Showing posts with label அவுஸ்திரேலிய வரலாறு. Show all posts
Showing posts with label அவுஸ்திரேலிய வரலாறு. Show all posts

Wednesday, 4 October 2023

Referendum - 2023 ( கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு - 2023 )

 

14.10.2023 அன்று அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிமக்களின் குரலை பாராளுமன்றத்தில் கேட்பதற்காக அவர்களுக்கான ஒர் இருக்கை கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பது பற்றி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட இருக்கிறது.

அவுஸ்திரேலிய யாப்பில் அந்த மாற்றத்தைச் செய்தாலொழிய அவர்களின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வாய்ப்பில்லை.

அவுஸ்திரேலிய வரலாற்றில் பூர்வகுடி மக்களுக்கான இடம் என்றுமே கொடுக்கப்பட்டதில்லை. இந்த நாடு தன்னை பல்கலாசார நாடெனப் பிரகடனப் படுத்தி இருக்கிற போதும் அது தான் நிலைமையாக இருந்து வந்துகொண்டிருக்கிறது.

ஆரம்பகாலத்தில் பிரித்தானியர் இங்கு வந்திறங்கிய போது இந் நாடு மனிதர்கள் யாருமற்ற வெற்றிடம் என்றே பிரித்தானிய ராணிக்கு செய்தி அனுப்பப் பட்டது. அந்த அளவுக்கு இந் நாட்டில் இலட்சக்கணக்கில் குடியிருந்த மக்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. பல இலட்சக்கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்படார்கள். மேலும் தம் பாரம்பரியக் குடியிருப்புப் பிரதேசங்களில் இருந்து துரத்தியடிக்கப் பட்டார்கள்.

1967ம் ஆண்டு வரை நாட்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பில் அவர்களின் சனத்தொகை சேர்க்கப்படவில்லை. இது மேலும் அவர்களை ஒரு மனிதர்களாகவே அவுஸ்திரேலியா கணக்கெடுக்கவில்லை என்பதையே  குறிக்கிறது. எனினும் 1967ல் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் 80% க்கு அதிகமானோர் அவர்களையும் மனிதர்களாகக் கணக்கெடுத்து அவர்களுக்கும் வாக்குரிமை அளிக்கப் பட வேண்டும் என்று மக்கள் கூறியதற்கிணங்க, அவர்களைச் சேர்த்துக் கொள்ள தீர்ப்பாயம் ஆணை வழங்கியது. ( கவனிக்க: அந் நேரம் ஆழும் கட்சி மற்றும் எதிர்கட்சி இரண்டும் தன் ஆதரவை இக் கருத்துக் கணிப்புக்கு வழங்கியிருந்தது )

இன்னுமொரு விடயமும் நடந்தது. அது ஆதிக்குடி மக்களை  மனிதர்களாக ஆங்கிலேய அவுஸ்திரேலியர்கள் கணக்கெடுக்காத போதும் இங்கு குடியேறிய ஆங்கிலேய அவுஸ்திரேலிய ஆண்களுக்கு தேவையான அளவுக்குப் பெண்கள் இங்கு இல்லாதிருந்த காரணத்தால் ஆண்களின் தேவைகளுக்கு இந் நாட்டுப் பழங்குடிப் பெண்கள் பெருமளவில் இலக்கானார்கள்.

அதன் நிமித்தமாகக் கலப்பினக் குழந்தைகள் பல பிறந்தன. இந்தப் புதிய நெருக்கடியை சமாளிக்கக் கலப்பினப் பிள்ளைகளைத் தாய் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து பலவந்தமாகப் பிரித்தெடுத்து கிறீஸ்தவ மிசனறிமார்களிடம் கொடுத்து ஆங்கிலக் கல்விக்கும் மொழிக்கும் மதத்திற்கும் அவர்களை மாற்றினர். 

ஒரு பெரும் சந்ததி ஒன்று தன் வேர் தெரியாத; சொந்த பந்தங்களை அறியாத; ஆங்கிலேய அவுஸ்திரேலியர்களின் வீடுகளில் வேலை செய்யும், மந்தைகளை மேய்க்கும், மற்றும் எடுபிடிவேலைகள் செய்யும் வர்க்கமாக மாறியது.

 பெருமளவிலான உடல் உள அசெளகரிகங்களையும் வதைகளையும் கசையடிகளையும் தண்டனைகளையும் அவர்கள் ஊதியமாகப் பெற்றார்கள்.குழந்தைகள் துன்புறுத்தப்பட்டார்கள். உடலாலும் உளத்தாலும் பெருமளவில் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.  ’தொலைந்த சந்ததி’ ( Stolen generation )என்று வரலாற்றில் பேசப்படும் இந்த மக்களுக்கு செய்த அநீதிக்கு மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்ற குரல் ஜோன் ஹவேர்ட் ஆட்சியில் இருந்த காலத்தில் எழுந்த போதும் அவர் அதனைச் செய்ய மறுத்து விட்டார்.

அவரின் பின்னர் ஆட்சிக்கு வந்த தொழில்கட்சியின் பிரதமர் கெவின் றட் அவர்கள் 13.2.2008 அன்று பாராளுமன்றத்தில் தன் மன்னிப்பை கோரினார்.

 இருந்த போதும் அவர்களின் குரல், தேவைகள், அபிலாசைகள் ஆகியன மறுக்கப்பட்ட , மேலும் ஒதுக்கப்பட்ட மக்களாகவே அவர்கள் இன்று வரை வாழ்ந்து வருகிறார்கள். 

அவர்கள் அரசாங்கக் கொடுப்பனவுகளை எப்படி செலவு செய்யவேண்டும் என்பதை அரசாங்கமே முடிவு செய்கிறது. அவர்களுக்கான பணக்கொடுப்பனவு ரோக்கன்களாகவே வழங்கப்படுகிறது. அவர்கள் என்ன என்ன உணவுப்பொருட்களை அந்த ரோக்கன்களுக்கு வாங்கலாம் என்பது அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கி இருக்கிறது. இந்தச் சட்டமூலமும் பாராளுமன்ரத்தின் வழியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் அவர்களை அவர்களின் பண்பாட்டை; வாழ்க்கை முறையை; புரிந்துணர்வோடு அறிந்து கொள்ளவோ கணக்கெடுக்கவோ போதிய முயற்சிகளை எடுக்க வில்லை. அவர்கள் ஏற்கனவே ஒதுங்கியவர்களாக; அமைதியானவர்களாக; பேசாமடந்தைகளாக; பெரும்பாண்மை சமூகத்தோடு சேராதவர்களாக; சேர விரும்பாதவர்களாக இருப்பது ஒரு காரணமே எனினும் அரசும் அரசு சார்ந்த சமூக அமைப்புகளும் அவர்களின் பண்பாட்டையும் வாழ்க்கைமுறையையும் ஏற்றுக் கொண்டு, அதனை அங்கீகரித்து, அவர்களை அணுகும் தன்மையைக் கடைப்பிடிக்காது; தம் பண்பாட்டையும் கலாசாரத்தையும் அவர்களுக்கு கற்பித்து அவர்களைத் தம் வழிக்கு  மாற்ற முயற்சி செய்தமை / செய்கின்றமை அவர்கள் இன்னும் இன்னும் பெரும் பாண்மை சமூகத்தில் இருந்து ஒதுங்கி, விலகிப் போகவும் கசந்த மனநிலையைக் கொண்டிருக்கவும் இன்னொரு பிரதான காரணமாகும்.

பழங்குடி மக்களையும் அவர்களின் வாழ்க்கைமுறையையும் பண்பாட்டையும் ஏற்றுக் கொள்ளுதலும், மதித்தலும், அங்கீகரித்தலும், கொண்டாடுதலும் இல்லாத சமூகத்தில் /தேசத்தில் அவர்கள் தொடர்ந்தும் மதிப்பிழந்தவர்களாக; பின்தள்ளப்பட்டவர்களாக; உரிமைகள் அற்றவர்களாக ஒடுக்குமுறைக்கும் இனப் பாகுபாட்டுக்கும் உட்படுபவர்களாக; சமனாக நடாத்தப் படாதவர்களாக இந்த 21ம் நூற்றாண்டிலும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

இந் நிலையில் தான் உலுரு என்ற பழங்குடிமக்களின் புனித தெய்வீக / ஆத்மீக ஸ்தலமாக விளங்கும் உலுரு என்ற மலையடிவாரத்தில் சுமார் 250 பழங்குடி இனக்குழுக்களின் பல்வேறு விதமான தரத்தில் இருக்கும் பிரதிநிதிகள் தமக்குள் ஒன்றுகூடித் தமக்கு என்ன வேண்டும் என்ற தீர்மானத்தினை எடுத்தார்கள். அது ‘இதயத்தில் இருந்து ஒலிக்கும் உலுரு உடன்படிக்கை’  - 'uluru statement from heart' என்று வழங்கப்படுகிறது.

அது மூன்று தேவைகளை உள்ளடக்கி இருந்தது. அவை 

1.Voice

2.Treaty

3.Truth.

1. குரல்

தம் குரல் ( தேவைகள் என்ன என்பதை பாராளுமன்றத்தில் சொல்லும்) பாராளு மன்றத்தில் ஒலிக்க ஓரிருக்கை வேண்டும். கொள்கைகள், சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் இப் பழங்குடி மக்களின் பிரதிநிதிகளை கலந்து பேசி தீர்மானங்களை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.


2.நடத்தை

அரசாங்கமும் பழங்குடி மக்களும் ஒரு உடன்படிக்கைக்கு வருமிடத்து முன் நிபந்தனையாக இந் நாட்டின் வரலாறும் பழங்குடிமக்களின் பண்பாட்டு உரிமைகளும் அவர்களுடயது என்பதைக் கணக்கிலெடுக்க வேண்டும். அவர்களது உரிமைகளுக்கும் அபிலாசைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

3. உண்மை

உண்மையும் உண்மை வரலாறும் ஒழிவுமறைவின்றி  சொல்லப்பட வேண்டும்.

இந்த மூன்று தீர்மானங்களையும் உலுரு மலையடிவாரத்தில் கூடிய அபிரோஜினல் மக்களின் பிரதிநிதிகள் எடுத்துள்ளார்கள். இப்பிரதிநிதிகள் தொடர்ந்து இயங்கி வருவார்கள் என்ற போதும் ஒவ்வொரு 3 வருடங்களுக்கு ஒரு முறை இப் பிரதி நிதிகள் மாறி புதிய பிரதிநிதிகள் கூடி தம் தேவைகள் குறித்து பேசுவார்கள். இவ்வாறாக இந்த குழு தொடர்ந்து இயங்கி வரும்.

இவ்வாறாக 3 தீர்மானங்களை அவர்கள் எடுத்திருக்கின்ற போதும் முதலாவது தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பே எதிர்வரும் 14.10.2023 அன்று நடத்தப்பட இருக்கிறது.

