Friday 30 December 2016

அரச நூலக சேவையில் தமிழின் இருக்கை

அவுஸ்திரேலிய ஒரு பல்கலாசார நாடாக இருப்பதனால் இங்கு ஒவ்வொரு தனி மனிதரும் தன் மத நம்பிக்கைகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் மற்றவருக்கு இடைஞ்சல் இல்லாத மாதிரி அநுசரிக்க பூரண அனுமதி உண்டு.

அவர்கள் தம் மொழியில் பேசவும், தம்  கலாசாரம் சார்ந்த உடை அணிந்து கொண்டாட்டங்களில் ஈடுபடவும் தம் மண் சார்த்த பாரம்பரிய உணவுகளை உண்ணவும் விற்கவும், வழிபாட்டிடங்களை ஸ்தாபித்து வழிபாடு நடாத்தவும் உரித்துடையவர்கள்.

அதே நேரம் மற்றவர்களுடய மத நம்பிக்கைகள், வாழ்க்கைத் தெரிவுகள், நாளாந்த வாழ்க்கை, கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவர்களாகவும் சகித்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். இருந்த போதும் அவுஸ்திரேலியாவுக்கான பொதுச் சட்டங்கள் சகலருக்கும் ஒரே மாதிரியானவை. அனைவரும் அதனை மதிக்கவும் அனுசரிக்கவும் கடமைப்பட்டவர்கள்.

‘பல்கலாசாரம்’ என்பதை தன் பலமாகக் கொண்டுள்ள இந் நாட்டில் சுமார் 73 மொழிகளில் அரச கரும பீடங்களில் மொழிபெயர்ப்புச் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். சமூக மற்றும் மொழித் திணைக்களங்கள் அம் அம் மொழி பேசும் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் அம் மொழிகளில் கூடுதலான சேவைகளை வழங்குகிறது.

குறிப்பாக சமூகக் கொடுப்பனவுகள், புதிதாக இந் நாட்டுக்கு குடிபுகுந்தோருக்கான சேவைகள், பாடசாலைகள், வைத்திய சாலைகள் போன்ற இடங்களில் ஆங்கிலத்தோடு அம் அம் மொழிகளிலும் அரச அறிவித்தல்களையும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்கிறது. முறையான சேவை விண்ணப்பங்களோடு கேட்கப்படும் கோரிக்கைகளுக்கு அரச மாநியங்களும் வழங்கப்படுகின்றன. சில தன்னார்வ அமைப்புகளுக்கு வரி விலக்குகளும் உண்டு.

அரசு தன் வானொலி ஒலிபரப்பு மற்றும் நூலக சேவைகளிலும் இம் மொழிகளில் சேவைகளை வழங்குகிறது.  இரு மொழி தெரிந்திருப்பவர்களுக்கு வேலை இடங்களில் நியமன சலுகைகளை சில நிறுவனங்கள் வழங்குகின்றன. பாடசாலைகளிலும் இரண்டாம் மொழியாக ஒரு பாடத்தைத் தெரிவு செய்வதற்கும் ஆசிரியர் இல்லாத இடத்து வெளிவாரியாகப் படித்து பொதுப் பரீட்சையில் தோற்ற மாணவர்களுக்கு உரிமை உண்டு.

அரசு என்ற இயந்திரம் மத்திய அரசு, மாநில அரசு, நகர சபை என்ற படி முறையில் மக்களைச் சென்றடைகிறது. ஆனாலும் மாநிலங்களுக்கும் நகரசபைகளுக்கும் என தனிப்பட்ட அதிகாரங்களும் உண்டு. குறிப்பாக நூலகங்களை மாநிலங்களே நிர்வகிக்கின்றன.

கீழே நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து பிளக்ரவுன் நகரசபையூடாக நிர்வகிக்கப் படும் பிளக்ரவுன் நூலகத்தில் இருந்த அறிவித்தல்களையும் இலவசமாக எவரும் எடுத்துப் போகும் படியாக நூலகத்தில் புத்தகம் இரவல் பெற வருபவர்களுக்காக வைக்கப் பட்டிருக்கும் Book Mark உம் உங்கள் பார்வைக்காக....








ஒளிப்படச்ம்: யசோதா.பத்மநாதன்.


செல்லும் இடம் சென்று சேர.....ஒரு ‘Road Map'

பார்க்க வசதியாகப் பகுப்புகள்:

1. அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்

2. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம்

3. அவுஸ்திரேலியத் தமிழ் ஆழுமைகள்

4. கோயில்கள்

5. தமிழ் பாடசாலைகள்

6. பத்திரிகைகள், இதழ்கள், சஞ்சிகைகள்  (அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்த / வந்து கொண்டு இருக்கும்)

7. இணையத்தளங்கள், வலைப்பூக்கள் (அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்த / வந்து கொண்டு இருக்கும்)

8. இலவசப்பிரதிகள் / அழைப்பிதழ்கள்

9.வானொலிகள் / இணைய வானொலிகள்

10. தொலைக்காட்சி / திரைப்பட முயற்சிகள்

11. கலைக் கல்லூரிகள் (ஆடல், பாடல், இசைக்கருவிகள், இசைக்குழுக்கள்...)

12. அமைப்புகள் (ஊர் மன்றங்கள் / பழைய மாணவர் சங்கங்கள் / அமைப்புகள்)

13.அரச நிறுவனங்களின் தமிழ் சேவைகள் (துண்டறிக்கைகள் / விளம்பரங்கள் / அறிவித்தல்கள்...)

14. உலகத் தமிழ் ஊடகங்களில் OZ தமிழ் ( ஏனைய நாட்டு இதழ்கள், பத்திரிகைகள், ஊடகங்களில் அவுஸ்திரேலியத் தமிழும் வாழ்வியலும் பற்றி வெளிவந்த ஆக்கங்கள்)

15. அவுஸ்திரேலியா ( பொது வாழ்வியல் / வரலாறு மற்றும் புகைப்படங்கள் )

இத்தகைய பகுப்புகளின் அடிப்படையில் தரவுகள் தரம் பிரிக்கப்படும்.

OZ தமிழ் - 2011 - சில அவதானிப்புகள் - மாநாட்டுக் கட்டுரை

                           
பின்னணி:-

அவுஸ்திரேலியர்கள் உலக அரங்கில் ’ஒஸி’ என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப் படுகிறார்கள்.இங்கு ’ஒஸ்தமிழ்’ என்பது அவுஸ்திரேலியத் தமிழையும் தமிழ் ஓஸி (Tamil ozi)என்பது தமிழ் அவுஸ்திரேலியர்களையும் குறிக்கும்.

தற்போது அவுஸ்ரேலியா ஆறு மாகாணங்களைக் கொண்ட ஒரு பெருங்கண்டம். 1770 ம் ஆண்டு பிரித்தானியரான கப்டன் ஜேம்ஸ் குக் என்பார் Endeavour என்ற கப்பலில் Botany Bay (N.S.W) யில் வந்திறங்கியதில் இருந்து நவீன அவுஸ்திரேலியாவின் வரலாறு ஆரம்பமாகின்றது.


               (படம் 1) (அவுஸ்திரேலியாவின் 7  மாகாணங்கள்)

அதற்கு முன் இங்கு வாழ்ந்த மக்கள் அபோறிஜினல்ஸ் (Aboriginals) என அழைக்கப் படுகிறார்கள்.அவர்களிடம் இருந்து நிலத்தினை அபகரித்த வரலாறு மிகவும் துயர் தோய்ந்ததொன்றாகும்.

இன்று அவுஸ்திரேலியா பல் கலாசாரங்களைக் கொண்ட நாடு.2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி அவுஸ்திரேலியாவின் மொத்தச் சனத்தொகை 20,697,880 அதில் தமிழர் 62,256 அளவினர்.

 “மெல்போன்,சிட்னி,பிறிஸ்பேர்ன்
கன்பரா,பேர்த்,அடிலையிட்டும்
டார்வின்,தஸ்மேனியாவும்
எட்டுப் பெரும் மாநிலமாய்
வெப்பமும் உடலுறைகுளிரும்
வேகமாய் மாறிடும் காலநிலையும்
கொண்ட அழகு அவுஸ்திரேலியா
கண்டமெங்கள் புகுந்த வீடு”

என்று நாட்டைக் கொண்டாடுகிறார் அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர் ஒருவர்.(சேமகரன்;கவிதைத் தொகுதி;புலம்பெயர்ந்தோரின் புலம்பெயரா நெஞ்சங்கள்)
தமிழர் என்று கூறுகின்ற போது இவ்வகைப்பாட்டுக்குள் மலேசிய, சிங்கப்பூர், இந்திய,இலங்கை,பிஜித்தீவுகள்,தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் அடங்குவர்.அதே நேரம் அவர்கள் வந்ததற்கான காரணங்களும் நோக்கங்களும் காலங்களும் கூட வேறு பட்டதாகும்.

அவுஸ்ரேலிய குடித்தொகை மதிப்பீட்டின் படி 1971ம் ஆண்டுக்கு முன்னர் 202 தமிழர்களே இங்கு வாழ்ந்திருக்கிறார்கள்.1966ம் ஆண்டு அவுஸ்ரேலிய அரசாங்கம் வேற்று இனத்தவர் தகைமை அடிப்படையில் இந் நாட்டுக்குக் குடி பெயரலாம் என்று சட்டம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து இந் நிகழ்வு இடம் பெற்றிருக்கிறது.(‘Our Australian History’ Commonwealth Of Australia,2009)
எவ்வாறிருப்பினும் அதனைத் தொடர்ந்த 20 ஆண்டுகளின் பின்னர் (1991) இந் நாட்டில் தமிழரின் தொகை 11,368 ஆக உயர்ந்திருந்தது.1996ம் ஆண்டு அது 18,690ஐ எட்டியிருந்தது.தற்போது இலங்கையின் இனச்சுத்திகரிப்புக் கொள்கையால் புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் எண்னிக்கை இத்தமிழ்ச் சனத்தொகையில் கனிசமான பங்கினை வகிக்கிறது.2001ல் இருந்த 24,069 தமிழர்களுள் இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 12,901 ஆகும். இந்தியத்தமிழர் 5,266.ஏனையோர் மலேசிய,சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து பிஜித்தீவுகள் போன்றவற்றில் இருந்து குடி பெயர்ந்திருக்கிறார்கள்.இந்த இலங்கைத்தமிழரின் எண்ணிக்கைக்குள் 575 பேர் தமிழ் பேசும் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை, தொழில்வாய்ப்பு,வசதிகள்,தமிழ் சனத்தொகைச் செறிவு போன்ற பல காரணங்களால் நியூ சவுத்வேல்ஸ் மானிலத்தில் அதிலும் சிட்னி மாநகரில் வாழும் தமிழரே ஒப்பீட்டளவில் ஏனைய மாநிலங்களில் வாழும் தமிழரை விட அதிக தொகையினராவர். அடுத்ததாக விக்ரோரிய மாநிலமும் அதனை அடுத்து குயின்ஸ்லாந்து மாநிலமும் அவற்றினைத் தொடர்ந்து கன்பரா,தென்னவுஸ்திரேலிய,வட பிராந்திய,தஸ்மானிய மாநிலங்களும் அமைந்திருக்கின்றன.எல்லா மாநிலங்களையும் ஒன்று கூட்டி ஆய்வினைச் செய்வதென்பது அசாத்தியமென்பதால் பொதுவான பார்வையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை தயார் செய்யப் பட்டிருக்கிறது.

புலம் பெயர்ந்த தமிழர்:-

1970ம் ஆண்டின் பின்னரே தமிழர் அவுஸ்ரேலியாவில் வேர் விடத்தொடங்கினர் எனலாம்.மேற்படிப்பு, பணவசதி,பொருளாதார மேம்பாடு,திறமையாளர்களுக்கான வரவேற்பு போன்ற காரணங்களால் ஆரம்பத்தில் புலப்பெயர்வுகள் நிகழ்ந்த போதும் 1983ம் ஆண்டின் பின் இலங்கையில் இருந்து அகதிகளாகப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்னிக்கையோடு அது புதிய திருப்புமுனையைப் பெற்றது. அவர்களுடய மன உணர்வுகள் சொல்லவொணா வேதனைகளைத் தாங்கியவை.இழப்பும் பயமும் ஏமாற்றங்களும் பிரிவுகளும் சோகங்களும் நிரம்பிய புலப்பெயர்வு அது.தம் சொந்த மண்னில் தம் இனமும் மொழியும் பண்பாடும் வாழ்வியலும் கட்டுக்கோபான சமூகக் கோட்பாடுகளும் நிராகரிக்கப் பட்டதன் – பறிக்கப் பட்டதன் ஏக்கங்களோடும் அவமானங்களோடும் நிர்ப்பந்தமாக வெளியேறிய மக்கள் அவர்கள். அதனால் அவர்கள் வேரூன்றிய இடங்களில் தம் மொழியையும் மதத்தையும் பண்பாட்டையும் நிலை நாட்டி விட வேண்டும் என்ற உத்வேகம் மற்றய புலம் பெயர்ந்த தமிழர்களை விட இவர்களிடம் அதிகம் காணப்பட்டது; காணப்பட்டு வருகிறது.அதனால் புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற வகையில் பார்க்கும் போது அவர்களைத் தாண்டிப் பார்க்க முடியாத ஒரு நிலையும் தோன்றியுள்ளமை கவனத்திற்குரியது.
(படம் 2; ’என்ன செய்யலாம் இதற்காக’ புத்தகத்தில் இருந்து)
வலி சுமந்த அந்த அலைந்துழல்வில் விளைந்த ஆக்கபூர்வ வெளிப்பாடாக அமைவன பல. ஆனாலும் அவற்றில் சில சிறப்பியல்புகளை எடுத்துக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

உலகத் தமிழரும் பூகோளக் கிராமமும்:-

கிட்டத்தட்ட 30 வருட கால வரலாற்றைக் கொண்ட புலம் பெயர்ந்தோரின் இலக்கியத்தின் பார்வையும் பரப்பும் அதன் வீச்சும் சுதேச தமிழ் இலக்கியங்களை விட வேறுபட்டது.
இதனை ‘வடக்கு வாசலில்’,சேரன் ”தூய்மையா அல்லது கலப்பு என்பதா நமது தேவை என்ற கேள்வியில் தமிழ் அடையாளம் தத்தளிக்கிறது என்பார்.நாம் எங்கே வேர் கொள்வது? நிலப்பரப்பிலா? மொழியிலா? இனத்துவத்திலா? உணர்விலா? உணர்வொருமைப்பாட்டிலா? நிலக்காட்சியிலா? கலப்பிலா? கழிவிரக்கத்திலா? கற்பனையிலா?” என்பது அவரோடு சேர்ந்த புலம்பெயர்ந்த பெரும்பாலானோரின் குரலுமாகும். மாற்றம் என்பதே மாறாதது என்பர்.

 இவ்வாறான கேள்விகளும் தத்தளிப்புகளிலும் நம்பிக்கைகளிலும் அவநம்பிக்கைகளிலும் புலம்பெயர்ந்தவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்க உலக அரங்கில் சத்தமில்லாமல் ஒரு புரட்சி நடந்தது.அது தகவல் தொழில் நுட்பப் புரட்சி. 90களின் ஆரம்பத்தில் தமிழ் இணையத்துக்குள் புகுந்து கொண்டதோடு தமிழையும் அது சுவீகரித்தது. ஒரு digital world – information age - எண்ணிம யுகம் ஒன்று உருவாகியிருக்கிறது. அதன் உலகளாவிய தன்மை,வானொலி,காணொளி கணணிக்குள் புகுந்தமை,அது கொடுத்திருக்கும் உலகளாவிய கட்டற்ற சுதந்திரம் சமூக வலைத்தளங்கள், கடித பாவனை, இலவச காணொளியோடு கூடிய தொலைபேசிப் பாவனை, வலைப்பூக்கள், டுவிட்டர்கள் போன்றன தனிமனித வாழ்விலும் குடும்ப அமைப்பிலும் சமூக,இன ரீதியாகவும் உலகைக் கட்டிப் போட்டிருக்கிறது. இப்போது தமிழர் கணனியினூடாகத் .தமிழில் எழுதவும் உடனுக்குடன் கருத்துப் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் ஆரம்பித்து 2 தசாப்தங்களைக் கடந்தாயிற்று.தமிழனின் விரல் நுனியிலும் உலகம் விரிந்து நிற்கிறது.

இது இலக்கியப் போக்கில் பெரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இதனை,’அவுஸ்திரேலியாவில் வெளிவந்த சஞ்சிகைகளின் வீழ்ச்சியும் அதற்கெதிர் மாறாக தமிழர் சனத்தொகையின் பெருக்கமும் இலக்கிய ஊடகத்தின் வெற்றிடத்தை வேறொன்று நிரப்பி விட்டதா’ என்ற கேள்வியை உருவாக்கி விட்டிருக்கிறது என்பார் லெ.முருக பூபதி. அதனை மெய்ப்பிப்பது போல ஊடகங்கள் அதிலும் குறிப்பாக வானொலிகளும் கணணிகளும் மக்கள் வாழ்வு முறையோடு; அவசர வாழ்வியலோடு பொருந்திப் போவதைக் காண்கிறோம். அவ் ஊடகங்களுக்கென்று இருக்கின்ற சிறப்புத் தன்மைகளும் நேர வசதி வாய்ப்புகளும் தமிழ் இலக்கிய வாதிகளின் பற்றாக்குறை, வாழ்வோட்டங்களோடு கரைந்து போகும் தமிழர்களின் தொலைவு போன்ற இவ்வாறான இயல்புகள் ஒரு ஊடக நகர்வையும் அதன் வெளிப்பாட்டம்சங்களையும் நாம் கவனிக்க வேண்டிய தேவையை நமக்கூட்டுகின்றன.இவ்வாறு இலக்கியத்தில் விடப்படுகின்ற வெற்றிடத்தை நிரப்பும் இவ் ஊடகம் ஒரு இலக்கிய அந்தஸ்தைப் பெற வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றன.இதனை எஸ்.போவும் குறிப்பிட்டிருப்பது அவதானிக்கத் தக்கது.

புலம்பெயர்ந்தோர் இலக்கியம் அதன் எதிர் காலம் என்பவை தொடர்பில் Dr,தி.ஞானசேகரன் அவர்கள் முன்வைத்திருக்கின்ற கருத்தும் இந் நேரத்தில் சிந்திக்கப் பாலது.(ஞானம்,நவ.2005;66வது இதழ்)”ஆரம்பத்தில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தின் கருப்பொருளாக தாம் பிரிந்து வந்த மண்,உறவுகள்,சமூகம் பற்றிய ஏக்கங்கள் இடம்பெற்றிருந்தன.பின்னர் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புகலிட இலக்கியமாக பரிநாமம் பெற்றது.வேறுபட்ட ஒரு சமூகச் சூழலில் தம்மைப் பொருத்திக் கொள்வதற்கு எப்படி எல்லாம் போராட வேண்டியுள்ளது எப்படியான இழப்புகளை எல்லாம் சந்திக்க வேண்டியுள்ளது என்பதை இரண்டாம் கட்ட இலக்கியங்கள் பேசுகின்றன.இது புகலிட இலக்கியம் என அழைக்கப் பட்டது.

இப்போது அதில் ஒரு தொய்வு தோன்றியுள்ளது.புலம்பெயர்ந்து வாழும் எதிர்கால சந்ததியினரால் தமிழில் ஆக்க இலக்கியம் படைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதற்கான பதிலைத் திட்ட வட்டமாகக் கூற முடியாதுள்ளது.அந் நாட்டில் வாழும் சிறார்கள் தாம் வாழும் நாட்டு மொழியிலேயே கற்று அம் மொழியிலேயே பேசவும் எழுதவும் வேண்டியுள்ளதால் தம் தாய் தந்தையரின் மொழியான தமிழ் மொழியிலே கற்று அதிலே இலக்கியம் படைப்பார்கள் என்று கூற முடியாது” என்ற கருத்தை முன் வைத்திருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டுதல் பொருத்தம்.
தமிழ் இலக்கிய மரபு வழி நின்று இலக்கியம் என்றால் எது? இலக்கியம் அல்லாதது எது? என்பது பற்றிப் பார்த்தலும் பொருத்தமே.உண்மையில் இலக்கியம் என்பது வரையறைகளுக்கும் இனங்காணலுக்கும் அப்பாற்பட்டது. தமிழ் மரபில் பழைமையானவை சிறந்தவை என்ற சிந்தனை காணப்படுகிறது. கலை மதிப்பீட்டிலே பண்பாட்டுக் காரணிகள் உட் பொதிந்திருத்தலை தமிழ் மரபு வெளிப்படுத்துகிறது. (பேரா.சபா.ஜெயராசா;ஞாயிறு தினக்குரல்;பக்31;10.7.11) கருத்தேற்றம் செய்வதற்கு மொழியை வாககப் பயன் படுத்தும் செயல்களைப் படைப்பாகவும்; கலைச் செயலாகவும் உட்புகுத்தியமையும் பின்னர் உரையாசிரியர்களின் உரைகளை, பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்களை, இலக்கியம் என்ற வடிவத்துக்குள் கொண்டு வர முனைந்தமையும் மாற்றங்களை அடியொற்றி நிகழ்ந்த நிலைப்பாடுகளாகும்.

இலக்கியம் எது என்பதை வரையறை செய்வதற்கு 2 கோட்பாடுகள் நெடுங்காலமாக வழக்கில் இருந்து வந்துள்ளன.

1.வெளித்துலங்கற் கோட்பாடு (Expressive Theoru)
2.கட்டுமானக் கோட்பாடு (Constructive Theory)

இலக்கியம் என்ற இந்த மரபு ரீதியான கட்டுக்கோப்பு இலக்கணத்திற்குள் புலம் பெயர் இலக்கியங்களை வரையறுக்க இயலுமா என்ற கேள்வி நியாயமானது.புதிய பாடுபொருளும்;நில அமைவும் புதுப்பண்பாடுகளின் அறிமுகமும் சொந்தப் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்கும் போது எழுகின்ற எழுத்து கலை சார்ந்த வெளிப்பாடுகள் புதிய வரையறையை இனி எது இலக்கியம் என்ற கோட்பாட்டுக்கு வழங்கக் கூடும்.

இலக்கை உடையது இலக்கியம் என்ற கருத்தை முன் வைக்கும் எஸ்.போ.’காலத்துக்குக் காலம் அது மாறுபாடுகளுக்கு உட்பட்டே வரும் என்கிறார்.ஆயினும் அதற்கொரு பொது நோக்கு இருந்தது.,விழுமியத்தை நோக்கி மக்களை நகர்த்துவது அதன் உள்ளீடாக எப்போதும் இருந்து வந்திருக்கின்றன.எனினும் காலத்துக்குக் காலம் ஊடகங்கள் மாறும் போது இலக்கியப் படைப்பு முயற்சிகளிலும் தாக்கங்கள் இடம் பெற்றே வந்திருக்கின்றன.வானொலி, தொலைக்காட்சி,கணணி போன்ற ஊடகங்கள் இலக்கியப் போக்கிலும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.”ஊடகங்கள் மாறும் போது இலக்கும் படைக்கும் படைப்பு உள்ளடக்கத்திலேயும் நோக்கத்திலேயும் மாறுதல் ஏற்படுதல் தவிர்க்க முடியாததாகும்.அந்த மாற்றங்களுக்கேற்ப படைக்கப் பட்ட ஆக்கங்கள்,கலைப்படைப்புக்கள் இலக்கிய வரலாறு எழுதப் படும் போது மறக்கப் படுதல் ஆகாது.அவற்றினுடய பங்களிப்பையும் நாம் பதிவு செய்தல் வேண்டும்.”(ஞானம் 2006 ஜனவரி,பக்12; நேர்காணல் எஸ்;போ)

இப்போது கணணியூடாக உலகலாவிய வாணிபம் நடைபெறுகிறது.நூலகம் இயங்குகின்றது.வீதி விதிமுறைகள்,புகையிரதங்கள் என்பன கணணியால் இயங்குகின்றன.பல்கலைக் கழகங்கள் பட்டங்களை வழங்குகின்றன.வங்கிகள் பணங்களை மாற்றீடு செய்கின்றன.இலக்கிய உலகின் ஆசிரியர்கள் வாசகர்களாகவும் வாசகர்கள் ஆசிரியர்களாகவும் ஆகிப் போன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.தனி நபர் அனுபவம் சார்ந்த இலக்கியக் கருக்கள் எல்லாம் நெருப்புப் பொறிகளாய் இணையத்தில் இறைந்து கிடக்கின்றன.பூகோளம் சார்ந்தும் உலகத் தமிழர் சார்ந்தும் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் இலக்கியம் பற்றிய மறுபார்வையின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இப்போது கோள மயமாக்கம் புதிய கோட்பாட்டை அவாவி நிற்கிறது.

அதே நேரம் பாரம்பரிய இலக்கியங்கள் இப்போது வேறொரு தளத்துக்கு – வேறொரு பார்வைக்கு இட மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது என்பதையும்;அவற்றை வேறொரு கண்னோட்டத்தில் பார்க்க வேண்டிய தேவையையும் மேலும் அவை வலியுறுத்துகின்றன.

அவுஸ்திரேலிய வாழ்வியலும் வெளிப்பாடுகளும்:-

பொதுவாக இலக்கிய வெளிப்பாடுகள் பல விடயங்களைப் பேசுகின்றன. விரும்பியோ விரும்பாமலோ அவை தம் தாய் நாட்டின் உணர்வுகளோடும் அவலங்களோடும் இணைந்திருக்கின்றன.அவற்றின் அவலங்களைப் பேசுகின்றன. அதே வேளை புலம்பெயர்ந்த நாட்டிலும் ஒட்டிக் கொள்ள முடியாத நிலையை; தாம் எதிர் கொள்ளும் புதிய புதிய சவால்களைப் பதிவு செய்கின்றன.உளவியல் ரீதியாக 2வது கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளப் பக்குவமற்ற மூத்த தலைமுறை,2வது கலாசாரத்தையே தன் கலாசாரமாகக் கொண்டாடும் அடுத்த தலைமுறை – இவற்றுக்கிடையே எங்கே சம நிலையைக் காண்பது? எங்கே நிலை கொள்வது என்று தடுமாறும் நடுத்தரவர்க்கம் இவற்றின் அதிர்வுகள் தமிழ் மனங்களில் பிரதி பலிப்பதைக் காணலாம்.

