Wednesday, 12 July 2023

Waratah மலர்

 



அவுஸ்திரேலியாவினைத் தாயகமாகக் கொண்ட இந்தக் காட்டு மலர் வராற்ரா என்று அழைக்கப் படுகிறது. அவுஸ்திரேலியா எட்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அதில் நியூசவுத்வேல்ஸ் என்பது ஒரு மாநிலம். அந்த மாநிலத்தின் தேசியப் பூவாக இந்த வராற்ரா மலர் தெரிவு செய்யப் பட்டிருக்கிறது. 


மலர் படங்கள்: நன்றி இணையம்.

அவுஸ்திரேலிய நாட்டு பூர்வகுடி மக்களான அபிரோஜினல் மக்களிடம் வாய் மொழிவழியாக சந்ததி சந்ததியாக கடத்தப்பட்டுக் கொண்டு இன்று வரை உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வராற்ரா மலரினைப் பற்றிய கதை ஒன்றினை உங்களோடு இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

கடந்த வருடம் ஜூன் மாதம் 2022 இல் இலங்கையில் இருந்து வெளிவரும் செம்மண் பத்திரிகையில் குழந்தைகளுக்காக நான் எழுதி வந்த ‘கண்டறியாத கதைகள்’ என்ற அவுஸ்திரேலியாவை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் தொடரில் 5 வதாக இந்தப் பகுதி பிரசுரமாகி இருந்தது.

பலகாலங்களுக்கு முன்னர் ஓர் ஆற்றங்கரையின் இரு மருங்கிலும் வாழ்ந்து வந்த Darug மக்கள் தம் உறவினர்களுக்கிடையில் சண்டை பிடித்து வந்தார்கள். அதனால் நண்பர்கள், உறவினர்கள் எனப் பலர் கொல்லப் பட்டு அவர்களின் இரத்தமெல்லாம் ஆற்றில் கலந்து ஆறும் அதன் ஊற்றுக் கண்களும் சிவப்பாக மாரிவிட்டன. இரத்தம் எல்லாம் ஆற்று நீரோடு கலந்து  விட்டது. அதனால் இம் மக்கள் மாத்திரமின்றி அவர்களின் ஏனைய உறவினர்களான வன விலங்குகள் கூட அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியாது போய் விட்டது. தண்ணீர் இல்லாமல் போய் விட்டதால் இவர்களின் உறவினர்களான காட்டு விலங்குகலும் தங்கள் பூர்வீக இருப்பிடங்களை விட்டு தண்ணீர் கிடைக்கும் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து போய் விட்டன. அதனால் இந்த இடம் அழிந்து போன இரத்தம் தோய்ந்த பூமியாகக் கைவிடப்பட்டிருந்தது. 

ஒருநாள் வானத்தில் இருந்து வானதேவன் கீழிறங்கி வந்தார். இந்த இடத்தைப் பார்த்துக் கவலைப் பட்டு கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீர் இரத்தக் கறை படிந்த மண்ணின் மீது விழுந்தது. இரத்தக் கறை படிந்த மண்ணின் மீது விழுந்த வானதேவனின் கண்ணீரில் இருந்து ஒரு செடி முளைத்து செந் நிறத்தில் ஒரு பூ பூத்தது. அது தான் வராற்ரா பூ வாகும்.

இந்த அழகான வராற்ரா பூவின் இன்னொரு விஷேஷம் என்னவென்றால் அவுஸ்திரேலியாவில் வெப்பகாலங்களில் நிகழும் காட்டுத் தீயினால் வன உயிரினங்கள், மரம் செடிகொடிகள், என எல்லாம் அழிந்த பின்னாலும் இச் செடி மீண்டும் விரைவாக முளைத்து செந்நிறத்தில் பூத்து நிற்கும். 

அதனால் இப்பூக்களை மக்கள் நம்பிக்கையின் சின்னமாகவும் பெரும் அழிவுகள் நிகழ்ந்த பின்னாலும் ஒரு சிறந்த நன்மை நிகழும்  என்ற நம்பிக்கையின் எடுத்துக் காட்டாகவும் இப் பூவினை மக்கள் கொண்டாடுகிறார்கள். 

இப்படியாக நியூசவுத் வேல்ஸின் மாநிலப் பூ அதன் வசீகரமான தோற்றத்தாலும் அது முதன் முதல் தோன்றிய இடமாக அவுஸ்திரேலியாவைக் கொண்டிருப்பதாலும், அதற்கென ஒரு செவிவழி வரலாற்றைக் கொண்டிருப்பதாலும்; மேலும், அது ஒரு நம்பிக்கையின் சின்னமாக அமைந்திருப்பதாலும் மதிப்புப் பெற்ற மலராக விளங்குகின்றது.



18.6.2022. 
எழுதியது: யசோதா.பத்மநாதன்.

15.6.2018.

No comments:

Post a Comment