Friday 29 December 2017

பொன் நகைகள் - மூக்கணிகள் - 18 -

பெண்ணைத் தாயெனப் போற்றி வந்த தமிழ் மக்களுடய பண்பாட்டு மரபு சார்ந்த வரலாற்றில் பெண்ணின் அலங்கார அணிகலன்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தன.

மிக நுட்பமான அணிகலனில் இருந்து பெரும் அணிகலன் வரை; உச்சம் தலையில் இருந்து உள்ளங்கால் வரை பயன்படுத்தப்பட்ட பெண்ணுக்கான அணிகலன்கள் தமிழர் தம் பண்பாட்டையும் அழகுணர்வையும் கலையம்சத்தையும் தனித்துவமாகவும் சிறப்பாக  வெளிப்படுத்தி நிற்பன.

தமிழில் எழுந்த ஐம்பெரும் காப்பியங்களும் பெண்ணின் அணிகலன்களின் பெயரால் அழைக்கப்படுவதில் இருந்து அதன் சிறப்பினையும் தமிழர் மத்தியில் அவை கொண்டிருந்த இடத்தையும் அறியலாம். சிலம்பின் பெயரால் எழுந்த சிலப்பதிகாரத்தில் நாட்டிய மகளாக வந்த மாதவி  பற்றி இளங்கோ பேசுகின்ற போது அவள் அணிந்திருக்கின்ற அணிகலன்கள்  பற்றி மிக நுட்பமாக விபரிப்பது இது பற்றிய ஆர்வமுள்ளவர்களின் கவனத்துக்குரியது. அவை தமிழர் தம் அழகுணர்வினைச் சிறப்பாகச் சுட்டி நிற்பன.

வட இலங்கையில் அணியப்பட்ட நகைகளின் படியல் ஒன்றை பேராசிரியர். கந்தசாமிப்பிள்ளை. கனபதிப்பிள்ளை என்பார் (1903 - 1968 ) தன் காதலியாற்றுப்படை என்ற யாழ்ப்பாணத்தார் வாழ்வியலைப் பதிவு செய்த ஓர் கவிதை இலக்கியத்தில் கீழ் கண்டவாறு தருவதும் கவனத்துக்குரியது.

“ நன்னாள் பார்த்து பொன்னை உருக்கி
மணவினைக்கென்றே வரைந்திடு தாலியும்
அட்டியல், பதக்கம், பிலாக்கு, மூக்குத்தி
பூரான் அட்டியல்,கிச்சிக் கல்லட்டியல்
கடுகுமணிக்கொலுசு, கவுத்தோர் காதுப்பூ
வாளி, சிமிக்கி,வளையல், தோடு
பட்டிணக்காப்பு, பீலிக்காப்புப்
பாத சரமொடு சங்கிலிச் சிலம்பு
தூங்கு கடுக்கண்,நட்டுவக்காலி
அரும்பு மணிமுரு கொன்றைப்பூவும்
ஒட்டியாணம் மொழிபெறு நுதலணி
அரைஞாண் கயிறொடு அரைமுடிச் சலங்கை
சித்திர வேலை செய்திடும் போது
.........................................”

மனித உடலமைப்பில் மூக்கு ஆகிய அங்கம் வகிக்கும் இடம் தோற்றப்பாட்டளவில் மிகச் சிறிதே ஆகும். எனினும் மூக்கிற்கு தமிழர் அணிகின்ற அணிகள் பல பெயரிட்டு அழைக்கப் படுவன.

 ஒரு கல் வைத்து அல்லது தனித்தங்கத்தால் ஆக்கப் படுபவை மூக்குத்தி என அழைக்கப் பட்டன.

3 -5 - 8 வரையிலான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு அன்னம், கிளி, மயில் போன்ற உருவங்கள் தோன்றும் விதமாக நேர்த்தியாகவும் நுட்பமாகவும் செய்யப்படும் மூக்குத்தி வகைகள் பேசரி என அழைக்கப்பட்டன.

இவை செய் நேர்த்தியிலும் வடிவமைப்பிலும் பொற்கொல்லர்களின் கற்பனை ஆற்றலையும் கலை நுட்பத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி நிற்கும். பேசரிகளில் செய்யப்படும் உருவங்களுக்கு கண்ணுக்கு இரத்தினநீலக் கற்களும்   மயிலெனில் தோகைக்கு மரகதப் பச்சை நிறக் கற்களும்  அன்னமெனில் வைரக்கற்களும் பதித்து தரமான தங்கத்தில் அவர்கள் ஆக்கும் நுட்ப வேலைப்பாடுகள் வியந்து நோக்கத்தக்கன.

அவை பெண்களின் இடது பக்கம் அல்லது , வலது பக்கத்தை அல்லது இரண்டு பக்கத்தையும் அலங்கரித்து நிற்பன. அவை உட்புறமாகச் சுரை கொண்டு பூட்டும் விதமாக அமைந்திருந்தது.