எங்கள் தேடலின் உடனடி நோக்கம் புதிய விடயங்களைக் கண்டு பிடிப்பதோ அல்லது தொலைந்து போனவற்றைத் தேடுவதோ அல்ல;எதை நாங்கள் தொலைக்கப் போகிறோம் என்ற ஆதங்கம் கலந்த தேடலாகும்’என்று சிலரும்;பிரித்தானிய வாழ்வு முறை தமிழர்களுக்கு நன்கு பரீட்சயமானதாக இருப்பதால் பிரித்தானிய பரம்பரையினர் ஆட்சி செய்யும் அவுஸ்திரேலியா அதன் சுவாத்தியம், மொழி, கலாசாரம் என்பன ஒத்துப் போகக் கூடியனவாக இருக்கின்றது.அத்தோடு தமிழரின் அடையாளமாகச் சைவ மன்றங்கள் கோயில்கள்,நூல் நிலையங்கள்,தமிழ் பாடசாலைகள்,விளையாட்டுக் கழகங்கள், அரங்கக் கலைகள்,வானொலிச் சேவைகள், நாட்டியம்,இசை போன்ற கலைகள்,பல்கலைக்கழக மானவர் அமைப்புகள், தமிழ் சஞ்சிகைகள், போன்றவற்றைக் குறிப்பிட்டுத் திருப்தி கொள்ளும் வேறு சிலர், தார்மீக பலம் (sense of belonging) புலம் பெயர்ந்த சமூகத்தை ஒரு கோயில் தத்துவமாக மாற்றும் என்ற நம்பிக்கையோடு இன்னும் சிலர்;பிற இனத்தவருடனான தொடர்பு நாம் பிறர் பண்பாட்டைத்தழுவும் போது அவற்றை எமதாக்கி தழுவ வழி வகுக்கும் என்று இன்னொரு  சாரார்;ஒரு தனி மனிதன் எத்தகைய கலாசார அடையாளங்களைப் பின்பற்றப் போகிறான் என்பதைத் தீர்மானிப்பது அவனுடய சொந்த உரிமையா? அல்லது பிறந்த சமூகத்தின் உரிமையா? அரசியல் கொள்கையின் உரிமையா? என்ற கேள்வியை முன்வைப்பதாக வேறு சிலவாகவும் தேடல்களும் வினாக்களும் நம்பிக்கைகளும் முன்வைக்கப் படுகின்றன.

அதே நேரம்,எதிர் கொள்கின்ற சவால்களைப் பல வெளிப்பாடுகள் முன் வைக்கின்றன.அலைவுகள்,படகுவாழ்வு,தனித்து விடப்படுதல்,பணம் நிகழ்த்தும் ரசவாதம்,விடுதலைவேக்காடு,பிரிவு,சோகம், தனிமை,ஏக்கம்,சுயபச்சாதாபம்,விட்டுவந்தவைகள் நோக்கியதான பார்வை,அடங்குதலும் அடக்குதலும் சமாளித்தலும் என்ற குடும்ப சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்கள்,முதியோரின் மன உளைச்சல்கள்,பெற்றோர் வகிக்கும் மரபு ரீதியான அதிகாரம் பொருந்திய பாத்திரம் பலவீனமடைதல்,விரும்பிய கல்வி விரும்பிய வயதில் கிடைக்கின்ற தன்மை,காதலில் சுதந்திரம்,’குடும்பம் ஒரு கோயில் என்ற தமிழர் தத்துவத்தில் ஏற்பட்டு வரும் மாற்றம்,பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்களில் விடப்படுவதால் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்,இருவரும் வேலைக்குப் போகும் சூழல்,பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கிற வளர்ச்சி அல்லது மாற்றம்,விவாகரத்து,மறுமண உரிமை போன்ற விடயங்கள், திருமணமாகாமல் சேர்ந்திருக்கும் வாழ்க்கை முறையின் அறிமுகம்,பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள தொடர்பாடல் இடைவெளி,தலைமுறைச் இடைவெளியில் சமநிலையைப் பேணும் புள்ளி எது,போன்ற பலவற்றை இன்னும் சில பகிர்வுகள் பேசுகின்றன.
இதன் அடுத்த கட்டமாக சுய மரபின் யதார்த்தத்தைத் தேடி உணர்தல், எங்கு தான் நிலைபெறுதல் வேண்டும் என்ற சுயபலம் தேடும் போக்கும் காணப்படுகின்றது.

இங்கு புலம்பெயர்ந்த மக்களை இன்னும் நெருங்கிப் பார்த்தால் அல்லது வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் புலம்பெயர்ந்த இடங்களில் கோயில்கள் அமைத்தல், தமிழ்வானொலிகள், இலவச பத்திரிகைகள்,சங்கங்கள், கலாசார நிகழ்ச்சிகள், நடனவாத்தியக் கலைகளைத் தம் பிள்ளைகளுக்குக் கற்பித்தல்,தமிழ் உணவகங்கள், தமிழ் பலசரக்குப் பொருட்கள் விற்கும் கடைகள்,திரைப்படங்கள்,பாட்டு சீடீக்கள் விற்கும் கடைகள்,இந்திய இலங்கைக் கலைஞர்களை வரவளைத்து நிகழ்ச்சி நடத்துதல்,கூட்டங்கள் கொண்டாட்டங்கள்,ஓரிடத்தில் குவிந்து வாழுதல் என்று தாம் இழந்து வந்த வாழ்வை மீளக் கட்டியமைத்ததில் வெற்றி பெற்றவர்களாகவே தமிழர்கள் உள்ளார்கள்.மேலோட்டமாகப் பார்க்குமிடத்து இவ்வாறான தோற்றத்தையே அது கொடுக்கவும் செய்கிறது.

ஆனால் குடும்பங்களை உன்னிப்பாகப் பார்க்கும் போது புலம் பெயர்ந்த தமிழரிடையே மூன்று தலைமுறையினரை இனம் காணலாம்.புலம் பெயர்ந்தவர்கள் பிள்ளைகள் என்பதே அடிப்படையானது.ஆயினும் குடும்ப இணைவுத்திட்டத்தின் கீழ் பலர் தமது பெற்றோரையும் அழைத்துள்ளனர். அதனால் முதல் இரு தலைமுறையினர் இலங்கையில் பலகாலம் வாழ்ந்து பின் புலம் பெயர்ந்தவர்கள்.அதிலும் மூத்த தலைமுறை ஏறக்குறைய 50 -60 ஆண்டுகள் வரையில் இலங்கையில் வாழ்ந்து பின் தம் பிள்ளைகளுடன் இணைவதற்காகப் புலம் பெயர்ந்தவர்கள்.இரண்டாவது தலைமுறையினரில் சிலர் இளம்பருவத்தில் புலம் பெயர்ந்து பின் திருமணம் செய்தவர்கள்,இவர்கள் ஊரில் பாதிக்காலத்தை கழித்து விட்டு இங்கு வந்து சேர்ந்தவர்கள். இவர்களது பிள்ளைகள் புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்தவர்கள்.திருமணமாகி மனைவியுடனும் பலவயதுகளில் உள்ள பிள்ளைகளுடனும் இங்கு வந்துகுடியேறியவர்கள் இன்னொரு சாரார்.(கலாநிதி. சந்திரலேகா. தலைமுறை இடைவெளி 2004 எழுத்தாளர்விழா;பக்1)
இந்தத் தலைமுறை இடைவெளியில் மாற்றங்களை ஏற்றுக் கொள்கின்ற வேகத்தில் காணப்படுகின்ற மாற்றங்களும் முரண்பாடுகளும் இடைவெளிகளும் வயது, சிந்தனை, மொழித்தேர்ச்சி, சமூக பொருளாதார அந்தஸ்து போன்றவற்றால் தீர்மானிக்கப் படுகிறது என்று சமூகவியலாளர் கருதுவர்.(குலம் சண்முகம்;2004 எழுத்தாளர் விழா.பக்.4) எனினும் ஒப்பீட்டளவில் மூத்தவர்கள் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதனால் தலைமுறை இடைவெளிப்பிரச்சினை மேலோங்குகிறது. சொந்த நாடுகளிலும் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்ற போதும் ஒரு புலம்பெயர்ந்த சூழலில் அதன் இடைவெளி விஸ்தாரமாகத்தெரிய மேலும் பல புறக்காரணிகள் துணை செய்கின்றன.

இந்தத் தலைமுறை இடைவெளிகளோடு சிக்கித்தவிக்கும் இரண்டாம் தலைமுறையினரின் வாழ்க்கைக்கோலங்கள் பல சிறுகதை வடிவங்களையும் கவிதா வண்ணங்களையும் பெற்றுள்ளன.குறிப்பாக முருகபூபதியில் ‘அடையாளம்’என்ற சிறுகதை இதற்கு நல்ல உதாரணமாகும்.(கங்கை மகள்)
அதன் நேரடியான விளைவுகளை இன்றய அவுஸ்திரேலியத் தமிழ் சமூகம் எதிர்கொள்ளத் தொடங்கி விட்டது என்பதை கடந்த 5 வருடங்களாக எழுதப்படும் பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

திருமணவயதை நெருங்கிய போதும் திருமணம் தள்ளிப்போடப் படுவது வளர்ந்து வரும் ஒரு பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.(புலம்பெயர் நாடுகளில் தமிழ் திருமணங்கள்;பெற்றோர் பிள்ளை உறவு;வீ.எஸ்.சிவசம்பு;2010 எழுத்தாளர் விழா) புலம்பெயர் வாழ்வில் திருமணகாலத்தை ஒத்திவைக்கும் எதிர்கால சந்ததி என்ற தலைப்பில் காரணங்களை முன் வைக்கிறார் ரேணுகா தன்ஸ்கந்தா.(எழுத்தாளர் மாநாடு 2010) நாங்கள் இந்தியர்கள் அல்ல;தமிழர்கள் வெறுமனே தமிழர்கள் அல்ல தமிழ் அமெரிக்கர்;தமிழ் அமெரிக்கர்கள் மாத்திரமல்ல;நாங்கள் இரண்டாம் சந்ததித் தமிழர்கள்(மூர்த்தி.மதிப்பிரகாசம்;இரண்டாம் சந்ததித் தமிழ் அமெரிக்கர்கள் – ஒரு பொது அனுபவம்;(குலம் சண்முகம் எழுத்தாளர் மாநாடு 2004.)என்ற ரீதியாகச் சிந்திக்கத் தொடங்கும் புதிய தலைமுறைப் பிரச்சினைகள் எடுத்தாரயப் படுகின்றன.

மெல்ல மெல்லக் கலப்புத் திருமணங்களின் நன்மைதீமைகள் ஆராயப் பட்டு ஆய்வுக் கருத்துக்கள் முன்வைக்கப் படுகிறன.(கலாநிதி.சந்திரலேகா:2006 எழுத்தாளர்விழா).அது தமிழர் அது பற்றிச் சிந்திக்கவும் நன்மைதீமைகளை ஆராயவும் தலைப்பட்டு விட்டார்கள் என்பதையே சொல்லி நிற்கின்றன.இதுபற்றிய ’லாபிங்கோ லாபிங்’ நாடகமும் இதனை கிண்டல் பாணியில் நடைமுறை யதார்த்தத்தை உணர்த்துகிறது.(டீ.வீ.டி) தமிழ் பெற்றோரின் சாதி,சீதன,சாதகப் பொருத்தம் பார்க்கும் நடைமுறை தட்டிக் கேட்கப் படுகிறது,கட்டுப்பாட்டுக்குள் இருந்த சமூக விழுமியம் ஒன்று விமர்சனத்துக்குள்ளாக்கப் படுகின்றது.(தமிழ் சமூகத்தில் பெண்கள் பாமதி.பிரதீப்.2006 எழுத்தாளர் விழா)

இது ஒரு அடுத்த கட்ட சந்ததியின் வாழ்வியல் விளைச்சலின் அறுவடை என்ற நோக்கிலும் இதனை அணுகலாம். பாதிக்கப்பட்ட ஓரினத்திலிருந்து தப்பி ஓடி வந்த சந்ததி தான் இழந்தவற்றை எல்லாம் தம் பிள்ளைகளுக்கு ஊட்ட முயலுதல் இயல்பே.அதனால் பெற்றோர் வேலைசெய்யும் இயந்திரங்களாகவும் பிள்ளைகள் படிக்கும் இயந்திரங்களாகவும் ஆகிப் போயினர்.இரண்டுக்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள், பகுதிநேரவேலை,என்று அவர்கள் ஓடி ஒரு இடத்தைப் பிடிக்கும் போது களைப்பையும் பருவ வயதையும் ஒருங்கு சேர அடைகிறார்கள். அதனால் தம் உழைப்புக்கான பலனை அனுபவிக்க திருமணங்களைத் தள்ளிப்போடுகிறார்கள். அது சமூகத்தில் முதிர்கன்னிகளை உருவாக்குகிறது.ஆயிரங்காலத்துப் பயிர் என்ற திருமணம் பற்றிய தமிழிய சிந்தனை பெற்றோருக்கு ஒரு வித பதட்டத்தை புலம்பெயர்ந்த நாட்டில் ஏற்படுத்தி விடுகிறது.அன்னியவாழ்வு முறை கற்றுக் கொடுக்கும் திருமண உறவுகள் பற்றிய அவநம்பிக்கை தரும் அச்சம் அது. அதனால் சோதிடங்களை நம்ப ஆரம்பிப்பதும்; இளஞ்சந்ததிக்கு கிடைக்கும் பாலியல் சுதந்திரமும்; அதனூடாகக் கிடைக்கின்ற பொறுப்புகளைத் தள்ளிப் போடும் தன்மையும்; இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 13 வயதை அடைந்ததும் அவுஸ்திரேலியப் பெற்றோர் தம் பிள்ளைகளின் விருப்பங்களில் தலையிடும் உரிமையை தவிர்த்து வரும் கலாசாரச் செல்வாக்குக்கு உட்படுவதால் குடும்பவாழ்வு என்பது பாலியல் உணர்வுகளை உரிமையோடு பகிர்ந்து கொள்ளும் ஓரிடம் என்று அவர்கள் கொள்கிறார்கள்.அது குடும்பம் என்ற அமைப்பின் ஒரு பகுதி மட்டுமே என்ற கற்றலை அவர்கள் உணரத் தவறுகிறார்கள். குடும்பம் என்னும் நிறுவனத்தில் இருந்து மனிதம் முகிழ்வதை எடுத்துச் சொல்லப் பெற்றோரும் தவறி விடுகின்றனர்(குடும்பப் பொறுப்பு உரியவயதில் பக்குவமாக ஊட்டப் படாமை).எங்கோ ஒரு சமநிலைப்புள்ளியை சமூகம் இது விடயத்தில் காணத்தவறுகின்றது.

மேலும் குடும்பங்களுக்கிடையே சரியான தொடர்பாடல் பேணப்படாமை,சொந்தங்கள் சுற்றிவர இல்லாத தன்மை,புதிய சிந்தனைகளால் ஆட்படுதல்,தன்னம்பிக்கை கொடுக்கும் அபரீதமான எதிர்பார்ப்புகள்,பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள விருப்பமின்மை,பெண்களின் ஆளுமையினால் ஆண்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பாண்மை – என்று வேறும் பல காரணங்கள் வரிசைப் படுத்தப் படுகின்றன.

‘புலம்பெயர் இலக்கியம் என்பது வெறும் இலக்கியம் மட்டுமல்ல; அது ஒரு உணர்ச்சி வடிகாலும் கூட; கவலையுள்ள பெண்ணுக்கு அழுவதைப்போல “என்பார் பேராசிரியர் சிவத்தம்பி.ஒப்பீடும் இரை மீட்டலும் அதன் தவிர்க்க முடியாத பகுதி.நடுத்தர வயதுகளில் புலம் பெயர்ந்தவர்களிடம், அதனைக் காணலாம்.ஊர் கூடி உறவுகளோடு இணைந்திருந்ததன் அழகை,ஏக்கத்தை,பாடியும் நினைந்தும் கற்பனையில் வாழ்ந்தும் மகிழ்கின்றனர்.அதனை ஆழியாழ் ,

“என்ர ஊர் சின்ன ஊர்
பெரியம்மா பெரியப்பாக்களாலும் – மாமா
அத்தை சித்தி சித்தப்பாக்களாலும்
கிளிமாமா விஜிமாமி
வடிவு அன்ரி வனிதா அன்ரி
சொக்கா அங்கிள்களாலும் நிறைஞ்ச ஊர்.
அம்மம்மா அம்மப்பாவும்
அப்பப்பா அப்பம்மாவும்
தாத்தா பாட்டி ஆச்சிகளும் எனக்கிருந்தார்கள்…….
என்பார்.

1955ம் ஆண்டுவாக்கில் ஈழத்து மகாகவி,

“கூழ்பானையின் முன் கூடிக் குந்தி
இருந்து இலைகோலி இடுப்பில் இட்டு ஊட்டிய
கரந்தெரிந்து ஊற்றும் அவ்விருந்து”
 என்று வாயூறி,
“பழச் சோற்றுண்டி கிழங்கொடு பிசைந்து
வழங்கலை நினைத்தால் வாயூறாதோ?”

என்பார். அதே பழஞ்சோற்றுக் குழையலை ஈழத்தின் பிரபல பொப்பிசைப் பாடகரும் தற்போது அவுஸ்திரேலியாவில் குடியிருப்பவருமான நித்தி. கனக ரட்னம்2004ம் ஆண்டு ”அம்மாவின் பழஞ்சோற்றுக் குழையலும் பூவரசங்குழையும்” என்ற கவிதையில்
…………….
பூவரசங் குழைகளிலே
குழையலைக் கையேந்தி
விரலிடுக்கில் வழிந்த குழம்பை
கையுயர்த்தி நாக்கால் நக்கி
வேகத்துடன் வாயை
சோற்றுக்குள் புதைத்த
நாட்களை நினைக்கையில்
ஆஹா! என்னசுகம்! என்ன சுகம்!!
என்பார்.

புலப்பெயவின் போது இத்தகையதான ‘கால இருப்புகளும்’’ புலம் பெயர்கின்றன. இவை ஸ்தூலப் பார்வைக்குத் தெரியாது பயணப்படுகின்றன.மொழி சமயம்,பண்பாடு,கலை,பாரம்பரியங்கள், வாழ்வு முறைகள்,நடை,உடை பாவனை போன்ற பலவற்றை உள்ளடக்கிய கால இருப்பு இது. இந்தத் ’தமிழ் தன்மை’ என்ற ஏதோ ஒன்றோடு வருகின்ற ஒருவர் தமிழுக்குப் புறம்பான இன்னொரு தன்மையோடு – எப்படி இணைகிறார் -புலத்தின் பண்பாட்டை,பன்முகப்பாட்டை,மொழி வழக்குகள்,அதன் கலாசாரத்தை எப்படிக் கிரகித்துக் கொண்டுள்ளது தமிழ், சிந்தனைப்புலத்துக்கு அது எத்தகைய பங்களிப்பை வழங்கியுள்ளது என்ற வகையில் பார்த்தால்,அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களான அபிரோஜினல்களின் வாழ்வும் அவர்களிடம் இருந்து நிலமும் ஒரு பரம்பரையினர் பறிக்கப் பட்ட நிகழ்வும் (stolen generation) அவர்கள் வெள்ளையர்களால் நடத்தப் பட்ட விதமும் ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை உணர்வு ரீதியாக பழங்குடி மக்களுடன் இணைத்து வைத்திருக்கின்றது எனச் சொல்லலாம்.

இது சம்பந்தமாக பாமதி ஆங்கிலத்தில் எழுதி blacktown Art Center in Australia வில் வாசிக்கப் பட்ட பழங்குடி மக்களின் ஓவியம் ஒன்றுக்கான ஆங்கிலக் கவிதை அவுஸ்திரேலிய ஆதி வாசிகளின் போராட்டத்தை இப்படிப்பேசுகிறது.
“தொலைக்கப் பட்ட தரவுகள்”
…………………
அழகிய நிர்வாணமான நிலப்பரப்பில்
நடனமாடி நளினமாக
பதிந்தது மனிதர்களின் பாத அடிகள்.
என்று ஆரம்பித்து,
இலைகளின் ஆயுள் ரேகையை
இயற்கையை
நேசித்துப் பாதுகாத்த
அழகான மனிதர்களையா?
சீ!.
என்று முடிகிறது. அது ஆங்கிலேயர்களை நோக்கியதான பார்வையை முன் வைக்கின்றது.இதே ஆதிவாசிகளின் பறிக்கப்பட்ட சுதந்திரத்தை –அதன் நிகழ்வை ‘குற்றவுணர்ச்சி’என்ற தலைப்பிலும்
“ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாயிருக்கும்
என் புகுந்த நாட்டில்”
என்று ’அடையாளம்’என்ற கவிதையில் பிரகடனப்படுத்தும் வழியாக ஆழியாழும் அதே கருத்தை முன்வைத்திருக்கிறார். இவை தாம் வாழும் நாட்டு போர் பின்னணியால் விளைந்த ‘நியாயந் தேடும் சிந்தனைப் புலம்’அதன் வழியாக வரும் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஒற்றுமைப்பாடு என்றும் பார்க்கலாம்.

மேலும் சில மொழிபெயர்ப்பு முயற்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன. மதுபாஷினி இவ் ஆதிவாசிகள் சம்பந்தப் பட்ட சில கதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.நவீனன் ராஜதுரை அவுஸ்திரேலியப் பழங்குடி மக்களால் நன்கறியப்பட்ட எழுத்தாளரான ஹென்றிலோஷனின் கதையை தமிழில் மொழி பெயர்த்து இலக்கியப் பரப்பில் விட்டிருக்கிறார். அவை புதிய ஒரு பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துகின்றன.தமிழ் பாடசாலைப் புத்தகங்களுக்குள்ளும் அவை மிக நேர்த்தியாக உட்புகுத்தப் பட்டிருக்கின்றன. (தமிழ் 4, நியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளின் கூட்டமைப்பு)’தமிழர் தமிழைப் படிப்பதற்கு அவை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும்’ என்ற கருத்து வலுப்பெற்று வரும் அவுஸ்திரேலியாவில் கலாநிதி கந்தையா,கவிஞர் அம்பி,பேராசிரியர் ஆஸி கந்தராஜா,காவலூர்.ராசதுரை போன்றோரின் இலக்கியப் படைப்புக்கள் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டும்.மேலும் நல்லைக் குமரன் க. குமாரசாமி.மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் சுயசரிதையை ஆங்கிலத்திலும் ஜோர்ஜ் ஓர்வெல்லின் நாவலை விலங்குப் பண்னை என்ற பெயரில் தமிழுக்கும் டொக்டர் நடேசனின் வண்னாத்திக் குளம் என்ற நாவலை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.எனக்குத் தெரியாத மேலும் சில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றிருக்கக் கூடும்.இவை ஆங்கிலேய இலக்கியத்துக்கு தமிழியலை அறிமுகப் படுத்தும் சிறு முயற்சி என்ற வகையில் முக்கியம் பெறுகின்றது.

பிரதேச வழக்கு மொழிப் பயன்பாடு புலம்பெயர் இலக்கியங்களை சர்வதேச தமிழின் தரத்துக்கு உயர்த்துவதில் பெருத்த தடையை ஏற்படுத்துகின்றன என்ற கருத்து பாரதத்தில் இருந்து ஒலிக்கின்ற போதிலும்;அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்த சில சிறுகதைகள்,கவிதைகள் ‘சர்வதேச மானுடத்தை’ பண்பாட்டை,வாழ்க்கைக் கூறுகளை பேசும் ஊடகமாக தமிழ் மொழியை பரிணமிக்க வைத்துள்ளன.புது மண்ணில் இருந்து தண்ணீரையும் பசளையையும் உறிஞ்சி கனிவர்க்கங்களைத் தரும் ஒட்டுமரங்களைப் போல அவை உள்ளன. பல்வேறு பண்பாட்டுச் சுவைகள் தமிழுக்குக் கிடைக்கப் பெறுகின்றன. மாத்தளை சோமு எழுதிய ‘வாமனம்’, டொக்டர் நடேசன் எழுதிய பொசம்,லெ.முருக பூபதியின் புதர்க்காடுகளில்,உஷா.ஜவகரின் மலர் ஒன்று கருகுகிறதோ,ஆஸிகந்தராஜாவின் பாலன் பிறக்கிறான் போன்றோரின் கதைகளும் அவுஸ்திரேலியாவிலும் அதற்கு வேளியேயும் இருக்கும் நடக்கும் அவலங்களை, உலகளாவ விரிந்த பார்வைகளை,கலாசார பண்பாட்டுக் கோலங்களை தெளிவாக கலைப்படைப்பினூடாக தமிழுக்கு இனம் காட்டுகின்றன.தமிழின் உள்ளடக்கம் அகல விரிகிறது. பல புதிய பண்பாடுகள் தமிழுக்கு அறிமுகமாகின்றன.முதலிரண்டு கதைகளும் இந்நாட்டு பழங்குடி மக்களின் வாழ்வியலைக் குறியீடாகவும் இரக்க பாவத்தோடும் முன் வைக்கின்றது.ஏனையவை வியற்னாமிய ஈழ அகதி ஒப்பீட்டு அனுபவத்தையும்,ஆசிய ஆபிரிக்க மக்களின் வாழ்க்கையின் கருக்களையும் தாங்கி நிற்கின்றன. தமிழுக்கு அறிமுகமாகின்றன புதிய பண்பாடுகள்.

இவை அடுத்த சந்ததியை நோக்கியதான அடுத்த கட்ட நகர்வாகவும் தமிழுக்கும் புதிய பாடுபொருளைக் கொண்டு வந்து சேர்க்கும் நிகழ்வாகவும் அமைந்திருக்கின்றன, ஆஸி.கந்தராஜாவின் ‘ஒட்டுக் கன்றுகளின் காலம்’ என்ற கதை இதனை இயல்பாக ‘வளவின் பின் புறத்தே குட்டி யாழ்ப்பாணங்கள்.புடலங்கொடி ஒன்று அதற்கெனப் போடப்பட்டிருந்த பந்தலில் இருந்து இயல்பாக விலகி யூக்கலிப்ரஸ் மரத்தைச் சுற்றிப் படரத் தொடங்கியது…. அவுஸ்திரேலியச் சூழலிலே யாழ்ப்பாணம் மட்டும் என்று வேலியடைத்து வாழ்தல் தோதுப்படாது என்ற ஞானத்தை அம்மா யூக்கலிப்டஸ் மரத்தின் கீழ் பெற்றிருக்க வேண்டும்” என்று இப்படிப் பதிவு செய்கிறது.

இவ்வாறான இயல்புகள் காணப்படுகின்றபோதும் பெண்ணியல் கருத்து நெறியில் உலக கலாசாரத்தோடு பெண்மையில் கீழைத்தேயக் கலாசாரம் மோதும் போது தமிழ் மனம் படும் தடுமாற்றத்தினை கன்னிகாதானங்கள்’ என்ற சிறுகதையில் அருள்.விஜயராணி கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார்.
‘……கல்யாணத்துக்கு வந்திருந்தவர்களின் கிசுகிசுக்கள்….என். கே. பத்மநாதனின் இனிய நாதஸ்வர இசை,எதையுமே இலட்சியம் பண்ணாமல் கன்னிகழிந்த தன்மகள்,மீண்டும் ஒரு முறை கன்னிகாதானம் செய்யப் படுவதை கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தார்..’

2004ல் வெளிவந்த பெண்கள் சந்திப்பு மலரில் வெளியான கலாநிதி சந்திரலேகா வாமதேவாவின் ’கற்புநிலை என்று சொல்ல வந்தார்’ என்ற கட்டுரை கற்பு என்பதன் தோற்ற வரலாறையும் அது எப்படி பெண்ணுக்கு மட்டும் ஏற்புடையதாக வகுக்கப் பட்டிருந்தது என்பதையும் கூறி, அது இருபாலாருக்கும் சமனாக முன்வைக்கப் படவேண்டும் என்பதையும்; அது நம் கலாசாரத்துக்கு மட்டுமல்ல உலக கலாசாரங்களுக்குமே ஏற்புடையது என்ற கருத்தை ஆய்வு ரீதியாக முன் வைக்கிறார்.எனினும், மை என்ற ஊடறுவின் கவிதைத் தொகுதியில் கன்பராக்கவிஞையின் வீடு என்ற கவிதை

குளிரில் கொடுகி
வெய்யிலில் உலர்ந்து
மழையில் குளித்து
காற்ரில் அசைந்து – என் பூக்கள்
பறந்து பரவசம் எய்த
வட்ட வீடொன்று வேண்டும்
வானத்து வளைவுடன்”
என்று விடுதலையை வேண்டி நிற்பது குறிப்பிடத் தகுந்தது.

அரசியல் பொருளாதார சிந்தனைகள்:-

இவை தவிர அவுஸ்திரேலியர்களை நோக்கிய - அவர்களுக்கு நம்மை இனங்காட்டும் பரீட்சார்த்த முயற்சிகளையும் நாம் குறிப்பிட வேண்டும்.அண்மையில் சிட்னி மாநகர் மையத்தில் 2 நாட்கள் ஈழத்து யுத்த நிகழ்வால் இடம் பெற்ற புகைப்படக் கண்காட்சியும் அதற்கு வந்து குவிந்த அவுஸ்திரேலிய மக்களும்,கூட குறிப்பிடப்பட வேண்டியதே.
சிட்னி தலை நகரை மையமாகவும் ஈழத்து அரசியிலைப் பின்புலமாகவும் கொண்டு நடைபெறும் ஓவியப் புகைப்படக் கண்காட்சிகள் தவிர ஆங்கில மொழியிலான புத்தக வெளியீடுகளும் அவுஸ்திரேலிய மக்களுக்கு நம் பாரம்பரியத்தையும் வரலாறையும் எடுத்துக்காட்டும் நிகழ்வுகளாக இடம் பெற்று வருகின்றன.அவை ஓரளவு ஈழத்து அரசியலை நிலைக்களனாகக் கொண்டவை.அண்மையில் பிரித்தானிய தொலைக்காட்சிச் சேவையில் இடம்பெற்ற போர் அரசியல் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியிலும் 2 தடவைகள் இடம்பெற்றுப் அவுஸ்திரேலியர் பலரின் கவனிப்புக்குத் தமிழர்களை உரியதாக்கிற்று.

மேலும்,புலம்பெயர்ந்து வாழும் எமது சமுதாயம் முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் பலம் பொருந்திய பொருளாதார அமைப்பொன்று தேவை என்ற முன்னுணர்வுக் கோட்பாடுகள் முன்வைக்கப் படுகின்றமையையும் எழுத்துக்களில் காண முடிகின்றது.கரும்புத் தேயிலைத் தோட்டங்களில் வாழ்வாதாரம் தேடிப்போன மொறீஸியஸ்,தென்னாபிரிக்க நாடுகளில் வாழும் நம் சந்ததியினர் இன்று தம் வேர்களை இழந்து நிற்கும் வரலாற்றுப் பாடத்தில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறும் இவர்கள்,யூத இனத்து வரலாறில் இருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனையை முன்வைக்கிறார்கள்.
யூதர்கள் முன்னேற்றமைடைவதற்கு தம் இனத்தின் மீதும் வரலாற்றின் மீதும் அவர்களுக்கிருந்த பெருமையும் ஒருவருக்கொருவர் உதவும் அவர்களின் குணமும் பொருளாதார பலமுமே இன்று அவர்கள் உலகில் தலைநிமிர்ந்து நிற்கக் காரணம் என்ற கருத்தை முன் வைக்கும் காவலூர் ராசதுரை ’எண்ணை வளம் மிக்க அரபு நாடுகளுக்கு மத்தியில் சிறிய ஒரு நாடாக ஸ்ரேல் விளங்குகின்ற போதும் சர்வதேச அரங்கில் யாருக்கும் அஞ்சாமல் 6 நாள் யுத்தத்தில் கைப்பற்றிய பிரதேசங்களை விட்டு வெளியேறாமல் நிற்பதற்கு அவர்கள் பொருளாதாரத்தில் கொண்டிருந்த முன்னேற்றமே காரணம் என்ற கருத்தை  முன் வைக்கிறார்.இன்று உலக அரங்கில் சிறப்பாக இயங்கி வரும் ’மார்க் அண்ட் ஸ்பென்சர்’ என்ற பல் நாட்டு நிறுவனம் அதற்கு நல்ல உதாரணமாகும்.என்பார்.அதே நேரம் தமிழர்க்கென ஒரு நாணயச் சங்கம் தோற்றம் பெற வேண்டியதன் அவசியம் வேறு சிலராலும் முன்மொழியப் பட்டிருக்கிறது.

உலக அரங்கின் வரலாற்றில் இருந்து பாடங்களைக் கற்றுப் பொருளாதார ரீதியில் தமிழ் இனம் தன்னை கட்டி வளர்க்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசும் கட்டுரைகள் அவுஸ்திரேலிய அரசியலிலும் அவுஸ்திரேலிய இலக்கியத்திலும் தமிழர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புப் பற்றியும் பேசுகிறது.தமிழ் பண்பாட்டின் அறிமுகம் ஆங்கிலத்திலும் சொல்லப்பட வேண்டும் என்பது இதன் தொனிப்பொருளாகும்.அதற்கு உதாரணமாக 1988ம் ஆண்டில் இருந்து எழுத்து என்ற பொருள்படும் ’கலிமத்’ என்ற அரபு நாட்டுச் சஞ்சிகை அரபு,ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் வெளிவந்து அவுஸ்திரேலியாவில் பலரது கவனத்தைப் பெற துணை நின்றது.இப் பத்திரிகையின் தோற்றம் பற்றி நவாஸ் என்பார் கூறும் போது,”நம் புகுந்த வீட்டில் எம் குரல் உரத்து ஒலிப்பதற்கு உருப்படியான வகையில் செயற்படுதல் அவசியம்.அதன் பொருள் எம் தனித்துவ பாரம் பரியத்தைக் கைவிடுதல் என்பதல்ல;மாறாக அவுஸ்திரேலியப் பண்பாட்டை செழிப்புறச் செய்வதற்கு நம் பாரம்பரியத்தைப் பயன் படுத்தல் வேண்டும்……ஏனென்றால் மேற்குலகப் பண்பாட்டின் கண்ணாடியாக அவுஸ்ரேலிய இலக்கியம் விளங்குகின்றது” என்று அவர் கொடுத்திருக்கின்ற வியாக்கியாணம் தமிழ் எழுத்தாளர்களாலும் முன் வைக்கப் பட்டு அதன் அவசியம் உணர்த்தப் பட்டிருக்கிறது.

தமிழியம் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கிய பங்களிப்புகள்:
ஏனைய புலம் பெயர்ந்த நாடுகளைப் போலவே இங்கும் ஆடல்களும் பாடல்களும் வாத்திய அரங்கேற்றங்களும் இசை விழாக்களும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன.அந்தஸ்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் அரங்கேற்றம் என்ற ஒன்றை எல்லையாகக் கொண்டும் வெளிப்படும் இந்நிகழ்வுகளை பல இலங்கை இந்திய ஆசிரியர்கள் நடத்தி வருகிறார்கள்.2005ல் எடுத்த கணக்கெடுப்பின் படி சிட்னியில் மாத்திரம் கலைகளைப் பயிற்றுவிப்போர் தொகை 31.மெல்போனில் 25ம் பேர்த்தில்10ம் பிறிஸ்பேனில் 7ம் அடிலெயிட்டில் 7ம்கன்பராவில் 7ம்டார்வினில் 4 மாக அவை உள்ளன.

கலைகளைப் பொறுத்தவரை கலை கலைக்காகவே வெளிக்கொணரப் படுகின்றன.புதிய சிந்தனைகளும் பரிசோதனை முயற்சிகளும் அதில் இடம் பெறுவது குறைவு.எனினும் இக்கலை வெளிப்பாடுகள் அவுஸ்திரேலியர்களின் பார்வையில் சில கவனிப்புகளைப் பெற்றுள்ளன.
குறிப்பாக இலங்கையைப் பூர்வீகமாகவும் மலேஷியாவை வதிவிடமாகவும் கொண்டு 1953ம் (வெள்ளையர்  கொள்கை அமுலில் இருந்தகாலம்)ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு கல்வி நிமித்தம் வந்து சேர்ந்த கமால் என்ரழைக்கப் பட்ட கமலேஸ்வரனின் இசையுலகப் பிரவேசம் இது விடயத்தில் குறிப்பிடத் தக்கது.மேற்கத்திய இசையைக் கற்றுக் கொண்ட இவர் மேடைகளிலும் உணவகங்கள் ஒன்றுகூடல்களிலும் பாட ஆரம்பித்து பின் நாளில் ஐரோப்பிய அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து,நியூசிலாந்து,இந்தியா,தென்னாபிரிக்கா,சிங்கப்பூர்,மலேசியா ஜேர்மனி போன்ற நாடுகளிலும் பாடி புகழ்பெற்றார்.1972ம் ஆண்டு தென்னமெரிக்காவில் நடந்த அனைத்துலக இசைவிழாவிலும் 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிப்பிக் விளையாட்டரங்கிலும் பாடியது தமிழர் வாழ்விலும் ஒரு மைல் கல்.ஒரு தமிழன் மேற்கத்திய இசைவானில் பறப்பது புலப்பெயர்வின் ஒரு புதிய கோணமே.தற்போது ஜனகன் என்பவர் “eastern Empair” என்ற இசைக்குழுவை இளையராஜாவின் இசையை மேற்கத்தய இசையோடு கலந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அவுஸ்திரேலியர்களை தமிழ் பாரம்பரிய கலையின் பால் திசை திருப்பிப் பார்க்க வைத்ததில் நர்த்தகி ஆனந்தவல்லிக்கும் வடமலேஷிய பூர்வீகத்தைக் கொண்ட நர்த்தகவித்தகர் சந்திரபானுவுக்கும் ஓர் இடம் உண்டு.அவுஸ்திரேலியாவில் பரதத்தை அறிமுகம் செய்த ஆனந்த வல்லிக்கு அவுஸ்திரேலிய அரசு குடியுரிமை வழங்கிச் சிறப்பித்தது.பல அவுஸ்திரேலியர்களை நடனத்தின் பால் ஈர்த்து அவர்களுக்கான அரங்கேற்றங்களை நடத்தியதில் இவருக்கும் இவரைப் போன்ற வேறு சில கலைஞர்களுக்கும் நிறையப் பங்குண்டு. உலகப் புகழ் பெற்ற obra house இல் இந்தோனேஷிய நடனக்கலையையும் தமிழ் பாரம்பரியக் கலையையும் இணைத்து ஆங்கிலப் பார்வையாளர்களுக்கு கொடுத்தமையும் சுமுகன்,அகிலன்,சக்திசிவதரன் போன்றோரின் கலை முயற்சிகளும் அவுஸ்திரேலிய மக்களை பார்வையாளர்களாகக் கொண்டிருக்கிறது. சந்திரபானு ஓரளவு பரதத்துக்குள் புதுமைகளையும் தற்கால நடன அமைப்பு முறைகளின் நுட்பங்களையும் புகுத்தி மேடையேற்றிய வழியில் குறிப்பிடத் தகுந்தவர்..- இவற்றைத் தமிழ் பல்கலாசார நாடான அவுஸ்திரேலியாவுக்கு வழங்கிய பங்களிப்பு என்ற நோக்கில் பார்க்கலாம்.

அது போல ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் கொமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்குத் தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரசாந்.செல்லத்துரையும் குறிப்பிடப்பட வேண்டியவர்.

