 |
யாழ்ப்பாணக் கமக்காறன் |
’ மப்பின்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது; காளை இழுக்காது;
எனினும், அந்தப்
பாறை பிளந்து பயன் விளைவிப்பான்
என்னூரான்..............’
எனத் தொடங்கும் மகாகவியின் கவிதை யாழ்ப்பண மண்ணையும் விவசாயத்தையும் சொல்ல போதுமாக இருக்கும். விவசாயியை கமக்காறன் என அழைப்பதும் விவசாய நிலத்தை கமம் என அழைப்பதும் யாழ்ப்பாண மண் வழக்கு.
யாழ்ப்பணத்துக் கிராமங்களில் அநேகமாக அனைத்துக் கிராமங்களும் ஓரிரு கோயில்களையேனும் கொண்டிருப்பதோடு மனித முயற்சியால் விளைந்த செழிப்பையும் கொண்டிருப்பதை இன்றுவரை அங்கு காணலாம்.
இம்மக்கள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்குவதாக இருக்கிறார்கள் என்ற பொதுவான அபிப்பிராயம் வளர; உண்மையென உணர இம் மண்ணில் அவர்களின் விவசாயத்துக்கான பிரயத்தனங்கள் ஒரு முக்கிய காரணம். தென்பகுதிகளைப் போல ஆறுகள், குளங்கள், வளங்கள் இல்லாத காரணத்தால் மக்கள் கல்வி ஒன்றையே தம் வாழ்வின் உயர்வுக்கான ஒரே வழியாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பொன்றும் இல்லை. மறு வளமாக இருந்த ஒரே ஒரு வழி விவசாயமே. அது கடினமான உழைப்பை வேண்டி நிற்கும் ஒன்றெனினும் இன்று வரை விவசாயத்தை ஈடுபாட்டோடும் விருப்போடும் செய்து வரும் கமக்காரர் அநேகர்.
யாழ்ப்பாணத்து மண் செம்மண். வரண்ட பூமி. அங்கு விளைவன சிறு போகப் பயிர்கள். அதாவது வெங்காயம், தக்காளி, மரவள்ளி, ராசவள்ளி, வாழை, புகையிலை, வெற்றிலை போன்றவை. குளங்கள் இல்லாத மண்ணில் கமக்காரனுக்கு வேலை அதிகம். மழையினையும் கிணறுகளையும் நம்பிய விவசாயம் என்பதால் அதனால் முயற்சியும் பிரயத்தனமும் பிரயாசையும் அதிகம் வேண்டப்படுவன.
மாடு ஆடு போன்ற கால்நடைகளின் எருக்களும் மனித வலுவிலும் கிணற்று நீரிலும் விளையும் மரபு வழி விவசாயம் என்பதால் வட பகுதி விவசாயப் பொருள்களுக்கு தென்பகுதியிலே மவுசு அதிகம். ருசியும் அதிகம்.
மாம்பழம் பலாப்பழம் விளம்பழம் வாழைப்பழம் போன்ற கனி வர்க்கங்களும் சுவையிலும் தரத்திலும் தனித்துவமானவையே. இரசாயணங்கள் கலக்காததனாலும் மண்ணின் வளத்தினாலும் காலநிலை வேறுபாட்டினாலும் போடப்படும் இயற்கைப் பசளைகளினாலும் அவை இத்தகைய சுவையை பெறுகின்றனவாகலாம்.
ஆடு, மாடு, கோழி, நாய் என அவர்களால் வளர்க்கப் படும் உயிரினங்களும் அவற்ரினுடனான அவர் தம் சினேகிதமும் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகளில் இருந்தும் பராமரிப்பில் இருந்தும் முற்றாக வேறு படுவனவும் ஆகும்.
அங்குள்ள உயிரினங்கள் சுதந்திரமும் அதே வேளை பயன்பாட்டுக்கும் உரியனவாக இருப்பதோடு வேறுபட்டதான ஒரு கவனிப்புக்கும் உரியனவாக இருக்கின்றன.
