Monday 18 December 2017

சமையலறை சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் - 13 -


அரிக்கன் சட்டி

அரிக்கன் சட்டி

அரிக்கன் சட்டி என அழைக்கப் பெறும் மேற்காட்டப்பட்ட சட்டி அரிசியில் இருந்து கற்களை அகற்றப் பயன் படும் சாதனம். ”அரிசியைக் ‘கிழைந்து’ உலையில போடு” என்ற சொற்தொடர் இந்த அரிக்கன் சட்டியோடு தொடர்பு படுவது.

நெருப்பு அடுப்பில் தண்ணீர் ஊற்றி அரிசிப்பானையை கொதிக்க வைத்து விட்டு இந்த அரிக்கன் சட்டியில் தேவையான அளவு அரிசியை எடுத்து அதனுள் நீர் ஊற்றி கழுவிய பின்னர், மீண்டும் ஓரளவு - அரிசியின் மேல் ஓரிரு பங்கு தண்ணீர் இருக்கத்தக்கதாக வைத்துக் கொண்டு ஒரு வித லயத்தோடு சட்டியை ஒரு கையால் அசைத்துக் கொண்டு மறு கையால் மேலே கிழைந்து வரும் அரிசியை வேறாக்குவர். இவ்வாறு செய்கின்ற பொழுதில் - இறுதியில் அரிசியோடு சேர்ந்திருந்த கற்கள் அதன் பாரத்தின் நிமித்தம் அடியிலே தங்கும்.

சட்டியில் சிறு சிறு படிக்கட்டுகள் போல அமைந்திருக்கும் தன்மை பாரமான கல்லை கீழே வைத்திருக்க உதவும். கிழையப்பட்ட அரிசியை கொதிக்கும் உலைக்குள் போட்டு கஞ்சி வடித்தோ / வடிக்காமலோ சோறாக்குவது வழமை.

கஞ்சி வடித்தால் அக் கஞ்சியைக் கூட வீணாக்காமல் அப்போது கறிகளுக்காக தேங்காய் திருவிய சிரட்டையினுள் கஞ்சியும் உப்பும் சிறிதளவு தேங்காய் பாலும் அவிந்து வந்த சோறில் சிறிதளவும் சேர்த்து கலக்கி குடிப்பது உண்டு.

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
இடம்: சிட்னி ( என் சகோதரியின் சேகரம்)
எடுத்த திகதி: 04.01.2017.

தோசைத் தட்டு

தோசை சுட பயன் படும் தோசைக்கல்லு அல்லது தோசைத் தட்டு என அழைக்கப்படும் இக் கருவி இன்றும் புளக்கத்திலும் பாவனையிலும் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பாவனையில் இருப்பது. தோசையை ஊற்றி மறுவளமாக திருப்பப் பயன் படும் உபகரணம் தட்டகப்பை என அழைக்கப் பெறும். அது தட்டையான மேற்பரப்பை உடையதால் அதற்கு அப்பெயர். (படம் எடுக்கத் தவறி விட்டேன்)

குண்டுத் தோசை சட்டி

குண்டுத் தோசை சுடும் இக் கலம் நல்லெண்ணையும் தாராளமாக விட்டு சுடப்படுவது. உழுந்தும் அரிசிமாவும் கலந்தரைத்த கலவையினால் ஆக்கப் படுவது. இன்றும் பரவலாக புழக்கத்தில் இருப்பது. நல்லெண்ணையை குழியினுள் விட்டு அதனுள் மாக்கலவையை கரண்டியினால் விட்டு வேக வைத்து குச்சி ஒன்றினால் புரட்டி வேக விட்டு எடுப்பர். எண்னை தாராளமாக இருப்பதால் அது ஒட்டும் தன்மை அற்று நல்லெண்ணையில் வேகி வரும்.

தாச்சி / இரும்புச் சட்டி

இரும்புச் சட்டி என்றும் தாச்சிச் சட்டி எனவும் அழைக்கப் பெறும் இச் சட்டி மா வறுக்க, பொரிக்க, கறிவைக்க என பல செயல்களுக்கும் பயன் படுவது.

