Friday, 8 December 2017

விளக்குகளும் விளக்கு வகைகளும் - 6 -


விளக்கு என்ற இப்பதம் ஒளி உமிழும் பொருளைக் குறிக்கிறது. மின்சார பாவனை வருவதற்கு முன்னர் எண்ணைகளில் எரியும் விளக்குகள் பரவலாகப் பாவனையில் இருந்தன; இருக்கின்றன. 

வெளிச்சத்துக்காக ஏற்றப்படுவது என்ற பொருள் தொனியில் பார்த்தோமானால் அது கை விளக்கில் இருந்து கலங்கரை விளக்கம் வரைக்குமாக விரியும்.

பற்றறயில் ஒளி உமிழும் ரோச் லைட்டில் இருந்து சூரிய ஒளியில் இயங்கும் மின் குமிழ் வரைக்குமாக; வாசனையோடு ஒளி உமிழும் மெழுகு வர்த்தியில் இருந்து வண்ண வண்ணமாக விட்டு விட்டு ஒளி உமிழும் Fairy  விளக்குகள் வரையிலுமாக;  விளக்குகளின் வகைகள் எண்ணற்றன. 

அதிலும் ஆண்டிறுதி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மேலைத்தேய நாடுகளில் ஒளியினால் வண்ணஜாலம் காட்டும் நகர்கள் அநேகம். வீடுகளும் கிறிஸ்மஸ் மரங்களும் கூட ஒளியினால் அழகூட்டப்பட்டிருப்பது ஒரு விதமான அற்புதக் காட்சியாக இருக்கும். 

அது போல சீன தேசத்து மக்கள் சிவப்பு வண்ணக் காகிதங்கள் கொண்டு செய்யும் விளக்குகளும் இலங்கையில் வெசாக் கொண்டாட்டங்களின் போது வண்ணக்காகிதங்களால் செய்யும் அலங்காரக் கூடுகளும் மின்சாரத்தில் இயங்கும் பிரமாண்ட ஒளி ஜாலங்களும் இன்று வரை மனங்களைக் கொள்லை கொள்ளும் ஒளியின் கலை வண்ணங்களே!

அப்போதெல்லாம் ஒளியால் விழித்திருக்கும் தேசங்கள்....

விளக்குகளில் தான் எத்தனை வகை! கை விளக்கு என்ற ஒன்றை எழுதப் புகுந்த போது விளக்கும் வெளிச்சங்களும் பற்றிய புதிய விளக்கங்கள் வெளிப்படத் தொடங்கின. இது பிறகு தன் சொல்ல வந்த இளையைத் தாண்டி வேறெங்கும் சென்று விடும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் ஒளி உமிழும் பொருள்களின் வகைகளை மட்டும் சொல்லி விட்டு நேரே நம் பண்பாட்டில் பயன்பாட்டில் இருந்த இருக்கும் பொருள்களில் கவனம் செலுத்த விளைகிறேன்.

லாந்தர் என அழைக்கப் படும் ஹரிக்கேன் விளக்கு, கைவிளக்கு, மேசை விளக்கு, பெற்றோல் மக்ஸ், குத்து விளக்கு, தூண்டா மணி விளக்கு, சர விளக்கு, ஆத்ம விளக்கு, தெரு விளக்கு,சுட்டி விளக்கு, மின்சார விளக்கு, பற்றரி விளக்கு (ரோச்) மெழுகு வர்த்தி விளக்கு, எனத்தொடரும் இந்த விளக்கு வகைகள் ஈழத்தில் பொருளாதாரத் தடை விதிக்கப் பட்ட காலங்களில் சிக்கன விளக்கென ஒரு விளக்கு கண்டு பிடிக்கப் பட்டதையும் சொல்ல வேண்டும். கூடவே தகரத்தினால் இணக்கப் பட்ட  விளக்குகள் உள்ளூரில் தயாராகி புழக்கத்திலும் வந்தன. 

கீழே வரும் முதல் மூன்று படங்களும் சுட்டி நிற்கும் விளக்கின் பெயர் ‘தூண்டாமணி விளக்கு’ என்பதாகும் ஒரு சங்கிலியினால் பிணைக்கப் பட்டு தொங்கும் பாவனையில் காணப்படும் இவ்விளக்கு தமிழ் இனத்தார் மத்தியில் பூசை அறைகளிலும் கோயில் கர்ப்பக் கிரகத்திலும் பரவலான பாவனையில் இருந்தது. இப்போதும் சில இடங்களில் இருக்கக் கூடும்.

