Thursday 9 February 2017

அவுஸ்திரேலிய முத்திரைகளும் அதன் பண்பாட்டுப் பெறுமதியும்

 ஒவ்வொரு நாடுகளும் தத்தம் நாடுகளின் அழகை; கலையை; பண்பாட்டை;வாழ்வியலை; சிறப்புகளை; வரலாறை தபால் தலைகளாக வெளியிடும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அதன் பொருட்டு தபால்தலை சேகரிப்பு ஒரு சிறந்த பொழுது போக்காகவும் கருதப்படுகிறது.

ஒரு நாட்டின் தபால் தலைகளில் அந் நாடுகளின் இயல்பு மிளிரும் காரணத்தால் நாடுகாண் பயணங்களை மேற்கொள்ளும் உல்லாசப் பயணிகள் தபாலகங்களுக்குச் சென்று முத்திரைகளை வாங்கிச் சேகரிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக தபாலகங்களில் விசேட சேகரிப்புக்கான மையங்களும் தகவல் வழங்கு நிலையங்களும் உள்ளன. அவர்களோடு பதிவுகளை மேற்கொள்ளுவதன் மூலம் அடுத்து அந் நாடுகளில் வெளியாகும் முத்திரைகள் பற்றிய தகவல்களையும் அவற்றை வாங்கும் வசதிகளையும் ஒவ்வொரு நாடுகளின் பிரதான தபாலகங்களும் கொண்டிருக்கின்றன.

கீழே காணப்படும் மூன்று படங்களும் (முத்திரைகளும்) அவுஸ்திரேலியாவுக்கு முதன் முதலில் (1787) வெள்ளையர்கள் குடிவந்த காட்சியை விபரிக்கிறது.


37 சதப் பெறுமதி கொண்ட இம் முத்திரைகளில் முதலாவது முத்திரை அவுஸ்திரேலியக் கண்டத்தில் நிர்வாண தேகத்தினராக அப்போதிருந்த அபிரோஜினல் மக்கள் கப்பல் ஒன்றின் வருகையைப் பார்த்த படி நிற்பதையும் இரண்டாவது முத்திரை தாக்குதலுக்குத் தம்மைத் தயார் செய்து கொள்ளுவதையும் மூன்றாவது முத்திரை கப்பல் நெருங்குவதையும் இந் நாட்டுக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களான கங்காருகள் (அபிரோஜினல்களுக்கான குறியீடு)  அக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் நான்காவது முத்திரை கங்காருகள் இருந்த இடத்தில் வெள்ளைக் கொக்குகள் (வெள்ளையர்களுக்கான குறியீடு) காணப்படும் அதே நேரம் ஒரு கப்பல் நகர்ந்து அப்பால் போவதையும் கடசி முத்திரை வெள்ளையர்கள் தம் பிரித்தானியக் கொடியை நாட்டி நிமிர்வதையும் காணலாம்.


ஒரு வரலாறு முத்திரையாகிய காட்சி!


இன்று அவுஸ்திரேலியா ஒரு பல்கலாசார நாடு. அதனை அது தன் பலமென சொல்லுகின்ற காரணத்தால் சகல மக்களின் பண்பாட்டு கலாசார வாழ்வியலுக்கும் மதிப்பளிக்கிறது. அதனையும் முத்திரைகள் பிரதி பலிக்கின்றன. அண்மையில் (ஜனவரி 28) அது தன் சேவல் வருடத்தைக் கொண்டாடியது. அதனைக் காட்சிப்படுத்தும் விதமான வடிவங்களும் பதாகைகளும் சிட்னி மாநகர் எங்கிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 

அவர்களின் நம்பிக்கைகளை கெளரவிக்கும் விதமாக 2014 இல் அவர்களின் புது வருடமான குதிரை வருடத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட முத்திரைகளை கீழே காணலாம். அதனோடு அதன் சோதிட நம்பிக்கைகள் நம்பிக்கைகள் பற்றிய அட்டை காணப்படுதலும் கவனிக்கத் தக்கது.












அண்மைய காலங்களில் குறிப்பாக இலத்திரனியல் தொழில் நுட்பத்தின் வருகையால் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக முத்திரைகளுக்குப் பதிலாக பெறுமதிகள் மாத்திரம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் அஞ்சல் தலைகளாக உருமாற்றம் பெறுவதும் அண்மைக்காலமாக அவதானிக்கத் தக்க மாற்றமாக இருக்கிறது.




No comments:

Post a Comment