மாடுகள் எருவுக்கும் உழவுக்கும் பாலுக்கும் பயன்பட ஆடுகள் பாலுக்கும் உணவுக்கும் பயன் பட, நாய்கள் பாதுகாப்புக்காக வளர, கோழிகள் இயற்கையாக மேய்ந்து முட்டைகளைத் தர... என அங்குள்ள விவசாயியின் வாழ்வு மண்ணோடும் பயிரோடும் மட்டும் நின்று விடாது வாய் பேசா ஜீவன்களின் புரிந்துணர்வோடும் உதவி ஒத்தாசைகளோடும் வளருவது ஒரு சிறப்பு. அதே நேரம் இத்தகைய வாய்பேசா ஜீவன்கள் மேல் அவர்கள் காட்டும் காருண்யமும் அக்கறையும் கவனிப்பும் கூட விதந்து பேசத்தக்கது. விரிவுக்கஞ்சி அவற்றை ஒரு நிகழ்ச்சியைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளுகிறேன்.
நாட்டில் வளமை நிலை திரும்பியதற்குப் பிறகு போரினால் புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாயகம் திரும்பினார். திரும்பிய போது பொருளாதாரவளமும் வெளிநாட்டு கற்றல் வளங்களையும் கொண்டவர்களாகத் திரும்பினர். அத்தகைய தொழில்சார் கல்வி வளத்தை சொந்த மண்ணில் பரீட்சார்த்த முயற்சியாக ஈடுபட விளைந்தனர். அந்த வகையில் வலிகாமம் வடக்கில் ஓர் இயற்கை முறை விவசாயம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டது. நிலத்தடி நீர் குறைந்து கொண்டு போவதை முன்நோக்காகக் கொண்டு குறைந்தளவு நீரில் செய்யப்படும் விவசாயமாக அது அறிமுகப்படுத்தப் பட்டது. குளாய்களில் வேரடிக்கு மட்டும் பாய்ச்சப்படும் நீரினால் தேவையற்ற நீரின் பாவனை குறைக்கப் படுகிறது என்றும்; வளர்க்கப் படும் மாடுகளுக்கு புல்லுக்குப் பதிலாக............... போடுவது சிறந்தது என்றும் சொல்லப் பட்டது.
மாடுகள் கொட்டிலில் படுத்துக் கிடந்தன. உணவு அதன் இருப்பிடம் தேடி வந்தது. எழுந்து உண்பதும் படுத்து இரைமீட்பதுமே அதன் வேலையாகிப் போய் சிறந்த பாலை அது நல்கியது. தறைகள் காய்ந்து போயிருந்தன; புற்கள் இறந்து போயிருந்தன. பயிர் மரங்கள் மட்டும் செழித்து வளர்ந்திருந்தன.
நான் அண்மையில் அங்கு சென்றிருந்த போது அங்குள்ள விவசாயி ஒருவரிடம்’ அது நல்லதல்லவோ, நீங்கள் ஏன் அப்படி ஒன்றை முயற்சி செய்யக் கூடாது என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் கீழ் வருமாறு.’ மாடு நடமாட வேண்டும் நடந்து திரிய வேண்டும். தனக்குப் பிடித்த புல்லை அது தின்ன வேண்டும். அது அதனுடய சுதந்திரம்; உரிமை. அது தனக்குப் பிடித்ததை தின்ன விடுவது என்பது அதற்கான ஓர் அடிப்படை உரிமை. அதற்கு உரிய நேரத்துக்கு தண்ணீர் கொடுப்பது; மாற்றிக் கட்டுவது என்பதினூடாக அதனோடு நமக்கான பந்தமும் அதற்கு நம்முடனான ஒட்டுறவும் பலம்பெறுகிறது. ‘அவை நமக்கு பயன் தருகின்றன; நாம் அதற்குப் பிரதியுபகாரமாக இவற்றைச் செய்கிறோம் என்ற ஆறுதல் உணர்வு ஓர் விவசாயிக்கு வருகிறது.