தேங்காய் எண்ணையில் எரியும் இவ்விளக்கின்  சிறப்பம்சம் என்னவெனில் மேற்பகுதியில் காணப்படும் குமிழ் போன்ற அமைப்பினுள் எண்ணையினை ஊற்றி ( கீழே கால் போன்ற அமைப்பினை களட்டி தலைகீழாகக் குமிழைத் திருப்பி எண்னையினை அதற்குள் ஊற்றிய பின் புரியினால் அதன் கால்பகுதியைப் பூட்டி சரியான வளம் திருப்பினால் எண்ணை சரியான அளவுக்கு அதன் கீழ் புறத்தில் வந்து தங்குவதோடு தொடர்ந்து எண்ணை முடியும் வரை சரியான அளவில் எண்னையை அந்த மேல் குமிழ் வெளி விட்ட வண்ணம் இருக்கும். அளவாக எண்ணை அதன் கீழ் புறத்தில் கசிந்து கொண்டிருப்பதால் திரியில் ஏற்றப்படும் விளக்கு தூண்டாமல் எரியத் தக்கதாக இருப்பதாலும் மேலே மணி போன்ற அமைப்பு இருப்பதனாலும் இதற்கு தூண்டாமணி விளக்கு என இதற்கு பெயர் உண்டாயிற்று எனக் கொள்ளலாம். 

இவற்றின் திரி பழைய வெள்ளை பருத்தித் துணிகளை நீளம் அதிகமாகவும் அகலம் சிறியதாகவும் இருக்கும் வண்ணம் வெட்டி அல்லது கிழித்து அதனை சுருட்டி பாவிப்பதுண்டு. பிற்காலங்களில் திரிகள் கடைகளிலும் விற்பனைக்குப் பெற முடிகிறது.

தூண்டா மணி விளக்கு

தூண்டா மணி விளக்கு; இன்னொரு தோற்றம்

புரியினால் கீழ் புறம் களற்றப்பட்ட தூண்டாமணி விளக்கு
இப் புகைப்படங்கள் 11.10.2017 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள என் சிறிய தாயாரின் வீட்டின் பழைய பொருள்களின் தொகுதியில் இருந்து படம் எடுக்க முடிந்தது.

கீழே வரும் அடுத்த மூன்று படங்களில் காட்டப்பட்டிருப்பது மேசை விளக்கென அறியப் படுவது. மண்ணெண்னணையில் எரியும் இவ்விளக்கு மேசையில் வைக்கப்பட்டு வெளிச்சம் ஏற்றப்படுவதால் மேசை விளக்கென பெயரை பெற்றது. இதன் திரி மெல்லிய அகல வடிவிலானது. கடைகளில் அவை வாங்கப்பட வேண்டியவை.

மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் இவை எண்ணை தாங்கி, திரிப்பகுதி சிமினி என அழைக்கப்படும் காற்றுக்கு அணையாதிருக்கவும் சுடர் நிலையாக எரியயவும் இடையிலே சொருகப்படுவது. களற்றி இலகுவாகப் பூட்டத்தக்க இவை மினுக்கி பாவிக்கப் படுபவை.

இடையிலே காணப்படும் திரிப்பகுதி திரியைக் கணக்காக தூண்டிவிடத்தக்க குமிழியோடு சேர்ந்து காணப்படும். தத்தம் தேவைக்கு தக்கதாக ஒளியை இதன் மூலம் கூட்டிக் குறைத்துப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஈழ நாட்டில் மின்சாரம் இல்லாக் காலங்களில் மாணவர்கள் இரவுகளில் கல்வி கற்க உதவிய இந்த மேசை லாம்பு பலரின் மனங்களில் நீங்கா நினைவுகளாக நிறைந்திருக்கக் கூடும்.

இந்த மேசை லாம்புகள் இப்போது பரவலான மின்சார பாவனை காரணமாக பாவனையில் இருந்து விலகி வருகிறது. மின் வெட்டுக் காலங்களிலும் கூட ரோச் லைட்டுகளும் மெழுகு வரித்திகளும் அதன் இடத்தைப் பிடித்து விட்டமை நினைவு கூரற்பாலது. இந்த மேசை லாம்பு கொழும்பில் வசித்து வரும் என் மச்சாளின் வீட்டில் ஒரு பழம் பொருட்கள் பற்றிய உரையாடலின் போது அவரால் எடுத்துக் காட்டப்பட்டது. 25.10.2017 அன்று புகைப்படம் எடுக்கப்பட்டது.

மேசை லாம்பு

சிமினி களற்றிய நிலையில் மேசை லாம்பு

தூண்டப்பட்டுள்ள அகலத் திரியைக் காண்க

கீழே வருவது கைவிளக்கு. கூகுள் இமேஜ்ஜிலும் இன்று வரை கண்டு பிடிக்க முடியாதிருப்பதிலிருந்தே இதன் பாவனை எவ்வாறு இல்லாதொழிந்து போயுள்ளது என்பதற்குச் சாட்சியமாகலாம். மண்ணெண்ணையில் எரியும் இவ்விளக்குகள் கைகளினால் இலகுவாகப் பிடிக்கத் தக்க வாகானாவை.
ஒரு பாவனைப் பொருள் எவ்வாறு குறிப்பிட்ட ஒரு பண்பினை; ஒரு பண்பாட்டை விளக்கி நிற்கப் போதுமானதாக இருக்கும் என்பதற்கு இந்தக் கைவிளக்கினை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். 