பலவிதமான குழப்பங்களோடும் எதிர்கட்சியின் பலத்த எதிர்ப்புகளோடும் கருத்துக்கணிப்புக்கு விடப்பட்டிருக்கும் இந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு பழங்குடிமக்களுக்கு எதனை எடுத்து வரப் போகிறது என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அவுஸ்திரேலியரின் மனோபாவத்தை உலகுக்கு எடுத்துக் காட்ட இருக்கும் இந்த வாக்கெடுப்பு பலவிதங்களிலும் உலகின் பார்வைகளை அவுஸ்திரேலியாவின் பக்கம் திருப்பி உள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் நடத்தப்படும் இவ் வாக்கெடுப்பு இரண்டு பிரதான அலகினைக் கொண்டிருக்கிறது.

1. மாநில அளவில் பெரும்பாண்மை வாக்குகள் எதற்குக் கிடைத்திருக்கிறது என்பது ஒன்று.

2. எல்லா மாநிலங்களிலும் சேர்த்த்டு கூடுதலாக எதற்கு கூடிய வாக்குகள் கிடைத்திருக்கிறது என்பது ஒன்று.

தனி மாநில அளவிலும் அதே நேரம் தேசிய அளவில் எந்த தீர்மானத்திற்குப் போதிய வாக்குகள் கிடைத்திருக்கிறது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் தான் அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். 

உதாரணமாக அவுஸ்திரேலியாவில் மொத்தமாக இருக்கிற 7 மாநிலங்களில்  நியூசவுத் வேல்சில் ஆம் என்பதற்கு போதிய வாக்குகள் கிடைத்து ஏனைய மாநிலங்களில் இல்லை என்பதற்கு அதிக வாக்குகள் கிடைத்தால் இக்கருத்துக் கணிப்புப் பெரும்பாண்மை அடிப்படையில்  இல்லை என்பதையே இறுதித் தீர்மானமாக எடுக்கும்.

பொறுத்திருந்து பார்ப்போம்!


மூன்று தீர்மானங்கள்

1. Voice:

A constitutionally enshrined representative mechanism to provide expert advice to parliament about laws and policies that affect Aboriginal and Torres Strait Islander peoples.

2. Treaty

A process of agreement - making between governments and First nations peoples that acknowledges the historical and contemporary cultural rights and interests of First Peoples by formally recognising soverignty, and that land was never ceded.

3. Truth

A comprehensive process to expose the full extent of injustices experienced by Aboriginal and Torres Strait Islander peoples, to enable shared understanding of Australia's colonial history and its contemporary impacts.


















இந் நாட்டு மக்கள் அவர்களுக்குரிய மதிப்போடும் மரியாதையோடும் நடாத்தப்படவேண்டும்; அவர்களுக்கான உரிமைகளும் அங்கீகாரங்களும் கிடைக்கப் பெற வேண்டும்.

அது குறித்து என் காட்டூனையே மேலே காண்கிறீர்கள். முதல் முதலாக என்னால் வரையப்பட்டிருக்கும் இக் காட்டூன் இயற்கையை தம் உயிரிலும் மேலாய் போற்றிப் பாதுகாத்து வரும் பழங்குடி மக்களை மரமாகவும் அது பிடித்திருக்கும் மடி அவுஸ்திரேலிய தேசமாகவும் மரத்தில் இருந்து விழும் ஆம் மற்றும் இல்லை ஆகிய கனிகளுக்காக பெட்டியில் இருந்து வெளியே வரும் அவுஸ்திரேலிய மக்களின் கைகளைக் கோரி நிற்கிறது என்பதை முதலாவது காட்டூனும்

உலுரு தீர்மானத்தைத் தலைகீழாகப் பார்த்து நிற்கும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் போக்கை கடைசியான காட்டூனும் காட்டி நிற்கிறது.

பின்னிணைப்பு:சட்டரீதியான  வாக்களிப்பு முடிவு விபரங்கள் ( 16.10.2023)











Tuesday, 1 August 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 10 -

 யூத அகதிகள்

யூத மக்கள் 1900 ஆண்டுக்காலப் பகுதியிலும் 1930களுக்குப் பிறகும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்திருக்கிறார்கள்.

அவர்கள் தம் மத அனுஷ்டானங்களைச் செய்வதற்கு இருந்த தடைகளால் நாட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் பல ஆண்டு காலமாக மத ரீதியாகவும் இன ரீதியாகவும் அடக்கப் பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 1900 களில் ரஷ்யப் பேரரசினால் பெரிதும் துன்புறுத்தப்பட்டார்கள். மேலும் சிலர் தம் மத அனுஷ்டானங்களை விரும்பிய முறையில் செய்வதற்கான சுதந்திரம் வேண்டி நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

இன்று உலகில் மொத்தமாக 12 - 14 மில்லியன் யூத மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் 42% மான யூத மக்கள் இஸ்ரேலில் வாழ்ந்து வருகிறார்கள். ஏனையோர் உலகின் பலபாகங்களிலுமுள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  இவர்கள் பின்பற்றும் மதம் யூதம் என்று அழைக்கப்படுகிறது.

1930களில் இருந்து ஹிட்லரின் நாசிக் கட்சியினரால் ஜேர்மனியில் யூதமக்கள் பெரிதும் துன்புறுத்தப் பட்டு மிகப்பெரும் இனப்படுகொலைக்கு ஆளானார்கள்.  ஜேர்மனி மேலும் பல நாடுகளைக் கைப்பற்றி வந்ததால் தாம் மேலும் பாதுகாப்பற்றவர்களாக யூத மக்கள் உணர்ந்தார்கள். அதன் காரணமாகப் பாதுகாப்புத் தேடி அவர்கள் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

(தொடரும்)

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 9 -

 சோமாலியா

ஆபிரிக்க நாட்டில் ஒன்று சோமாலியா.

ஆபிரிக்காவின் கொம்பு என்று அழைக்கப்படும் நாடான சோமாலியா ஆபிரிக்காக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. வடமேற்கே ஜிபூட்டி தென்மேற்கே கென்யா வடக்கே யேமன் அதனோடு இணைந்த ஏடன் வளைகுடாவோடு கிழக்கே இந்தியப் பெருங்கடலையும் மேற்கே எதியோப்பியாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. 

1991இல் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களால் பாதிக்கு மேற்பாட சனத்தொகையினர் இடம்பெயர்ந்தும் இறந்தும் போயினர். பெருந்தொகையினரான சோமாலிய அகதிகள் விக்ரோரிய மானிலத்தில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

சூடான் / வடக்கு சூடான்

மத்திய ஆபிரிக்கப் பிரதேசத்தில் இருக்கும் நாடு சூடான் ஆகும்.

இது ஆபிரிக்கக் கண்டத்தின் மிகப்பெரிய நாடாக விளங்கிய சூடான் 2011இல் பொதுசன வாக்கெடுப்பின் மூலம் தென்சூடான் தனிநாடாகப் பிரிந்த பின்னர் பெரிய நாடென்ற பெருமையை சூடான் இழந்து விட்டது. இப்போது அல்ஜீரியா மற்றும் கொங்கோ நாடுகளுக்கு அடுத்ததான பெரிய நாடாக சூடான் விளங்குகிறது.

இதன் எல்லைகளாக வடக்கே எகிப்தும் வடகிழக்கில் செங்கடலும் கிழக்கில் எதித்திரியாவும் தெற்கில் தென் சூடானும் தென்மேற்கில் மத்திய ஆபிரிக்கக் குடியரசும் மேற்கில் சாட் நாடும் வடமேற்கே லிபியாவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. நைல் நதியை நாட்டின் நடுப்பகுதியில் கொண்டமைந்த சூடானின் கிழக்கையும் மேற்கையும் இந் நதி ஊடறுத்துச் செல்கிறது.

2001க்குப் பின்னர் ஏற்பட்ட நாட்டின் அரசியல் குழப்பநிலைகளாலும் உள்நாட்டுப் போர்களினாலும் இந் நாடு பலவருடங்களாக நலிந்து போயிருந்தது. பெரும்பாலான தென் சூடானிய அகதிகள் விக்ரோரிய மாநிலத்தில் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்னர் தம் நாட்டுக்கு அருகில் இருக்கும் அண்டைநாடுகளில் தஞ்சமடைந்து அங்கிருந்து ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான  UNHCR வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வரவழைக்கப் பட்டவர்களாவார்.

2011ம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு சூடான் சூடானின் ஒரு பகுதியாக விளங்கியது. 2011இல் இடம்பெற்ற பிரிவினையின் போது எழுந்த உள்நாட்டுக் கலவரங்களால் வடக்கு மற்றும் தெற்குப் பகுதி சூடான் மக்கள் நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்து வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.

இலங்கை:

இலங்கை இந்துசமுத்திரத்தில் தென்னிந்தியாவுக்குக் கீழே அமைந்திருக்கும் ஒரு சிறு தீவாகும். இந்தத்தீவின் இயற்கை அழகினால் இதனை இந்து சமுத்திரத்தின் முத்து என்றும் அதன் மக்கள் பண்பினால் அதனை ‘புன்னகைக்கும் மக்களின் தேசம்’ என்றும் அழைக்கிறார்கள். 

1983ம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் ஏற்பாட இனப்பிரச்சினையின் காரணமாக சிறுபாண்மையினரான தமிழ் மொழி பேசுவோர் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளைத் தஞ்சமடைந்தார்கள்.

அவ்வாறு வந்தவர்கள் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

வியற்நாம்:

தென்கிழக்காசியாவில் அமைந்திருக்கிற நாடு வியற்நாம்.

இந் நாட்டின் எல்லைகளாக வடக்கே சீனாவும் வடமேற்கே லாவோசும் தென்மேற்கே கம்போடியாவும் கிழக்கே தென்சீனக்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

1970ம் ஆண்டுக்குப் பிறகு வியற்நாமின் வடக்கு மற்ரும் தெற்கு வியற்நாம் சண்டயிட்டுக் கொண்டதைத் தொடர்ந்து 1975ல் வடக்கு வியற்நாமியப் பொதுவுடமைவாத அரசபடைகள் தெற்கு வியற்நாமியப் பகுதியை முற்றுகை இட்டு வெற்றி கொண்டதை அப்படயினர் தம்மைக் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தினால் தெற்கு வியற்நாமிய மக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

1970களில் அவர்கள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தார்கள். அவுஸ்திரேலியாவில் அமுலில் இருந்த ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கை முடிவுக்கு வந்த பின்னர் பெரிய அளவில் இடம்பெற்ற வெள்ளையர் அல்லாத மக்களின் வரவாக இந்த வியற்நாமிய அகதிகளின் வரவு அவுஸ்திரேலிய அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பலர் வள்லத்தின் வழியாகவும் வேறு பலர் தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியிருந்து அ.நா. சபையின் அகதிகள் அமைப்பில் தம்மைப் பதிவு செய்து அதன் வழியாகவும் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தார்கள்.

