Saturday 22 June 2024

Civic Park - Pendlehill

 அவுஸ்திரேலிய சிட்னி மாநகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முக்கியமானது பெண்டில் ஹில் என்னும் சிறு நகரம். தமிழ் கடைகளும் சிற்றுண்டிச் சாலைகளும் உணவு விடுதிகளும் அழகு படுத்தும் நிலையங்களும், சிகை அலங்கரிப்பு நிலயங்களும், மலர்கடைகளும் உடுப்புக்கடைகளும் மரக்கறிக் கடைகளும் மச்ச மாமிசக் கடைகளும் பலசரக்கு கடைகளும் தொழில்நுட்ப வாணிப நிலயங்களும், ஆடை தைத்துக் கொடுக்கும் சிறுவாணிபம் என்று எல்லாமே தமிழ் பேசுவோருக்குச் சொந்தமானவையாக இருக்கின்றன. வைத்திய நிலையங்களில் தமிழ் பேசும் வைத்தியர்கள் உள்ளனர்.

இன்று இருக்கும் சூழலில் ( 22.6.2024) மருந்தகமும் அஞ்சல் அலுவலகமும் woolworth என்று சொல்லப்படும் பெருவணிக பேரங்காடி மற்றும் வாகன திருத்துமிடம் ஆகிய இவைகள் மட்டுமே வேறு இனத்தவருக்குச் சொந்தமானதாக இருக்கிறது.

தமிழில் பேசி எல்லாமே செய்யக் கூடியதாக இருக்கும் இந்தப் பிராந்தியதில் வாடகைக் கார் தரிப்பு நிலையங்களும் பஸ் தரிப்பு நிலையங்களும் பேரூந்து தரிப்பு நிலையங்களும் கூட அருகருகாகவே காணப்படுகின்றன. தூரப் பகுதிகளில் இருந்து வரும் ஒருவர் இலகுவாகவே பேரூந்து மற்றும் தொடரூந்து வழியாக இந்த இடத்தை வந்தடையலாம். 

தமிழர் ஒருவர் இங்கு வருமிடத்து தனக்குத் தேவையான எல்லாவற்றையும் இங்கு வாங்கிக் கொண்டு, தமிழில் பேசி, தமிழாடைகளோடும் நடமாடித் திரியலாம்.

மகிழூந்தில் வருபவர்கள் அதனைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு, நடந்து சென்று தமக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் தமிழ் உணவகங்களில் உணவுண்ட பின்னர் சற்றே இளைப்பாற ஓர் அழகிய பூங்கா ஒன்று அண்மையில் 23.5.2024 அன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப் பட்டிருக்கிறது.

வரப்பிரசாதமாக அமைந்திருக்கிற இந்தப் பூங்கா 50 இலட்சம் டொலர்கள் செலவில் தற்போது புணரமைக்கப் பட்டிருக்கிறது. இருந்து பேச இடங்களும் உடற்பயிற்சி செய்ய உபகரணங்களும் குழந்தைகள் விளையாட விளையாட்டுத் திடல்களும், இளையோர் விளையாட கூடைப்பந்து, மற்றும் ரென்னிஸ் மைதானங்களும் குடும்பக் கொண்டாட்டங்களுக்கு BBQ  பகுதிகளுமாக சிறப்பாக பெண்டில்ஹில்லுக்கு ஓரழகை இந்தப் பூங்கா கொடுக்கிறது. கூடவே Hormoney பூங்காவும் நீரோடைகளும் இந்தப் பூங்காவுக்கு மேலும் சிறப்பை வழங்குகிறது.

அத்துடன் வாகன நிறுத்துமிட வசதிகளும் புத்தகங்கள் எடுத்துப் போக வைத்துப் போக என ஓரிடமும் ( community library) ( இங்கு யாரும் தம்மிடம் இருக்கும் புத்தகங்களை வைத்து விட்டுப் போகலாம். அல்லது இருக்கும் புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்தும் செல்லலாம். எல்லாம் இலவசம்). மேலும் ஒரு சிறப்பான வசதி என்னவென்றால் இந்தப் பூங்காவை மூன்று பிரதான வீதிகளின் வழியாகவும் வந்தடையலாம்.

1. Civic Avenue 

2.Targo Road

3.Mia Mia Street

தொடரூந்து வழியாக வருபவர்களும் பேரூந்து வழியாக வருபவர்களும் தரிபிடத்தில் இருந்து சுமார் மூன்று தொடக்கம் ஐந்து நிமிட நடை தூரத்தில் இந்த இடத்தை இலகுவாக வந்தடையலாம்.

இன்னும் புது மணம் மாறாமல் இருக்கும் இந்தப் பூங்காவை நடந்து சென்றபடி பார்க்கும் வாய்ப்பு ஒன்று எனக்கு இன்று ( 22.6.2024 சனிக்கிழமை )கிட்டியது. அதன் போது கிளிக்கிய படங்களை ஓராவணமாக இருக்கக் கருதி இங்கு இன்று பதிவேற்றுகிறேன்.