முன் நாள்களில் வீடுகளில் சமையலறை புகைக் கூட்டினைக் கொண்டிருக்கும். வீட்டுக்கு வெளிப்புறமாகப் பார்த்தாலும் தெரியும் அளவுக்கு அவை உயர்ந்து நின்று அதன் நாற்புறங்களிலும் புகையினை வெளியேற்ற வல்ல சிறு இடைவெளிகளைக் கொண்டு விளங்கும். வீட்டுக்கு ஒரு கம்பீரத்தினையும் தரவல்ல இப் புகைக்கூடுகள் தற்போதய வீடுகளில் வைக்கப் படுவதில்லை என்பதனால் வீடுகளின் அமைப்பும் தற்காலங்களில் மாறி வருகிறது. மின்சார மற்றும் புகையை வெளியேற்றாத வாயு அடுப்புகள் பாவனைக்கு வந்து விட்டதால் இத்தகைய மாற்ரங்கள் நிகழ்வது குறிப்பிடத் தகுந்தது.

விறகுகளினால் ஆன அடுப்புகள் அதன் பறன்களில் கட்டப்பட்டு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மாட்டுச் சாணத்தினால் அடுப்படி மெழுகப்பட்டு ஒரு வித ஒழுங்கோடு 3 அடுக்களை ஒரு சூட்டடுப்பெனக் குறிப்பிடப்படும் அடுப்போடு காணப்படும். இந்த இடம் சற்றே இருட்டாகக் காணப்படுவதால் இரவுக் காலங்களில் சமையல் பெண்டிருக்கு இது வெளிச்சம் தர பயன் பட்டது. இக் கைவிளக்கின் பாவனை காற்று வந்து அணைக்கும் சாத்தியங்கள் குறைவென்பதால் இங்கு தான் அதிகம் காணப்பட்டது. 

மேல் பகுதி திறக்கத் தக்க பாவனையில் உளளது. அதனைத் திறப்பதன் மூலம் கீழ்பகுதிக்குள் மண்ணெண்ணையை ஊற்றி, திரியினைச் சுருட்டி மேலுள்ள துவாரத்தினுள் செலுத்தி மீண்டும் புரியினை பூட்டி விடுவதன் மூலம் விளக்கு எரியத் தயாராகி விடும்.

கீழே வரும் அடுத்த மூன்று படங்களிலும் இருக்கும் கைவிளக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய சாமான்கள் விற்கும் கடையில் உருக்குவதற்குத் தயாராக இருந்த நிலையில் அவர்களிடம் இருந்து என்னால் விலைக்குப் பெறப்பட்டது. பிறகு மினுக்கப்பட்டு தற்போது என்னோடு வசித்திருப்பது. ( இங்கு வருகின்ற போது இவ்வாறான பழைய சாமான்களோடு வந்திறங்கியது ஒரு சுவாரிஷமான அனுபவம். அங்கிருப்பவர்களுக்கும் நான் ஒரு சுவாரிஷம் :) என்னத்தச் சொல்ல...! அது ஒரு தனி நகைச்சுவை...)

கைவிளக்கு

கைவிளக்கே தான்

புரி களற்றிய படி...

கீழே வரும் அடுத்த மூன்று படங்களில் தெரிவதும் கை விளக்குத் தான். வடிவம் இன்னொரு விதம். அளவில் சிறியது. இதுவும் இப்போது உருகி இன்னொரு வடிவெடுப்பதில் இருந்து தப்பி என்னோடு வசித்திருக்கிறது.:)

சிறிய கைவிளக்கு

புரி களற்றிய படி..

சோடிக் கை விளக்குகள்
இவை போல கால் விளக்குகள் என அறியப்படும் விளக்குகளும் இருந்தன. அவை இதே வடிவத்தை ஒத்தவை எனினும் நீளத்தில் உயரமானவை. சற்றே உயரமான இடத்துக்கு வெளிச்சத்தைப் பரப்ப அவை பயன் பட்டன. என்னால் சென்ற இடங்களில் அத்தகைய விளக்குகளைக் காண முடியவில்லை.

கீழே வருவது காமாட்சி விளக்கு. இன்றும் பரவலாகப் பாவனையில் இருப்பது வீடுகளில் சுவாமி அறைகளில் தேங்காய் எண்னையினைக் கொண்டு ஏற்றப்படுவது. இவைகளும் இப்போது பல ரகங்களில் வருகின்றன. என் வீட்டு பொருள் இது.

காமாட்சி விளக்கு.

கீழே வரும் இவ்விளக்கும் ஒரு வகை சாமி அறைக்குள் வைக்கும் விளக்குத் தான். ஆனால் அதன் அமைப்பு சற்றே வேறுபட்டது. இன்றும் பலரின் வீட்டு சாமி அறைகளை இவ் வகை விளக்குகள் அலங்கரிக்கின்றன.

சிட்னி போன்ற பொருளாதார வளங்கள் கூடிய பிரதேசங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள் விழாக்களின் போது இவ்வாறான பொருட்கள் அக் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டதன் நினைவாகப் பரிசளிப்பது வழக்கம். அவ்வாறு என்னிடம் வந்து சேர்ந்தவற்றுள் இதுவும் ஒன்று.