சருவம்
கிடாரம்

மேலே காட்டப்பட்டிருக்கிற சருவமும் கிடாரமும் குளிப்பதற்கான சுடுதண்ணீர் வைக்க மற்றும் பெரிய சமையல்கள் செய்கின்ற போது பதார்த்தங்களை ஆக்கப் பயன் படுவது.

கிடாரம் ஒளிப்படம்: எடுக்கப்பட்ட இடம்: சண்டிலிப்பாய்.
திகதி: 13.10.2017.
சுளகு


சுளகு; இன்னொரு கோணம்
மேலே காட்டப்பட்டிருக்கும் சுளகு புடைக்க, கொழிக்க என பயன் படுவது. அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க; பதர்களை வேறாக்க; அரிசியில் இருந்து குறுனலை வேறாக்க; மற்றும் புட்டுக்கு மா குழைக்கும் போது மணி மணியாக புட்டுக்கான முடிவுப் பொருளை உருவாக்க என இதன் பயன் பாடு பலதிறப்பட்டவை.

ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சுளகுகளை வைத்திருப்பவர்கள் உண்டு.

சுளகுக்குள் இருக்கும் பொருளை மேலே உயர்த்தி கீழே இறக்கி புடைக்கும் லாவகம் ஒரு கலை. இன்றும் புளக்கத்தில் இருப்பது.
பெட்டி

கடகங்கள்

கடகம்

கடகம்
மேலே காட்டப்பட்டிருக்கும் பெட்டிகள் மற்றும் கடகங்கள் பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்ல பயன் படுவது. அதன் அளவு மற்றும் தன்மைக்கேற்ப அதன் பயன்பாட்டு இயல்புகள் மாறு படும்.

பனை வளம் நிறைந்த ஈழத்தின் வடபகுதியில் இத்தகைய பொருட்கள் பல அளவுகளிலும், பல தரங்களிலும், பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் கிடைக்கும். உணவுப் பொருட்களையும் மூடு பெட்டியில் வைத்து எடுத்துச் செல்வதுண்டு. மற்றும் புட்டு இடியப்பம் போன்ற உணவுப் பொருட்கள் சுடச்சுட இவற்றில் இறக்கி வைக்கப் படும் போது அவற்றின் சூடு இந்த பனை ஓலையின் பட்டு ஒரு வித வாசத்தை கொடுப்பதோடு அதில் அமைந்திருக்கும் நீக்கல்கள் சூட்டினை பாதகமின்றி வெளிவிடும் தன்மையால் உணவுப் பொருட்கள் தனி ஒரு தரத்தில் விளங்கும்.

இயற்கையோடு வாழ்ந்த வாழ்வியலுக்கு இது வும் ஒரு உதாரணமே!

மிகச் சிறிய கொட்டைப்பெட்டியில் இருந்து மிகப்பெரிய கடகங்கள் வரை ; அடுக்குப் பிட்டியில் இருந்து நீற்றுப் பெட்டி வரை அதன் வியாபகம் பெரிது...

இவை குறித்து மேலும் சில ஒளிப்படங்கள் அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற தலைப்பில் என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 3.1.2011 அன்று பதிவிடப்பட்டிருக்கிறது.
ஊறுகாய் ஜாடி

ஊறுகாய் ஜாடி மேற்புறத் தோற்றம்


ஊறுகாய் ஜாடியின் இன்னொரு தோற்றம்

ஊறுகாய் ஜாடியின் மூடி

மேலே காட்டப்பட்டிருப்பவை ஊறுகாய் ஜாடிகள். பின் நாளில் இவைகள் பினைந்த புளிகளை வைக்கவும் பயன் பட்டவை. இந் நாட்களில் இதன் புளக்கம் அருகியே வருகிறது.

மேலே இணைக்கப்பட்டிருக்கிற ஒளிப்படங்களெடுத்தது: யசோதா.பத்மநாதன்.
இடம்: வலிகாமம் வடக்கு, வீமன் காமம்.
திகதி: 11.10.2017.









No comments:

Post a Comment