Sunday 17 December 2017

கத்தி வகைகள் - 10 -

வெட்டுவதற்குப் பயன் படும் கருவிகள் ‘கத்திகள்’ என அழைக்கப் படுகிறது. இவை பல வகையின; வடிவின. பல வித காரணங்களுக்காகப் பயன்படும் கத்திகள் அதன் பயன்பாட்டு இலகுத்தன்மைக்கேற்ப பல வித வடிவங்களில் தயாரிக்கப் படுகின்றன.

அரசர்கள் பாவித்த வாள்கள் தன் பயன் பாட்டுத் தன்மைக்கேற்ப தனகென தனித்துவ வடிவத்தினைக் கொண்டிருந்தது. அது போல மரங்களை அறுக்கப் பயன்படும் வாள் அதன் கூர் பகுதியில் வெட்டு வெட்டான கூர்மையோடு இன்னொரு வடிவில் மிளிர்கிறது. நெற்கதிர்களை அறுக்கும்  வாள் அரிவாள் என்ற பெயரைப் பெற்றதோடு கேள்விக்குறியைப் போல வளைந்து  வேறொரு வடிவோடு காணப்படுகிறது.

முன் நாட்களில் அரிவாள் மனை என ஒரு வித கத்தி வகை சமையலறைகளில் காணப்பட்டன. இப்போது அதன் பயன்பாடு மிக அருகி விட்டதெனலாம். அமரக் கூடிய நீண்ட ஒடுங்கிய பலகையில் முன் புறமாக கூர் புறம் முகம் நோக்கி நிற்கத்தக்கதாக அமைந்திருந்த அரிவாள்மனை வேறொரு வடிவினது. பலகையில் அமர்ந்திருந்த படி சமையலுக்கு வேண்டிய பொருட்களை வெட்ட முடிந்தது.

இவ்வாறான கத்தி வகைகளை ஒளிப்படம் எடுக்கக் கூடிய வசதிகள் காணப்படும் போது இங்கு பதிவேற்ற இயலுமாக இருக்கும்.

கீழே காணப்படும் அரம் என்ற பொருள் கத்திமற்றும் மரம் வெட்டும் வாள் போன்றவற்ரைக் கூர்மையாக்கப் பயன் படுவது. முக்கோண வடிவில் காணப்படும் கூர்மையான பகுதியால் மேலும் கீழும் அழுத்தமாகத் தேய்ப்பதன் மூலம் கூர்மையான பகுதி மேலும் கூர்மை பெறும்.
அரம்       

அரம்

அரம்

அரம்

கீழே வரும் மூன்று ஒளிப்படங்களிலும் காட்டப்பட்டிருப்பது’உல்லு’ எனக்குறிக்கப் படும் தேங்காய் உரிக்கப் பயன் படும் ஒரு வித கூர்மையான கத்தி வகை ஆகும். நிலைக்குத்தாக  நிலத்தில் அழுத்தமாக ஊன்றப்பட்டிருக்கும் உல்லு தேங்காய் மட்டைகளோடு காணப்படும் தேங்காயை குற்றிக் கிழித்து உரிக்க இலகுவான வகையில் அமைக்கப் பட்டிருப்பது.
‘உல்லு’

‘உல்லு’
தேங்காய் உரிக்கும் ‘உல்லு’

மேலே உள்ள ஏழு ஒளிப்படங்களும்  ( அரம் மற்றும் உல்லு ) வவுனியாவில் குருமன்காடு பகுதியில் தமிழர் வாழும் வீடொன்றில் 18.10.2017 மற்றும் 19.10.2017 அன்றும் ஒளிப்படம் எடுக்கப் பட்டது.
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.


மான்கொம்பு பிடி போட்ட வில்லுக் கத்தி


மான்கொம்பு பிடி போட்ட வில்லுக் கத்திக் கைபிடி

மான்கொம்பு பிடியும் கத்தியும் இணைந்திருக்கும் நேர்த்தி...

மேலே காணப்படும் சிறியவகைக் கத்திகள் வில்லுக் கத்தி என அழைக்கப் படுகின்றன.  சிறிய பொருட்களை; குறிப்பாகச் சமையலறையில் மரக்கறி வகைகளை வெட்ட இது பயன் படுகிறது. அவற்றின் பிடி மான்கொம்பினால் இணைக்கப் பெற்றிருக்கும் அழகியல் காண்க!