சாமி விளக்கு

சாமி விளக்கின் பிரிவுகள்

திரியும் எண்ணையும் இட்ட பின் நடுதுவாரத்திவூடாக பூட்டத் தக்க புரி கொண்டது

இது போல ஆத்ம விளக்கென ஒரு விளக்கு உண்டு. இந்து மக்கள் தம் வீடுகளில் அவசியம் வைத்திருக்க வேண்டும்; அதனை ஏற்ற வேண்டும் என்றொரு நம்பிக்கை இந்து மக்கள் மத்தியில் உண்டு. அது நடுவிலே திரி இட்டு தேங்காய் எண்ணையில் சுடரும். யாழ்ப்பாணத்தில் என் சின்னம்மா வீட்டில் இருந்தது. இதனை எழுதும் இந்த சந்தர்ப்பத்தில் அதனை படம் எடுக்காமல் விட்ட அறியாமையை எண்ணி வருந்துகிறேன். சந்தர்ப்பம் கிட்டினால் பின்னொரு பொழுதில் அதனை இங்கு இணைக்கிறேன்.

கீழே வரும் இச் சிறு விளக்கு பல வருடங்களின் முன் சீனக் கடை ஒன்றில் சிட்னியில் வாங்கியது. மிகச் சிறிய அளவினதான இவ்விளக்கு மேசை லாம்பின் மிகச் சிறிய வடிவம். அழகுக்காக வாங்கியதெனினும் பாவிக்கத் தக்க இயல்பு கொண்டது.




சீன விளக்கு..

திரியோடிருக்கும் பீங்கான் மூலப்பொருளால் ஆக்கப்பட்ட சீன விளக்கு

சீன விளக்கு

அச் சிறு விளக்கின் பிரிவுகள்...

கீழே வருவது சுட்டி விளக்கு. மண்ணினால் ஆக்கப் பெறும் இவை வண்ணங்கள் தீட்டி அழகூட்டப் படுவன. சிட்னியிலுள்ள இந்தியக் கடைகளில் இவ்வாறான சுட்டி விளக்குகளை பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கலாம். கார்த்திகை விளக்கீடு, மற்றும் சுப தினங்கள், கொண்டாட்டங்களின் போது அலங்காரத்துக்காக வைக்கப் படுவனவாகவும் இன்று வரை பரவலாகப் புளக்கத்தில் இருப்பவை. குறிப்பாக இந்திய; பாரத குஜராத்தி, ராஜஸ்தான் மாநிலத்து மக்கள் இதனைப் பரவலாக பாவிக்கிறார்கள். தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத்து தமிழர்களும் தான்.


சுட்டி விளக்கும் அதை தாங்கும் அலங்கார பீடமும்

சுட்டி விளக்கின் இன்னொரு வடிவம்


சுட்டி விளக்கு வைக்கப்பட்ட நிலை

சுட்டி விளக்கு; பக்கவாட்டுத் தோற்றம் பீடத்தோடு....

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளுயரக் குத்து விளக்குகள், பாவை விளக்குகள் போன்றனவும் குத்து விளக்கின் வடிவில் ஒளி உமிழும் பகுதி மிகச் சிறிய மின் குமிழால் கச்சிதமாக இணைக்கப்பட்டு தூரத்தில் இருந்து பார்ப்போருக்கு எண்னையும் நெருப்பும் இல்லாமலே குத்து விளக்கு தீபம் போன்ற மின்சாரக் குத்து விளக்குகளும் ஒளிகாகவும் அழகுக்காகவும் பாவிக்கப் படுவன என்பது குறிப்பிடத் தக்கது.

இலக்கிய வரலாற்று மூலங்களில் விளக்கின் பாவனை பற்றிய சான்றுகள் பல பரவலாக சங்க இலக்கியங்களிலும் தேவார பாசுரங்களிலும் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. இவைகள் எல்லாவற்றையும் சொல்லப் புறப்பட்டால் அவை தொடர்கதை எனவே விரியும் ஆபத்து இருப்பதோடு அது தான் சொல்ல வந்த விடயத்தில் இருந்து விலகிப் போகும் அபாயமும் இருப்பதால் இத்தோடு நிறுத்துவது உசிதம் என்று தோன்றுகிறது.

என்றாலும் போவதற்கு முன் சிட்னியில் பரமற்றா நகரிலுள்ள 
Brislington Medical and Nursing மியூசியத்தில் காணப்பட்ட அவுஸ்திரேலிய குடியேற்ற காலத்தில் பயன் படுத்தப்பட்ட  ஹரிக்கேன் விளக்கின் படத்தோடு இந்தப் பதிவை நிறைவு செய்து கொள்ளுகிறேன். இப்புகைப்படம் 15.6.2017 அன்று எடுக்கப்பட்டது.






