Wednesday 22 November 2017

தையல் கலை (embroidery) - 3 -

இலங்கைத் தமிழர்களுடய வீடுகளில் மரத்தினாலான தளபாடங்களும் பிரம்பினால் அமைந்த பின்னல் வேலைப்பாடுகளுடன் கூடிய கதிரைகளும் வரவேற்பறையில் அமைந்திருக்கும்.

அவைகள் பருத்தித் துணிகளினால் ஆன உறைகளில் கைத் தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய அழகியல் அம்சங்களைத் தாங்கி இருக்கும்.

படுக்கை அறைத் தலையணை உறைகளும் இலவம்பஞ்சினை உள்ளடக்கிய வாறும் பருத்தித் துணியினாலான உறைகளை கொண்ட படியும் அதன் மேலே கைகளினால் போடப்படும் பலவிதமான அழகியல் வேலைப்பாடுகள் அமைந்த தையல் அலங்கார வேலைப்பாடுகளாலும் மெருகு பெற்றிருக்கும்.

பெண்கள் குறிப்பாக கன்னிப் பெண்கள் தையல் பழகும் நிலையங்களுக்குச் சென்று தையல் பழகி இருத்தல் ஒரு சிறந்த திறமை என கொண்டாடப்பட்டிருந்தது.

தையல் ஊசி கொண்டு வண்ண வண்ண நூல்களினால் செய்யப்படும் அலங்காரங்கள் வரவேற்பறையை அலங்கரிக்க உதவியது மாத்திரமன்றி சம்பந்தப்பட்டவரின் கலை வெளிப்பாட்டை; கற்பனைப் பண்பை; குணஇயல்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவும்; சிறந்த கலைகளில் ஒன்றாகவும்; மன மகிழ்வை ஊட்டும் அம்சமாகவும் அனுபவிக்கப் பட்டு வந்தது.

இன்று இயந்திரங்களே சகலவற்றையும் செய்து வரும் இன் நாளில் கைத்தையல் அலங்காரங்கள் மருவி இல்லாது போய் வருகின்றன. அந்த இடங்களை தையல் இயந்திரங்களும் பெயின்ரிங் அலங்காரங்களும் துணியிலேயே அச்சடிக்கப்பட்டவாறு வரும் அலங்காரத் துணி வகைகளும் பிடித்துக் கொண்டு விட்டன. மக்களிடம் நேரமின்மையும் மினைக்கெடும் பொறுமையின்மையும் அதன் உபரிக் காரணங்களாக அமைந்து போயின.

மிக சிறந்த; மன மகிழ்வூட்டக்கூடிய;உபயோக கரமான; தையல் கலையான embroidery கலை தொழில் நுட்பம் அடித்துச் சென்ற பலவற்றுள்ளும் நாம் இழந்து போன அழகியல் கலை எனில் மிகையில்லை.

கூடவே பின்னல் வேலைப்பாடுகள் கொண்டமைந்த கதிரைகளும் குறைந்து மெத்தைக் கதிரைகள் அந்த இடத்தைப் பிடித்து வருவதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

வடிவங்களினாலும்; வண்ணங்களினாலும்; தையல் வகைகளினாலும்; நூல்களின் தரத்தினாலும்; துணியின் பருமத்தினாலும் முழு உருவம் பெறும் ஒரு சித்திரம் தைப்பவரின் கற்பனைக்கும் அழகியல் உணர்ச்சிக்கும் தெரிவு செய்யும் பொருள் நிறம் போன்ற வகைப்பாட்டுக்கும் ஏற்ப தனித்துவமான இயல்பினைப் பெறும்.

ஒரு ஓவியம் தீட்டுவதைப் போல; நூலினாலும் ஊசியினாலும் வடிவம் பெறும் இக் கலை இன்றய நட்களில் எல்லாம் சீண்டப்படாத / தேடப்படாத ஒரு தேவதையைப் போல ஒதுங்கிப் போய் இருக்கிறது....

அது ஒரு சோகமான நிகழ்வே....

எனக்கும் கூட மிகக் களிப்பூட்டும் மிகப் பிடித்தமான இத் தையல் கலை அண்மையில் ஊருக்குச் சென்றிருந்த சமயம் மீண்டும் புத்துயிர் பெற்று விட்டது.

வவுனியாவில் என் சின்னம்மா வீட்டுக்குச் சென்றிருந்த போது சுமார் 50 வருடங்கள் பழமை வாய்ந்த பின்னல் (பிரம்புப் பின்னல்) வேலைப்பாடுகள் கொண்டமைந்த கதிரைகளையும் முதிரை மரத்தில் செய்த ஸ்ரூல்களும் சிறு தேநீர் மேசையையும் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன். ஆனால் அதற்குப் போட்டிருந்த கதிரைச் சீலைகளும் மேசை விரிப்புகளும் பெயின்ற் வேலைப்பாடுகளைக் கொண்டமைந்திருந்தது சற்றே உறுத்த, ’ஏன் அன்ரி, இப்ப நீங்கள் தைக்கிறதில்லையோ’ என்று கேட்டேன். ’இப்ப ஆர் பிள்ள தைச்சு மினைக்கெடுறது. அதுக்கு நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை’ என்றார்.’நான் தைச்சுத் தரட்டோ அன்ரி’ என்று கேட்டேன். மிகச் சந்தோஷமாக துணி வாங்கித் தந்தார்.

ஒரு வெறியைப் போல அது என்னை ஆட்டிப் படைக்க, இப்ப எத்தனையோ வேலைகளைப் பின் போட்டுவிட்டு தைத்துக் கொண்டு இருக்கிறேன்....

அதன் ஆழமான நுட்பங்களை அதன் விளைவாக மிளிரத்தக்க அழகியலை கற்க எனக்கு வாய்ப்பு வரவில்லை. 6,7,8ம் வகுப்புகளில் கறற அடிப்படைக் கைததையல்களினால் நான் செய்து கொண்டிருக்கும் சிறு பிள்ளை வேளாண்மை இது....

சும்மா ஒரு ஆசையில்...உங்கள் பார்வைக்கும் அவை...

தையல் ஊசிகள்; பல திணுசுகளில்

தையல் ஊசியில் நூல் கோர்க்கும் உத்திக்கான நுட்பம்
அழகிய நூல் வெட்டும் கத்திரிக் கோல்

பலவண்ண நூல்கள் பட்டிலும் பருத்தியிலுமாக...

களி நூல்கள் பல திணுசுகளில்... பட்டிலும் அவை உண்டு.








கமறா பிடித்து வைத்த ஒரே நேரம் இரு வேறு வண்ணம். 









பூக்களின் நடுவே வெற்றிடம் காண்க...

வெற்றிடம் மஞ்சளால் நிரம்பியுள்ளது இங்கே...


இது ஒரு வித மினுங்கும் பெல்ஜிய நாட்டு நூல் வகையால் தைத்தது...நேரிலே அதன் தோற்றப்பாடு வேறு விதம். கமறாவால் அதனைக் கைப்பற்ற முடியவில்லை...

பூரணமாகுமுன்...

பூரணமான பின்...



பிற் குறிப்பு: குகுள் இமேஜ் இனுள் தைக்கத் தக்க வடிவங்களும் புற உருவங்களும் ஏற்கனவே சர்வதேச நாடுகளில் இருந்து தைத்தவர்களின் கைவண்ணங்களுமாக அவை ஒரு தனி உலகமாக விரிகின்றன....





அழகிய இந்த நுட்பமானதும் அழகியதும் மன மகிழ்ச்சியைத் தர வல்லதுமான  embroidery கலை மன உழைச்சல்கள் நிறைந்த வாழ்க்கையில் இருந்து சில மணித்துளிகள் தப்பி தம்மைப் புத்துணர்ச்சியூட்டி மீள நல்ல மருந்துமாகும். 

No comments:

Post a Comment