டிபக்ரோக்கள்... ஏதறிவாய்?
ஏற்கும் நிலையில் இல்லை என் மனசு -
ஈற்றினிலே
எம்மனதுக்கேற்ற லச்ட்
எவனும் வரும் வரையும்
மம்மி அதைநீ  மற!    ( - அம்பி கவிதைகள், மித்ரா வெளியீடு 1994)


இவ்வாறாக குழந்தைகளிடம் காணும் மாறுதல்களைத் தெளிவாக அடையாளம் காட்டும் அம்பி விடலைப்பிள்ளைகளிடம் காணப்படும் மாறுதல்களை,  ’மாறிவரும் கோலங்கள்என்ற தலைப்பில் உதயம் பத்திரிகையில் மாவை நித்தியானந்தன் இயற்றிய இக் கவிதையைத் தன்  யாதும் ஊரே ஒரு யாத்திரை என்ற நூலில் கோடிட்டுக் காட்டி; சமூக இயல்பை; மேலும் ஒரு அடையாள இழப்பை நம்  கண்முன்னே  கொண்டுவந்து நிறுத்துகிறார்.

காதிலே ஒரு கடுக்கண் பூட்டினான்
கழுத்திலே கருங் கல்லினை மாட்டினான்
பாதி மயிரில் சிவப்புத் தீட்டினான்
மீதியை அடியோடு வெட்டினான்
கோதியே ஒரு குடுமியும் கட்டினான்

இளம் பெண்களின் கோலத்தை மாவை நித்தி காட்டும் ஆற்றைப் பின் வரும் இந்தக் கவிதையால் அம்பி சுட்டுகிறார்

விழிகளில் ஒரு மந்திரம் ஏற்றினாள்
இளைஞரில் விசைப் பம்பரம் சுற்றினாள்
ஆடையில் பல வண்ணம் இயற்றினாள்
கோடையில் அதில் சிக்கனம் காட்டினாள்
வாலிபர் அவள் காலடி போற்றிட
நாளும் புது நட்பினைத் தோற்றினாள்.

மேலும் அதில் அவர் குறிப்பிடும் போது,

வந்தவர்களின் வரட்டு வாழ்க்கையும்
தந்தை காட்டிய போலி வாழ்க்கையும்
பிள்ளை மனங்களைப் பிய்த்தெறிந்தன
பள்ளிகள் புதுப்பாதை திறந்தன
வீட்டிலே பண் பாடு மறந்ததால்
நாட்டிலே அதைத் தேடல் ஆயினர்

என்பதையும் அதில் குறிப்பிடத் தவறவில்லை.

ஒரு சொற் கேளீர் என்ற தலைப்பில் அம்பி சிட்னியில் 1992ல் நடந்த 5வது உலகத்தமிழ் பண்பாட்டு மாநாட்டு கவியரங்கிற்கு தலைமை தாங்கிய போது பாடிய இப்பாடல் படித்தவர்கள் மற்றும் வளர்ந்தவர்களாகிய தமிழர்கள் வந்த நாட்டின் வசதிகளுக்கேற்ப தம் அடையாளங்களை இழந்து புது அடையாளங்களைப் பெற்றுக் கொள்வதையும் அடுத்த சந்ததி தமிழை மறப்பதையும் இவ்வாறு சுட்டுகிறார்.

சித்தங்கேணிச் சின்னத்துரையர்
சிட்னிக்கு வருகிறார்
சத்தியஞ்செய்து குடும்பத் துடனவர்
தமிழ்மண் துறக்கிறார்
எத்தனை இன்னல் எவரெவர் தலைமை
எல்லாம் வெறுத்ததனால்
புத்திஜீவிதான் எனும்மன உணர்வில்
புலம்பெயர்ந்தோடுகிறார்!
புலம்பெயர்ந்தோடிய துரையர் விரைவில்
டொறையென வாழுகிறார்
நலன்வரும் டொறையெனும் பெயரால் எனவே
நாளும் தேறுகிறார்!
பலவிடர் தொடரப் பழகிய தமிழைப்
பாலரும் வெறுக்கின்றார்
கலகலவெனத் தமிழ் பேசிய சிறுவர்
கனித்தமிழ் மறக்கின்றார்

 மேலும் மொழிக் குழப்பங்களை சொல்லும் கீழ் வரும் கவிதை தமிழ் பொருளை அங்கதச் சுவையோடு பதிவு செய்கிறது.

குடே
அங்கை கொழும்பில்
அடிச்சு மழைபெய்ய
எங்கள் தெருவெல்லாம் எத்தனை பேர் -
தங்களது
தோளில் குடைகள்
சுமந்து குடே என்று
வாழநினைத்து வலம்வருவர் -
இங்கோ
நடைபாதையோரம்
நடக்கும் கிழமும்
குடே என்பது என்ன கொடை!

கூடவே மகாகவியில் குறும்பாவின் விகடமும் எள்ளலும் சாயலும் சேர்ந்து வரும் எளிய கவி வடிவில் புதிய நாட்டில் நம்மவர் இயல்புகளைப் பின்வருமாறு கூறிச் செல்கிறார் அம்பி.

எட்டி நட
டோல் எடுத்த தெம்பில்
டொறையர் மகளுடனே
லாகிங்கம் என்று நடந்து வர
பால்வெறியில்
கட்டிப் பிடித்துத் தம்
காதல் சுவைத்த படி
நட்ட நடுவழியில் நின்றவரை-
கிட்டியதும்
பட்டப்பகல்வெயிலில்...
பண்பில்லாச் சாதியிது!..
எட்டிநட என்றார் எரிந்து!

இரண்டகவாழ்வும் பண்பாட்டுச் சிக்கலும் கலந்து நிற்கும் இக்கவிதை வேறொரு விதமாக இரண்டகவாழ்வின் உளவியலை சொல்கிறது.( யாதும் ஊரே; ஒரு யாத்திரை,).

தாயகத்தில் தாம் சுவைத்து மகிழ்ந்த தாய்நாட்டுத் தின்பண்டங்கள், உணவுகள் இங்கு கிடைக்காத போது அதனைச் சுவைத்து மகிழ்ந்த நாக்கு அதற்கு ஏங்கி நிற்றல் இயல்பு தானே! இன்று போல 80களில் அவைகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் மிக அரிதாக இருந்த வேளை தாய்லாந்தில் இருந்து வந்த பழவர்க்கங்களைச் சுவைத்த கவிஞர் தாய்லாந்தைப் போற்றுகிறார் (அம்பி கவிதைகள்,)  அதனைச் சொல்லும் போது, ‘கற்பகத்தைஅழைத்து உன் நுங்கை குடித்தேன் கள்ளைக் குடித்தேன் ஆனால் தகரத்தில் அடைத்து உலகுக்கு அனுப்பும் மார்க்கம் அறிந்திலனே என்று சுய பச்சாதாபத்தில் மூழ்கி,

.......வளம்தேர்ந்த நுட்ப மதியோர்
தகரத்து அடைத்து அனுப்ப
சுவைத்தேன்; மகிழ்ந்தேன்
தாய்லாந்தைப் போற்றடி
என் கற்பகமே

என்கிறார். இந்தச் சுவை மாறுபாடுள்ள இரண்டுலகை; பரம்பரை இடைவெளி; நாட்டு இடைவெளி எப்படி ருசிகளில் மாறுபாடுகளை ஏற்படுத்தி விடுகிறது என்பதை பாணிப்பனாட்டும் பனங்கட்டிக் குட்டானும் கூட  ஒரு கவிதையில் சொல்லி நின்றது நினைவூட்டற்பாலது.

வெள்ளை மக்களின் சமுத்திரத்தில் இரு
புள்ளி போலவே வந்து விழுந்த பின்
திக்கினை அறியாது வாடியே
முக்குழித்த பிள்ளைகள் இருவரும்
மூன்றுமாதம் கடக்க முன்னரே
இந்த நாடு சொந்தமென்றனர்
மக்டொனாட்ல்ஸும் நின்ஜா Turtle ம்
பற்பலவாய் கவர்ச்சிப் பொருட்களும்
சொர்க்கவாயிலைத் திறந்து காட்டின
சுக்குநூறாய் போனது சொந்த ஊர்

என்ற மெல்போர்ன் கவிஞர் மாவை. நித்தியும் ருசிமாறுபாட்டை குறித்து வைப்பதை அம்பி எடுத்துக் காட்ட மறக்கவில்லை.

மேலும், அவர் இந்த அடையாள இழப்புகளையும் மாற்றங்களையும் சிக்கல்களையும் உலகத் தமிழ் கவிஞர்களின் கவிதைக் கோலங்களூடாகவும் எடுத்துக் காட்டி இது நமக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல என்று சொல்வதும் அவதானிக்கத் தக்கது. உதாரணமாக கனடாவில் இரு உபகாரச் சம்பளம் பெற்றுக் கொள்வதற்காக விவாகரத்துச் செய்து கொள்ளும் தம்பதியையும் நியூசிலாந்து நாட்டில்

கார்குழலைக் கத்தரித்த காரிகையைக் காணும்இரு
காதுகுத்தி தோடு வைத்த காளையரைக் காணும்
பூவாடை காணாத பூவையரின் கூந்தல் - அதில்
புதியபல வண்ணத்தில் பூச்சுக்களைக் காணும்
...............’ 

என நியூசிலாந்து ஹமில்டன் கவிஞர் ஜெயசிங்கம்வெண்ணிலவுசஞ்சிகைக்கு எழுதிய பாடலைக் காட்டி ஆறுதல் கொள்கிறார்.

அவ்வாறே பெரியோரைக் கனம் பண்ணாத இளையோரைக் காணுமிடத்தும், அவர்களைப் பெயர் சொல்லி இளையோர் அழைத்தலைக் காணுமிடத்தும் மனம் நொந்து போகிறார் கவிஞர். ( யாதும் ஊரே: ஒரு யாத்திரை, பக் 143 - 145)
இரண்டுலகம் என்ற குறுங்காவியப் பாவிலே ஒரு வயோதிபத் தந்தைக்கும் வேலைக்குச் செல்லும் மகளினதும் உரையாடலாக இப்பாடல் இவ்வாறு பதிவாகிறது.

............ஏழுமணியாகிறதே
எட்டுக்கு வேலையப்பா
நீளப் பயணமினி
நிற்பதற்கோ வேளையில்லை

கோப்பியதில் சீனியிதில்
குளிர்பால் பிறிட்ஜிலென்
மூப்பிளமை எண்ணாதோர்
மூச்சிலெல்லாம் சொல்லி நின்றாள்

என்று சொல்கிறவர் தன்னை; தன் கடந்தகால தாயக வாழ்வையும் எடுத்துக் காட்டத் தவறவில்லை. அதைச் சொல்லும் போது,

காலைக் கடுங் கோப்பியுடன்
கட்டிலிலே வீற்றிருந்து
சோலைக் குயிலிசையில்
சொப்பனங்கள் கண்டவன் நான்
என்கிறார்.

மேலும் பாதையிலே காணும் நம்மவரோடு கதைபேசி அவர் வீட்டுக்கு விருந்தாளியாகப் போகுமிவரிடம் மற்றவர் தன் கதையை இவ்வாறாகச் சொல்ல அம்பி அதை இவ்வாறாகக் காட்சிப்படுத்துகிறார்.
.......
நாலுமுழ வேட்டியுடன் றோட்டில் - நான்
நடமாட வழியில்லை வாழ்விந்தக் கூட்டில்!
காலையில்வோர்க்குக்குப்போகில் - நீ
களிசானை மாட்டென்ற விதியிந்த வீட்டில்

எனச் சொல்கிறார். இவ்வாறு சொன்னவரை தாயகத்தில் பார்த்த நினைவுகள் கவிஞருக்கு  இவ்வாறு நீள்கின்றன.