Wednesday, 6 December 2017

பந்திப்பாய் - 5 -

ஒரு பொருள் பற்றி பேசப்புறப்படும் போது அதனைப் பின்பற்றி பண்பாடு சார்ந்த பல பின் புலங்கள் புலப்படத் தொடங்கும். பந்திப்பாய் குறித்த இந்தக் குறிப்பினை எழுதப் புகும் போது மக்கள் தம் உணவுப்பழக்க வழக்கங்கள், விருந்தோம்பும் முறை, இலக்கியங்கள் குறித்து வைத்துள்ள உணவுப் பண்பாடு குறித்த செய்திகள்,... என இப்படி விரிந்து கொண்டே போகும்.

பந்திப்பாய் என்ற கட்டுக்குள் நின்று கொண்டாலும் கூட பாயின் பண்பும் மூலப்பொருள், செய்முறை, தொழில் குறித்த துறை, பயன் பாடு, மக்கள் தம் வாழ்வியலில் அதன் இடம் என இன்னொரு விதமாக நீளும்.

இவைகளைத் தவிர்த்து சிறு குறிப்பினைத் தருவதென்னவோ மனதுக்கு திருப்தியைத் தருவதில்லை. அதனால் எங்கிருந்து இதனை எடுத்துச் செல்வதென தெரியவில்லை. 

இந்தப் பாய்கள் இன்று புழக்கத்தில் இல்லை. அதனைச் செய்வாரும் இல்லை. உணவுப் பண்பாட்டின் ஓரங்கமாக விளங்கிய இவை சபையோர் நிலத்தில் சப்பாணி வெட்டி இருந்து உணவுண்ணுவதற்குப் பயன் படுத்தியது.

மக்களிடம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட பல மாற்றங்களே இன்று இவை புழக்கத்தில் இருந்து மறைந்து போனமைக்கு முக்கிய காரணம். முன்னொரு காலத்தில் கொண்டாட்ட காலங்கள் குறிப்பாக திருமண நாள்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போதும்; அந்தியேட்டி, திவசம் போன்ற நினைவு நாள்களின் போதும் சொந்த மனைகளில் அக்கம் பக்கத்தில் உள்ள அயலாரும் இரத்த சொந்தங்களுமாக முதல் நாள் இரவு மரக்கறிகள், பழ வர்க்கங்கள், தேங்காய், புளி போன்ற இதர பொருட்களும் மனிதர்களுமென வீடு களை கட்டி இருக்கும்.

 அவர்களுக்கான தேநீர், விருந்துபசாரங்களும் பாக்கு வெற்றிலை உபசரிப்புகளுமாக இன்னொரு நிகழ்வு நடந்த வண்ணமாக இருக்க, பலகார தயாரிப்புகள், பலகாரச் சூடுகளும் மரக்கறி வெட்டுதல், தேங்காய் துருவுதல், சமைத்தலுக்கான முன் ஏற்பாடுகளைச் செய்தல் என வீடு களை கட்டிப் போயிருக்கும். குழந்தைகள், சிறுவர்கள் ஆங்காங்கே விளையாடிய வண்ணமும் பெற்றோர் பாதுகாவலர் இடையிடையே அவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பவர்களாகவும் விளங்குவர்.

அக்கம் பக்கத்தாரும் உறவினர்களும் கதைகள் பேசி கலந்துரையாடிய படி வேலைகளைப் பகிர்ந்து செய்த படி இருப்பர்.வீட்டுச் சொந்தக் காரர் அக்கறையோடு நேரத்துக்கு அவருக்கான உபசாரங்களில் ஈடுபட மறக்க மாட்டார்கள்.

இவ்வாறாக சமைக்கப் படும் பண்டங்கள் விஷேஷ நாளின் நிகழ்வுகளின் பின்னால் விருந்தாளிகளுக்கு விருந்தளிப்பதற்கு தயாராக இருக்கும். 

அந்த விருந்தோம்பலின் ஒரு பிரதான பகுதி இந்தப் பந்திப் பாய். நிலத்தில் பந்திப் பாய் விரித்து; வாழை இலை போட்டு; முதலில் குழந்தைகள், பின்னர் ஆண்கள், அதன் பின் பெண்கள் என வரிசையாக அமரப் பண்ணி நான்கு கிண்ணங்கள், மற்றும் மூன்று கிண்ணங்கள் ஒட்டி இருக்கும் கறிக் கிண்ணங்களை; பெரிய பாத்திரங்களில் சோறு அப்பளம் என இவைகளை எடுத்து உபசரித்த படி பெண்கள் எல்லோருக்கும் உணவு பரிமாறுவார்கள்.  

உணவு பரிமாறுவதிலும் முறைகள் உண்டு. ‘ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே’ என வழங்கும் பழமொழி ஒரு காலத்தில் இந்தப் பந்திப்பாயில் நிலத்தில் இருந்து உணவு உண்ணும் செயல் எத்தனை பிரபலமாகப் புழக்கத்தில் இருந்ததென்பதற்கு அச்சொட்டான சாட்சி. 

இதன் பொருள் என்னவெனில் ஒரு வீட்டில் ஒரு விசேட நிகழ்வு நடைபெறும் போது அயலார் வந்து உதவும் மரபுக்கேற்ப விருந்துபசாரம் நடக்கும் போதும் அயல் வீட்டுப் பெண்மணி உணவு பரிமாறும் செயலில் ஈடு பட்டிருப்பார். அந்தப் பந்தியில்  அப் பெண்மணியின் கணவரும் அமர்ந்துணவு உண்ணும் போது அவரின் மனைவிக்கு தன் கணவரை உபசரிக்கும் அல்லது உணவு பரிமாறும் சந்தர்ப்பம் கிட்டுமல்லவா? அப்போது தாராளமாக, ‘இலவசமாக’  ‘உபசாரம்’ செய்யலாம் தானே! அதனால் தான் அந்தப் பழமொழி வழக்கில் வந்தது.

இப்போது பந்தி வைத்து உணவு பரிமாறும் வழக்கம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மருவி வருகிறது. சில வேளைகளில் கிராமப் புறங்களில் அல்லது சிறு கொண்டாட்டங்களின் போது சிற்றூர்களில் இவ்வாறு நிகழக் கூடும்.

இப்போது கதிரை மேசைகளில் சில்வர் மற்றும் பீங்கான் தட்டுகளில் ஏற்கனவே ஓடர் செய்து விலைக்குப் பெற்றுக் கொண்ட உணவுப் பதார்த்தங்களை பொதுவாக வைப்பதும்; விருந்தாளிகள்  தாமாகவே தமக்கான உணவுகளை தமக்கு பிடித்த அளவுகளில் தாமே தமக்குப் பரிமாறிக் கொள்ளும் வண்ணம்  அமைந்திருப்பதுமாக ஒரு வாழ்க்கைமுறையே மாறி இருக்கிறது.

இதன் காரணமாக அன்னியோன்யமாக இருந்த அயலார் உறவினர் அன்பு,உறவு, நட்பு, ஒருவருக்கு ஒருவர் கைகொடுக்கும் இயல்பு, உணர்வு பூர்வமாக ஒருவரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் உள்ளார்ந்தஅக்கறை கலந்த அன்பு... என இவைகளும் வேறொரு கட்டத்துக்கு நகர்ந்து விட்டன.

பந்திப் பாய்; 50 - 55 வருடங்கள் பழமையானது

பந்திப்பாய் நீளபாட்டுக்கு...

அதன் பக்கவாட்டுத் தோற்றம்

பந்திப்பாய் இன்னொரு தோற்றம்

பந்திப்பாய்; நெருங்கிய தோற்றம்

இந்தப் பந்திப் பாய்களும் ஏனைய பாய்களைப் போல அதே மூலப் பொருள்களினாலேயே ஆக்கப் பட்டவை. இதன் ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில் இதுஅகலம் குறைந்தவையாகவும் நீளம் மிக நீண்டவையாகவும் காணப்படுவது தான்.

விருந்தாளிகள் நீளமாக ஒரு வரிசைக்கு அமர்ந்து உணவுண்ண பயன் படும் வண்ணம் அமைந்தது.

குளக்கரைகளில் விளையும் ஒருவித கோரை நாணல் புல்லினைப் பதப்படுத்தி சாயம் பூசி, பின்னப்படும் இப் பந்திப் பாய்கள் சுருட்டி வைக்கத் தக்கவையாகவும் ஓரங்கள்  சிலும்பாமல் துணியினால் மடித்துத் தைக்கப் பட்டவையாகவும் அழகியல் வேலைப்பாடுகள் கொண்டவையாகவும்  காணப்படும்.

மேலே படத்தில் காட்டப்பட்டிருக்கிற பந்திப் பாய் சுமார் 50, 55 வருடங்கள் பழமையானது. எனக்கு முதல் சந்ததியினர் தம் வீட்டு நிகழ்வுகளின் போது பயன் படுத்தியது. போர் காலங்களின் பின்னரும் பாதுகாப்பாக நம்மோடு இன்றும் நிலைத்திருப்பது....அண்மையில் தாயகம் சென்றிருந்த போது காணக்கிட்டியது.

          (படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன். ( யாழ்ப்பாணம். 11.10.2017)

Tuesday, 5 December 2017

பின்னல் கதிரைகள் / சாய்மனைக் கதிரைகள் - 4 -

 பின்னல் கதிரைகள்/ சாய்மனைக் கதிரைகள் போன்ற இருக்கைகள் இலங்கை போன்ற உலர் வலய நாடுகளில் மிகச் சாதாரணமானவை. இன்றும் புளக்கத்தில் இருப்பவை. வெய்யிலும் வியர்வையும் உள்ள பிரதேசங்கள் அவற்றுக்கு உகந்ததான இருக்கைகளைக் கொண்டிருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

ஆனால் அதில் இடம் பெறும் நுட்பமான வேலைப்பாடுகள், கலை உணர்வுகள், வசதிகேற்ப அவைகள் இழைக்கப்பட்டிருக்கும் பாங்கு, செய்யப்பட்ட மூலப் பொருள், அதன் பாவனைப் பண்பு, என்பன அதனைப் பயன்படுத்தும் மக்கள் கூட்டம்  பற்றிய ஒரு பார்வையினை தர வல்லது. குறிப்பாகச் சொல்வதானால் ஒரு பொருள் சார்ந்து அமைந்திருக்கும் அவர் தம் பண்பாட்டை அவை வெளிப்படுத்துவன.