சத்தகம்


சத்தகம் (கிடைப்பாடாக)

சத்தகமும் மரப் பிடியும் இணைந்திருக்கிறது விறுத்தமாக...

மேலே குறிப்பிடப்பட்டிருப்பது சத்தகம் என அழைக்கப் படுகிறது. சமையல் அறையில் மச்ச மாமிசப் பொருட்கள் வெட்ட பயன் படுவது. அதன் மரப் பிடியினை கால் பெருவிரலினால் அழுத்திப் பிடித்த படி குந்தி இருந்து அவற்றைச் சிறிய துண்டங்களாக வெட்ட இவ்வகைக் கத்திகளைப் பயன் படுத்துகின்றனர், இன்றுவரை...

குறிப்பாக யாழ்ப்பாணத்துத் தமிழர் கத்திகளின் அளவுகள், கூர்மை, அதன் நீண்டகாலப் பயன்பாடு குறித்து மிகுந்த கரிசனை கொண்டிருப்பர். தமக்கான கத்திகளைச் செய்வதற்கு கடைகளுக்குச் செல்வதிலும் பார்க்க அவர்கள் கொல்லர் என அழைக்கப் படும் தொழிலாளர்களிடம் சென்று குறிப்பாகச்  சொல்லி சரியான வகையில் பிடி போட்டு கொண்டு வருவதில் மிகுந்த கவனத்தோடு நடந்து கொள்வர். அவ்வகைக் கத்திகள் மாத்திரமே நீண்ட காலப் பயன்பாட்டுக்கும் காத்திரத்துக்கும் பெயர் போனவையாக இருக்கும் என்பது அவர்ளது நம்பிக்கை. அவ்வகைக் கத்திகலையே மேலே காண்கிறீர்கள். அவை பிடியோடு பொருந்திப் போகும் பாங்கிலும்; கூர்மையின் பயன்பாட்டுத் திறனிலும் கடைகளில் வாங்கும் கத்திகளை விட சந்ததி சந்ததியாக கைமாறி வரக் கூடிய நீண்டகாலப் பாவனைக்குரியது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. 

அவற்றினைத் தீட்டி சரியான வழியில் பராமரிப்பதிலும் அவர்கள் கூடுதல் கரிசனை காட்டுபவர்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் ஏனைய பிரதேசத்து வாழ்விட மக்களின்; மற்றும் சிங்கள முஸ்லீம் மக்களின் கத்தி குறித்த பாவனைகள் பற்றி அதிகம் தெரிய முடியவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. சந்தர்ப்பம் கிட்டும் போது அவை இங்கு பதிவு செய்யப்படும்.

புல்லுச் சத்தகம்

புல்லுச் சத்தகம் பாரமற்ற மரப்பிடியோடு...

மேலே காணப்படும் கத்தி பாரமற்றது. புல்லுக் கத்தி என அழைக்கப்படுவது. தோட்டங்களில் குந்தி இருந்து பயிர்களுக்கிடையே வளரும் சிறியவகைப் புல்லுகளை அறுக்க இவை பயன்படுகின்றன. இவ்வாறு அறுக்கப்படும் புல்லுகள் ஆடு,மாடுகளுக்குத் தீவனமாக அளிக்கப்படும் என்பது ஓர் உதிரிச் செய்தி. எதையும் வீணாக்குவதில்லை அவர்கள்.

புல்லுச் சத்தகம் சற்றே நீண்ட பிடியோடு

சற்றே நீண்ட பிடியோடும் சற்றே பெரிதாகவும் காணப்படும் இவ்வகைப் புல்லுச் சத்தகம் சற்றே வளர்ந்த புல் பூடுகளை அறுக்கப் பயன் படுவது.[ இதே வேளை ‘உழவாரம்’ என அழைக்கப்படும் ஒரு விதமான வினோதமான கைப்பிடியைக் கொண்ட ( திருநாவுக்கரசர் தன் 80ம் வயதுகளில் ஆலயங்களில் உழவாரப்பணி செய்தார் என இந்து நெறி சொல்கிறது) ஒன்று - அதுவும் இங்கு பிரசுரிக்கப்படவில்லை... புற்களைச் செருக்கப் பயன்படுவது.]