(ஒளிப்படங்கள்: யசோதா.பத்மநதன்.

திகதி: 22.06.2024)


















































































படப்பிடிப்பு: யசோதா. பத்மநாதன்.
22.06.2024. சனிக்கிழமை மழைநாள்.
குளிர்பனிக் காலம்


பின்னிணைப்பு ( 25.6.24 ) 

வள்ளுவர் சிலை திறப்புப் பற்றி வெளிவந்த பத்திரிகைச் செய்தி

ஆதாரம்: வீரகேசரி வாரமலர்; 26.05.2014, ஞாயிற்றுக் கிழமை; பக்:35. இலங்கை.



10 comments:

  1. திருவள்ளுவரை அழைத்து வந்து சிட்னிமாநகரின் பூங்கா ஒன்றில் இருத்தி வைத்த அவுஸ்திரேலிய ஆங்கிலேய அரசாங்கத்தின் மனமேன்மைக்கும், அதற்கான அடித்தளத்தை பரிந்துரைத்த யாரோ அந்த தமிழ் மாமனிதருக்கும் தமிழர் சார்பாய் தமிழ் வணக்கம், மனசார ஒரு பெரு நன்றி.

    இனத்துவேசங்கள் புகுந்து வள்ளுவரை பந்தாடாமல் இருக்க வேண்டும் என்பது எனது மனமார்ந்த வேண்டுதல்.

    பயனுள்ள அழகான பூங்கா.

    ReplyDelete
  2. ஆமாம், கம்பலாந்து நகரசபைக்குச் சொந்தமான இந்தப் பூங்காவில் தமிழ் எழுத்துக்களோடு வள்ளுவனார் அமர்ந்திருப்பது ஆச்சரியமானது தான். யாரோ ஓர் உயர் தமிழரின் பலமான பரிந்துரை ஒன்று அரசமட்டத்தில் செவிகொடுத்துக் கேட்கப்பட்டிருப்பது பெருமைக்குரியதும் கூட. நகரசபக்கு நன்றிகள்.
    உடனடியாக வந்து கருத்தளித்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  3. திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட தகவலை ஃபேஸ்புக் மூலம் அறிந்திருந்தேன். ஆனால் அது பெண்டில்ஹில்லில்தான் என்று இப்போதுதான் தெரிகிறது. படங்கள் அனைத்தும் அருமை. உடனே வந்து பார்க்கும் ஆவலைத் தூண்டுகின்றன. பரபரப்பான நகர வாழ்க்கையில் அனைத்து வயதினரும் நின்று நிதானித்து ஆசுவாசிக்க இவை போன்ற பூங்காக்கள் மிக அவசியம். பகிர்வுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  4. தமிழ் வளர்ச்சி மன்றத்தினை உருவாக்கிய சட்டத்தரணி சந்திரிக்காவின் பெரு முயற்சி

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி. சட்டத்தரணி சந்திரிக்கா அம்மையாருக்கு எங்கள் பணிவன்பான அன்பும் நன்றிகளும் என்றைக்கும் உரியதாகும். மேலும் அதுபற்றிய தகவல்கள் இருப்பின் அதன் இணைப்புகளையும் இங்கு தந்தால் பேருபகாரமாக இருக்கும்.

      இந்த வரலாற்று நிகழ்வு உரியவாறு ஆதாரங்களோடு ஆவணப்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட தமிழருக்கான இடங்களில் தமிழறிஞர்களின் சிலைகள் வைக்கப்படுவது உண்டு. ஆனால் அரசுக்குச் சொந்தமான பொதுப் பூங்கா ஒன்றில் நகரசபையே தமிழில் எழுதிய எழுத்துக்களோடு வள்ளுவனாரை அமர்த்தியிருப்பது சாதாரண விடயம் இல்லை.

      Delete
  5. எனது ஒரு விருப்பம்; திருவள்ளுவர்

    ReplyDelete
    Replies
    1. நன்றி.

      அவர் உலகப் பொதுமைக்குமான அறக்கருத்துக்களைச் சொன்னதில் அவர் உலகத்துக்கே சொந்தமானவர் இல்லையா? உங்களுக்கும் அவரைப் பிடித்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete
  6. Shanthie Kathir23 June 2024 at 20:10

    Civic Park படங்கள் நல்லாக இருக்கு, வள்ளுவர் படத்தின் கீழ் அவர் யார் என்பதையும், அவரின் பெருமையையும் ஒரு metal plate இல் எழுதி வைக்க வேண்டும். யாராவது செய்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. காலப்போக்கில் உரியவர்கள் அதனைச் செய்வார்கள் என்று நம்புவோம்.

      இப்போது தானே வள்ளுவனார் குடிவந்திருக்கிறார். மேலும் உத்தியோகபூர்வமாகப் பூங்கா திறந்து வைக்கப்பட்டாலும், இன்னும் சில வேலைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக நீங்கள் சொன்ன வேண்டுதலையும் நிறைவேற்றுவார்கள் என்று தான் நினைக்கிறேன்.

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete