Sunday 17 December 2017

மண்வெட்டி / கோடாலி / அலுவாங்கு - 11 -


 இலங்கையின் வட பகுதியில் பல்வேறு வகையான மண்வெட்டிகள் பாவனையில் உள்ளன.மரப்பிடியோடு இணைத்து கவனமாக உரியவரிடம் கொடுத்து இணக்கப்படும் இத்தகைய மண்வெட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான தேவைகளுக்குப் பயன் படுவன. இன்றும் பயன்பாட்டில் உள்ளவையும் கூட.
தோட்ட மண்வெட்டி

தோட்ட மண்வெட்டி; நெருங்கிய தோற்றம்.

தோட்ட மண்வெட்டி; முழுமையான தோற்றம்

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள மண்வெட்டிகள் தோட்ட மண்வெட்டி என அழைக்கப் படுவன. அடிப்புறம் அகலமாகவும் முன்னால் வர வர ஒடுங்கியும் வரும் வடிவில் அமைக்கப்படும் இவ்வகை மண்வெட்டிகள் வாய்க்கால் அமைக்க, அகலமாகவும் அதே நேரம் ஆழமாகவும் மண்ணை வெட்ட என பல வகை தோட்ட தேவைகளுக்குப் பயன் படுவன.
ஆழமாய் மண்ணைக் கொத்தும் மண்வெட்டி
மண்வெட்டி; இன்னொரு தோற்றம்
மண்வெட்டி; நெருங்கிய தோற்றம்

மேலே காட்டப்பட்டுள்ள வகையிலான மண்வெட்டிகள் ஆழமாக மண்ணை வெட்டிப் பண்படுத்த பயன் படுவன. அகலமான கூரான பகுதி தட்டையாக முன்னோக்கி அமைந்திருக்கத் தக்கவாறு  இவை அமைந்திருக்கும். இரும்பு முனைகளையும் மரத்தாலான பிடியினையும் கொண்டமையும் இவ்வகை மண்வெட்டிகள் பல அளவின; பல தரத்தின.ஒரளவு கனமானவையும் கூட. ஓங்கி உயர்த்தி பின் மண்ணை நோக்கி அழுத்தத்தோடு தாழ்த்தி ஈரமண்ணை வெட்டும் போது மண்ணின் ஆழம் வரை மண்வெட்டி சென்று மண்ணைப் புரட்டிப் போடும்.
மண்வெட்டியில் ஒட்டியுள்ள மண்ணை நீக்கும் சாதனம் (மண்சுரண்டி)
மண்சுரண்டி; முன்புறத் தோற்றம்

மண்சுரண்டி; பக்கவாட்டுத் தோற்றம்

மேலே காட்டப்பட்டுள்ள மண்சுரண்டிகள் மண்வெட்டிகளில் ஈரத்தோடு ஒட்டி இருக்கும் மண்ணைச் சுரண்டி மண்வெட்டியைச் சுத்தம் செய்யப் பயன் படுவன.
சாரம் உடுத்தி மண்வெட்டும் கமக் காரன் தன் சாரத்தின் பின் புறமாக இச்சாதனத்தில் இருக்கும் கொழுவி போன்ற பகுதியினால் தன் சாரத்தில் இதனைக் கொழுவி வைத்த படி மண்ணைப் பண்படுத்துவான். ஈர மண்ணில் ஒட்டிக் கொள்ளும் மண் தொடர்ந்தும் கொத்துவதற்கு இடைஞ்சலாய் இருக்கின்ற போது பின்புறம் கொழுவி வைத்திருக்கும் இக்கருவி மூலம் மண்ணினைச் சுரண்டி மண்வெட்டியைச் சுத்தமாக்கும் அச் சந்தர்ப்பத்தில் சற்ரு நேர ஓய்வும் அவ் உழைப்பாளிக்குச் சித்திக்கும். 

சிறிதளவான அந்த ஓய்வும் சுத்தப்படுத்தப்பட்ட மண்வெட்டியும் மீண்டும் உத்வேகத்தோடு வேலை செய்ய  தூண்ட மீண்டும் மிடுக்கோடு தொடங்கும் வேலை.

பெரிய மற்றும் சிறிய வகை மண்வெட்டிகள்

மண்வெட்டிகள்; முன் புறத் தோற்றம்

மண்வெட்டிகள்: நிலைக்குத்தாக

மண்வெட்டிகள்; கரைப் புறமாக

மேலே காட்டப்பட்டிருப்பதும் சிறிய ரக மற்றும் பெரிய ரக மண்வெட்டிகள்...மேலே காட்டப்பட்டுள்ள அனைத்துப் புகைப்படங்களும் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள சிற்றூரான வீமன் காமம் பகுதியில் ஒளிப்படம் எடுக்கப்பட்டது.
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
எடுத்த திகதி: 11.10.2017.

அகல மண்வெட்டி

அகல மண்வெட்டி நேர்வளமாக

மேலே காட்டப்பட்டிருக்கும் மண்வெட்டிகள் அகல மண்வெட்டிகள் என அழைக்கப்படுபவை. அகலமாகவும் ஓரளவு ஆழமாகவும் மண்ணை வெட்டவும் புல் வகைகளை செருக்கவும் பெரும்பாலும் பயன் படுபவை இந்த ரக மண்வெட்டிகள். பரவலான பாவனையில் வீட்டிலும் தோட்டத்திலும் காணப்படும் இந்த வகை மண்வெட்டிகள் இன்றும் பாவனையில் உள்ளவை.