( தொடரும்)


Monday, 31 July 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 8 -

 லெபனான்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று லெபனான்.

இந் நாட்டின் வடக்கெல்லையாயும் கிழக்கெல்லையாயும் சிரியா நாடு இருக்கிறது.  தெற்கே இஸ்ரேல் நாடு  உள்ளது.

1975இல் நடந்த உள்நாட்டுப் போர்களால் மக்கள் தம் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள்.

அந்தவகையில் பல ஆயிரக்கனக்கான மக்கள் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

கொசொவோ:

கிழக்கைரோப்பிய நாடுகளில் ஒன்று கொசொவோ. இந் நாடு சேர்பியாவிடமிருந்து சுதந்திரமடைவதற்காகப் போராடி வந்தது.  அதன் காரணமாகப் பலர் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.17.பெப்பிரவரி 2008இல் சேர்பியாவிடமிருந்து தன்னைத் தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது. இது 2009லிருந்து அவர்கள் தாமாகத் தமக்கென ஒரு அரசாங்கத்தைத் தோற்றுவித்து இயங்கும் வரை ஐக்கியநாடுகள் சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது.

1999இல் அவுஸ்திரேலிய அரசு சுமார் 4000 அகதிகளைத் தற்காலிகமாக மூன்றுமாத கடவுச் சீட்டு அனுமதி கொடுத்து ஏற்றுக் கொண்டது.அவர்கள் ஆகாயவிமானத்தின் வழியாக அழைத்துவரப்பட்டு ரஸ்மானிய மாநிலத்திலுள்ள பாவிக்கப்படாதிருந்த இராணுவ விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் பலர் நாடு சுமூகநிலைக்கு வந்ததும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் மீளக்குடியேறும் உதவித்தொகையோடு மீண்டும் தங்கள் தாயகத்திற்குத் திரும்பினார்கள்.

போலாந்து

மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று போலாந்து.

இது மேற்கில் ஜேர்மனியையும் தெற்கில் செக் குடியரசு மற்றும் செலோவாக்கியா நாட்டையும் கிழக்கில் உக்ரைன், பெலரஸ் நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. அதன் வடக்குப் பகுதியை பால்டிக் கடலும் ரஷ்யாவும் எல்லைகளாகக் கொண்டுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் பிரகாரம் இவ் இரு நாடுகளும் போலந்தைப் பங்கு போட்டுக் கொண்டன.( மோலோட்டோவ் - ரிப்பென்ச்ராப் ஒப்பந்தம்) கிட்டத்தட்ட 60 இலட்சம் ( 6 மில்லியன்) போலந்து மக்கள் இப்போரில் கொல்லப்பட்டார்கள்.

 இருந்த போதும் பெரும்பாலான தம் பண்பாடுப் பாரம்பரியச் சின்னங்களை அவர்கள் பாதுகாத்துக் கொண்டனர். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப் படும் உலகின் 14 பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்கள் போலந்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த ஓரம்சமாகும்.

 போரின் காரனமாகப் புலம் பெயர்ந்த மக்கள் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார்கள். அவர்களில் பலர் இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய இராணுவத்தில் இணைந்து பணியாற்றிய சிப்பாய்களாவர்.

1980ம் ஆண்டுக்குப் பிறகு சோவியத் ஒன்றியத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போராட்டங்களால் நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழல்கள் காரணமாக பலமக்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் பலர் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

( தொடரும்)

Sunday, 30 July 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 7 -

 ஈரான்:

இது மத்தியகிழக்கு நாடுகளில் ஒன்று.

இதன் அமைவிடம் ஆசியாவின் மேற்கு, நடு தெற்கு ஆகிய பகுதிகலுடன் தொடர்பு கொண்டிருப்பதால் இந் நாட்டுக்கு புவியியல் சார்ந்த முக்கியத்துவம் உண்டு.

ஈரானின் வடக்கு எல்லையில் ஆர்மேனியா, அசர்பைஜான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளும் ஈரான் கரபியன் கடலோரமாக அமைந்திருப்பதால் கசகஸ்தான்,ரஷ்யா என்பன இதற்கு நேரடி அயல் நாடாகவும் விளங்குகின்றன. மேலும், ஈரானின் கிழக்கு எல்லையை ஆஃகானிஸ்தான், பாகிஸ்தான் என்பனவும் தெற்கே பாரசீகக் கடல், ஓமான் வளைகுடாவும் மேற்கில் ஈராக்கும் வடமேற்கில் துருக்கியும் ஈரான் நாட்டுக்கு எல்லைகளாக அமைந்துள்ளன.

இந் நாடு பண்டைக் காலத்தில் பாரசீகம் என்று அழைக்கப்பட்டது. பேர்ஷியா என்றழைக்கப்பட்ட இந் நாட்டின் தலைநகரம் தெஃஈரான் ஆகும். தற்போது ஈரான் என்று அழைக்கப்படும் இந் நாட்டினுடய பொருள் பாரசீக மொழியில் ‘ஆரியரின் நிலம்’என்பதாகும்.

இங்கு பாரசீக, அஜர்பைஜான், கிலாக்கில்  மற்றும் குர்திஷ் இனக்குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

1980ம் ஆண்டில் இருந்து அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவுக்கு வர ஆரம்பித்தார்கள். வேறுபட்ட மதநம்பிக்கைகளைக் கொண்ட மக்கள் தொடர்ந்து அந் நாட்டில் வாழ்ந்து வருவதில் சிக்கல்கள் ஏற்பட்ட காரனத்தினால் அவர்கள் நாட்டை விட்டுப் புலம்பெயர வேண்டியதாயிற்று.

ஈரானில் புதிய அரசொன்று புரட்சி ஒன்றின் வழியாக 1979ம் ஆண்டு பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து, அவ்வரசு பஃஹாய் மத நம்பிக்கை கொண்டவர்கள் தம் மத அனுஷ்டானங்களைச் சுதந்திரமாக அனுசரிக்கத் தடை விதித்தது. பல ஈரானிய மக்கள் ஈரானின் இந்த இறுக்கமான மதநடைமுறைகளில் இருந்து தப்ப முயன்றார்கள்.

அதனால் அதே ஆண்டு (1979ம் ஆண்டு ) அவுஸ்திரேலிய அரசாங்கம் மனிதாபிமானத் திட்டம் ஒன்றைத் தீட்டி பஃஹாய் மத நம்பிக்கை கொண்டவர்களை அழைப்பித்து அவுஸ்திரேலியாவில் குடியேற்றியது.

ஈராக்

இது மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று.

வடமேற்கில் சகரோஸ் மலைத் தொடரையும் சிரியப் பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அரேபியப் பாலைவனத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியுள்ளது. பக்தாத் இதன் தலைநகரமாகும். யூப்பிட்டீஸ், தைகிறீஸ் ஆகிய ஆறுகளுக்கிடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இந்த நிலப்பகுதி மொசப்பத்தேமியா என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் உலகின் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த நதிகளின் நீரோட்டத்தினால் செழிப்பான பிரதேசமாக இப்பகுதி காணப்படுகிறது.

வடக்கில் துருக்கியும் கிழக்கில் ஈரானும் தென்கிழக்கில் குவைத்தும் தெற்கில் சவுதி அரேபியாவும் மேற்கில் சிரியாவும் இந் நாட்டின் எல்லைகளாகும்.

1968 தொடக்கம் 2003ம் ஆண்டு வரை அங்கு அராபிய சோசலிசக் கட்சியின் ஒருகட்சி ஆட்சிமுறை நிலவியது. 2003ம் ஆண்டு அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் ஈராக் மீது படையெடுப்பை நடத்தியதைத் தொடர்ந்து, அங்கு அக் கட்சியின் தலைவராக இருந்த சதாம்ஹுஷைன் நீக்கப்பட்டார்.  2011இல் அமெரிக்கா அங்கிருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து சிரிய உள்நாட்டுப் போர் இங்கும் பரவி உள்நாட்டுக் கலவரம் தொடர்ந்தபடி இருக்கிறது.

இங்கு வளைகுட போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தம் நாட்டை விட்டு வெளியேறி அயல் நாடுகளில் அங்கு அமைக்கப்பட்ட முகாம்களில் தஞ்சமடைந்தார்கள். 

அங்கிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான திட்டத்தின் வழியாக அவுஸ்திரேலியாவிலும் அம்மக்கள் வந்து குடியேறினார்கள். 


சிரியா

சிரியா மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாகும்.

தன் மேற்கு எல்லையாக லெபனானும் தென்மேற்கில் இஸ்ரேலும் ஜோர்டானும் வடக்கே துருக்கியையும் எல்ல நாடுகளாகக் கொண்டுள்லது. 

1963ம் ஆண்டிலிருந்து சிரியா பாத் கட்சியினால் ஆளப்பட்டு வருகிறது. 1970லிருந்து இக் கட்சி அசாத் குடும்பத்தவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. சிரியாவில் அந் நாட்டதிபர் அசாத்துக்கு எதிராக நடந்துவரும் உள்நாட்டுப் போர் காரணமாக மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். நாடு 97% அழிந்து போய் விட்டதாகப் புள்ளிவிபரக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. தற்போது சிரியா பல்வேறு பகுதிகளாகத் துண்டாட்டப்பட்டு பல்வேறு போட்டிக் குழுக்களினால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு சிரிய மக்களின் வருகை 2011இலிருந்து நடைபெற்று வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய மனித அவலம் நடந்த இடமாக சிரியா அறியப்படுகிறது. இலட்சக்கணக்கான சிரிய மக்கள் வீடற்றவர்கள் ஆக்கப் பட்டு அயல்நாடுகலில் உள்ள  ஐக்கியநாடுகள் சபையின் அகதி முகாம்களைத் தஞ்சமடைந்துள்ளார்கள். 

பல சிரிய அகதிகள் வள்ளத்தின் வழியாகவும் அவுஸ்திரேலியாவுக்குள் வர முனைந்தார்கள். பலர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரினார்கள். 

2015ம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசு பலருக்கு நிரந்தர வதிவிட உரிமையைக் கொடுத்து ஈராக், துருக்கி, லெபனான், ஜோர்டான் போன்ற நாடுகளில் அகதிமுகாம்களில் தங்கியிருந்த சிரிய மக்களைத் தன் நாட்டுக்குள் அழைப்பித்தது.

அதே வேளை சிரிய நாட்டில் தங்கியிருக்கும் சிரிய நாட்டு மக்களுக்கும் பல மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகிறது. அதுமட்டுமன்றி அயல் நாடுகளில் தங்கியிருக்கும் சிரிய மக்களுக்கும் தன் உதவிகளை அது விஸ்தரித்துள்ளது.

