Wednesday 22 November 2017

தையல் இயந்திரம் - 2 -

நம் புலம்பெயர்ந்த மண்ணில் பிறந்த பிள்ளைகளாகிய உங்களுக்கு தையல் இயந்திரம், தையல்கலைகள், அதற்கான உபகரணங்கள், வகைப்பாடுகள் குறித்து அதிகம் பரீட்சயம் இருக்காது என்று எனக்கொரு எண்ணம்.

சில பிள்ளைகளுக்குத் தெரிந்திருக்கவும் கூடும்...

அது ஓர் அழகிய மனதுக்கு இதம் தர வல்ல, மகிழ்வூட்டக் கூடிய ஒரு கலை.

இன்றய நேர அவகாசமின்மை, மிக விரைவான வாழ்க்கை ஓட்டம், இராட்சத இயந்திரங்கள் அந்த வேலைகளை சொற்ப நேரத்தில் செய்து முடிவுப்பொருளாக்கி விடும் காரணங்கள், பிரபலமாகிப் போய் விட்ட ready made ஆடைகள் உலகம்  போன்ற இன்ன பிற அந்த அழகியல் சார்ந்த கற்பனைக்கும் அழகியலுக்கும் ஒருவரது குண இயல்பைப் பிரதி பலிக்க வல்ல பாங்குக்கும் ஓரளவு முற்றுப்புள்ளி வைத்து விட்டதென்றே சொல்ல வேண்டும்.

சுமார் 70, 80 வருடங்களின் முன்னால் கைகளினால் இயக்கும் தையல் இயந்திரங்கள் இலங்கையில் பிரபலமாக இருந்தன. காலப்போக்கில் அவை கால்களினால் இயக்கப் படும் இயந்திரங்களாக இலகுவாக்கப் பட்டன. singer என அழைக்கப்படும் தையல் இயந்திரங்கள் அந் நாட்களில் மிகப் பிரபலமாக அநேகமாக எல்லார் வீட்டிலும் ஓர் அத்தியாவசியப் பொருள் போல விளங்கின. தற்போது மின்சாரத்தினால் இயக்கப் படும் தையல் இயந்திரங்கள் பாவனைக்கு வந்துள்ளன.

வர்த்தக வாணிப நிலையங்களில் ஆடைகளை விலைக்கு வாங்க பண பலம் இடம் தராதவர்கள் துணிகளைக் கடைகளில் வாங்கி தம் வீட்டிலோ, தெரிந்தவர் வீடுகளிலோ கொடுத்து சட்டைகளையும் பாவாடைகளையும் என தமக்கான ஆடைகளை தைத்துக் கொண்டார்கள்.

பண்டிகைகள், மற்றும் கலாசார கொண்டாட்ட காலங்களின் போது இவ்வாறு தைக்கப் படும் ஆடைகளுக்கும் அவற்றைத் தைத்துக் கொடுப்பவர்களுக்கும் முதல் நாள் இரவு உறங்காத இரவாகவே இருக்கும். மாணவக் காலங்களில் சீருடைகளும் இவ்வாறு வீடுகளில் தைக்கப்பட்டவை தான்.




 ( புகைப்படங்கள் கொழும்பில் உள்ள சினேகிதி ஒருவரின் வீட்டில் 5.10. 17 அன்று எடுத்தது. இந்தத் தையல் இயந்திரம் சற்றுப் பிற்பட்ட காலத்தது. அழகியல் வேலைப்பாடுகள் செய்யத்தக்க தையல் இயந்திரம். புகைப்படம் யசோதா.பத்மநாதன் )

கைத்தொழில் வாணிபமாகவும் அது பிரபலம் பெற்று விளங்கியது. தையல் காரர்கள் ஆண்களின் ஆடைகளையும் பெண்களின் சேலைகளுக்கான ரவிக்கைகளையும் பிள்ளைகளின் பிறந்த நாள் ஆடைகளையும் தைத்தார்கள். இன்றும் ஆங்காங்கே இத்தகைய தையல் காரர்கள் பிரபலமாக விளங்குகிறார்கள். இந்தியாவில் இன்னும் பிரபலமாக அவர்கள் விளங்குகிறார்கள்.

தலையணை உறைகள், மேசைச் சீலைகள், கதிரைச் சீலைகள் போன்றன இன்னொரு வகையான தையல் கலை சார்ந்து இன்னொரு வித அழகியலைப் பறைசாற்றும் அம்சமாக விளங்கின. ( இதனை அடுத்து அந்தப் பதிவு இடம் பெறும்)

இத்தகைய இயந்திரங்களால் துணிகளினால் ஆன ஆடைகள் வடிவமைக்கப் பட்டன. பிற்காலங்களில் துணிகளில் வண்ண நூல்களினால் அழகுக்காக பல வேலைப்பாடுகளைச் செய்யவல்ல இயந்திரங்கள் உருவாக்கப் பட்டன. வேறு வேறு நாடுகள் வேறு வேறான முறை வகைகளிலும் தையல் இயந்திரங்களை உருவாக்கின.

புலம் பெயர்ந்த பின் பிறந்த பிள்ளைகளுக்கு இத்தகைய தையல் இயந்திரங்கள் புதுசு தானே....

அவுஸ்திரேலியாவில் Parramatta நகரில் அமைந்திருக்கிற Brislington Madical And Nursing Museum இல் அவுஸ்திரேலிய குடியேற்ற காலத்தில் பாவ்விக்கப் பட்ட அமெரிக்கப் பாணியிலான காலினால் இயக்கப் படும் தையல் இயந்திரம் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கிறது.






....இப்புகைப்படம் 17.6.17 அன்று எடுக்கப்பட்டது.


No comments:

Post a Comment