இந்த அகல மண்வெட்டி இணுவில் இலுள்ள ஸ்ரீ காந்தலக்ஷ்மி அவர்களின் இல்லத்தில் கண்ட போது எடுக்கப்பட்டது. ஒளிப்படம்; யசோதா.பத்மநாதன். எடுத்த திகதி:17.10.2017

கோடாலியும் கைக்கோடாலியும்

கைக்கோடாலி

கோடாலி

மெலே காட்டப்பட்டிருப்பவை கோடாலி வகைகள். ‘குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பே’ என்ற தமிழர் வாழ்வில் வழங்கி வரும் இம் மரபுச் சொற்தொடர் ஒன்றே இதன் பயன்பாட்டை விளக்கப் போதுமானதாக இருக்கும் என்பது என் அனுமானம். 

மெல்லிய கூரான முன்னோக்கிப் பார்த்திருக்கும் தன்மையில் அமைந்த இவ்வகை ஆயுதங்கள் மரப்பிடி போட்டு மரங்களை வெட்டப் பயன் படுவது. மரமே மரத்துக்கு எதிரியாக போவதால் இந்த மரபுத் தொடர் புழக்கத்துக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மரப்பிடி இல்லாது இவ் ஆயுதத்தினால் மரத்தை வெட்டப் பயன் படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்த ஒன்றே!

இதில் காட்டப்பட்டிருக்கும் கைக் கோடாலிகள் ( கோடரி என அழைக்கப்படுவதும் உண்டு ) குந்தி இருந்து பனம் பாளைகள் மற்றும் சிறிய ரக கடின பொருட்களை வெட்டப் பயன்படுவன.

கோடாலிகள்; ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
எடுக்கப்பட்ட பகுதி; வலிகாமம் வடக்கு, வீமன் காமம்.
எடுக்கப்பட்ட திகதி: 11.10.2017.


அலுவாங்கு
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
இடம்: வவுனியா: வைரவபுளியங்குளம்.
எடுத்த திகதி:21.10.2017.

அலுவாங்கு; வேறுவகை

அலுவாங்கின் ஒரு முனை

அலுவாங்கின் மறுமுனை

மேலே காட்டப்பட்டிருக்கிற அலுவாங்கு;
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
எடுக்கப்பட்ட இடம்: வலிகாமம் வடக்கு, வீமன்காமம்.
எடுக்கப்பட திகதி: 11.10.2017.

அலுவாங்கு; வேறொரு விதம்
மேலே காட்டப்பட்டிருக்கிற அலுவாங்கு
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.
எடுக்கப்பட இடம்; மாவிட்ட புரம்.
எடுத்த திகதி: 11.10.2017.


அலுவாங்கு

மேலே காட்டப்பட்டிருக்கும் அலுவாங்குகள் கூட பல அளவின; பல தரத்தின; பல வடிவின. கூரான அடிப்புறத்தைக் கொண்டிருக்கும் அலுவாங்குகள் ஆழமான துளைகளை மண்ணில் இடப் பயன் படுபவை. குறிப்பாக வேலி அடைக்கும் போது கதியால்கள் ஊன்ற உதவுவன. குழிகளில் கதியால்களை  இதன் துணை கொண்டு இலகுவாக ஊன்றிவிட முடியும்.

ஓரளவு கனம் கொண்ட இவ்வகை அலுவாங்கினை இருகைகளினாலும் பிடித்து மேலே உயர்த்தி பலமாக மண்ணில் குத்துவதன் மூலம்  ஒடுக்கமான ஆழமான குழியினை ஏற்படுத்த இயலும். மேலும், ஆழம் வேண்டின் மீண்டும் ஒருதடவை அலுவாங்கை உயர்த்தி அதே குழி மேல் மீண்டும் பதிக்கின்ற போது ஆழம் இன்னும் அதிகமாகும்.

மறுபுறம் இருக்கும் அகன்ற மெல்லிய பகுதி சிறிய ஆழமான சதுரக் குழிகளை உருவாக்கப் பயன் படுபவை.நாலு புறமும் சதுரமாக மேற்கூறிய வகையில் மண்ணில் ஆழமான குழிகளை இலகுவாக உருவாக்க இயலும்.

பிளந்த நுனியினைக் கொண்டிருக்கும் அலுவாங்குகளும் இன்றும் பரவலாகப் புளக்கத்தில் இருப்பவை. அவை குறிப்பாக கம்பி வேலிகள் போடப்படும் போது  கம்பியினை இறுக்குவதற்கு சிறந்த இணக்க சாதனமாகும்.

பிளவு பட்டிருக்கும் இடத்தினூடாக முள்ளுக் கம்பியினைச் செலுத்தி கொங்கிறீற் தூண் இனை முட்டுக் கொடுத்து எதிர் புறமாக அலுவாங்கினைத் திருப்புவதன் மூலம் முள்ளுக் கம்பி மிகச் சிறந்த இறுக்கத்தை பெறும்.  பின்னர் கொங்கிறீற் தூணும் கம்பியும் இணையும் இடத்தில் ’ப’ (பானாணி) வடிவ ஆணியினைச் சுத்தியலால் அடிப்பதன் மூலம் அதன் நிரந்தரத் தன்மை உறுதிப்படுத்தப் படும்.

குறிப்பாக முள்ளுக் கம்பி வேலி அடைக்க மிகச் சிறந்த பயன்பாட்டுச் சாதனம் இந்த அலுவாங்கு.

வேலிகளை அடைக்கப் பயன் படும் இன்னொரு சாதனம் குத்தூசி. இது நீண்டு விட்டதன் காரணமாக அது மறு பதிவில்.......



No comments:

Post a Comment