( தொடரும் )

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 6 -


 ஜேர்மனி:

மத்திய ஐரோப்பாவில் அமைந்திருக்கிறது ஜேர்மனி.

 ஒற்றுமை, நீதி மற்றும் விடுதலை ஆகியவற்றைத் தம் தாயகக் கோட்பாடாகக் கொண்டிருக்கும் ஜேர்மனி, நீண்ட இன அழிப்புக்குரிய போர் வரலாற்றையும் பொருளாதாரச் செழிப்பையும் கொண்டது. 

1800களின் நடுப்பகுதியில் இருந்து ஜேர்மனியர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் புகலிடக் கோரிக்கையாளர்களாக வந்துள்ளார்கள். அவர்களின் வருகை அவுஸ்திரேலியா பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக விளங்கிய தறுவாயில் நிகழ்ந்தது. 

1800 - 1850கள் தொடங்கி ஜேர்மனி அமைதியற்ற நாடாக விளங்கியது. அதற்குக் காரணம் சமயமாகும். ஆரம்பகாலத்தில் இருந்தே ஜேர்மனியின் பண்பைத் தீர்மானிப்பதில் ரோமன் கத்தோலிக்க புரட்டஸ்தாந்து மதங்கள் முக்கிய இடத்தை வகித்து வந்தன. 1517ல் மாட்டின் லூதர் தனது 95 வாசகங்கள் அடங்கிய ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்ததன் வழியாக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை எதிர்த்து புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்து வைத்தார். அதன் விளைவாக 1530ல் லுத்தேர்ன் திருச் சபை பல ஜேர்மனியப் பகுதியில் உத்தியோகபூர்வமான சமயமாக உருவானது. 

இதன் காரணமாக சமயமுரண்பாடுகள் ஏற்பட்டு 30 ஆண்டுப் போர் 1618 - 1648 வரை நடந்தேறியது. இப் போரினால் ஜேர்மனியின் சனத்தொகை 30% தால் குறைவடைந்தது என்று சொல்லப்படுகிறது. 

மார்ட்டின் லூர்து தேவாலயம் - ஜேர்மனி
தாம் சார்ந்த லுர்த்தேன் சமயக் கொள்கையை அனுசரிக்க முடியாத காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறிய ஜேர்மனிய மக்கள்  அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரினர். 

அவர்கள் தென் அவுஸ்திரேலியப் பிராந்தியங்களைப் பெரிதும் விரும்பினார்கள். அங்கு வைன் உற்பத்தியை செய்யும் வாய்ப்பு அங்கு அதிகம் காணப்பட்டதும் அதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

 அத்துடன் ஜேர்மனிய மக்களுக்கு லுர்த்தேர்ன் தேவாலயம் அவர்களின் உணர்வுகளோடும் வாழ்வோடும் பண்பாட்டோடும் வரலாறோடும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். அதனால் லுர்த்தேர்ன் தேவாலயங்களையும் ( Lutheran Churhes ) அங்கு அவர்கள் கட்டித் தம் பண்பாட்டின் பலமான அடித்தளத்தை அங்கு இட்டனர்.

’City of Church’ என்று இன்றும் அழைக்கப்படும் தென் அவுஸ்திரேலிய மாநிலத்தில் அவர்களின் பல தேவாலயங்களை இன்றும் அங்கு காணலாம். அத்துடன் உலகப் பிரசித்தி பெற்ற அவுஸ்திரேலிய வைன் உற்பத்திக்குப் பெயர் போன இடமாக இன்றும் தென் அவுஸ்திரேலிய மாநிலம் பிரபலம் பெற்றுக் காணப்படுவதற்கும் இவ்வாறு இந் நாட்டுக்கு வந்து சேர்ந்த ஜேர்மனிய பின்புலம் கொண்டவர்களே காரணமாகும்.

தென் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு வைன் உற்பத்தி தோட்டம்


ஹெங்கேரி:

மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஒன்று ஹங்கேரி. 

வடக்கே சிலோவேக்கியாவும் கிழக்கே உக்ரேனியன் மற்றும் ருமேனியாவும் தெற்கே சேர்பியா மற்றும் குரோஷியாவும் தென் மேற்கே சுலோவேனியாவும் மேற்கே ஒஸ்ரியாவையும் எல்லைகளாகக் கொண்டுள்ள நிலம் சூழ்ந்த நாடு ஹங்கேரி.

1840களில் இருந்து அவர்களின் வருகை தொடர்ச்சியாக நடந்து வருகிறது.முதலாம் உலகப் போரின் போதும் இரண்டாம் உலகப் போரின் போதும் 1956ல் சோவியத்தின் படையெடுப்புக் காரணமாகவும் இந்தப் புலப் பெயர்வுகள் நடைபெற்றன.

முதலாம் உலகப் போரின் போது ஹங்கேரி தனது நிலப்பகுதியில் 71% தினையும் 58%மான மக்கல் தொகையையும் 32% மான ஹங்கேரிய இனக்குடிகளையும் இழந்தது.

இரண்டாம் உலகப் போரின் போது ஹங்கேரி அச்சு நாடுகளுடன் இணைந்து போரிட்டதன் விளைவாக மேலும் அது தனது பலத்தையும் மக்களையும் இழந்தது. போரின் முடிவில் அது சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கின் கீழ் வந்து சேர்ந்தது.

இவ்வாறாகப் உலகப் பெரும் போர்களைச் சந்தித்ததன் விளைவாக சிறந்த அமைதியான பொருளாதார சுபீட்சமுள்ள வாழ்க்கை ஒன்றைக் கருதி ஏனைய மத்திய ஐரோப்பிய மக்களைப் போன்று ஹங்கேரிய மக்களும் புகலிடம் தேடி ஏனைய நாடுகளுக்குப் போனதைப் போல அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

1956ல் சோவியத் யூனியன் ஹங்கேரியைக் கையகப் படுத்தியதையடுத்து அங்கு 40 ஆண்டுகள் கம்யூனிச ஆட்சி நடந்தது. இதனால் நாட்டை விட்டு வெளியேறிய மக்கள் ஐக்கியநாடுகள் சபையின் வழியாக ஏற்படுத்தப்பட்ட அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த ஹங்கேரிய மக்கள் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினூடாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இத்தாலி

இத்தாலி ஐரோப்பாவின் தென் பகுதியில் அமைந்திருக்கிறது.

இது மத்தியதரைக் கடல் பகுதிக்குள் தீபகற்பமாக அமைந்திருக்கிறது. இத்தாலிக்கு வடக்கு எல்லையாக பிரான்ஸ், சுவிற்சிலாந்து,ஒஸ்ரியா, சில்வேனியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. ஏனைய பகுதிகளைக் கடல் சூழ்ந்துள்ளது. சிசிலி மற்றும் சார்னியா தீவுகள் இத்தாலிக்குச் சொந்தமானவை. அதே நேரம் இத்தாலிக்குள் சென் மெரீனா மற்றும் வத்திக்கான் ஆகிய இரு நாடுகள் அமைந்துள்ளன.

1881லும் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 1945க்குப் பிற்பட்ட காலப் பகுதியிலும் அவுஸ்திரேலியாவை நோக்கியதான இத்தாலியர்களுடய புலப் பெயர்வுகள் நடைபெற்றன.

1880ல் குறிப்பிட்ட இத்தாலியக் குழு ஒன்று பப்புவானியூகினியில் உள்ள அழகிய நகரொன்றில் குடியேறலாம் என்ற  அறிவித்தலை நம்பி பெருந்தொகைப் பணத்தினை Marruis De Rays க்குக் கொடுத்து அங்கு சென்றது. அவர்கள் அங்கு போனதன் பிறகு தான் அது ஒரு மிகப்பெரும் மோசடி என்பது தெரிய வந்தது.  அவர்கள் அங்கு பரிதவித்து நின்ற போது அவுஸ்திரேலியாவில் அப்போதிருந்த காலணித்துவ நாடுகளின் கூட்டமைப்பின் தந்தை என்று கருதப் படும்; நியூசவுத் வேல்ஸின் முதல்வராக தொடர்ந்து 5 தடவைகள் இருந்த; Sir.Henry Parkes அதனை அறிந்து, ஒரு கப்பலை அங்கு அனுப்பி, அவர்களை நியூசவுத் வேல்ஸ் மாகாணத்துக்கு அழைப்பித்து, அங்கு அவர்களைக்  குடியேற்றினார்.

அவர்கள் இங்கு 1881 இல் இங்கு வந்து புதிய இத்தாலி என்றொரு பகுதியை வடக்கு நியூசவுத்வேல்ஸில் உருவாக்கினார்கள்.

அதன் பிற்பாடு இரண்டாம் உலகப் போர் 1945ல் முடிந்த பிறகு ஏனைய ஐரோப்பிய குடியேற்ற வாசிகளோடு இத்தாலியர்களும் பெருமளவில் வந்து அவுஸ்திரேலியாவில் குடியேறினார்கள்.

(தொடரும்)

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 5 -

 சைப்பிரஸ்

மெடிட்டிறேனியன் கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவு சைப்பிரஸ் ஆகும். இது மத்தியதரைக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு ஆகும்.


 1974ம் ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரினார்கள். அதற்குக் காரணம் துருக்கி வடக்கு சைப்பிரஸைக் கைப்பற்றிக் கொண்டது ஆகும். அதன் காரணமாக சைப்பிரஸ் மக்கள் நாடற்றவர்கள் ஆனார்கள். அவர்கள் வேறு நாடுகளுக்குப் போனதைப் போல அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.

செக்கோசிலோவேக்கியா


செக்கோசிலோவேக்கியா மத்திய ஐரோப்பாவில் அமைந்திருக்கிறது. அதன் அண்டை நாடுகளாக ஒஸ்ரியா, ஜேர்மனி, போலந்து, சோவியத் யூனியன், உக்ரேனியன், ருமேனியா, ஹங்கேரி ஆகியன விளங்குகின்றன. 

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியால் செல்வாக்குச் செலுத்தப்பட்ட நாடாக இது இருந்து வந்தது. 1945ல் இதன் கிழக்குப் பகுதியை சோவியத் ஒன்றியம் கைப்பற்றிக் கொண்டது. அதனால் பலர் நாட்டை விட்டு வெளியேறினர்.  இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த போது அவுஸ்திரேலியா சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான  யூகோசிலோவாக்கிய புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொண்டது.

 1993ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இந் நாடு செக் குடியரசாகவும் ஸ்லோவோக் குடியரசாகவும் இரண்டு தனி நாடுகளாகப் பிரிந்தன.

கிழக்கு தீமோர்:


வடமேற்கு அவுஸ்திரேலியா வில் டார்வின் நகருக்கு 400 மைல் தொலைவில் அமைந்திருக்கும் தீவு தீமோர் ஆகும். மானம், தாயகம் மற்றும் மக்கள் என்பதை இந் நாடு தன் நாட்டுக் கொள்கையாகக் கொண்டுள்ளது.

1975ம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்து அம் மக்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக அவுஸ்திரேலியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் அதன் அண்டை நாடான இந்தோனேஷியா கிழக்கு தீமோரை ஆக்கிரமித்திருந்ததாகும்.அப்போதில் இருந்து தீமோர் மக்கள் தம் சுதந்திரத்திற்காகப் போராடி வந்தார்கள். அதனால் உள்நாட்டுப் போர்கள் தீவிரமடைந்தன. 

1975ம் ஆண்டுக் காலப்பகுதியில் சுமார் 2500 கிழக்கு தீமோர் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரினார்கள். கிழக்கு தீமோர் என்ற இந் நாடு போத்துக் கேயரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து வந்த காரணத்தால் பலர் பின்னர் போர்த்துக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் பலர் சிட்னி, மெல்போர்ன் நகரங்களிலும் வந்து குடியேறினார்கள்.

 இந்தோனேஷியா 1999ல் நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து 2002.ம் ஆண்டு மே மாதம் 20 ம் திகதி கிழக்கு தீமோர் தனிநாடானது.21ம் நூற்றாண்டில் தனிநாடான பெருமை கிழக்கு தீமோருக்கு உண்டு. 

(தொடரும்)


Friday, 28 July 2023

காலத்துக்குக் காலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதிகள் - 4 -

 1945ல் முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆயிரக் கணக்கான ஐரோப்பிய அகதிகள் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தார்கள். 1947 க்கும் 1954 க்கும் இடையில் சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் ஐரோப்பிய அகதிகள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி இருந்தார்கள்.

உலகத்தின் வரைபடத்தில் தொலைவாகவும் தனியாகவும் இருந்த இந்தத் தேசத்தை அவர்கள் தெரிவு செய்யக் காரணமாக இருந்தது 

1.சனத்தொகைக் குறைவும் தொழிலாளர் பற்றாக்குறையும் தமக்கு போதிய பொருளாதார வளத்தை நல்கும் என அவர்கள் நம்பியது.

2.மேற்கத்தைய தேசங்கள் சோவியத் யூனியனதும் சீனாவினதும் பொதுவுடமைக் கொள்கையிலும் அதன் வளர்ச்சியிலும் பயம் கொண்டிருந்தமையும் இந் நாட்டுக்கு வர விரும்புகிறவர்கள் பொதுவுடமைக் கொள்கைக்கு எதிரான மனநிலையில் இருப்பவர்கள் என நம்பியதும்.

3. நாட்டின் சனத்தொகையைப் பெருக்குவதன் வழியாக தம்மை இஸ்திரப்படுத்திக் கொள்லலாம் என அவுஸ்திரேலியா நம்பியதும்

மேற்கத்தைய புகலிடக் கோரிக்கையாளர்களை அதிக அளவில் அவுஸ்திரேலியா உள்வாங்கக் காரணமாயிற்று.

1970ம் ஆண்டு வரை அவுஸ்திரேலியாவுக்கு திட்டமிட்ட அகதிக் கொள்கைகள் என்று எதுவும் இருக்கவில்லை.

ஆஃப்கானிஸ்தான்: 

ஆஃப்கானிஸ்தான் தெற்கு ஆசியாவுக்கும் நடு ஆசியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது.

இதன் கிழக்குத் தெற்குப் பக்கங்களைப் பாகிஸ்தான் எல்லையாகவும் மேற்கே ஈரான் எல்லையாகவும் வடக்கில் துருக்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெக்கிஸ்தானும் வடகிழக்கை தசிகிஸ்தான் மற்றும் சீனாவும் எல்லைகளாகக் கொண்டுள்ளன.

’வெல்ல முடியாதது’ என்றும் ’பேரரசுகளின் கல்லறை’ என்றும் அழைக்கப்பட்ட இந் நாடு காலத்துக்குக் காலம் பல போர்களையும் ஆக்கிரமிப்புகளையும் கண்டது. ஆஃப்கானிஸ்தானில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு 1979ம் ஆண்டுக்குப் பிறகு அகதிகள் வரத் தொடங்கினார்கள்.

1979களில் சோவியத் யூனியன் ஆஃப்கானிஸ்தானில் செல்வாக்குச் செலுத்தியதோடு அங்கு சுமார் 10 வருடங்கள் நிலைகொண்டிருந்தது. தன் படையினை சோவியத் யூனியன் விலக்கிக் கொண்ட பிறகு, அங்கு தலபான் என்ற பிரிவு ஆஃப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் மக்களுக்குக் கடுமையான விதிகளையும் சட்டங்களையும் அமுல் படுத்த ஆரம்பித்தது. இந்த இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு நாட்டினைக் கைப்பற்றி சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக அதனைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

அதே வேளை அல்கைடா என்றொரு அமைப்பும் 1989ம் ஆண்டளவில் உருவாகியது. அதன் தலைவர் ஒசாமாபின்லாடன் என்பவராவார். இவரது நோக்கம் இஸ்லாமிய நாடுகள் மீதான வேற்று நாட்டவரின் செல்வாக்கை இல்லாதொழித்து, முகம்மது நபியின் காலத்தை ஒத்த, ஒரு தலைவருக்குக் கீழான, இஸ்லாமிய இராச்சியம் ஒன்றை உருவாக்குவதாகும்.

தன் அல்கைடா அமைப்பிற்கு ஆரம்பத்தில் பின்லாடன் தன் சொந்தப்பணத்தைச் செலவு செய்து வந்திருந்தாலும் பின்னர் பல இஸ்லாமிய நாடுகள் இவ் அமைப்புக்குப் பல நன்கொடைகளை வழங்கியுள்ளன. இது ஒரு தனித்தியங்கும் சிறு குழுவாக இயங்கி வந்தது.

 2001இல் அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தகர்ப்பினை இஸ்லாமிய அல்கைடா தீவிரவாதிகள் நடத்திய பின்னர் ஆஃகானிஸ்தானில் இயங்கி வந்த அல்கைடா வலையமைப்பை உடைப்பதற்காக அமெரிக்கா ஆஃகானிஸ்தானின் மீது படையெடுப்பை நடத்தியது.ஆனால் அல்கைடா தீவிரவாதியான ஒசாமா பின்லாடனைப் தலவான்கள் பாதுகாத்து வந்தனர். இருந்த போதும் 1.5.2011 இல் ஒசாமா பின்லாடன் அமெரிக்கப் படையினால் கொல்லப் பட்டார். 

அமெரிக்கப் படையெடுப்புக்குப் பின்னரான இந் நிகழ்வுக்குப் பின்னர் அல்கைடா அமைப்பு  பலவீனம் அடைந்திருக்கிறது. தலபான்களின் தலையீடும் சற்றுக் குறைந்திருந்தாலும்  30.8.2021 அன்று அமெரிக்கா தன் படையை விலக்கிக் கொண்ட பிறகு மீண்டும் தலபான்களின் ஆதிக்கம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.. 

தலைநகர் காபூலில் அமெரிக்கப் படை 2021ல் வெளியேறிய போது மக்களும் வெளியேற துடித்த காட்சி

இவர்கள் கடுமையான இஸ்லாமியச் சட்டங்களை அமுல் படுத்தினார்கள். பெண்கள் வேலைக்குச் செல்வதும் கற்றலுக்காகப் பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் செல்வதும் தடை செய்யப்பட்டது.  இதனை எதிர்த்தவர்கள் கடுமையான தண்டனையைப் பெற்றார்கள். களவு எடுத்தவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. 

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தலபான்கள்

இவற்றின் காரணமாக ஏற்பட்ட ஆஃப்கானிஸ்தானின் உள்நாட்டுக் குழப்பங்கள் போர்களினால் மக்கள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். நாட்டின் வரட்சி நிலை மற்றும் பொருளாதார மந்த நிலை, வறுமை போன்ற காரணிகள் மேலும் மக்களைத் தம் நாட்டில் இருந்து வெளியேற வைத்தது. 

அவ்வாறு வெளியேறியவர்கள் அவுஸ்திரேலியாவையும் வந்தடைந்தார்கள்.


சில்லி:




சில்லி என்ற நாடு தென்னமெரிக்காவில் அமைந்திருக்கிறது. 

இதன் கிழக்கெல்லையாக  ஆஜெண்டீனாவைக் கொண்டிருக்கும் இந் நாட்டின் அமைவிடம் தெற்கு வடக்காக 4,630 கிலோ மீற்ரரையும் குறுக்காக 430 கிலோ மீற்றரையும் கொண்டு வடக்கே அட்டகாமா பாலைவனத்தையும் தெற்கே அண்டாட்டிக்காவையும் தொட்டபடி நிற்கும் தேசமாகும். 

‘உரிமையும் பலமும்’ என்பது இந் நாட்டின் தேசியக்  கோட்பாடாகும்.

1973க்குப் பிறகு அங்கிருந்து மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள். அங்கு 1973ல் ஏற்பட்ட இராணுவ ஆட்சியினால் விளைந்த குழப்பங்களினாலும் உள்நாட்டின் அமைதி குலைந்து போன காரணங்களாலும் மக்கள் அங்கிருந்து வெளியேறினார்கள். அந்த ஆரம்ப ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் சில்லி நாட்டைச் சேர்ந்த குறிப்பாக அரசியல் புகலிடக் கோரிக்கையாளர்களை  ஏற்றுக் கொண்டது.







சீனா:


சீன தேசம் கிழக்காசியப் பகுதியில் அமைந்திருக்கிறது.

பரப்பளவில் சீனா மிகப்பெரிய நாடாகும்.  இதன்  வடக்கில் மங்கோலியாவும் கிழக்கில் வட கொரியாவும் வடமேற்கில் கசகஸ்தான்,கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானும் மேற்கிலும் தென்மேற்கிலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா,நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளையும் தெற்கில் மியன்மார், லாவோஸ்,வியற்நாம் நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும் 1949 மற்றும் 1989ம் ஆண்டுகளுக்குப் பின்னரும் புகலிடக் கோரிக்கையாளர்களாக சீனர்கள் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். 

இரண்டாம் உலகப் போரின் பின்னர் பொதுவுடமைவாதிகள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தேசியவாதிகள் பலர் தாய்வானுக்குத் தப்பி ஓடினார்கள். மேசேதுங் ஆட்சிக்கு வந்தார். இவர்களுக்கிடையிலான ( சீன தாய்வான்; தேசியவாதிகள் பொதுவுடமைவாதிகள் ) அரசியல் பிணக்குகள் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன.

