Saturday 30 December 2017

அட்சரக் கூடு - 19 -

சிறு குழந்தைகளுக்குக் காவலுக்காக மந்திரிக்கப்பட்ட இயந்திரத் தகடு செய்து அதனை சுருட்டி ஒரு தங்க குளாயினுள் சொருகி சங்கிலியிலோ அல்லது அரைஞாண் கயிற்றிலோ கோர்த்து அணியும் / அணிவிக்கும் பொருளை அட்சரக் கூடு என்பர்.

இயந்திரத்தகடு என்பது தீய சக்திகளை விரட்டி நன்மைகளைத் தரும் என்ற நம்பிக்கையோடு மந்திரங்கள் முதலானவற்றை எழுதி உச்சாடனம் செய்து மந்திரிக்கப்பட்ட செப்புத்தகடு யந்திரம் ஆகும்.

இயந்திரம் என்பது வழிபடும் சக்கரம் எனவும் அதில் இறைவனின் ஆற்றல் குவித்து வைக்கப்படுகின்றது என்றும் நம்பப் படுகிறது. மந்திரம் என்பது உயிராற்றலையும்:  இயந்திரம் என்பது உயிரைத் தாங்கி நிற்கும் உடல் எனவும் கொண்டு மந்திரத்தின் வாயிலாக இயந்திரத்தில் உயிர் சக்தியை உருவாக்கி அத் தகட்டுக்கு சக்தி ஊட்டப்படுகிறது என நம்பப் படுகிறது.

அவை பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோகத் தகட்டில் உருவாக்கப்படுகின்றன.மந்திரித்து சக்தி ஏற்றப்பட்ட இத் தகடுகளை நுண்ணியதாகச் சுருட்டி  ஒரு குளாய்க்குள் அடைத்து அதனை இன்னொரு குளாய் கொண்டு மூடி அதனை ஒரு நூலிலோ அல்லது சங்கிலியிலோ இணைத்து கட்டிக் கொள்வதன் மூலம் தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பினையும் சுக வாழ்வினையும் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பப் படுகின்றது.

எனினும் இவற்றை அமர கிரியைகள் நடைபெறும் போது, வைத்திய சாலைகளுக்குச் செல்லும் போது, குழந்தை பிறந்து 31 நாட்கள் வரை உள்ள வீடுகளுக்குச் செல்லும் போது, பெண் பருவ கால விலக்கு வந்துள்ள பொழுதுகளில்  என சில குறிப்பிட்ட பொழுதுகளில் இவற்றை அணியக்கூடாதெனவும்: இவ்வாறு அணிந்தால் அதன் சக்தி இல்லாது போய் விடும் என்ற நம்பிக்கையும் இவற்றை அணிபவர்களிடையே உண்டு.

பண்டைக்காலம் தொட்டு இத்தகைய நம்பிக்கைகள் மக்களிடையே இருந்து வந்ததைக் காணலாம். இத்தகைய நம்பிக்கைகள் இன்றும் உலக நாடுகளிடையே உள்ள இந்து, பெளத்த, இஸ்லாமிய மதங்களைப் பின் பற்றுவோரிடையே காணப்படுகிறது.

இந்துமத பாரம்பரியத்தில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் கூட இவ்வாறான இயந்திரங்கள் உள்ளன. அத்தகைய உரு ஏற்றப்பட்ட தகட்டினை கீழே வைத்து மூடி அதன் மேல் தெய்வ விக்கிரகங்களை வைத்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்வதை இன்றும் இந்து மத ஆலயங்களில் காணலாம். அதன் மூலம் சிலைக்கு இறை சக்தி ஊட்டப்படுகின்றது என்பது அவர்களின் மரபார்ந்த  நம்பிக்கையாகும்.அதன் ஒரு சிறு கூறாகவே மனிதர்களுக்கு அணிவிக்கும் மரபு இருந்து வந்திருக்கிறது.

இஸ்லாமியர்கள் இவ்வாறான இயந்திரங்களை தாளில் எழுதிக் கொடுக்கிறார்கள்.எனினும் இஸ்லாமிய மதம் இவ்வாறான செயல்களைக் “கறாம்” அதாவது இறைவனால் விலக்கப்பட்டது - என அறிவுறுத்துகின்றது. இவற்றைச் செய்பவன் இறைவனால் நிராகரிக்கப்படுவான் என அது அறிவுறுத்துகின்றது.

