வள்ளத்தில் வந்திறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான பாராபட்சத்துக்கான காரணங்கள் பலவாகப் பேசப்படுகின்றன.
அதிலொன்று அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவம் ஆகும்.11.9.2001, டெம்பா சம்பவம் நடந்து மூன்று வாரத்துக்குள் சுமார் 2996 மக்கள் அத் தாக்குதலால் கொல்லப் பட்டார்கள். அதற்குள் 11 அவுஸ்திரேலியர்களும் அடங்குவர்.
அப்போது அவுஸ்திரேலியாவின் பிரதமராக இருந்த ஜோன் ஹவேர்ட் உடனடியாக அமெரிக்காவுக்கு தன் இராணுவ உதவியை வழங்குவதாக அறிவித்தார். அது, அப்போது ஈராக் உடனும் ஆஃப்கானிஸ்தானுடனும் நேரடியாக போர் தொடுத்திருந்த அமெரிக்காவுக்கு போய் சேர்ந்த போது அவுஸ்திரேலியாவும் மறைமுகமாக அந்தப் போரில் தன் பங்களிப்பை நல்குவதாக பதிவாயிற்று.
![]() |
அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உம் அவுஸ்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவேர்ட் உம் 10.9.2001 வோஷிங்டன் நேவி மைதானத்தில் |
இந் நிகழ்வுகள் நடந்து ஒரு வாரத்தில் அவுஸ்திரேலியத் தேர்தல்களம் சூடு பிடித்தது. அப்போது பொது மக்கள் அமெரிக்காவில் நிகழ்ந்த சம்பவத்தாலும் அவுஸ்திரேலியாவில் எல்லைப் பாதுகாப்பையும் தாண்டி வந்திறங்கிய ஆஃப்கானிஸ்தான், ஈராக் நாட்டுப் புகலிடக் கோரிக்கையாளர்களின் அதிகப் படியான வரவுகளினாலும் மிரண்டு போயிருந்தனர். எல்லைப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்புக் குறித்த பயம் நிறைந்த கேள்விகளால் மேலுமவர்கள் தடுமாறிப் போயிருந்தனர். இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்த அல் ஹைடா (Al-Qaeda ) தீவிரவாதிகளும் இந்தக் கோரிக்கையாளர்களோடு இந் நாட்டுக்குள் புகுந்து விடுவார்கள் என்ற அச்சமே அதற்குக் காரணமாகும்.
அப்போது பிரதமராக இருந்த ஜோர்ன். ஹவேர்ட், ‘யார், என்னவிதமான பின்னணியில், எப்படி இந்த நாட்டுக்குள்ளே புக முடியும் என்பதை நாம் தான் தீர்மானிப்போம்’ என்று அறைகூவல் விடுத்தார்.
அத்துடன் புதிய ‘Pacific Solution' என்ற திட்டத்தைச் சட்டமாக்கினார். அச் சட்டத்தின் பிரகாரம் வள்ளத்தின் வழியாக வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அகதி அந்தஸ்தைக் கோர முடியாது. அத்துடன் அவ்வாறு வந்தவர்கள் நாட்டிற்கு வெளியிலேயே வைத்து பரிசீலிக்கப் படுவார்கள். ( offshore) என்பது தான் அச் சட்டமாகும்.
இதனை எதிர் கட்சியான தொழில்கட்சி எதிர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஓரம்சமாகும்.
ஏற்கனவே டெம்பா சம்பவத்தில் ஹவேர்ட் காட்டியிருந்த இறுக்கமான மறுப்பும் தேர்தல் கூட்டங்களில் அவரால் வாக்களிக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக் குறித்த பலமான வாக்குறுதிகளும் மக்களுக்கு ஒரு பலமான தலைவராக அவரை இனம் காட்டியது. அதன் காரணமாக 10 நவம்பர் 2001 ல் நடந்த பொதுத் தேர்தலில் அவர் 3 சதவீதம் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்தச் இறுக்கமான மனிதாபிமானமற்ற சட்ட நடைமுறைகள் உலக நாடுகள் பலவற்றால் கடுமையாக விமர்சிக்கப் பட்டாலும் 2002 இலிருந்து 2008 வரையான 6 வருடங்களில் 23 வள்ளங்களே அவுஸ்திரேலியக் கரையை வந்தடைந்தது. இது 2001இல் மாத்திரம் வந்தடைந்த 43 கப்பல்களில் இருந்து வந்திறங்கிய 5,000 புகலிடக் கோரிக்கையாளர்களோடு ஒப்பிடுமிடத்து மிகக் குறைவானதேயாகும். அதற்குக் காரணம் இச் சட்ட நடைமுறையே என்பது இந்தக் கட்சி கூறும் சமாதானமாகும்.
( தொடரும் )
No comments:
Post a Comment