பின்னல் கதிரைகள்/ சாய்மனைக் கதிரைகள் போன்ற இருக்கைகள் இலங்கை போன்ற உலர் வலய நாடுகளில் மிகச் சாதாரணமானவை. இன்றும் புளக்கத்தில் இருப்பவை. வெய்யிலும் வியர்வையும் உள்ள பிரதேசங்கள் அவற்றுக்கு உகந்ததான இருக்கைகளைக் கொண்டிருப்பதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.
ஆனால் அதில் இடம் பெறும் நுட்பமான வேலைப்பாடுகள், கலை உணர்வுகள், வசதிகேற்ப அவைகள் இழைக்கப்பட்டிருக்கும் பாங்கு, செய்யப்பட்ட மூலப் பொருள், அதன் பாவனைப் பண்பு, என்பன அதனைப் பயன்படுத்தும் மக்கள் கூட்டம் பற்றிய ஒரு பார்வையினை தர வல்லது. குறிப்பாகச் சொல்வதானால் ஒரு பொருள் சார்ந்து அமைந்திருக்கும் அவர் தம் பண்பாட்டை அவை வெளிப்படுத்துவன.
பின்னல் கதிரைகள் மற்றும் சாய்மனைக் கதிரைகள் முதிரை, தேக்கு, மற்றும் கருங்காலி மரங்களினால் ஆக்கப் படுவன. அதன் உறுதி, நீடித்த உழைப்பு, அதன் நிறம் மாறாத் தன்மை போன்றன அம் மரங்களைத் தெரிவு செய்யக் காரணம் எனலாம். அதன் ஓரங்களிலே துவாரங்களை இட்டு ஒரு வித அழகியல் சேர மிக இறுக்கமாக பிரம்பு நாரினை மெல்லியதாக வாரி சுத்தம் செய்து தொய்ந்து போகாத வண்ணம் ஒரு வித ஒழுங்கில் அதனைப் பின்னி ஓரங்களை உறுதியான முடிச்சினால் கட்டிடுவார்கள்.
இவற்றைப் பின்ன என கெட்டித்தனமான பின்னலாளர்கள் இருக்கிறார்கள். மரவேலைகள் செய்யும் விற்பன்னர்கள் தச்சர்கள் என அழைக்கப்பட அவர்களோடு இணைந்து வேலை செய்பவர்களாக இந்தப் பின்னலாளர்கள் விளங்குகிறார்கள்.
கீழே இடம்பெறும் முதலாவது கதிரை கருங்காலி மரத்தினால் ஆக்கப் பட்டது. சேர்.பொன். இராமநாதன் அவர்களால் பாவிக்கப் பட்டது. (ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) அதன் அழகியலும் வேலைப்பாடும் உறுதிப்பாடும் இலங்கை மக்கள் எத்தகைய கலை உணர்வையும் மரங்கள் பற்றிய அறிவையும் உறுதியாக பொருள் இணைக்கவல்ல திறமையையும் கொண்டிருந்தார்கள் என்பதையும் உணர்த்தப் போதுமானதாக இருக்கும்.
 |
காலும் கைப்பிடியும் கலை அழகோடு.... |
 |
கைப்பிடியின் நெருங்கிய தோற்றம் |
 |
கதிரையின் முழு வடிவம் |
அது போலவே எழுதும் மேசைகள் சாப்பாட்டு மேசைகள் போன்றனவும் உறுதியான மரங்களினாலும் அழகிய கலை வேலைப்பாடுகலினாலும் ஆக்கப் படுவன. கீழே இடம் பெறும் இந்த மேசையும் சேர்.பொ. இராமநாதன் அவர்களால் பாவிக்கப் பட்டது தான். தற்போது இவை இரண்டும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தினுள் வைக்கப் பட்டிருக்கிறது. ( யாழ் பல்கலைக்கழகம் முன் நாளில் பரமேஸ்வராக் கல்லூரியாக சேர்.பொன். இராமநாதனால் ஆரம்பிக்கப் பட்டு பின்னர் அது யாழ் பல்கலைக் கழகமாக உயர்வு பெற்றது இங்கு குறிப்பிடத் தக்கது)
(நான் இந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது விரிவுரை மண்டபங்களில் பிய்ந்து போகும் பின்னல் கதிரைகளைப் பின்ன என கண்பார்வை இழந்த இளைஞர் யுவதிகள் அங்கு வருவதுண்டு. கண்பார்வையை இழந்த போதும் ஒரு வித லயத்தோடு, தம் நண்பர் குளாத்தோடு அளவளாவிய படி, அவர்கள் கதிரைகளை ஒரு வித லாவகத்தோடும் விரைவோடும் பின்னும் காட்சி மறக்க இயலாதது )
 |
மேசையின் கால் பகுதி |
 |
மேசையின் உறுதிப்பாடும் கலை வேலைப்பாடும் |
 |
மேசையின் ஒரு கால் |
 |
மேசையின் அடிப்புறம் |
 |
மேசையின் முழு வடிவம் |
மேலே காட்டப்பட்ட இந்த மேசையும் கருங்காலி மரத்தினால் உறுதியாக செய்யப்பட்ட ஒன்றே.அதன் நடுப்பகுதி கருங்கல்லினை வெட்டி மட்டமாக்கி அழுத்தமாக மினுக்கி மரவேலைப்பாடுகளுக்கிடையே இணைக்கப் பட்டிருக்கிறது. அதிலிருந்து இத்தகைய தளபாடங்கள் எத்தகைய உத்திகளோடும் கலை வெளிப்பாடுகளோடும் நீண்டகால நோக்கோடும் செய்யப்பட்டனவாக இருக்கலாம் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம். இந்த மேசையை நகர்த்துவதென்பதே மிகக் கடினமான காரியம். ( இவை இரண்டும் தற்போது யாழ் பல்கலைக் கழக நூலக மண்டபத்தினுள் வைக்கப் பட்டிருக்கிறது.)
( படப்பிடிப்பு; யசோதா.பத்மநாதன். 16.10.2017)
இத்தகைய செயல் திறனின் பாரம்பரியத்தை இன்றும் தமிழர்கள் மத்தியில் மாத்திரமன்றி சிங்கள மக்களின் வாழ்வியலிலும் மிகப் பரவலாகக் காணலாம். குறிப்பாகச் சிங்கள மக்கள் இவ்வாறான கதிரை மேசைகளை மிகுந்த கலை நுட்பத்தோடு செய்யக் காணலாம். அவை தமிழர்களுடய வேலைப்பாடுகளில் இருந்து சற்றே மாறுபடுவன.
கீழே முதலாவதாக வருவது சாய்மனைக் கதிரையாகும். இதுவும் மரமும் பிரம்பு நாரினாலும் ஆக்கப் படுவது. தோற்றப்பாட்டில் சற்றே மாறுபட்டு சாய்ந்து படுக்கத் தக்க அமைப்பில் விளங்குவது. அத்தோடு படுத்த படியே காலை நீட்டி வைத்துக் கொள்ளத்தக்கதாக கைப்பிடியோடு மடித்து உள்ளே வைத்து விடத் தக்கதாக அமைந்திருக்கும் பலகை வடிவம் ஒன்றிருக்கும். அதனை விரித்து விடுவதன் மூலம் கைப்பிடி கால் பிடிக்குமாக நீண்டு விடுவதோடு அதில் கால்களை எறிந்து இன்னும் வசதியாகப் படுக்கத் தக்க அமைப்பினைக் கொண்டிருக்கிறது. அது தேவைப்படாத போது அதனை மடித்து கைப்பிடியின் உட்புறமாகச் சொருகி விட்டலாம்.
கொசுறுச் செய்தியாக பல வீடுகளில் சொகுசு மெத்தைகளோடு கூடிய சோபாக்கள் இப்போது வீடுகளை அலங்கரிக்கத் தொடங்கி விட்டன என்பதும் அவசியம் சொல்லப்பட வேண்டிய செய்தியாகும். உலகம் சுருங்கி விட்டமை மற்றும் வெளிநாட்டு வசதி வாய்ப்புகள், போன்ற காரணங்கள் சுவாத்தியத்தைப் புறம் தள்ளி வசதி வாய்ப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் மக்கள் தம் மனமாற்றங்களை வெளிப்படுத்தும் அம்சமாக இருப்பதை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.
கீழே வரும் இப் பழங்காலக் கதிரை தன் பிரம்புப் பின்னலை இழந்த பின் பிளாஸ்டிக் பின்னலில் அமைந்திருப்பதைப் படம் காட்டுக்கிறது.
 |
பிளாஸ்டிக் பின்னல் |
 |
பழங்காலக் கதிரைப் பாணி |
( படப்பிடிப்பு; யசோதா.பத்மநாதன். கொழும்பு, தமிழ் வீடு ; 25.10.17)
No comments:
Post a Comment