புல்லுச் சத்தகம் பல்வேறு அளவுகளில்...

புல்லுச் சத்தகங்கள்; வகை மாதிரிக்கு...

பலவிதமான அளவுகளில் காணப்படும் புல்லுச் சத்தகங்களையே மேலே காண்கிறீர்கள்.

காட்டுக் கத்தி

நீண்ட பிடியோடு காட்டுக் கத்தி....

மேலே உள்ள இரண்டும் காட்டுக் கத்தி என அழைக்கப் படுபவை. ஆளின் இடுப்பளவு உயர் பூடுகள் மற்றும் இள மரங்களை நின்ற படி இதனால் வீசி வீசி வெட்டத் தக்கதாக இதன் பயன்பாடு அமைந்திருக்கிறது.

கொக்கைச் சத்தகம்

கொக்கைச் சத்தகம்; மறு வளமாக...

இரு வேறு அளவுகளில் கொக்கைச் சத்தகம்

மேலே உள்ள மூன்று படங்களிலும் இருப்பவை கொக்கைச் சத்தகம் என அழைக்கப் படுபவை.அடிப்புறத்தில் நீண்டிருக்கும் கூரான பகுதியை நீண்ட பலமான - கிளகள் அற்ற - அழுத்தமான தடி ஒன்றின் முகப்பில் உடைந்து போகா வண்ணம் துளை இட்டு அதற்குள் இதன் கூரான முனையை உட் செலுத்தி அதனை தடியோடும் இந்தக் கத்தியோடும் இறுகக் கட்டி மரங்களின் உயரத்தில் உள்ள கனிவர்க்கங்கள், முருங்கக்காய் போன்ற மரக்கறிகள் மற்றும்  உயரக் கிளைகளில் இருக்கும் மரக் கொப்புகள் போன்றவற்றை  பறிக்கப் பயன்படுவது.

குறிப்பாக ஆடுமாடுகளுக்கு குழை வெட்ட அனேகர் வீட்டில் தினம் தோறும் பயன்படும் இது. இத்தகைய இலை குழைகள் ஆடுமாடுகளுக்கும் மிகப்பிடித்தமானதக இருப்பதுண்டு.

இந்த இடத்தில் குழைகுத்தி என அழைக்கப்படும் ஒரு வகைக் கம்பியும் அதன் பயன் பாடும் குறித்து இங்கு விபரிப்பது பொருத்தமான இருக்கும். நீண்ட கம்பியில் அடிப்புறம் (கைபிடிக்கும் இடம்) அதன் கம்பியாலேயே வளைத்து முறுக்கியதாகவும் மற்றய புறம் கூரான முனையைக் கொண்டதாகவும் விளங்கும். காலை, மாலை நேரங்களில் மரத்தில் இருந்து பழுத்து விழும் பலா இலைகளை இக் கூரான கம்பியின் முனையினால் நின்ற படி, நடந்த படி குத்தி மேலே இழுத்து விடுவதன் மூலம் பல பலா இலைகளைச் சேகரிக்கலாம். அவற்றை மாட்டுத் தொழுவங்களில் மாடுகளுக்கு இரை போடுவதற்கென அமைக்கப்பட்டிருக்கும் தொட்டிகளில் கொண்டு சென்று உருவி விடுவர். இந்த இடங்களுக்கு வர வசதி கிட்டாத மாடுகளுக்கு அவைகளும் தீனியாகும். வாய் பேசா ஜீவன்கள் மீது இம் மக்கள் காட்டும் கரிசனைக்கும் ஏதொரு பொருள்களிஅயும் வீணாக்காத அவர் தம் அன்றாட வாழ்வியலுக்கும் இதுவும் ஓர் உதாரணமாகும்.