திபெத், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளில் உள்ள பெளத்தர்கள் பய உணர்வைக் குறைக்க, அருள் உணர்வைக் கூட்ட, மற்றும் புத்திக் கூர்மை,பொருளாதார மேம்பாடு, அமைதியான வாழ்வு, வசீகரம் முதலான காரியங்களுக்காக மந்திர உச்சாடனங்களைச் செய்து இவ் அட்சரக் கூடுகளைக் கட்டுகின்றனர்.

ஐம்படைத்தாலி என வழங்கிய சங்க காலத்துத் தமிழருடய பண்பாட்டு வழக்கில் பாதுகப்பின் நிமித்தம் எவ்வாறு ஐந்து விதமான ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு இலட்சினையாகப் பூட்டினார்களோ;  பிற்காலத்தில் அதாவது இன்றும் அது எவ்வாறு பஞ்சாயுதம் என்ற பெயரில் பொற் சங்கிலியில் கோர்க்கப்பட்டு குழந்தையின் பாதுகாப்பிற்கான நம்பிக்கையாக இருக்கின்றதோ அதை ஒத்த விதமான ஒன்று தான் இந்த அட்சரக் கூடு என்பதுமாகும்.







இதனை மாலையாகவோ அல்லது இடுப்பில் அரைநாண் கயிற்றிலோ கோர்த்து ஆண்பாலார்க்கு அணியும் வழக்கு இன்றளவும் வடஇந்திய மொழி பேசுவோரிடத்திலும் தமிழோடு இணைந்த தெலுங்கு மலையாள மொழி பேசும் பண்பாட்டுக்குரியோரிடமும் சிங்கள மொழி பேசும் மக்களிடமும் வழக்கில் இருக்கிறது.

இது ஒரு நம்பிக்கை சார்ந்த ஆண்களுக்குரிய அணிகலனாக இருக்கும் அதே வேளை தற்காலங்களில் பெண்களும் இதை அனியும் வழக்கமும் உண்டு.

( பிற்குறிப்பு- 1.1.18.0

புலிப்பல் பதக்கம்கடுக்கண் ஆகியன ஆண்களுக்குரிய அணிகலனாக அமைந்திருந்தமை ஒரு சிறு வரலாற்றுத் தகவலாகும். இது குறித்து ’யாழ்ப்பாணப்பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும்’ என்ற புத்தகத்தில் பேராசிரியர். சிவலிங்கராஜா அவர்கள் வண. முருகப்பா. சதாசிவம் என்பாரின் வாழ்க்கை வரலாற்று நூலில் இருந்து சில எடுத்துக் காட்டுகளை முன்வைக்கிறார். அதில் ஒன்று வருமாறு,

‘ அவருடய உடை எப்போதும் ஒரே தன்மையதே.கொய்யப்பட்ட ஒற்றைப்பட்டு வேஷ்டியை உடுத்து, தலையிற் ’பழைய காட்’ லேஞ்சி தலைப்பாகையாகக் கட்டி, பொத்தான் வெளியே தோன்றும் மூடுசட்டை போட்டு, சாதாரண செருப்போடு வெள்ளை உறை பரவிய கறுப்புக் குடையுமே இவரது சபை சந்திக்குரிய உடுப்பு. தூதுவளங்காய் பரிமாணமான கடுக்கண் ஒரு சோடி இவர் காதில் மரண பரியந்தம் தொங்கியது.’
( யாழ்ப்பாணப்பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும், குமரன் பதிப்பகம், 2014)

(மறைவாக அரைஞாண் கயிற்றிலோ சங்கிலியிலோ இவ் அட்சரக் கூட்டை கொண்டிருந்ததைப்போல ஆண்கள்  வேட்டி கட்டி, மேலே சால்வை போட்டு, கொண்டை வளர்த்து, குடுமி கட்டி கடுக்கண் போட்ட ஆண்கள் 19ம் நூற்றாண்டின் icon ஆக இருந்தார்கள். பலர் தலைப்பாகை அணிந்ததற்கும் சான்றுகள் உண்டு.)

படப்பிடிப்புக்கு இப் பொருளைத்  தந்துதவியவர் திருமதி சாந்தி. அவருக்கு நன்றி.

படப்பிடிப்பு: யசோதா : 04.11.2012
..............................

( சிறு குறிப்பு:

இப்பதிவு என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 8.11.2012 அன்று எழுதி Draft இல் இருந்தது இன்று இங்கு பிரசுரமாகிறது.) 

No comments:

Post a Comment