நீறு திகழ் நெற்றியிலே நிறைவு தரும் பொட்டும்
திமிர் தோளில் எறிசால்வை விழுகின்ற செட்டும்
மாறுகரை கதர்வேட்டி மனங் கொள்ளும் கட்டும்
மரபொன்று தனதென்று வாழ்ந்தவரைக் கண்டேன்

என அவர் சால்பை உரைக்கின்றார். பின் அவர் சமைத்த உணவை இங்கிதமாய் உண்ணும் போதில் இறந்த மனைவியும் தனிமையும் பேச்சில் வந்து போக பேரப்பிள்ளையின் பேச்சு இடையிலே வருகிறது.

இங்கு நான் என்ன செய்வேன்
இனியஎன் பேரன் என்று
சங்கரை அணைத்துப் பேசல்
சங்கடம் தமிழைக் கற்க
எங்குமே அனுப்பார் கேட்டால்
சங்கரிஸ் நொட் கீன் என்பார்
சங்கரா.. என்றவாறே
தம்மிலை மடித்தார் மாஸ்ரர்என்று முடிக்கிறார்.

மேலும் அன்னிய தேசத்து வாழ்வையும் நம்மவர் வாழ்வையும் சொல்லும் இக் குறுங்காவியப்பாடல் முதியவர்களின் தனிமையின் வெறுமையை இப்படிச் சொல்கிறது

பிள்ளையை நம்பி நான் இங்கு வந்தேன் அது
பேசவும் நேரமிலாத நிலை
உள்ளந்திறந்தெதும் சொல்லுதற்குமவள்
உற்றவள் என்றுறவில்லாத நிலைஎன்று சமூக நிலையைச் சித்தரிக்கிறார். (அம்பி கவிதைகள்)

அம்பிகைபாகர் என்ற இயற்பெயர் கொண்ட அம்பி டாக்டர் கிறீன் என்ற அமெரிக்க வைத்தியரையும் அவரது சால்பையும் இலங்கைத் தமிழ் வரலாற்றுக்கு  அறியத் தந்தவர் மாத்திரமில்லைஈழ/அவுஸ்திரேலியத் தமிழ் குழந்தைகளையும் தமிழையும் மழைபோன்ற குளிர்ச்சியான தன் கவிதைகளால் பதிவு செய்ததோடு நம் OZ தமிழ் அடையாளத் தார்ப்பரியங்களையும் தன் படைப்புகளூடே பதிந்து  அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் ஆரம்பகால வரலாற்றுக்கும் பங்களிப்புச் செய்தவராவார்.

அவருக்கு எங்கள் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

பிரதியாக்கம்: யசோதா.பத்மநாதன்.

20.3.2019.


.......................................................


சிறு குறிப்பு:
கவிஞர் அம்பி அவர்களால் எழுதப்பட்ட மூல நூல்களும் அவர் குரலோடு பதிவு செய்யப்பட்ட அவுஸ்திரேலிய அரச ஒலிபரப்புச் சேவையால் எடுக்கப்பட்ட வானொலி உரையாடலும் கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகைக்கு அவரது 90வது அகவை குறித்து சிட்னியில் வதியும் பேராசிரியர்.ஆசி. கந்தராஜா அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை குறித்த இணைப்பும் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவத் தமிழ் முன்னோடி டாக்டர் கிறீன்

யாதும் ஊரே ஒரு யாத்திரை

கிறீனின் அடிச்சுவடு; நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழில் விஞ்ஞானம்

அம்பி கவிதைகள்

சான்றோர் விருது SBS வானொலி பேட்டி

கவிஞர் அம்பி; பேட்டி SBS வானொலி - 16.10.2015

தினக்குரல்- கட்டுரை; கவிஞர் அம்பி