காம்புச் சத்தகம்

காம்புச் சத்தகம்; இன்னொரு தோற்றம்

மேலே வரும் இரு படங்களிலும் காட்டப்பட்டிருப்பது காம்புச் சத்தகமாகும். நீண்ட கூரான மரப்பிடிகள் எதுவும் சேராத அடிப்புறத்தையும் சூரான சிறிய முகப்பினையும் கொண்டிருக்கும் இக் காம்புச் சத்தகம் பனை மரங்கள் நிறைந்த யாழ்ப்பாண மண்ணில் மிகப் பிரபலம். அனேகமாக எல்லார் வீட்டிலும் காணப்படும். பெட்டி, பாய் உளைக்க பயன்பட வல்ல வகையில் அமைக்கப்பட்டிருப்பது இது. ஓலையினை சிறியதாக வாரவும் நுனிப்பகுதியை சாய்வாக வெட்டவும் ( உளைத்து துவாரத்துக்குள் செலுத்த ) பயன்படும் அதன் கூர்மையான பகுதி. அதன் கூர்மையான வால் போன்ற பகுதி இறுக பின்னப்பட்ட ஓலை முடிச்சினுள் மறு ஓலையை உட் செலுத்த இதன் மூலமாக நீக்கலை ஏற்படுத்தி அதனூடே ஓலையை உட் செலுத்த வாகாக அமைந்திருக்கிறது. 
மேலே காட்டப்பட்டுள்ள இவைகள் எல்லாம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

தீட்டுத் தடி



தீட்டுத் தடி மணலோடு...

மேலே காட்டப்பட்டிருப்பது தீட்டுத் தடி என அழைக்கப்படுவது. அரம் இல்லாதவர்கள் நீண்ட பலமான பலகை ஒன்றினைக் கிடையாகக் கிடத்தி மணலினை முகப்பிலே தூவி கத்தியினை அதன் மேலே வைத்து கூரான பகுதியை மரப்பலகையில் படத்தக்கதாக நீட்டியும் குறுக்கியும் அசைப்பதன் மூலம் கத்தியினைக் கூர்மைப்படுத்திக் கொள்வர்.

வெளி நாடுகளிலோ எனில் கடைகளில் வாங்க இயலுமாக இருக்கும் கத்திகள் பல வகைப் படுவன. அதன் தீட்டும் கருவிகளும் வேறு வகைப்பட்டன.

5 comments:

  1. hey ur வில்லுக்கத்தி is wrong.. thats not called villukaththi

    ReplyDelete
  2. நன்னிச் சோழன்,
    உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி. உங்கள் குறிப்பு சரியாக இருக்கலாம். வில்லுமாதிரியான தோற்றத்தைக் கொண்டு சிறியதாகவும் இருப்பதை வில்லுக் கத்தி என்று அழைக்கும் வழக்கம் நம்மிடமும் உண்டு.

    சிறியதாக இருக்கும் கத்தியினையும் வில்லுக் கத்தி என்றே அழைக்கும் மரபு நம்மிடம் உண்டு. வில்லுப் போன்று வளைந்த சிறிய கத்தி எனக்கு பார்க்கக் கிட்டவில்லை.
    உங்களுடய தகவல் மிக்க பயனுடைத்து. உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி. தாமதமாக இங்கு இப்போது வந்த போது தான் உங்கள் பின்னூட்டத்தைக் காணக் கிடைத்தது. தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பா.. நீர்தானப்பா சரி.. நான் வேறொன்றினை ஞாபகத்தில் வைத்து பிழையாக சொல்லி விட்டேன்.. அருமை.. உங்கள் படங்களை என்னுடைய விடையினில் சேர்த்துள்ளேன்...

      https://qr.ae/TWnK10

      Delete
  3. தாமதமான இந்தப் பதிலுக்காக வருந்துகிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி. சூரி கத்தி என்பது பற்றித் தெரியவில்லை. நான் அறிந்தவரை ஈழத்தில் இந்த வார்த்தைப் பிரயோகத்தோடான கத்திவகை புழக்கத்தில் இல்லை. தமிழகத்தில் இருக்கக் கூடும். அது குறித்து தேடிப்பார்க்கிறேன்.
    நீங்களும் இது குறித்த மேலதிக தகவலை இங்கு தந்தால் எல்லோரும் நேரடியாகவே அறிந்து கொள்ள அது நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும். நானும் இலகுவாக அறிந்து கொள்வேன்.
    உங்கள் தகவல் பெறுமதியானது. தந்துதவியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete