Wednesday 22 November 2017

OZ தமிழ் பிள்ளைச் செல்வங்களுக்காக...

நோக்கமும் அறிமுகமும்

இங்கு மாத்திரமல்ல; சர்வதேசமெங்கும் தமிழ் பிள்ளைகள் அந் அந் நாட்டு மொழிகளையும் கலாசாரங்களையும் பேணிய படிக்கும் தாம் பிறந்த தாய் நாட்டின் பிரஜைகளாகவும் வாழ்ந்த படிக்கு தம் மூதாதையரின் ஏதோ ஒரு வேரின் அம்சமொன்றைத் தாங்கிய படிக்கும் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிள்ளைகளின் பெற்றோரின் வயதெல்லைகளுக்குள் இருக்கிற மத்திய வயதைத் தாண்டியவர்கள்; புலம்பெயர்ந்து 25, 30 வருடங்களை புலங்களில் கழித்தவர்கள் கூட மீண்டும் தாயகம் போகும் போது பல விடயங்கள் புதிதாகவும் புலங்களில் காண முடியாத அதே நேரம்  நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கிற அம்சங்களைக் கொண்டனவாகவும்  மேலும் சில காலங்களால் அழிந்து போய் விட்ட;  மாற்றங்களால் உள்வாங்கப்பட்டனவாகவும் போய் விட்டன.

அவைகள் வாழ்வியல் கோலங்களாக ஒரு காலத்தில்  இருந்து பின் மருவியவை.அன்றேல் மாற்றங்களுக்கு உள்ளானவை; அல்லது இல்லாதொழிந்து போனவை.

நம் எதிர்கால சந்ததியினருக்கு; நம் பிள்ளைகளுக்கு இத்தகைய பொருள்கள் ஊடாக ஒரு பண்பாட்டை அடையாளம் காட்ட முற்படும் முயற்சி இது.

சென்ற மாதம் தாயகம் போய் வந்த போது எடுத்து வந்த ஒரு சில டிஜிட்டல் புகைப்படங்கள் நம் பிள்ளைகளுக்கு நம் தாயகத்தின் ஒரு கால கட்ட வாழ்க்கையை; தம் மூதாதையரின் வாழ்வியலை; பேசும் மொழியின்றி; வாசிக்க வேண்டிய கட்டாயமின்றிப்; புரிய வைக்கும் என்ற நம்பிக்கையோடு அவைகளை இங்கு நம் எதிர்கால சந்ததிக்காகப் பதிவேற்றுகிறேன்.
............................................
13.12.2017
பின் இணைப்பு;

மேலும் பல புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன.மெல்போர்னில் இருந்து வெளியான
1.சிசு நாகேந்திரா அவர்களின் ‘அந்தக் காலத்து யாழ்ப்பாணம்’
2. பேரா. சிவலிங்கராஜா அவர்களால் வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணப் பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும்’
3. பேரா. புஷ்பரட்னம் அவர்களால் பதிப்பிக்கப் பட்ட ‘யாழ்ப்பாண வாழ்வியல்’
4.Prof. Pushparadnam 'Tourism and Monuments'
5. மற்றும் சுவிஸ் நாட்டில் வெளியிடப்பட்ட முழுக்க முழுக்க புகைப்படங்களின் தொகுப்பாக அமைந்துள்ள ‘ஈழத்தமிழர் மரபுரிமைச் சின்னங்கள்’

ஆகியனவும் பார்க்கத் தக்கன. மேலும் சில இணையத் தளங்களும் இது குறித்த பல தகவல்களையும் புகைப்படங்களையும்  கொண்டமைந்தனவாக உள்ளன.

www.akshayapaathram.blogspot.com  என்ற என் மற்றய பதிவேட்டில் ‘கண்டறியாத கதைகள்’ என்ற தலைப்பில் கடந்த சில வருடங்களாக சில விடயங்களைப் பதிவேற்றியிருந்தேன். அவை நம்முடய காலத்தில் காலாவதியாகிப்போனவை என்ற ரீதியில் பார்க்கப் பட்டவை.

அண்மையில் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பின் கண்ட, கேட்ட பல விடயங்கள் இன்றும் புழக்கத்தில் இருக்கின்ற போதிலும்; வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகளுக்கு அவை புதிதானதாக; புதினமானவையாக அமைந்திருக்கும் என்பதை உணர முடிந்தது. அதனால் அந்த ஒரு வாழ்க்கை முறையை நம் பிள்ளைகளுக்கு முடிந்த வரை காட்சிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

இருந்த போதும் இவைகள் முழுமையானவையாக இல்லை என்ற குறைபாடு நிச்சயமாக உண்டு. சந்தர்ப்பங்கள் வருகின்ற போது அவைகள் மேலும் மேலும் மெருகேற்றப்படும்.

ஒரு போதும் எதுவும் பூரணமாக ஒரே தடவையில்  அமைந்து விடுவதில்லை. பதிவேற்றப் புகுகின்ற பொழுதுகளில் அத்தகைய குறைபாடுகள் வெகு தூக்கலாகப் புலப்படுகின்றன.......




No comments:

Post a Comment