பின்னல் கதிரைகள் மற்றும் சாய்மனைக் கதிரைகள் முதிரை, தேக்கு, மற்றும் கருங்காலி மரங்களினால் ஆக்கப் படுவன. அதன் உறுதி, நீடித்த உழைப்பு, அதன் நிறம் மாறாத் தன்மை போன்றன அம் மரங்களைத் தெரிவு செய்யக் காரணம் எனலாம். அதன் ஓரங்களிலே துவாரங்களை இட்டு ஒரு வித அழகியல் சேர மிக இறுக்கமாக பிரம்பு நாரினை மெல்லியதாக வாரி சுத்தம் செய்து தொய்ந்து போகாத வண்ணம் ஒரு வித ஒழுங்கில் அதனைப் பின்னி ஓரங்களை உறுதியான முடிச்சினால் கட்டிடுவார்கள்.

இவற்றைப் பின்ன என கெட்டித்தனமான பின்னலாளர்கள் இருக்கிறார்கள். மரவேலைகள் செய்யும் விற்பன்னர்கள் தச்சர்கள் என அழைக்கப்பட அவர்களோடு இணைந்து வேலை செய்பவர்களாக இந்தப் பின்னலாளர்கள் விளங்குகிறார்கள்.

கீழே இடம்பெறும் முதலாவது கதிரை கருங்காலி மரத்தினால் ஆக்கப் பட்டது. சேர்.பொன். இராமநாதன் அவர்களால் பாவிக்கப் பட்டது. (ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) அதன் அழகியலும் வேலைப்பாடும் உறுதிப்பாடும் இலங்கை மக்கள் எத்தகைய கலை உணர்வையும் மரங்கள் பற்றிய அறிவையும் உறுதியாக பொருள் இணைக்கவல்ல திறமையையும் கொண்டிருந்தார்கள் என்பதையும் உணர்த்தப் போதுமானதாக இருக்கும்.
காலும் கைப்பிடியும் கலை அழகோடு....

கைப்பிடியின் நெருங்கிய தோற்றம்

கதிரையின் முழு வடிவம்

அது போலவே எழுதும் மேசைகள் சாப்பாட்டு மேசைகள் போன்றனவும் உறுதியான மரங்களினாலும் அழகிய கலை வேலைப்பாடுகலினாலும் ஆக்கப் படுவன. கீழே இடம் பெறும் இந்த மேசையும் சேர்.பொ. இராமநாதன் அவர்களால் பாவிக்கப் பட்டது தான். தற்போது இவை இரண்டும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தினுள் வைக்கப் பட்டிருக்கிறது. ( யாழ் பல்கலைக்கழகம் முன் நாளில் பரமேஸ்வராக் கல்லூரியாக சேர்.பொன். இராமநாதனால் ஆரம்பிக்கப் பட்டு பின்னர் அது யாழ் பல்கலைக் கழகமாக உயர்வு பெற்றது இங்கு குறிப்பிடத் தக்கது)

(நான் இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது விரிவுரை மண்டபங்களில் பிய்ந்து போகும் பின்னல் கதிரைகளைப் பின்ன என கண்பார்வை இழந்த இளைஞர் யுவதிகள் அங்கு வருவதுண்டு. கண்பார்வையை இழந்த போதும் ஒரு வித லயத்தோடு, தம் நண்பர் குளாத்தோடு அளவளாவிய படி, அவர்கள் கதிரைகளை ஒரு வித லாவகத்தோடும் விரைவோடும் பின்னும் காட்சி மறக்க இயலாதது )

மேசையின் கால் பகுதி

மேசையின் உறுதிப்பாடும் கலை வேலைப்பாடும்

மேசையின் ஒரு கால் 

மேசையின் அடிப்புறம்

மேசையின் முழு வடிவம்

மேலே காட்டப்பட்ட இந்த மேசையும் கருங்காலி மரத்தினால் உறுதியாக செய்யப்பட்ட ஒன்றே.அதன் நடுப்பகுதி கருங்கல்லினை வெட்டி மட்டமாக்கி அழுத்தமாக மினுக்கி மரவேலைப்பாடுகளுக்கிடையே இணைக்கப் பட்டிருக்கிறது. அதிலிருந்து இத்தகைய தளபாடங்கள் எத்தகைய உத்திகளோடும் கலை வெளிப்பாடுகளோடும் நீண்டகால நோக்கோடும் செய்யப்பட்டனவாக இருக்கலாம் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம். இந்த மேசையை நகர்த்துவதென்பதே மிகக் கடினமான காரியம். ( இவை இரண்டும் தற்போது யாழ் பல்கலைக் கழக நூலக மண்டபத்தினுள் வைக்கப் பட்டிருக்கிறது.)
                                  ( படப்பிடிப்பு; யசோதா.பத்மநாதன். 16.10.2017)