பெரும் நிலப்பரப்பும், மக்கள்சனத்தொகை கூடியதும், அணு ஆயுதத்தைக் கொண்டிருப்பதும், வல்லரசாக வளர்ந்து வருவதுமான பொதுவுடமை நாடான மக்கள் சீனக் குடியரசு கடின உழைப்புக்கும் விடா முயற்சிக்கும் உதாரணமாக விளங்குகிறது. புராதன நாகரிக வரலாறைக் கொண்டிருக்கும் சீனா இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானால் ஆக்கிரமிக்கப் பட்டது. சீனாவின் கடற்கரைப் பகுதிகளை யப்பான் கைப்பற்றித் தன் ஆழுகைக்குக் கீழ் வைத்திருந்தது.

 அக்காலங்களில்  அவுஸ்திரேலியாவுக்குள் வந்திருந்த சீன மக்களும் கப்பலோட்டிகளாக இருந்த பெரு வணிகர்களான சீன மக்களும் தம் சொந்த நாட்டுக்குள் போகாமல் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி இருந்தார்கள்.

அப்போது ‘வெள்ளையர்களுக்கு மட்டும்’ என்ற கொள்கை அமுலில் இருந்த போதும்;  இனக் கொள்கை கடைப்பிடிக்கப் பட்டிருந்த போதும்; சீன அகதிகள் தற்காலிகமாகத் இங்கு தங்கியிருக்க அனுமதிக்கப் பட்டார்கள்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிற்பாடு 1945 களில் பெரும்பாலான சீன அகதிகள் தம் தாய்நாட்டுக்குத் திரும்பினர். குடும்பத்தைப் புதிதாக ஆரம்பித்த சிலரும் வெற்றிகரமாகத் தம் வர்த்தக வியாபாரத் துறைகளில் பிரகாசித்த   சிலரும் இங்கிருக்க அனுமதிக்கப் பட்டார்கள்.

1959ல் சீனா தன்னைச் சீனக் குடியரசாகப் பிரகடனப் படுத்திய பிறகு பொதுவுடமை இயக்கக் கொள்கையை ஆதரிக்காத  மக்கள் தாய்வானுக்குத் தப்பியோடியதைப் போல தம் பாதுகாப்புக் கருதி அவுஸ்திரேலியாவிலும் தஞ்சமடையத் தொடங்கினர்.

மேலும், 1989ல் சீன அரசாங்கம் இராணுவத் தாங்கிகளாலும் இராணுவத்தாலும் ’சொர்க்கத்தின் வாயில்’ என்று பொருள் கொண்ட தியனமென் சதுக்கத்தில் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி சொந்த மக்களை; பல்கலைக்கழக மாணவர்களைக் கொன்று குவித்த சம்பவத்திற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் கற்றுக் கொண்டிருந்த சீன மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமையை வழங்கி அவுஸ்திரேலியா தன் நாட்டுக்குரியவர்களாக அவர்களை ஆக்கியது.

 Bob Hawke

அக் காலத்தில் அவுஸ்திரேலிய நாட்டைப் பிரதமராகத்  தலைமைப் பொறுப்பேற்று நடாத்திக்கொண்டிருந்தவர் ‘மக்களின் பிரதமர்’ என வர்ணிக்கப்படும் Bob Hawke ஆவார். அவர் 1984, 1987 மற்றும் 1990ம் என மூன்று தடவைகள் தொடர்ச்சியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தொழில்கட்சிப் பிரதமராக விளங்கினார். 

தியனமென் சதுக்கத்தில் நடந்த இச் சம்பவத்துக்குப் பிறகு பிரதமர்  Bob hawke பாராளுமன்றத்தில் பேசிய உணர்ச்சி மிக்க பேச்சினை கீழே உள்ள இணைப்பினை அழுத்துவதன் வழியாகக் காணலாம். இச் சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சீன மாணவர்கள் அத்தனை பேருக்கும் அவர் நிரந்தர வதிவிட உரிமையைக் கொடுத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் அம் மாணவர்கள் தம் குடும்பத்தவர்களையும் அவுஸ்திரேலியாவுக்கு அழைப்பித்துக் கொண்டார்கள்.

பிரதமர் Bob Hawke இன் உரை

1989. 4.15 அன்று தியனமென் சதுக்கத்தில்  நடந்த தன் சொந்த மக்கள் மீதான இராணுவத் தாக்குதலில் உயிரிழந்த சொந்த மக்களின் தொகை 200 - 300 என சீனாவும் நியூயோர்க் டைம்ஸ் 300 - 800 என்றும் கூறுகிறது. ஆனால் சீன மாணவ அமைப்புகள் இத் தொகை 2000 - 3000 வரை என்று கூறுகிறது. இன்றும் அதிர்ச்சியோடு நினைவு கூரத் தக்க இந்தப் போராட்டம் உலகத்தையே ஒரு தடவை உலுக்கிப் போட்ட நிகழ்வாகும். 

அரசாங்கத்தின் பாரிய இராணுவ படையை தனி ஒருவராக எதிர்த்து நின்ற கல்லூரி மாணவன்

( தொடரும் )

வள்ளத்து அகதிகள் மீதான பாராபட்சம் - சில பின்னணித் தகவல்கள் / காரணங்கள் - 3 -

  வள்ளத்தில் வந்திறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான பாராபட்சத்துக்கான காரணங்கள் பலவாகப் பேசப்படுகின்றன.

 அதிலொன்று அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவம் ஆகும்.11.9.2001, டெம்பா சம்பவம் நடந்து மூன்று வாரத்துக்குள் சுமார் 2996 மக்கள் அத் தாக்குதலால் கொல்லப் பட்டார்கள். அதற்குள் 11 அவுஸ்திரேலியர்களும் அடங்குவர். 

அப்போது அவுஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த ஜோன் ஹவேர்ட் உடனடியாக அமெரிக்காவுக்கு தன் இராணுவ உதவியை வழங்குவதாக அறிவித்தார். அது, அப்போது ஈராக் உடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் நேரடியாக போர் தொடுத்திருந்த அமெரிக்காவுக்கு போய் சேர்ந்த போது அவுஸ்திரேலியாவும் மறைமுகமாக அந்தப் போரில் தன் பங்களிப்பை நல்குவதாக பதிவாயிற்று.

S President George W Bush and Prime Minister John Howard review marines at the Washington Navy Yard, 10 September 2001. Photo: Tina Hager, Wikimedia Commons
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உம் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவேர்ட் உம் 10.9.2001 வோஷிங்டன் நேவி மைதானத்தில்

இந் நிகழ்வுகள் நடந்து ஒரு வாரத்தில் அவுஸ்திரேலியத் தேர்தல்களம் சூடு பிடித்தது. அப்போது பொது மக்கள் அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவத்தாலும் அவுஸ்திரேலியாவில் எல்லைப் பாதுகாப்பையும் தாண்டி வந்திறங்கிய ஆஃப்கானிஸ்தான், ஈராக் நாட்டுப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அதிகப் படியான வரவுகளினாலும் மிரண்டு போயிருந்தனர். எல்லைப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புக் குறித்த பயம் நிறைந்த கேள்விகளால் மேலுமவர்கள் தடுமாறிப் போயிருந்தனர். இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்த அல் ஹைடா (Al-Qaeda ) தீவிரவாதிகளும் இந்தக் கோரிக்கையாளர்களோடு இந் நாட்டுக்குள் புகுந்து விடுவார்கள் என்ற அச்சமே  அதற்குக் காரணமாகும்.

அப்போது பிரதமராக இருந்த ஜோர்ன். ஹவேர்ட், ‘யார், என்னவிதமான பின்னணியில், எப்படி இந்த  நாட்டுக்குள்ளே புக முடியும் என்பதை நாம் தான் தீர்மானிப்போம்’ என்று அறைகூவல் விடுத்தார்.

அத்துடன் புதிய ‘Pacific Solution' என்ற திட்டத்தைச் சட்டமாக்கினார். அச் சட்டத்தின் பிரகாரம் வள்ளத்தின் வழியாக வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அகதி அந்தஸ்தைக் கோர முடியாது. அத்துடன் அவ்வாறு வந்தவர்கள் நாட்டிற்கு வெளியிலேயே வைத்து பரிசீலிக்கப் படுவார்கள். ( offshore) என்பது தான் அச் சட்டமாகும். 

இதனை எதிர் கட்சியான தொழில்கட்சி எதிர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஓரம்சமாகும்.

ஏற்கனவே டெம்பா சம்பவத்தில் ஹவேர்ட் காட்டியிருந்த இறுக்கமான மறுப்பும் தேர்தல் கூட்டங்களில் அவரால் வாக்களிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குறித்த பலமான வாக்குறுதிகளும் மக்களுக்கு ஒரு பலமான தலைவராக அவரை இனம் காட்டியது. அதன் காரணமாக 10 நவம்பர் 2001 ல் நடந்த பொதுத் தேர்தலில் அவர் 3 சதவீதம் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்தச் இறுக்கமான மனிதாபிமானமற்ற சட்ட நடைமுறைகள் உலக நாடுகள் பலவற்றால் கடுமையாக விமர்சிக்கப் பட்டாலும் 2002 இலிருந்து 2008 வரையான 6 வருடங்களில்  23 வள்ளங்களே அவுஸ்திரேலியக் கரையை வந்தடைந்தது. இது 2001இல் மாத்திரம் வந்தடைந்த 43 கப்பல்களில் இருந்து வந்திறங்கிய 5,000 புகலிடக் கோரிக்கையாளர்களோடு ஒப்பிடுமிடத்து மிகக் குறைவானதேயாகும். அதற்குக் காரணம் இச் சட்ட நடைமுறையே என்பது இந்தக் கட்சி கூறும் சமாதானமாகும். 

( தொடரும் )

வள்ளத்து அகதிகளும் ரெம்பா சம்பவமும் - 2 - ( Boat People & Tampa Incident )

 வள்ளத்தில் வந்த அகதிகள் ( Boat People) 

துணிகரமான கடலோடிகளாகவும்; குற்றச் செயல்களில் ஈடுபடுகிறவர்களாகவும்; அதிகளவு பணத்தைப் பெற்று, மக்களைச் சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் ஏற்றி வந்து, வேறு நாடுகளில் இறக்குகிற கடத்தல்காரர்களாகவும் சித்தரிக்கப்படுபவர்கள் People Smugglers என்று அழைக்கப்படும் கடலோடிகள்.

அவர்களுக்கு அதிகளவு பணத்தைக் கொடுத்து, உயிரைத் துச்சமாக மதித்து, கடல் பயணத்தின் வழியில் கடல் கொள்ளக்காரர்களிடமிருந்து தப்பி, அதீத காலநிலைகளின் மாறுபாடுகளினாலும் கப்பல்கள் உடைவதனாலும் திசைமாறி போய் விடுவதனாலும் ஏற்படும் இன்னல்களை எதிர் கொண்டு; எதிர்பார்த்த காலங்களுக்கு அதிகமாக கடலிலேயே தங்கி விட நேர்ந்து விடுவதால் ஏற்படும் தண்ணீர் உணவுப் பற்றாக்குறை போன்ற காரணங்களால் ஏற்படும் உடல் உபாதைகளை வெற்றி கொண்டு; பலவித இன்னல்களுக்கு மத்தியில் உயிர் பிழைத்து,  நாட்டின் எல்லைக் காவல் படையின் கண்களுக்குள் மண்ணைத் தூவி, ஒரு நாட்டின் கரை ஏறுபவர்கள் இந்த வள்ளத்தில் வரும் புகலிடக் கோரிக்கையாளர் .

