Friday, 7 July 2023

அவுஸ்திரேலிய சட்டரீதியான சம்பிருதாயங்கள்

                    Acknowledgement of country and Wellcome to country 

பல்லாயிரம் ஆண்டுகளாக அவுஸ்திரேலிய நாட்டின் சொந்தக் காரர்களாக; இந் நாட்டுக்கு  உரித்துடையவர்களாக விளங்குபவர்கள் அபிரோஜினல் மக்கள் என இனம் காணப்படும் அவுஸ்திரேலியப் பழங்குடி மக்கள். 

இம் மக்களுக்கு; இந் நாட்டின் சொந்தக் காரர்களுக்கு  வந்தேறு குடிகளாக இங்கு குடிபுகுந்து  அவர்களின் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற நாம் அவர்களுக்கான இடத்தையும் மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கிறோமா என்ற கேள்விக்கு வருந்தத் தக்க பதிலே விடையாகும்.

கீழே உள்ள படம் வேற்று நாட்டவர் இந்தத் தேசத்திற்குள் புகுவதற்கு முன்னர் பழங்குடி மக்களின் இனக்குழுக்கள் வாழ்ந்திருந்த பிரதேசங்களைப் பட்டியலிட்டிருக்கிறது. 

நன்றி: கூகுள்


அண்மையில் காணக்கிடைத்த ஒரு துண்டுப் பிரசுரத்தின் தெளிவில்லாத ஓர் ஒளிப்படப் பிரதியையும் மேலதிகத் தகவலுக்காக இங்கு இணைத்துக் கொள்ளுகிறேன்.





இந் நாட்டில் எந்த ஒரு சாதாரண பொது நிகழ்வுகள் நடைபெறுகின்ற போதும் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாக இந் நாட்டுப் பழங்குடி மக்களுக்கான நினைவுகூரலைச் செய்த பிறகே நிகழ்ச்சியை ஆரம்பிப்பது சம்பிருதாயமாகும். 

அதனைப் பலரும் பல்வேறு விதமாக நினைவு கூருகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை வெறும் சம்பிருதாயமாக அமைந்திருக்கக் காணலாம். மேலும் சில தாம் வாழும் பிரதேசம் முன்னர் எந்த இனக்குழுவினருக்குச் சொந்தமாக இருந்ததோ அந்த இனக்குழு மக்களை நினைவுறுத்தி தம் நினைவு கூரலைச் சொல்லிக் கொள்வார்கள்.

அது பொதுவாக கீழ்கண்டவாறு அமைந்திருக்கும். குயின்ஸ்லாந்து மாகாணத்து அரசாங்கம் இந்த முறையைப் பரிந்துரை செய்கிறது.

“I acknowledge the *___________________people, the Aboriginal/Torres Strait Islander** Owners of the land where we gather today and pay my respects to Elders past, present and emerging. I recognise their connection to Country and their role in caring for and maintaining Country over thousands of years. May their strength and wisdom be with us today.”

*If known add the Traditional Owners’ clan/language group name

**Use ‘Aboriginal’ or ‘Torres Strait Islander’ as appropriate.

இப்படியான நிகழ்வு பொதுவாக இருக்கிற போதும் பெரும் அரச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற போது Welcome to Country என்று ஒரு சடங்கு நடைபெறுவதும் வழமை. மகாநாடுகள், பட்டமளிப்பு விழாக்கள், உலகத் தலைவர்கள் கூடும் நிகழ்வுகள், விருது வழங்கும் வைபவங்கள், உலகமேடை நிகழ்ச்சிகளில் இத்தகைய சம்பிருதாயம் இருப்பது வழமை. 

 அதில் அந்த நிகழ்ச்சி நடைபெறுகிற பிரதேச இனக்குழுவினைச் சேர்ந்த ஒரு பழங்குடி இனத்தைச் சார்ந்த  பெரியவர் ஒருவர் வந்து பாடல் வழியாகவோ அல்லது ஆடல் வழியாகவோ அல்லது அவர்களுக்கான இடைக்கருவிகளின் வழியாகவோ அன்றேல் அவர்களுடய புகைச்சடங்குகளின் வழியாகவோ அன்றேல் பேச்சின் மூலமாகவோ சம்பிரதாய பூர்வமாக மக்களை வரவேற்பதாக அமையும். இந் நிகழ்வுகள் பெரும் எடுப்பிலான நிகழ்வுகளின் போது விஷேடமாக செய்யப்படுவதாகும்.


அண்மையில் படிக்கக் கிடைத்த Asylum Seeker Resocers Center இனால் வெளியீடு செய்யப் பட்ட Seeking Asylum என்ற புத்தகம் தன் முதல் பக்கத்தில் மிக அழகான ஒரு நினைவு கூருதலை பூர்வகுடி மக்களுக்குத் தெரிவித்து அந்தப் புத்தகத்தை மேலும் மதிப்பார்ந்ததாக ஆக்கியிருந்தது. அதனை நன்றியோடு நினைவுகூர்ந்து அதனை இங்கு உங்கள் பார்வைக்காக மறு பிரசுரம் செய்கிறேன்.

Acknoledgement of Country

'We would like to acknowledge and pay tribute to the first storytellers, the First Nations people of this land, who have been sharing stories for thousands of years, from generation to generation. Stories filled with teachings, culture, beliefs, values, dreaming and ways of life, stories which have endured through colonialism, genocide and discrimination. We honour and commit to continue to learn from the voices of past, present and emerging leaders of this land. May they continue to pave the way to a future where everyone has equal opportunity to belong, contribute and thrive in this country we call Australia.

Always was, always will be, Aboriginal land'.

இதன் தமிழாக்கம் அல்லது பொழிப்பு:

நாட்டை நினைவுகூருதல்

இந் நாட்டின் முதலாவது கதை சொல்லிகளை நாம் வணக்கத்தோடு நினைவு கூருகிறோம். அவர்கள் இந்த நிலத்தின் பூர்வ குடிகள். அவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக; தலைமுறை தலைமுறைகளாக; கதைகளைப் பகிர்ந்து வருகிறவர்கள். அவர்கள் கதைகளின் வழியாகத் தம் கற்பித்தலை; தம் பண்பாட்டை; தம் நம்பிக்கைகளை; தம் விழுமியங்களை; தம் வாழ்க்கைக் கனவுகளை; தம் வாழ்க்கையின் வழிமுறைகளைத் தம் சந்ததிகளுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். அது முடிவில்லாது காலணித்துவக் காலத்திலும், இனப்படுகொலை நடைபெற்ற பொழுதுகளிலும், பாராபட்சம் காட்டப்பட்ட காலங்களிலும், அவைகளை எல்லாம் தாங்கிய படி தொடர்ந்து வந்திருக்கிறது.

நாம் அவர்களுக்குத் தலைவணங்கி; மரியாதை செலுத்துவதோடு;  கடந்தகால, இன்றய மற்றும் இனிவரும் இத் தேசத்தின் பிதாக்களிடம் இருந்து தொடர்ந்து அறிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் நாம் கடப்பாடுடையவர்களாக இருக்கிறோம். 

சமவாய்ப்பும்,  பங்களிப்பினை நல்கும் உரிமையும், எல்லோரும் சமனாக வாழும் உரிமையும் கொண்ட; நாம் அவுஸ்திரேலியா என்றழைக்கும் இந்த நாட்டில்; அவர்களின் பங்களிப்பும் பரவி  செழித்தோங்குவதாக!

இத் தேசம் அபிரோஜினல் மக்களின் தேசமாகவே இருந்தது; இனியும் அவ்வாறே இருக்கும்.

No comments:

Post a Comment