Wednesday 12 July 2023

நூலக சேவைகள்

 பிளக்ரவுன் நகரசபை நூலகம் நூல்களை மாத்திரமல்லாது பல்வேறு விதமான சேவைகள் தகவல்களையும் வழங்குகிறது. குழந்தைகளுக்கான கதைகள் சொல்லும் நிகழ்ச்சிகள், தகவல் அரங்குகள், வேலைத் திட்டங்கள், பயிற்சி வகுப்புகள், கைவினைப் பயிற்சிகள், போட்டி நிகழ்ச்சிகள்  என பல நிகழ்ச்சிகளைப் பயனாளர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்கும் நடாத்தி வருகிறது.

அரசாங்கத்தினது அனுசரணையோடும் நிதிப்பங்களிப்போடும் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகள் குழந்தைகள், வயோதிபர், வளர்ந்தோர், பெற்றோர், பெண்கள், இளையோர், குழந்தைகள் மாற்றுத் திறனாளிகள் எனப் பலரையும் கருத்தில் கொண்டனவாக நிகழ்ச்சித் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புகைப்படம் பிடித்தல், ஓவியம் வரைதல், கதை எழுதுதல், குறும்படம் எடுத்தல் போன்ற செயல் திட்டங்களும், வீட்டுத்தோட்டம், பூந்தோட்டம், வீதி நூலகம் போன்றவற்றுக்கான செயல்முறை வழிகாட்டுதல்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றுக்கான வழிகாட்டல்களும் அத்துறை வல்லுனர்களால் இலவசமாகக் குறிப்பிட்ட நாட்களில்  செயல்முறைப் பயிற்சியாகச் சொல்லிக் கொடுக்க ஒழுங்கு செய்யப் படுகின்றன.

குழந்தைகளுக்கான பொம்மைகளை இரவல் கொடுக்கும் காட்சியறை, நிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய மண்டபங்கள், புத்தகத்தை எழுதிய எழுத்தாளர்கள் வந்து வாசகரோடு பேசுதலுக்கான மாதாந்த வாய்ப்புகள் என்பனவும் அங்கு ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றன.

பொதுவாக பயனாளர்களுக்குத் தேவைப்படும் பயனுள்ள அறிவித்தல்கள், அறிவுறுத்தல்கள், அரச தகவல்கள் போன்றனவும் அங்கு பல்வேறு மொழிகளில் பெற ஆவன செய்யப்பட்டுள்ளன.

அதில் சில புகைப்படங்கள் கீழே கொடுக்கப்படுகின்றன.








படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
பிளக்ரவுன் நூலகம்

7.7.2023.

No comments:

Post a Comment