இந்தத் துணிகரப் பயணத்தில் உடைந்த வள்ளங்களும் இழக்கப்பட்ட உயிர்களும் ஏராளம். 

இத்தனை தடைகளையும் தாண்டி உள்ளே வரும் மக்கள் முதலில் Detention Centres என்று அழைக்கப்படும் தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். இந்தத் தடுப்பு முகாம் சட்டத்துக்குப் புறம்பாக இந் நாட்டுக்குள் வந்தவர்களையும், உரிய பயண அனுமதி ஆவணங்கள் இல்லாதவர்களையும், அவ் அனுமதி  மறுக்கப் பட்டவர்களையும் தடுத்து வைத்திருக்கும் இடமாகும். இங்கு முதலில் அவர்கள் தங்க வைக்கப் படுகிறார்கள். 

இவ்வாறு வந்த மக்களின் வரவு அவுஸ்திரேலியாவினால் கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்துக் கொண்டு போனதன் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு  வடமேற்கே  இந்துசமுத்திரத்தில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கிறிஸ்மஸ் தீவு என்று அழைக்கப்படும்  தீவில் பிறகு அவர்கள்  தங்க வைக்கப்பட்டார்கள்.  


பின்னர்,   அவுஸ்திரேலியா தன் நாட்டுக்கு அருகில் இருக்கும் இரு தீவுகளான Nauru and Manus நவ்ரு மற்றும் மனுஸ் தீவுகளின் அரசாங்கங்களோடு ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டது. அதன் படி அத் தீவுகளில் அவுஸ்திரேலியாவுக்குள் முறையற்ற வகையில் நாட்டுக்குள் உள் நுழைந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்க வைக்கப் படுகிறார்கள். 


ரெம்பா சம்பவம் ( Tampa Incident) 

இந்த ரெம்பா சம்பவம் உலக நாடுகளை அவுஸ்திரேலியாவை நோக்கித் திரும்பி ஒரு தடவை பார்க்க வைத்த ஓர் நிகழ்வாகும்.

24.8.2001ம் ஆண்டு நோர்வே நாட்டுக்குச் சொந்தமான ரெம்பா என்ற சரக்குக் கப்பல் அவுஸ்திரேலியக் கடற்பரப்பின் வழியாக வந்து கொண்டிருந்த போது, ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஹசாரா (Hazara) என்ற சிறுபாண்மையினப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேஷியாவில் இருந்து வந்த வள்ளம் ஒன்று கடலில் மூழ்கி, மக்கள் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து 433 மக்களைக் காப்பாற்றி, அவர்களை அவுஸ்திரேலியக் கரையில் கொண்டுவந்து இறக்க முற்பட்டது. 

ரெம்பா கப்பல்

ஆனால் அவுஸ்திரேலிய அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. பின்னர் நோர்வீஜிய அவுஸ்திரேலிய அரசாங்கங்கள் தலையிட்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பிரகாரம் அவர்கள் நவ்ரூ தீவில் உள்ள தடுப்பு முகாமில் இறக்க இணக்கம் காணப்பட்டது. 

இந்தச் சம்பவம் பல்வேறு நாடுகளின் பார்வையை அவுஸ்திரேலியா நோக்கி திருப்பிய ஓர் நிகழ்வாகும். 

கப்டன். Arne.Rinnan ( அர்ன்.ரைனன்)

Tampa's captain. Arne.Rinnan

மேற்கண்ட சம்பவம் நடைபெற்ற போது ரெம்பா கப்பலின் கப்ரனாக இருந்தவர் அர்ன்.ரைனன் என்பவராவார். 

நடந்தது என்ன?

கடல் சட்டதிட்டங்களின் பிரகாரம் மூழ்கிக்கொண்டிருந்த மரக்கலத்திடம் இருந்து கிடைக்கப் பெற்ற S-O-S ( Save Our Ship ) அழைப்பை ஏற்று இந்து சமுத்திரத்தின் வடமேற்கு அவுஸ்திரேலியாவின் வழியாக வந்துகொண்டிருந்த அர்னின் ரெம்பா சரக்குக் கப்பல் 433 மக்களைக் காப்பாற்றியது.

இந் நிகழ்வு குறித்து அவர் வானொலிக்கு அளித்த நேர்முகத்தில் ‘ நாம் அவ்விடத்தை நெருங்கியபோது பலர் ஆபத்தான நிலையில் தத்தளித்த படி இருந்தார்கள். 10 - 12 பேர் வரையில் மயக்கமுற்றிருந்தனர். மேலும் பலர் சாவோடு போராடிக்கொண்டிருந்தனர்’ என்று கூறுகிறார்.

இவ்வாறு காப்பாற்றப்பட்ட செய்தி அறிந்தவுடன் இந்தோனேஷியா அம் மக்கள் அனைவரையும் Merak யில் உள்ள ஜகார்த்தாவுக்குச் சொந்தமான Ferry port க்கு அவர்கள் அனைவரையும் அழைத்து வரும் படி அறிவுறுத்தியது.

ஆனால் 5 வரையான புகலிடக் கோரிக்கையாளர்கள் கப்பல் தலைவரின் பகுதிக்குள் நுழைந்து, தம்மை அங்கு அழைத்துச் செல்லாதிருக்கும் படியும்; அவ்வாறு அழைத்துச் செல்லுமிடத்து தாம் கடலில் குதித்துத் தற்கொலை செய்யப் போவதாகவும் பயமுறுத்தியதையடுத்து, அவர் கப்பலை கிறிஸ்மஸ் தீவுக்குக் கொண்டு செல்ல இணங்கினார். அதன் காரணமாகச் சர்வதேச கடற்பரப்பின் அருகில் இருக்கும் நாடான அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான கிறிஸ்மஸ் தீவில் இம்மக்களை இறக்க அர்ன் அவுஸ்திரேலியாவிடம் அனுமதியைக் கோரினார்.

 அப்போது பதவியில் இருந்த பிரதமர் ஜோர்ன். ஹவேர்ட் இடமிருந்து அதற்கு காட்டமான பதிலே கிடைத்தது.  இக்கப்பலின் தலைவரை அவர் கடத்தல்கார கும்பலில் ஒருவராகக் கணிப்பதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டதோடு அவர்களில் யாரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால்வைக்க முடியாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்த இழுபறி நிலை தீர்வு எதுவும் எட்டப் படாது மூன்று நாட்கள் வரை நீடித்தது. மக்கள் பசியாலும் பிணியாலும் தொடர்ந்து பாதிக்கப் பட்டு வந்தனர்.  இறுதியில் பொறுமையிழந்த டெம்பா கப்பல் தலைவன் அர்ன் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து 29.8.2001 அன்று அனுமதி  இன்றி அவுஸ்திரேலியக் கடற்பரப்பினுள் பிரவேசித்தார். 

 அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான 45 கடல்படையினர் கிறிஸ்மஸ் தீவில் இருந்து 7 கிலோமீற்றர்கள் தூரத்தில் கப்பலைத் தடுத்து நிறுத்தினர். இங்கு மேலும் 3 நாட்கள் கப்பல் நிறுத்தப்பட்டது. இறுதியாக 2.9.2001 அன்று ஏனைய நாடுகளின் தலையீட்டைத் தொடர்ந்து இந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. 'Pacific Solution' ஒன்று எட்டப்பட்டது.

இந்த விடயம் பற்றி அப்போது 45 SAS troops கடற்படையின் இரண்டாம் கொமாண்டராக இருந்த Peter.Tinley என்பார் கொடுத்த அறிக்கையில் ‘400க்கு மேற்பட்ட சாதாரண அகதிகள் மிகுந்த பசியோடும் உடனடி மருத்துவ தேவைகளோடும் காணப்பட்டார்கள். அவர்கள் என்ன நடக்கப் போகிறது என்ற பயத்தோடு இருந்தார்கள். மேலும், இக் கப்பலின் தலைவன் இந்த மனிதப் பொதிகளை  ( Human cargo) தரையில் இறக்கி, சர்வதேச சட்டதிட்டங்களின் பிரகாரம் தன் பணியை முடித்து விட்டுத், தன் பயணத்தைத் தொடரும் விருப்பத்தோடிருந்தார்.’ (The guardian) என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.

அதன் பின் 'Pacific Solution' ஒப்பந்தத்தின் பிரகாரம் நியுசிலாந்து 130 புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தது. ஏனையவர்கள் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ள நவ்ரு தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு தடுப்பு முகாம்கள் அமைக்கப் பட்டு அவர்கள் அங்கு தங்கவைக்கப் பட்டார்கள்.

இந்தச் சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்ததோடு அவுஸ்திரேலியா பற்றிய பிம்பமும் பலத்த சேதத்திற்கு உள்ளானது.

இந்தக் கடுமையான சட்டதிட்டங்களினால் ஜோர்ன். ஹவேர்ட் மீண்டும் அவுஸ்திரேலிய மக்களால் வழமைக்கு மாறாக 3% அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமராகத் தெரிவு செய்யப் பட்டார்.

ரெம்பா கப்பல் தலைவன் அர்ன்.ரைனன்னுக்கு அவரது மனிதாபிமான செயற்பாட்டைக் கெளரவிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபை 'Nansen Refugee Award' என்ற விருதினைக் கொடுத்து கெளரவித்தது. அவரை உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் கதாநாயகனாகக் கொண்டாடிக் களித்தனர்!

ரெம்பா கப்பலில் புகலிடக் கோரிக்கையாளர்கள்

 பசுபிக் தீர்வு (Pacific Solution):

இந்தத் தீர்வின் பிரகாரம் Cartier Island, Christmas Island, Ashmore Island, Cocos Island ஆகியன அவுஸ்திரேலியத் தீவுகள் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டன. அவைகள் பப்புவானியூகினியோடு சேர்க்கப் பட்டன. இதன் பொருள் என்னவென்றால் இனி இங்கு வந்திறங்கும் யாரும் அவுஸ்திரேலிய மண்ணுக்கு உரியவர்கள் அல்ல என்பதாகும். இந்த ஒப்பந்தம் பப்புவாநியூகினியோடு  செய்யப் பட்டது.  

இதன் படி இரு நாடுகளும் அவுஸ்திரேலியப் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தம் நாட்டுக்குள் அனுமதித்தனர். இதற்காக அவுஸ்திரேலியா பெருந்தொகை ஒன்றைக் கைமாற்றியது.

இது ’பசுபிக் தீர்வு’ என்ற ஒப்பந்தமாக அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி பப்புவானியூகினிக்குச் சொந்தமான  நவ்ரு மற்றும் மனுஸ் தீவுகளில் பல இலட்சக்கணக்கான டொலர்கள் செலவில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப் பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அத் தீவுகளுக்கு மாற்றப் பட்டார்கள்.  

ஆனால் 'இந்த ஒப்பந்தம் அகதிகள் வரவைக் குறைக்கவில்லை; ஆனால், ஜோர்ன்.ஹர்வேர்ட் 2001இல் அமோக வெற்றியினை அடைய உதவியது' என்று  Australian Geographic history என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.

மேலும், அது தன் புத்தகத்தை நிறைவு செய்யும் போது ‘இதில் சுவாரிஷமான உண்மை என்னவென்றால் இந்த அபிரோஜினல் மக்களின் தேசத்திற்கு வள்ளத்தில் வரும் வழக்கத்தை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் பிரித்தானியாவிலிருந்து கப்பலேறி  கடல் வழியாக அவுஸ்திரேலியக் கரையை 1770ல் ( Botany Bay யில்)  வந்தடைந்த ஜேம்ஸ் குக் உம் அவர் வழி வந்தவர்களும் தான்’. என்று சொல்லி முடிக்கிறது.

Courtesy:  Australian Geographic History

( தொடரும்) 

அவுஸ்திரேலியாவும் அகதிகளும் - 1 -

 அவுஸ்திரேலியா காலத்துக்குக் காலம் அகதிகளை நாட்டினுள்ளே அனுமதித்து வருகிறது. பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக விளங்கிய காலங்களில் இருந்து (1800கள் ) இற்றை வரை மக்கள் குடியேற்றம் இங்கு நடந்து வருகிறது. யார் இங்கு வரலாம் எவ்வளவு பேர் வரலாம் என்பதை அவ் அவ் குடியேற்ற நாடுகளின் அரசாங்கங்கள் தீர்மானித்து வந்தன.

ஆனால் இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பிறகு; ஐக்கியநாடுகள் சபை (UN) உருவாக்கப் பட்டதன் பிறகு; அதன் உட்பிரிவான (UNHCR) - United Nations High Commissioner for Refugees  -  ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் உருவான பிறகு, அவுஸ்திரேலியா அகதிகளை உள்வாங்க ஆரம்பித்தது.

அகதிகள் என்போர் யார் என்று ஐக்கியநாடுகள் சபை வரையறை செய்திருக்கிறது. 

அகதிகள் என்போர் யார்?

இன, மொழி, மத, காரணங்களாலும் அரசியல் அபிப்பிராயங்கள் காரணமாகவும் தான் பிறந்த நாட்டில் தம் உயிருக்கும் பாதுகாப்பான வாழ்வுக்கும் உத்தரவாதமில்லாமல் இருக்குமிடத்து  தம் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவோர் அகதிகளாவார். 

அவர் அகதியென நிரூபிக்கப்படுமிடத்து புகலிடம் கோரிய நாடு அவருக்கு 

* வேலை செய்வதற்கான உரிமை

* வீடு, கல்வி, மற்றும் நலச்சேவைகளைப் பெறுதலுக்கான உரிமை

* தான் சார்ந்த சமையக் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும்  கடைப்பிடிக்கும் உரிமை

* விரும்பியபடி அச்சமின்றி நடமாடும் உரிமை

* சட்டத்தின் வழியாக நீதியை கோரும் உரிமை

* தன் அடையாளத்தை வெளிப்படுத்தி பயணிக்கும் உரிமை

இவற்றை வழங்க வேண்டும் என்று 28.7.1951 அன்று கூட்டப்பட்ட மாநாட்டின் பிரகாரம் ஐ.நா. சபை வலியுறுத்துகிறது.

                       சில குழப்பங்களுக்கான விளக்கங்கள்:

புகலிடக் கோரிக்கையாளர் என்போர் யார்? ( Asylum seeker )

இவர் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்து விட்டுப் பதிலுக்காகக் காத்திருப்பவர். 

இவருக்கு அகதி அந்தஸ்து கிடைக்கும் வரை பல உரிமைகள் குறிப்பாக பாதுகாப்பு மற்றும் நலச் சேவைகளுக்கான உரிமைகளை புகலிட நாடு மறுக்கலாம்.

இடம்பெயர்ந்தோர் என்போர் யார்?

இடம்பெயர்ந்தவர்கள் எனப்படுவோர் தன் சொந்த நாட்டிற்குள்ளேயே தன் வீட்டை விட்டுப்  பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து தன் நாட்டுக்குள்ளேயே வேறொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து இருப்போர்.

விசா என்றால் என்ன?

விசா என்பது ஒரு நாட்டுக்குள் ஒருவர் எவ்வளவு காலம் நிற்கலாம் என்பதைச் சொல்லும் அரச அனுமதி பெற்ற பயண ஆவணம் ஆகும்.

புதிய நாடு ஒன்றுக்கு வந்த எல்லோரும் அகதிகளா?

இல்லை. பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் தன் நாட்டை விட்டு வேறொரு நாட்டுக்குக் குடியேற விரும்பலாம்; வரலாம்.

எவ்வளவு காலத்திற்கு ஒருவர் அகதியாகக் கருதப்படுவார்? 

தன் சொந்த நாடு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று அவர் கருதும் வரையும். அல்லது அவர் நிரந்தரமாக வந்த நாட்டில் வதிவிட உரிமை பெறும் வரையும்.

யார் அகதி எனக் கருதப்பட மாட்டார்கள்?

போர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், மற்றும் பல சட்ட விரோதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்.

ஓர் அகதிக்கான பொறுப்புகள் என்ன?

குடியேறிய நாட்டின் சட்டங்களை மதித்து நடத்தலும் பொது நடைமுறைச் செயல்பாடுகளை மதித்து நடத்தலும்.

உலகம் முழுவதும் எவ்வளவு அகதிகள் இருக்கிறார்கள்?

1951 - 1.5 மில்லியன்

1980 - 8 மில்லியன்

2007 - 11 மில்லியன்

2008 - 15 மில்லியன்

2015 - 21 மில்லியன்

அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் படி 2013ம் ஆண்டு

அமெரிக்கா - 51,500 அகதிகளையும்

கனடா - 12,900 அகதிகளையும் 

அவுஸ்திரேலியா - 9,200 அகதிகளையும் உள்வாங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மனிதாபிமான உதவித்திட்டங்கள்:

நாட்டை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ள அகதிகளுக்கு உணவு, தண்ணீர், இருப்பிடம், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குகிறது. 2011ம் ஆண்டு சிரியாவில் இருந்து இடம் பெயர்ந்து சிரியா நாட்டுக்குள்ளேயே வாழ்ந்து வரும் சிரிய நாட்டு மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியது. இதற்கடுத்ததாக அதிகளவு உதவிகளைப் பெற்றவர்கள் லெபனான் மற்றும் ஜோர்டான் நாடுகளில் அகதிகளாகத் தங்கியிருக்கும் சிரிய நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.  

அதே நேரம் அவர்களில் பலரைத் தன் நாட்டிலும் குடியமர்த்தியுள்ளது. ஆனால் அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு கடுமையான பாதுகாப்பு பரீட்சார்த்தங்களையும் உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளையும்  நடைமுறைகளையும் தன் குற்றமற்ற தன்மையையும் அவுஸ்திரேலிய சட்டதிட்டங்களுக்கேற்ப திருப்திகரமாக நிரூபித்தவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறு வந்தவர்களுக்கு சகல வசதிகளையும் வாய்ப்புகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

அதே நேரம்  தகுந்த ஆவணங்கள் இல்லாது வள்ளங்களின் வழியாகப் புகலிடக் கோரிக்கையாளர்களாக நாட்டினுள்ளே வந்தவர்களுக்கு இத்தகைய உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கிறது.

ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆனைக்குழுவும் அவுஸ்திரேலியாவும்:

அவுஸ்திரேலியா இந்த அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் சபையின் ஆணைக்குழுவோடு இணைந்து, யார் இந்த நாட்டுக்குள்ளே வரலாம் என்பதைத் தீர்மானிக்கிறது. 

இந்த அகதிகளுக்கான ஆணைக்குழு 1950ம் ஆண்டில் இருந்து ( இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு) ஐரோப்பிய நாடுகளில் அகதிகளான இலட்சக்கணக்கான மக்களை மீள வேறு நாடுகளில் குடியேற்றியதில் இருந்து தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தில் சுமார் 10,000 க்கு மேற்பட்ட வேலையாட்கள் சுமார் 128 நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த அகதிகள் ஆணைக்குழுவோடும் செஞ்சிலுவைச் சங்கத்தோடும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடும் அவுஸ்திரேலியாவும் இணைந்து செயலாற்றி வருகிறது. 

அதே நேரம் 2011ம் ஆண்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் தன் மனிதாபிமான சேவைகளை மேலும் விஸ்தரித்து உதவிகளை வழங்க வேண்டும் என்பதற்காக சிறப்புக் குழு ஒன்றினையும் உருவாக்கியுள்ளது. ( Australian Civilian Corps) (ACC) என்றழைக்கப்படும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்று உதவ எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள்,.

வள்ளத்தில் வந்தோர்:

1970ம் ஆண்டு வட வியற்நாமின் பிடியில் தென் வியற்நாம் சிக்கிக் கொண்டதன் காரணமாக அதனை விரும்பாத பல ஆயிரக்கணக்கான தென் வியற்நாமிய மக்கள் சிறிய வள்ளங்களின் வழியாக அண்மையில் உள்ள பாதுகாப்பான நாடுகளுக்குச் சென்றார்கள். சுமார் 2000 வியற்நாமிய அகதிகள் வள்ளத்தின் வழியாக வந்து அவுஸ்திரேலியாவில் முதன் முதலாக புகலிடக்  கோரிக்கையை முன் வைத்தார்கள். 

1999 ம் ஆண்டில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் துணிகரமான ஆபத்தான கடல் வழிகளால் வள்ளங்களின் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு வந்து அகதி அந்தஸ்துக் கோருகிறார்கள். அந்தப் பாதுகாப்பற்ற பயணங்களில் பல வள்ளங்கள் அதீத காலநிலைகளினாலும் போதிய பாதுகாப்பான கப்பல்களில்லாததனாலும்  அவை உடைந்தும்  மூழ்கடிக்கப்பட்டும் பல அவல இறப்புகளும் நேர்ந்துள்ளன.

இப்போது சட்டபூர்வமில்லாது வள்ளங்களின் வழியாகப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலிய நாட்டினுள்ளே வர அரசாங்கம் தடை விதித்துள்ளது.


( தொடரும்)