Friday 29 December 2017

பொன் நகைகள் - பதக்கம் சங்கிலி - 17 -

நீண்ட தடிப்பான தனித்தங்கத்தினால் அல்லது முத்து இடையில் இளைக்கப்பட்ட நீண்ட சரத்தில் பட்டை தீட்டப் பட்ட அழகிய இரத்தினக் கற்கள், முத்துகள்  பதித்த அல்லது தனித்தங்கத்தில் வேலைப்பாடுகளுடன் அமைந்த பெரிய பதக்கத்தையும் கொண்டிருப்பது பதக்கம் சங்கிலியாகும்.

பெண்களின் கழுத்தணிகளில் ஒன்றான இது அன்னம், தாமரைப்பூ, மயில் போன்ற வடிவங்களில் இளைக்கப்பட்டிருக்கும். இவை மாத்திரமன்றி நகைக் கலைஞர் தன் கற்பனைக்கும் அழகுணர்வுக்கும் ஏற்ற வகையில் பதக்கங்களை உருவாக்குவதுண்டு.

பெண்ணுக்கான முக்கியமான கொண்டாட்டங்களின் போது குறிப்பாக பருவமெய்திய பெண்ணை அலங்கரிக்கும் போது அன்றேல் மணமகள் அலங்காரங்களின் போது பெண்ணை மேலும் அழகு படுத்த இப்பதக்கம் அணிவிக்கப்படுவது வழமை. நடன நிகழ்வுகளின் போது நடன மாதரும் இவ்வகையான கழுத்தணியை அணிந்திருப்பர்.

பலரின் பார்வைகள் குவியும் இடத்தில் இருக்கும் பெண்ணின் தாயார் அல்லது மாமியார் போன்ற நெருங்கிய உறவுக்காரப் பெண்களும் இவ்வாறான பதக்கம் சங்கிலிகளை கொண்டாட்டங்களின் போது அணிந்து கொள்வது வழமை. அது அவர்களை அந் நிகழ்ச்சியின் முக்கியமானவர்களாகக் காட்டும் அதே வேளை அவர்களின் அந்தஸ்தையும் வெளிப்படுத்தி நிற்கும் ஒரு குறியீடாகும்.

மணப்பெண்ணின் சீதன சீர்வரிசைகளிலும் இப் பதக்கத்தோடு கூடிய சங்கிலி இடம் பெறுவதுண்டு. யாழ்ப்பாணத்து பாரம்பரியத்தில் பெண்கள் அணிந்த ஆபரணங்களின் பட்டியலை பேராசிரியர் கணபதிப்பிள்ளை அவர்கள் தன் காதலியாற்றுப் படையில் பின்வருமாறு தந்திருப்பது நோக்கத்தக்கது.

” ................ தாலியும்
அட்டியல்,பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி
பூரானட்டியல், கீச்சுக்கல் அட்டியல்
கடுகுமணிக் கொலுசு, கவுத்தோர் காதுப்பூ
வாளி, சிமிக்கி, வளையல், தோடு
பட்டிணக்காப்பு, பீலிக்காப்பும்
பாதசரமொடு சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கன் நட்டுவக்காலி
அரும்புமணி முருகு கொன்றைப்பூவும்
ஒட்டியாணம் ஒளிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு அரைமூடி சலங்கை
............”

எனத்தொடரும் அப்பாடலில் பதக்கம் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.
மேற்கோள்: ’யாழ்ப்பாணப் பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும்’, பேராசிரியர். எஸ்.சிவலிங்கராஜா, குமரன் புத்தக இல்லம், 2014.  ’ஆடை அணிகலன்கள்’, பக். 33.

உயர் ரக இரத்தினக் கற்கள் பதித்தும் சிறந்த தங்கத்திலும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடி அமையும் இவ்வகை பதக்கம் சங்கிலிகள் பரம்பரை பரம்பரையாக அடுத்த சந்ததிக்குப் பக்குவமாகக் கை மாறி வந்தன.









படத்தில் காட்டப்பட்டிருக்கும் பதக்கம் சங்கிலி மூன்றாவது சந்ததிக்குக் கைமாறி இருக்கும் நகைக் கலைஞர் ஒருவர் தன்  கைகளினால்  வைரக்கற்களும் ஜாதி முத்துக்களும் கொண்டு கவனமுடன் இளைக்கப்பட்ட  பதக்கம் சங்கிலியாகும்.


தற்காலங்களில் தங்கத்தின் விலை உயர்வு, பாதுகாப்புக் காரணங்கள், செய் தொழிலாளர்கள் குறைந்து போனமை அல்லது பற்றாக்குறையாக இருப்பது,மற்றும் குறைந்த நேரத்தில் நிறைந்த பயனை பெறத்தக்க நகைகளைச் செய்வதற்கான இயந்திரங்கள் கண்டுபிடிக்கப் பட்டமை, குறைந்த விலைக்கு மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலிவான உலோகங்களாலும் போலிக் கற்களாலும் ஆன நகைகள் அனைவராலும் வாங்கக் கூடிய விலைக்கு கிட்டுவது என்பவற்றோடு நாகரிக மாற்றங்களும் இவற்றின் செல்வாக்கை சற்றே குறைக்கப் பண்ணி இருந்தாலும் முக்கியமான நிகழ்வுகளின் போது அது இன்றும் தனக்குரிய இடத்தைப் பெற்றே இருக்கிறது.குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கொண்டாட்டங்கள், சுபதினங்களின் போது வளர்ந்த பெண்கள், திருமணமான பெண்கள் இதனை விரும்பி அணிவதைக் காணலாம்

(புகைப்படம் எடுப்பதற்காக இந் நகையைத் தந்துதவிய திருமதி.சாந்திக்கு நன்றி. படப்பிடிப்பு: யசோதா. 04.11.2012)

பிற் குறிப்பு:

தமிழர்கள் அணிந்த பொன் நகைகளுள் ’புலிப்பல் பதக்கம்’ பற்றிய பதிவொன்று என் தாய் வலைப்பதிவான அக்ஷ்ய பாத்திரத்தில் கீழ் வரும் இணைப்பில் 7.4.2016 அன்று பதிவிடப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் கீழ் வரும் இணைப்பில் சென்று காணலாம்.
புலிப்பல் பதக்கம்

http://akshayapaathram.blogspot.com.au/2016/04/3.html

’கடுக்கண் என்ற நகை பற்றி அறிய கீழ் வரும் இணைப்பிற்குச் செல்க...

கடுக்கண்

http://akshayapaathram.blogspot.com.au/2016/06/6.html


(சிறு குறிப்பு:
2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி  அக்ஷ்யபாத்திரத்தில் Draft இருந்த இக்கட்டுரை இன்று இங்கு பிரசுரமாகிறது.)



No comments:

Post a Comment