இத்தகைய செயல் திறனின் பாரம்பரியத்தை இன்றும் தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி சிங்கள மக்களின் வாழ்வியலிலும் மிகப் பரவலாகக் காணலாம். குறிப்பாகச் சிங்கள மக்கள் இவ்வாறான கதிரை மேசைகளை மிகுந்த கலை நுட்பத்தோடு செய்யக் காணலாம். அவை தமிழர்களுடய வேலைப்பாடுகளில் இருந்து சற்றே மாறுபடுவன.

கீழே முதலாவதாக வருவது சாய்மனைக் கதிரையாகும். இதுவும் மரமும் பிரம்பு நாரினாலும் ஆக்கப் படுவது. தோற்றப்பாட்டில் சற்றே மாறுபட்டு சாய்ந்து படுக்கத் தக்க அமைப்பில் விளங்குவது. அத்தோடு படுத்த படியே காலை நீட்டி வைத்துக் கொள்ளத்தக்கதாக கைப்பிடியோடு மடித்து உள்ளே வைத்து விடத் தக்கதாக அமைந்திருக்கும் பலகை வடிவம் ஒன்றிருக்கும். அதனை விரித்து விடுவதன் மூலம் கைப்பிடி கால் பிடிக்குமாக நீண்டு விடுவதோடு அதில் கால்களை எறிந்து இன்னும் வசதியாகப் படுக்கத் தக்க அமைப்பினைக் கொண்டிருக்கிறது. அது தேவைப்படாத போது அதனை மடித்து கைப்பிடியின் உட்புறமாகச் சொருகி விட்டலாம்.

மேலும் சில சாய்மனைக் கதிரைகள் கைப்பிடியிலே ஒரு தேநீர் குவளை வைக்கத் தக்க விதமாக வட்டப் பள்ளம் செதுக்கியவையாகவும் காணப்படுவதுண்டு.

சாய்மனைக் கதிரை; பக்கவாட்டுத் தோற்றம்

சாய்மனைக் கதிரை; முன்பக்கத் தோற்றம்
      ( படப்பிடிப்பு; யசோதா.பத்மநாதன். அளவெட்டி, யாழ்ப்பாணம்; 11.10.17)

சிங்கள மக்களின் பாணியிலமைந்த கதிரைகள்

சிங்கள பாணி

பின்னல் வேலை...

பின்னல் வேலைப்பாட்டின் நெருங்கிய தோற்றம்

கைப்பிடி; சிங்கள பாணி

கதிரையின் காலும் கையும்...

பின்னல் கதிரை

பக்கவாட்டுத் தோற்றம்

முன்பக்கத் தோற்றம்
                   ( படப்பிடிப்பு ; யசோதா.பத்மநாதன். கொழும்பு; 05.10.2017)

பிரம்பு நார்களினால் பின்னப்படும் இந்தக் கதிரைகள் காலப்போக்கில் நீடிய பாவனை காரணமாக பின்னல்கள் அறுந்து போக போக பின்னாளில் அவைகளை பிளாஸ்டிக் நாரினால் பின்னும் முறை புழக்கத்துக்கு வந்து விட்டது. அவற்றின் சுவாத்தியக் குறைவுக்கு அப்பால் அதன் நீடித்த உழைப்பு மற்றும் இலகுவாகக் கிடைக்கும் தன்மை, விலை மலிவாகக் கிடைக்கும் காரணங்கள் போன்ற இன்ன பிற விடயங்கள் தற்போது மக்களை பிளாஸ்டிக் நாரினால் பின்னல்களை செய்ய நிர்ப்பந்தித்திருக்கிறது.

கொசுறுச் செய்தியாக பல வீடுகளில் சொகுசு மெத்தைகளோடு கூடிய சோபாக்கள் இப்போது வீடுகளை அலங்கரிக்கத் தொடங்கி விட்டன என்பதும் அவசியம் சொல்லப்பட வேண்டிய செய்தியாகும். உலகம் சுருங்கி விட்டமை மற்றும் வெளிநாட்டு வசதி வாய்ப்புகள், போன்ற காரணங்கள் சுவாத்தியத்தைப் புறம் தள்ளி வசதி வாய்ப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மக்கள் தம் மனமாற்றங்களை வெளிப்படுத்தும் அம்சமாக இருப்பதை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

கீழே வரும் இப் பழங்காலக் கதிரை தன் பிரம்புப் பின்னலை இழந்த பின் பிளாஸ்டிக் பின்னலில் அமைந்திருப்பதைப் படம் காட்டுக்கிறது.

பிளாஸ்டிக் பின்னல்


பழங்காலக் கதிரைப் பாணி

          ( படப்பிடிப்பு; யசோதா.பத்மநாதன். கொழும்பு, தமிழ் வீடு ; 25.10.17)