தண்ணீர் வாய்க்கால் வழி ஓட வேண்டும். புல்லுக்கும் ஆங்கே பொசிய வேண்டும். அந்தப் புல்லை மாடு சுதந்திரமாக மேய வேண்டும். அதன் சாணமும் கோசலமும் தறையில் விழ வேண்டும்; அவை தானாக உக்க வேணும். அவைகளே தறைக்கான உயிர் சத்துக்கள். சத்துக்கள் நிறைந்த அத் தறையில் இருந்து உணவுப் பயிர்கள் விளைவிக்கப் பட வேண்டும். அதில் இருந்து வரும் பாலும் உணவுமே உன்னதமானது; உத்தமமானது.
வெளி நாட்டில் இருந்து வருவோர் மாடுகளை நடக்க பண்ணாமல் இருந்த இடத்தில் உணவை இடுவதிலும்; வேருக்கு மட்டும் நீரைப் பாய்ச்சுவதிலும் எனக்கு உடன் பாடில்லை; உடன்பாடே இல்லை. அவர்கள் இங்கு வந்து பொறுப்பற்ற விதமாக நடக்கிறார்கள்; மனிதத்தன்மையை மறுக்கிறார்கள்; நஞ்சுகளை விதைக்கிறார்கள்; அறிமுகப்படுத்துகிறார்கள் ‘ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அது யாழ்ப்பாணத்துக் கமக்காறன் ஒருவரின் குரல்!
ஆரம்பத்தில் குறிப்பிட்ட மகாகவியில் கவிதை முடியும் போது இவ்விதமாக முடியும்.
‘ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி பற்றி
அதோ பார், பழைய படி கிண்டுகிறான்,
சேர்த்தவற்றை முற்றும்
சிதற வைக்கும் வானத்தைப்
பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்.
வாழி!
அவன்,
ஈண்டு முதலில் இருந்தும் முன்னேறுதற்கு
மீண்டும் தொடங்கும் மிடுக்கு!’
 |
நீர் இறைக்கச் செல்லும் கமக்காறன்( விவசாயி) |
கீழே வரும் இப்புகைப்படங்கள் வலிகாமம் வடக்கில் உள்ள ஒரு கோயில் சார்ந்த விவசாயக் கிராமத்தை உங்கள் கண் முன் கொண்டு வரக்கூடும்.
 |
நீர் இறைக்கும் இயந்திரம் |
 |
நீர் இறைக்கும் இயந்திரம் |
 |
வாய்க்கால் வழி தண்ணீர் ஓடிய தடயம் |
 |
தண்ணீர் ஓடிய தடயம் - அண்மைய பார்வை |
 |
வாழைத் தோட்டம் |
 |
நீர் இறைக்கப் பட்ட வாழைத்தோட்டம் |
 |
காலை நேர வெய்யிலூடே....வாழைத்தோட்டம் |
 |
கிணறு |
 |
துலா இருந்த தடயம்.... |
 |
புதிய கிணறு |
கப்பிகள் என அழைக்கப் படுபவை சிறிய அளவில் வீட்டுத் தேவைகளுக்குத் தண்ணீர் எடுக்கப் பயன் படும் சாதனமாகும். உருளும் தன்மை கொண்டிருக்கும் இச் சக்கர வடிவிலே மத்தியில் கயிறினைக் கோர்த்து ஒரு மூலையில் வாளியைக் கட்டி கீழே இறக்கி கயிறை இழுப்பதன் மூலமாக தண்ணீர் பெறப்படுகிறது.
அண்மைய காலங்களில் பெரும்பாலான வீடுகளில் மோட்டர் இயந்திரத்தினால் தண்ணீர் தொட்டிக்குள் நிரம்பி விடுவதன் மூலம் குளாய்கள் மூலமாக மக்கள் தண்ணீரை வீட்டுப்பாவனைக்குப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அதனால் மரபு வழியாகப்; பாரம்பரியமாகத் துலா மற்றும் கப்பி மூலமாக தண்ணீர் எடுக்கும் செயல்பாடு அருகி வருகிறது. ஆனாலும் சில இடங்களில் இன்னும் பாவனையில் இருந்து வருகிறது.
இடம்: வலிகாமம் வடக்கு, வீமன் காமம்.
புகைப்படங்கள் எடுத்த திகதி: 10.10. 2017 மற்றும் 11.10.2017.
No comments:
Post a Comment