இவர்களைத்தவிர அவுஸ்திரேலிய சமூகத்தில் துணைவேந்தர்களாகவும் பேராசிரியர்களாகவுன் மேயர்களாகவும் சிறப்பு விருதுகளைப் பெற்ரவர்களாகவும் அரசியலில் செல்வாக்குற்றவர்களாகவும் பல தமிழர்கள் இருக்கிறார்கள்.மேலும் அவுஸ்திரேலியா பல்கலாசார நாடென்பதால் அரச/அரச சார்பற்ற சமூக சேவை நிறுவனங்களிலும் பல தமிழ் மொழி பேசக்கூடிய பணியாளர்கள் வேலைக்கமர்த்தப் பட்டு தமிழிலே சேவைகளைப் பெறத்தக்க வசதிகளும் உண்டு.சமூக மேம்பாடு,உளவியல் பண்பாட்டுச் சிக்கல்கல் வேறொரு கலாசாரத்தோடு இணையும் போது ஏற்படும் கலாசார மோதல்களுக்கு – குறிப்பாகக் குழந்தை வளர்ப்பு,குடும்பவன்முறை போன்ற விடயங்களுக்கு இப்பணியாளர்கள் தமிழ் பாரம்பரியக் கலைகளான வில்லுப் பாட்டு நாடகங்கள்,கலந்துரையாடல்கள்,பாடல்கள் மூலம் சமம்காணும் புள்ளியை(balance) தமிழ் சமூகத்தின் மத்தியில் உட்புகுத்தி வருகிறார்கள்.கடந்த தேர்தலில் Green கட்சியில் போட்டியிட்டு ஒரு தமிழ் பெண் (அ)பிராமி) தெரிவு செய்யப் பட்ட நிகழ்வு அவுஸ்திரேலிய தமிழர் வாழ்வில் பெருமைப்படத்தக்க ஓர் நிகழ்வாகும்.

குழந்தை இலக்கியம்:-

மொழி,மதம்,கலை,கலாசாரம்,பண்பாடு,பாரம்பரியம் பழக்கவழக்கங்கள்,புவியியல் பின்னணி,வரலாறு என்பன ஒரு சமூகத்தின் அல்லது இனத்தின் தனித்துவத்தை அடையாளத்தை பிரதிபலிக்கும் மிக முக்கியமான அம்சங்களாகும்.இவற்றில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ ஒரு இனம் இழந்துவிடின் அச் சமூகம் தன் தனித்துவத்தைஇழந்து விடும் பாதையில் மிக விரைவாகப் பயனிக்கின்றது என்று சொல்லி விடலாம்.

காலத்துக்குக் காலம் பல சமூகங்கள் பல்வேறு காரணிகளால் தம் தனித்துவத்தை இழந்து மாற்று மொழி மத,இன கலாசார பண்பாட்டுக் கோலங்களுடன் கலந்து இறுதியில் அவ்வாறு ஒரு சமூகமே இருந்ததென்பதற்காக அடையாளமே இல்லாது மறைந்து விடுகின்றது.இவ்வாறான ஒரு நிலையில் ஒரு சமூகத்தை மீட்டெடுத்து அச் சமூகத்தை ஒரு முழுமையான சமூகமாக மாற்றும் பணியில் முன்நிற்பது அச் சமூகம் பற்றிய மொழி,கலை,இலக்கிய கலாசார பண்பாட்டு சமய அறிவும் அரசியல்,வரலாற்று அறிவுகளுமாகும்.

உலகில் உள்ள ஒவ்வொரு இனமும் தமது தனித்துவத்தைப் பேணிக்காப்பதில் மிகத் தீவிரமாகவும் பிரப்புரிமையாகவும் சமூகப் பொறுப்பாகவும் வரலாற்றுக் கடமையாகவும் கொண்டு உழைத்து வருகின்றன.எங்கெல்லாம் ஒரு சமூகம் உயர்ந்து நிற்கின்றதோ அங்கெல்லாம் மொழியும் கலையும் இலக்கியமும் மதமும் கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியங்கலும் பழக்கவழக்கங்கலும் செழிப்புற்றிருக்கின்றன.(கலாநிதி. முருகர். குணசிங்கம்  எழுத்தாளர்விழா2004) அதனாலேயே “தமிழ் மொழி ஒன்றே கலாசாரக் கையளிப்புக்கு எம்மிடம் உள்ள ஒரேவழி;ஆகவே தான் புலம்பெயர் சூழலில் தமிழ்மொழி எம் இளஞ்சந்ததியினருக்கு பண்பாட்டுக் கல்வியின் ஓரம்சமாகக் கையளிக்கப் பட வேண்டும்” என்றார் பேராசிரியர்.சிவத்தம்பி.அதனால் தமிழரின் ”தேசிய சொத்தாக” தமிழரின் இன ”அடையாள அட்டையாக” தமிழ் பாடசாலையும் பார்க்கப் பட்டு வருகிறது.

தமிழ் இன அடையாளங்களை அடுத்த சந்ததிக்குக் காவிச் செல்லும் ஒரே நம்பிக்கையாகப் பலருக்கும் காட்சி தருவது வார இறுதித் தமிழ் பாடசாலைகளே.மரபு ரீதியான தமிழ் மொழி கற்பித்தலில் இருந்து தொடர்பாடல் அணுகு முறையில் கல்வி கற்பித்தலில் தேவை பல பரிசோதனை முயற்சிகளுக்கப்பால் பல நாட்டு பாடப்புத்தகங்களின் அறிமுகங்களுக்குப் பின்னால் பலவாதப்பிரதிவாதங்கள் பாடப்புத்தக விமர்சனங்கள் என்பவற்றுக்கப்பால் புழக்கத்துக்கு வந்திருக்கிறது. ’ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி அருமையான சின்னக் குட்டி’ என்பன போன்ற பாடல்கள் நடைமுறைப் பொருத்தமின்மை கருதி நீக்கப்பட்டு அவுஸ்திரேலிய மிருகங்களை அறிமுகப்படுத்தும் பாப்பாப் பாடல்கள் வந்திருக்கின்றன.

இவ்வாறான பாடல்களை எழுதியவர்களில் கவிஞர் அம்பி,வானொலி மாமா நடேசன்,வித்துவான் வேந்தனார் இளங்கோ முதலானோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.கவிஞர் அம்பியின் பாலர் பைந்தமிழ் மக்பை பறவையையும் பிளற்ரபஸ்ஸையும் குவாலா,கங்காரு,……போன்ற அவுஸ்திரேலியாவுக்கு மாத்திரம் உரித்தான ஜீவராசிகளையும் மழலைகளுக்கு கீழ் கண்டவாறு அறிமுகப் படுத்துகிறது.

“காக்வா காக்வா காக்வா என்று
கதறிப் பறக்கும் மக்பை
பார்க்கும் போது எங்கோ பார்த்து
பாவனை செய்யும் மக்பை” என்றும்
’ஓஸி’ நன் நாடு தான்
எனது தாய் நாடு
உலகில் எனக்குள்ள
ஒரே ஒரு நாடு
தேசம் எங்கும் சென்று
தேடிப்பார் பிள்ளாய்
தேடி எங்கும் கண்டால்
செய்தி சொல் பிள்ளாய்’ என்று பிளற்றப்பஸ்ஸினை அறிமுகப்படுத்துவதிலும்;
சின்னக்குட்டியை
வயிற்றுப்பையில்
சொருகிச் செல்பவள்
என்னைப் போன்ற
அன்னை இல்லை
என்று சொல்பவள்
என்னைத் தெரியுமா – எனது
பெயரைத் தெரியுமா?

என்று நொடி கேட்கும் பாணியிலும் பாடல்களைக் கொடுத்திருக்கின்ற தன்மை அவுஸ்திரேலியாவின் சூழலைப் புரிந்து அதற்கேற்ப அவுஸ்திரேலிய குழந்தைகள் இலக்கியம் தனியொரு பாதையில் நடைபோடுகிறது என்பதற்கான ஆரம்பம் என்று சொல்லலாம்.

அதே நேரம்’குழந்தையாய் வளர்தல்’ என்பதும் ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது தமிழ் மொழிக்கு மட்டும் தனித்துவமாக இருக்கும் எழுத்து சொல் என்பன ஒலிக்கும் முறை,குரலின் ஏற்ற இறக்கங்கள்,பேசும் முறை போன்ற விடயங்களை அறிந்து கொள்ளுதல் என்பதும்;அப்பிள் என்று அறிமுகப்படுத்துவதா? ஆப்பிள் என்று அறிமுகப்படுத்துவதா?தோடம்பழமா ஆரஞ்சா? ஓஸியா ஆஸியா? ,கதிரையா நாற்காலியா? ரிவீயா டிவீயா? போன்ற இந்திய இலங்கைத் தமிழுக்கிடையே இருக்கின்ற வேறுபாடுகளுக்கு தீர்வினை எப்படிக் காண்பது போன்ற விடயங்களும்;பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே இருக்கின்ற வேற்றுமைகளை இனம் கண்டு அதற்கான வழிமுறைகளை ஆராய்தலும் அவை தொடர்பான பாடப் புத்தகங்களை வெளிக்கொணர்தலும்;அவுஸ்திரேலியக் கற்பித்தலின் தகுதியடிப்படையில் தமிழ் கல்வி வழங்கப்படவேண்டியதன் அவசியமும் குழந்தை இலக்கியம் தொடர்பாக மேலும் தீர்வு காணப்பட வேண்டிய விடயங்களாகும்.
ஆனால் இவை எல்லாவற்றுக்குள்ளும் அப்பால் ஒழிந்து நிற்கும் உண்மை என்னவென்றால் பொதுப் பாடசாலைகளுக்குச் செல்லும் தமிழ் பிள்ளைகளில் மிகக் குறைந்தளவு வீதத்தினரே தமிழ் பாடசாலைகளுக்கு வருகின்றனர் என்பதாகும்.

ஊடகவெளியில் oz தமிழ்:-

ஏற்கனவே கூறியது போல் தொழில்நுட்ப மாற்றங்கள் காலாகாலமாக இலக்கியத்திலும் வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைப் பெற்றே வந்திருக்கின்றன.கல்லில் செதுக்கி,ஓலையில் ழுதி,உலோகத்தில் பொறித்து, தட்டச்சில் நிலைத்து, மைப்பேனாவால் எழுதித் தற்போது மின்பொத்தான்களை அழுத்துவதில் எழுத்துத் துறை தன் வரலாற்றைப் பொறித்திருக்கிறது. அவ்வாறே வாழ்க்கைமுறை மாற்றங்கள் காலா காலமாக இலக்கியத்திலும் உள்ளடக்கத்திலும் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது.உங்கள் உலகத்தையும் எங்கள் உலகத்தையும் அவர்கள் உலகத்தையும் அவரவர் உலகத்தையும் இணையம் ஒன்றிணைத்து வைத்திருக்கின்றது. அதனால் அவுஸ்ரேலியத் தமிழர்களின் உண்மையான வாழ்வியலை ஊடகங்களே சிறப்பாகக் காட்டும் கண்ணாடியாக உள்ளன.வாழ்வின் தாற்பரியங்களையும் அதன் உள்ளார்ந்த சிக்கல்களையும் இலக்கியங்களை விட ஊடகங்கள் அதிகம் வெளிக்கொணர்கின்றன.மேலும்,

1.நேரமற்ற ஓட்டம்
2.இலகுவாகக் கிட்டும் தொடர்பூடக சாதனங்களும் அதன் பயன்பாடுகளும்
3.இலக்கியவாதிகளின் வெற்றிடம்
4.முகம் காட்ட வேண்டிய தேவையற்ற ஊடகத்தின் இயல்பு
என்பனவும் அவற்றுக்கான மேலதிக காரணிகளாகும்.

 அதே நேரம் ஒலி,ஒளி,எழுத்து வடிவங்கள் ஒன்றிணைக்கப் படுகின்றன. மக்கள் தம் தனிப்பட்ட எண்ணங்களைக் குறித்து வைக்கின்ற இணையப் பதிவேடுகள் பிரபலம் பெற்றுவிட்டன. இன்றய கணணியுகத்தில் தமிழ் இலக்கியங்கள் மின் தமிழில் பேணப்படுமா என்ற கேள்வியும் அது ஒரு இலக்கிய அந்தஸ்தைப் பெறுமா என்ற கேள்வியும் அவ்வாறு ஏற்படும் பட்சத்தில் கணணிக்குள் உள்ளடக்கப் படும் வானொலி, தொலைக்காட்சி,இணையத்தளங்கள், சஞ்சிகைகள் என்பன வேறொரு தளத்தில் பார்க்கப் படும் தன்மையைப் பெறுமா என்பதும் சிந்திக்க வேண்டியவையே.

இணையத்தில் அவுஸ்திரேலியத் தமிழ் வானொலிகளாயும் பத்திரிகை வலைத்தளங்கள்,வலைப்பூக்களாயும் பெருகி இருக்கின்றன. அவற்றுள் க.பிரபா என்பவரின் வலைப்பக்கம் சிறப்பாகக் கூறத்தக்கது. ஒலி ஒளி எழுத்து ஊடகங்களூடாகப் அது தமிழ் தொன்மங்களை பார்வைக்கு வழங்கி வருகிறது.
அதே நேரம் 24 மணி நேர தமிழ் வானொலிகள், மற்றும் சில மணிநேர ஒலிபரப்புகள்,போன்ற தொடர்பு சாதன ஊடகங்களும் ஊடகம் என்ற எல்லையைத் தாண்டி சமூக சிந்தனைப் புலத்தின் பார்வைகளை முன் வைக்கும் ஊடகமாக வளர்ச்சி பெற்றுள்ளன.அவுஸ்திரேலிய வானொலி ஒன்றில் நிகழ்ச்சிகளாகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட விடயங்கள் ‘சுழலும் தமிழ் உலகம்’ இன்று நூலுருப்பெற்றமை அந்த வகையில் ஒரு மைல்கல்.காற்றலையில் அலசப்படும் பல விடயங்கள் இவ்வாறு நூலுருப் பெறும் போது இலக்கிய அந்தஸ்தினைப் அவை பெறுன்றன.இன்றய வானொலிகள் Talk back show’ என்ற பிரபலமான நிகழ்ச்சி அவுஸ்திரேலிய ஊடகவியலின் நுட்பத்தைப் பயன் படுத்தி பேசி வருகின்றன. வானொலி விவாதங்களும் உலகை இணைக்கும் நிகழ்ச்சித் தொடர்களும் அவற்றில் அலசப் படும் கருத்துப் பகிர்வுகளும் அவசர வாழ்வில் சிக்குண்ட மக்களுக்குப் பொருத்தமானதாகவும் இலகுவாகவும் விளங்குவதால் அவை எழுத்துருவை அடையாமல் காற்றோடு கலந்து விடுகின்றன.அவற்றில் அலசப்படும் பல கருத்துக்கள் எந்த ஒரு இலக்கிய வடிவத்தில் தானும் பேணப்படவில்லை என்பதும்; அதனால் இலக்கியம் சமூகத்தைப் பிரதி பலிக்கின்றது என்பதில் ஒரு வெற்றிடம் காணப்படுகின்றது என்பதும்; சிந்திக்கற்பாலது.இணைய இலக்கியம் தொடர்பாக சிறந்த வரையறையை முன்வைக்க வேண்டிய தேவையை இலக்கிய உலகம் இப்போது வலியுறுத்துகின்றன.

முடிவுரை:-

அயர்லாந்தின் முதல் பிரதமரும் ஜனாதிபதியுமான ஏமொன்.டி.வலறா”மொழி என்பது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டதாகும்.ஏனெனில் இந்த மொழியில் மட்டுமே அந்த மக்களின் முன்னோர்களின் கூட்டான அனுபவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளது. இதனை இழப்பதென்பது வரலாற்றுக்கான திறவு கோலை இழப்பதாகும்” என்றார். மொழி என்பது சமூக விளைபொருளாகவும் வரலாற்று விளை பொருளாகவும் இருக்கிறது.உலகில் மொழி என்ற கருவி இல்லாமல் செய்தித் தொடர்பையும் பண்பாட்டின் சிறப்பையும் நாம் அறிய முடியாது. மொழி மக்களின் வாழ்வை வளம் படுத்துகிறது. தலைமுறை தலைமுறையாக மனித சமுதாயம் சம்பாதித்த அறிவை எல்லாம் மொழி தான் தன்னுள்ளே வைத்திருக்கிறது. என்றெல்லாம் மொழி பற்றிப் பல்வேறு எடுகோள்கள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன.

10.07.2011 அன்று ’இவர்கள் வாழ்வில்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்து எழுத்தாளர் ரஞ்சகுமார் புதுமையான ஒரு கருத்தினை வெளியிட்டார். அது எதிர்காலத்தில் தமிழியல் ஆங்கிலத்தினூடாக வாழும் என்பதாகும்.
 அதனை நாம் எதிர் கொள்ளும் காலம் நெருங்கி விட்டது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலத்தை புலம்பெயர் சமூகம் கடந்திருக்கிறது. இப்போது புதிய மண்ணில் பிறந்து தமிழ் பண்பாட்டு விழுமியங்களைப் பெற்றோரிடம் இருந்து பெற்ற தான் வாழும் தேசத்துச் சிந்தனைப் புலத்தைக் கொண்ட புதிய பரம்பரை ஒன்று திருமண வயதை நெருங்கி நிற்கிறது. உலகப் பண்பாட்டின் அறுவடையாய் அடையாளமாய் அவர்கள் தம்மை இனம் காண்கிறார்கள்.

 தமிழ் எழுத்திலக்கியத்தில் ஓரு பெரிய இடைவெளி விழுந்திருக்கிறது. இலக்கியவெற்றிடம் ஒன்று விஸ்தாரமாகி வருக்கிறது.

1.சம்பந்தருக்கு 3 வயதில் ஞானப் பால் கொடுத்தது உமாதேவி தானே! அவர் ஏன் சிவபெருமானைப் பாடினார்?

2.கோவலன் விட்டிட்டுப் போனா ஏன் கண்ணகி அழுதுகொண்டிருக்கிறா? அவவும் தனக்குப் பிடிச்ச ஆரையும் பார்த்துக் கல்யாணம் செய்யலாம் தானே?

3.முருகன் இரண்டு மனைவிகளை வைத்திருக்கிறாரே! அவர் நல்லவரா கெட்டவரா?

4.பிள்ளைகள் இல்லாத முருகனுக்கு பாலூற்றிப் பிள்ளைவரம் கேட்கிறார்களே! ஏன்?

5. சம்பந்தர் அழுததும் பால் கொடுத்த உமாதேவியார் எதியோப்பியாவுக்குப் போக மாட்டாவா?

போன்ற கேள்விகள் குழந்தைகளிடம் இருந்து வர ஆரம்பித்துள்ளன. இவற்றுக்கு விடை சொல்ல தமிழ் பண்பாடு தயாராக வேண்டிய நிலையும் இன்றுள்ளமை கவனத்தில் கொள்ளப் பட வேண்டியதே.

அவர்களுடய சிந்தனைத் தளங்கள் வேறு; பார்வைகள் வேறு;கருத்தியல் கோட்பாடுகள்,சிந்திக்கும் மொழி, சூழல் கற்றுக் கொடுத்த கல்வி,வசதிகள் வாய்ப்புகள் என்பன வேறு வேறு.

அது எதனை எப்படி தமிழ் சமூகத்துக்குப் கொண்டுவந்து தரும் என்பதற்கு இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்க நேரும்.

 ”வானம் அறிந்த அனைத்தும் அறிந்து வளர் மொழி வாழியவே!”

உசாவியவை:

1.கங்காருநாட்டில் தமிழரும் தமிழும்; நடனாலயா வெளியீடு;டிசம்பர் 2004,கலாநிதி. ஆ.கந்தையா
2.’உலகமயமாகும் தமிழ் இலக்கிய முயற்சிகள்’ தினக்குரல்,ஞாயிறுவாரப் பத்திரிகை;டிசம்பர் 2010.
3.’அவுஸ்திரேலியத் தமிழரது வாழ்க்கைமுறை’ கலாநிதி.சந்திரலேகா.வாமதேவா’ ’சுழலும் தமிழ் உலகம்’காலச்சுவடு பதிப்பகம் 2007
4.’சுழலும் தமிழ் உலகம்’,முன்னுரை நா.கண்ணன்.மேற்படி.
5..’புலப்பெயர்வும் அலைந்துழல்வும்’உ.சேரன்,காற்றுவெளி இணைய இதழ்,2011.01.01.
6.தகவல் தொழில் நுட்பத்தில் மொழிவடிவ மாற்றங்கள்’ கீழ்கரவை.பொன் சத்தியநாதன், அவுஸ்திரேலிய எழுத்தாளர் மாநாட்டுமலர்.2001
7.’புலம்பெயர்நாடுகளில் தமிழ் சமூக அமைவுகள்’சிவசுப்பிரமணியம்.சிற்சபேசன்,மேற்படி.
8.’போர்க்காலத்தால் புலம்பெயர்ந்த தமிழர்’ இ.அரவிந்தன்,மேற்படி.
9.’அவுஸ்திரேலிய உதயம் மதிப்பாய்வு’ எஸ்.சொர்னேலியஸ்.மேற்படி.
10.’உதயம் ஓர் ஆய்வு’,பா.விக்னேஸ்வரன், மேற்படி.
11.’கலப்பை ஓர் மதிப்பாய்வு’வசந்தன், மேற்படி.
12.’அவுஸ்திரேலியத் தமிழரும் பழக்கமும்’ நா.மகேசன்,அவுஸ்திரேலிய எழுத்தாளர் மாநாட்டு மலர்,2002.
13.’அவுஸ்திரேலியத் தமிழர் வாழ்வியலும் இரட்டைமொழிக் கலாசாரத் தாக்கங்களும்’கலாநிதி.சந்திரிக்கா.சுப்பிரமணியன்.மேற்படி.
14.’உலகத் தமிழர்களும் தமிழ் அவுஸ்திரேலியர்களும்’குலம் சண்முகம்.M.A.,மேற்படி.
15.’அவுஸ்திரேலியத் தமிழர் நாட்டமும் தேவையும் நாடும் சமூகப் பிரக்ஞையும்’ம.தனபாலசிங்கம்,மேற்படி.
16.’அவுஸ்திரேலியத் தமிழர் எழுத்து தொடர்பாகத் தீர்வு காணப்படவேண்டிய பிரச்சினைகள்’திரு.இ.அம்பிகைபாகர்,மேற்படி.
17’.பல்கலாசாரப் பின்னணியில் தமிழ் மொழியும் தமிழ் மொழிக் கல்வியும்’
கலாநிதி.வேந்தனார்.இளங்கோ.மேற்படி.
18.’முதியோரும் புலம்பெயர்வாழ்வும்’’மெல்போர்ன் மணி.2003.அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா மலர்,2003.
19.’புலம்பெயர் நாடுகளில் புலம்பெயரும் சமூகங்கள் எதிர் நோக்கும் புதிய மாற்றங்கள்,பாமதி.சோமசேகரம்.மேற்படி.
20.’புலம்பெயர்ந்த நாடுகளில் எமது பெண்கள்’சாந்தினி.புவனேந்திரராஜா,மேற்படி.
21.பெற்றோர் பிள்ளைகளிடையே புரிந்துணர்வு மலருமா’ கலாநிதி.சந்திரலேகா.வாமதேவா.மேற்படி.
22.’அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம்’,லெ.முருகபூபதி,ஞானம் 100வது இதழ்,கொழும்பு,
23.புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகலாவிய இலக்கியத் தேடல்,என்.செல்வராசா,மேற்படி.
24.இலக்கிய வடிவங்களும் நிரப்பப்படாத இடைவெளிகளும்’ பேரா.சபா.ஜெயராசா,ஞாயிறு தினக்குரல் வாரப்பத்திரிகை,கொழும்பு,10.07.11.
25.உயிர்ப்பு,(அவுஸ்திரேலிய எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுதி)அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கவெளியீடு, தொகுப்பாசிரியர். லெ.முருகபூபதி, நவம்பர்,2005.
26.’உயரப் பறக்கும் காகங்கள்’ (சிறுகதைகள்) ஆஸி.கந்தராஜா.டிசம்பர் 2003.
27’ஹென்றிலோஷன் கதைகள்’தமிழாக்கம்.நவீனன்.ராசதுரை.கொழும்பு 1995.
28.’புலம்பெயர்ந்தோரின் புலம்பெயரா நெஞ்சங்கள்’ (கவிதைகள்) மணிமேகலைப் பிரசுரம்,எஸ்.எம்.சேமகரன்.2004.
29.’வானவில்’(அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுதி)அவுஸ்திரேலியத் தமிழ் கலை இலக்கியச் கலைச் சங்க வெளியீடு,தொகுப்பாசிரியர்.லெ.முருகபூபதி.ஜனவரி 2007.
25.’மை’கவிதைத் தொகுதி,ஊடறு வெளியீடு,2007 ஜூன்.
26.’துவிதம்’ஆழியாள் கவிதைகள்,மார்ச் 2006.மற்றும் ஆனந்தவிகடனில் வெளியான ஆழியாள் கவிதை,
27.ஞானம் சஞ்சிகை,எஸ்.போ.பேட்டி,ஏப்பிரல்,1994,
28.’முறுவல்’எஸ்.போ. மித்ரா வெளியீடு முன்னுரை,1994.
29.சிட்னியில் தமிழ் நாடகங்களும் இலக்கியப் பவரின் பங்களிப்பும்’ செ.பாஸ்கரன்,ஞானம் சஞ்சிகை,பெப்ரவரி கொழும்பு.2004,
30.பெண்கள் சந்திப்பு மலர்,’கற்புநிலை என்று சொல்லவந்தார்’ கலாநிதி சந்திரலேகா.வாமதேவா.பெண்கள் சந்திப்புக் குழு,2004.
31.D.V.D. லாபிங்கோ லாபிங்.
32.அவுஸ்திரேலியாவில் தமிழர் நிகழ்வுகள்,கலாநிதி.ஆ.கந்தையா,ஜனவரி 2007.
33.கங்கைமகள்’ அடையாளம் சிறுகதை, லெ.முருகபூபதி.
34.பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே தலைமுறை இடைவெளி குறையுமா?கலாநிதி,சந்திரலேகா.வாமதேவா,அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா மலர்,கன்பரா 2004.
35’.புலம்பெயர்ந்த தமிழர்களும் சந்ததி இடைவெளித்தாக்கங்களும்’குலம்.சண்முகம்.M.A. மேற்படி.
36.இலங்கைத் தமிழர் பற்றிய ஆவணச் சேமிப்பின் அவசியம்’ கலாநிதி.மு.குணசிங்கம்.மேற்படி.
37.’தமிழர் சமூகத்தில் இனக்கலப்பு அதிகரிக்குமா?’ கலாநிதி.சந்திரலேகா.வாமதேவா,அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா,2006.
38.’தமிழ் சமூகத்தில் பெண்கள்’பாமதி.பிரதீப்.மேற்படி.
39.புகலிட இலக்கியத்தின் எதிர்காலம்,லெ.முருகபூபதி,மேற்படி.
40,’புலம்பெயர் நாட்டில் தமிழ் திருமணங்கள் பெற்றோர் பிள்ளை உறவு’
வீ.எஸ்.சிவசம்பு.எழுத்தாளர் விழா மலர்,பூமராங்,2010
41.புலம்பெயர்வாழ்வில் திருமணகாலத்தை ஒத்திவைக்கும் எதிர்கால சந்ததி’ரேணுகா.தனுஸ்கந்தா,மேற்படி.
42.புலம்பெயர் சூழலில் தமிழ் மொழிக்கல்வி,குலம் சண்முகம்,எழுத்தாளர் விழா 2006.
43.பாலர் பைந்தமிழ்.கவிஞர் அம்பி,(குழந்தைப் பாடல்கள்) துளசி கல்வி கலாசார வெளியீடு,ஜூலாஉ 2003.
43.’பல்கலாசாரப்பின்னணியில் தமிழ் மொழியும் தமிழ் மொழிக்கல்வியும்’ கலாநிதி,வேந்தனார்.இளங்கோ.எழுத்தாளர் விழா மலர் 2002.
44.தமிழ் 4,வெளியீடு;நியூசவுத்வேல்ஸ் தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பு,2004.
45.’புலம்பெயர் நாடுகளில் உள்ள தலைமுறை இடைவெளியை நிரப்புவது எப்படி’,சிசு.நாகேந்திரன்,எழுத்தாளர் விழா மலர்,2008.
46.’புகுந்த வீட்டில் பிறந்த வீட்டைப் புகழலாமா’காவலூர் ராசதுரை,அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா மலர் 2004.
47.இணையத்தளங்களும் இலக்கியமும்’ வ.தேவ கெளரி,அவுஸ்திரேலிய எழுத்தாளர் விழா மலர்,2004.
48,எம்மவர்,(அவுஸ்திரேலிய எழுத்தாளர்களைப் பற்றிய தொகுப்பு) தொகுப்பாசிரியர்.லெ.முருகபூபதி.முகுந்தன் பதிப்பகம்,2003.
49.அவுஸ்திரேலியாவில் ஆடற்கலையும் பாடற்கலையும்’ கலாநிதி.ஆ.கந்தையா.டிசம்பர்,2005.


               தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்: புதிய போக்குகள் – புதிய பாதைகள்.
                   உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, சிங்கப்பூர். 28 – 30 ஒக்ரோபர் 2011

                                           ஆக்கம்: யசோதா.பத்மநாதன். 19.07.2011


Thursday 29 December 2016

அவுஸ்திரேலிய பூர்வ குடி மக்களின் கலை வெளிப்பாடுகள்

அவுஸ்திரேலிய நாட்டுப் பூர்வ குடி மக்கள் அபிரோஜினல் என்ற பதத்தினால் குறிக்கப்படுகிறார்கள். அவுஸ்திரேலிய அரச / அரச சார்ப்பற்ற எந்த ஒரு நிகழ்வு ஆரம்பிக்கும் முன்னாலும் இம் மண்ணினையும் இம் மண்ணுக்குரிய ஆதிக் குடிமக்களையும் நினைவு கூர்ந்து நிகழ்ச்சியை ஆரம்பிப்பது அவுஸ்திரேலியப் பாரம்பரியமாகும்.




இயற்கைக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களின் பண்பாடு இயற்கையைத் தெய்வமாகப் போற்றுகிறது. இம் மக்களுடய நாளாந்த வாழ்வில் இயற்கை அல்லாத பொருள்களுக்கு இடமே இல்லை.

 இயற்கையில் இருந்து விளையும் பொருட்களில் இவர்கள் தம் நாளாந்த உபகரணங்களையும் கைவினைப் பொருள்களையும் ஆக்கினார்கள். தம் மன வெளிப்பாடுகளை இயற்கையாகக் கிடைக்கும் மர மற்றும் இலை, மண், மூலிகை முதலிய வற்றின்  சாயங்களில் இருந்து  நிறங்களைப் பெற்று மரப்பட்டைகளிலும் பாறைகளிலும் கலைகளையும் மன உணர்வுகளையும் வெளிப்படுத்தினார்கள்.

Museum of Contemporary Art Australia ( Circular quay ரயில் நிலையத்தில் இருந்து மிக சமீபமாக அமைந்திருக்கிறது)  என்ற நூதன சாலையில் இலவசமாக பார்க்க கிடைக்கும் வைப்புப் பொருட்கள் மூன்று மாதத்திற்கு ஒரு தடவை வேறு வேறு பொருள்களாக மாறும் தன்மை கொண்டவை. இன்று காணக்கிடைப்பனவற்றை மூன்று மாதத்தின் பின் காணக் கிடைக்காது. அப்போது அங்கு வேறு கலை வடிவம் இடம் பெற்றிருக்கும்.

6.2.2015 அன்று அங்கு நானும் என் பிரிய தோழி கீதமஞ்சரியும் போன போது அபிரோஜினல் மக்கள் நாளாந்தம்  பாவித்த பொருள்களும் மரப்பட்டைகளில் அவர்கள் வெளிப்படுத்திய கலை வெளிப்பாடுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவைகளில் சில இங்கு பார்வைக்காக....





































சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னால் நியூ சவுத் வேல்ஸ் (New South Weals) மாநில  பிளக்ரவுன் (Black Town) நகர சபை நடாத்தும் பிளக்ரவுன் நூலகத்திற்குச் (Black town library) சென்ற போது அங்கு இருந்த  ஒரு சிறு பலகைத் தட்டில் வைக்கப்பட்டிருந்த அபிரோஜினல் பழங்குடி மக்களின் வாழ்வியல் சிந்தனை ஒன்று.




Saturday 24 December 2016

செல்ல வேண்டிய பாதை....

1. அவுஸ்திரேலியாவில் வாழ்ந்த / வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் எழுத்தாளர்கள் எல்லோரினதும் அவர் தம் படைப்புகளினதும் விபரத் திரட்டு. இதற்குள் இந்திய, இலங்கை, மலேஷிய, சிங்கை என எந்தத் தேசத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் அவுஸ்திரேலியாவில் வசித்தால் அவர்கள் இந்தப் பட்டியலுக்குள் வருவார்கள்.

2. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியம் - அவுஸ்திரேலியப் பின்புலத்தை / புலம்பெயர் வாழ்வை மையப்படுத்திய அனைத்து ஆக்கங்களும் படைப்புகளும் மூலக் குறிப்புகளுடன் இங்கு ஆவணப்படுத்தப் படும்.

3. அவுஸ்திரேலியத் தமிழ் ஆழுமைகள் - அவுஸ்திரேலியாவின் பல்வேறு துறைகளிலும் தம் ஆழுமைகளை வெளிப்படுத்திய தமிழ் ஆழுமைகள், சமூகத்துக்காகத் தொண்டாற்றியவர்கள்  இந்தப் பட்டியலுக்குள் அடங்குவார்கள்.

4.அவுஸ்திரேலியத் தமிழ் மூலாதாரங்கள் -

 1. தமிழ் பாடசாலைகள் பற்றிய மூலாதாரங்கள் மற்றும் விபரக் குறிப்புகள்.

 2. கோயில்கள் பற்றிய விபரங்கள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள்.

 3. அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இணையத்தளங்கள் / வலைப்பூக்கள் பற்றிய விபரங்கள்.

 4. அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவந்த /  வந்து கொண்டிருக்கும்          பத்திரிகைகள் / சஞ்சிகைகள் / இதழ்கள் பற்றிய விபரங்கள்.

 5. இலவசப் பிரதிகள் / அழைப்பிதழ்கள்

 6. வானொலிகள் / இணைய வானொலிகள் பற்றிய விபரங்கள்

 7. தொலைக்காட்சி / திரைப்பட முயற்சிகள்

 8. ஆடல், பாடல், வாத்தியக்கல்லூரிகள், இசைக்குழுக்கள் பற்றிய விபரங்கள்

 9. ஊர் மன்றங்கள், பழைய மாணவர் சங்கங்கள், அமைப்புகள் போன்றவற்றின்    விபரங்கள்

 10. அரச நிறுவனங்கள் தமிழில் வெளியிடும் துண்டறிக்கைகள் பற்றிய விபரங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் தமிழ் மொழியிலும் தமிழருக்காகவும் தமிழில் செய்து வரும் சேவைகள் பற்றிய விபரங்கள்.

11. வெளிநாட்டு இதழ்கள் பத்திரிகைகள் போன்றவற்றில் வெளிவந்த அவுஸ்திரேலியத் தமிழ் பண்பாடு, வாழ்வியல் பற்றிய கட்டுரைகள் மற்றும் கருத்தாக்கங்கள்...

 12. அவுஸ்திரேலியா பற்றிய புகைப்படங்கள்.

இவைகளை தொகுத்து ஓரிடத்தில் ஆவணப்படுத்துதல்.... இன்றைக்கு ஒரு கனவாக....



OZ தமிழ் மூலவளங்கள் பற்றி ஒரு குறிப்பு....

2017ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. இன்று 24.12.2016ம் திகதி.

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், அரச தனியார் நிறுவனங்கள் எல்லாம் நேற்றையோடு விடுமுறை விட்டாயிற்று.

இதமான காலநிலையோடு நாடு வண்ண வண்ண விளக்குகளால் வண்ண மயமாய் காட்சி அளிக்கிறது. மனிதர்களின் முகங்களில் எல்லாம் இறுக்கம் நீங்கி புன்னகை பொலிந்திருக்கிறது. பாதசாரிகள் வாழ்த்துக்களைச் சொரிந்த படி நகர்கிறார்கள்.

குழந்தைகள் நாளை நத்தார் பாப்பாவை வரவேற்கத் தயாராகிறார்கள்....

மக்கள் சாரை சாரையாக தத்தம் வாகனங்களில் வெளியூர்களுக்குப் பயணமாகிறார்கள்....

இனி அவர்கள் தம் அன்றாட வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக வேறொரு உலகத்தில் போயிருந்து தம்மை முற்றிலுமாகப் புதுப்பித்துக் கொண்டு புது வருடத்தை வரவேற்கத் தயாராவார்கள்.

பழையன கழிகின்றன... புதியன புகுகின்றன...

என்னைக் கடந்து போன வருடம் செல்லப் பிராணியை வருடிக்கொடுக்கும் எஜமானனின் கைகளைப் போல என்னை வாஞ்சையோடு வருடி வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுத் தந்து போனது. இது வரை வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கையில் மிகுந்த திருப்தியை மனநிறைவை அது தந்திருக்கிறது.

2016க்கு நன்றி.

ஆனால், சமூக வாழ்வில் என் கடமையைச் சரியாகச் செய்திருக்கிறேனா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன். தமிழரின் பாரம்பரிய ; மறைந்து போன; தகவல் தொழில் நுட்பத்தின் வரவுக்கு முன்பான வாழ்வியலை ஆவணப்படுத்த வேண்டும் என்ற திட்டம் 4,5 பதிவுகளோடு நின்று விட்டது.

உயர்திணையின் இலக்கிய சந்திப்புகள் கிரமமாக மாதாந்தம் நடைபெற வில்லை.

ஆனாலும் நற்கீரன் என்ற ஒரு நண்பர் மூலமாகவும் அருண்.மகிழ்நன் என்ற இன்னொரு நண்பர் மூலமாகவும் அவர்கள் தமிழுக்குச் செய்யும் அளப்பெரிய தொண்டுகள் பற்றிய தகவல்களும் விபரங்களும் கிடைக்க எனக்கும் அந்த நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது.

அந் அந் நாடுகளில் இது வரை வெளிவந்துள்ள தமிழோடு இணைந்த மூல வளங்களைச் சேகரித்தலே அந்தப் பணி. அவர்களோடு இணைந்தும் அதே நேரம் இங்கும் அவற்றை பதிவேற்றுதலுக்காக இன்று இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன்.

உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவரும் அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்; அங்கு என்னென்ன தனித்துவங்கள் இருக்கின்றன என்று தேட நேர்ந்தால் அவர்களுக்கு இப்பக்கம் தகவல்களைத் தர வேண்டும் என்பது தான் இப்பக்க நோக்கம்....

என்னென்ன விடயங்களைப் பதிவேற்றலாம் என்பது பற்றிய குறிப்பை ஒரு எதிர்கால பார்வைக்காகத் தனியான பதிவாக பதிவேற்றுகிறேன். அது போகிற பாதைக்கு வெளிச்சம் தரும் ஒரு இலக்கொளி எனவும் இப்போதைக்குக் கொள்ளலாம். எனினும் அது பூரணமானதல்ல. விலகிச் செல்லாதிருக்க ஓர் உத்தேச எல்லை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இங்கிருக்கிற நாட்டின் தனித்துவங்களையும் தமிழின் தனித்துவங்களையும் அதன் மூலங்களையும்  அடையாளம் காட்ட புகைப்படக் கருவியை பெரிதும் நம்பி இந்தப் பக்கம் ஆரம்பிக்கப் படுகிறது.

வெற்றியையும் தோல்வியையும் காலத்தில் கைகளில் இப்போதைக்கு விட்டு விடுகிறேன்.

நாளை மறு நாள் நாமும் வெளியூர் பயணம். நாட்டழகைக் காணும் ஒரு குடும்பப் பயணம்.

சந்திப்போம்...

புது வருடம் எல்லோருக்கும் சுபீட்சமும் மன அமைதியும் சந்தோஷமும் நின்மதியும் கொண்டு வரும் ஆண்டாக மிளிர்வதாக....