பாரம்பரியமாகக் அடுத்த சந்ததிக்கு கொடுக்கப்பட்ட அன்ன வடிவிலான பேசரியும் விலாக்கும்:







அது போல மூக்கின் நடுப்புறம் உதட்டுக்குச் சற்று மேற்புறமாக சுரை கொண்டு பூட்டும் விதமாக அல்லது சற்றே அழுத்தி இறுக்கி விடும் விதமாக அமைந்த அணிகலனுக்கு விலாக்கு எனப் பெயர்.

வெளிப்புறமாகப் பார்க்கின்ற போது அவ் அணிகலன் நடு உதட்டின் மேற்புறமாக மூக்குக்கும் உதட்டுக்கும் இடையிலான இடைவெளியை அலங்கரித்து இருக்கும். பலவிதமான இரத்தினக்கற்களின் நிறங்களில் அவை கைதேர்ந்த பொற்கொல்லர்களின் கைகளால் தரமான தங்கத்திலும் தேர்ந்து பொறுக்கி எடுக்கப்பட்ட இரத்தினக்கற்களாலும் கவனமாக இணக்கப்  பட்டன.

இற்றைக்குச் சுமார் 50,60 வருடங்களுக்கு முன்பு வரை கூட திருமணத்தின் போது பெண்ணுக்கு அளிக்கப்படும் பெண்ணுக்கான  சீதனத்தோடு ஒட்டியாணம்,காசுமாலை போன்ற பெருத்த நகைகளோடு இவ்வாறான நுட்ப வேலைப்பாடுகள் கொண்ட  சிறிய அனிகலன்களும் இடம் பெற்றிருந்தன. பொன்னோடு பொருள் கொடுத்து  தன் பெண்ணைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கும் மரபு தமிழர் வழக்கு. ஆகையால் அவ்வாறான நகை அணிகள் பரம்பரை பரம்பரையாக அடுத்த சந்ததிக்குக் கையளிக்கப்பட்டன.

அவை சுத்தத் தங்கத்தினாலும் பெறுமதியான கற்கள் பதித்தும் கைகளால் பொற்கொல்லர்கள் மிக ஆறுதலாக  தம் வீடுகளில் இருந்து செய்தும் வழங்கும் மரபு வழக்கில் இருந்தது. வசதி வாய்ப்புகள் குறைவாக அதே நேரம் சிறந்த கலை நுட்பம் வாய்ந்த நம்பிக்கையான பொற் கொல்லர்கள் வீடுகளில் இவ்வாறான பொருட்களைச் அந் நாட்களில் செய்வர். மக்கள் அவர்களின் புகழை ஊரார் மற்றும் உறவினர் மூலம் அறிந்து அவர்களை நாடி வந்து இவ்வாறான பொருட்களுக்கு தம் தேவைக்கான ஆணையை கொடுத்துச் செல்வர். தேவையானவர்களும் அதன் நேர்த்தி, கலையழகு போன்ற காரணங்களால் கலைஞர்களை அவசரப்படுத்தாது பொறுமையாக மாதக்கணக்கில் காத்திருப்பர்.

இன்றும் மூக்குத்தியும் சேலையும்  தமிழ் பண்பாட்டின் அடையாளமாகவும் இணைபிரியாக் கூறுகளாகவும் உள்ளன. இவ்வகையான அணிகலன்கள் இன்று பலவித மோஸ்தர்களில் இயந்திர சாதனங்களூடாக பல்வேறு வடிவமைப்புகளில் நவ நாகரிக வடிவங்களில் வெளிப்படுவதோடு மூக்கில் துவாரமிடாமல் அணியத்தக்க விதமாகவும் மூக்கணிகள் வர ஆரம்பித்திருக்கின்றன. இன்று இந்திய இலங்கைப் பெண்கள் மாத்திரமின்றி ஆண், பெண் என்ற பாகுபாடற்று இவை உலக மக்கள் பலராலும் விரும்பி அணியப்படும் ஓர் அணிகலனாகவும் திகழ்கிறது.

ஆனாலும் கையால் செய்யும் கலை நுட்பத்துக்கு இயந்திர நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யும் நகைகள்  இணையாகா எனச் சொல்வாரும் உளர்.

இத்தகைய அழகு ஆபரணங்கள் காலத்தின் போக்கிற்கேற்ப சில வழக்கொழிந்தும் சில புதிதாய் தோன்றியும் செல்வது வழமை. தற்போது டோலாக்கின் பயன்பாடு அருகி தற்காலங்களில் திருமணத்தின் போது மணமகள் அணியும் அணிகலனாக அருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குறிப்பாக இந்திய மக்களிடம் தங்க ஆபரணங்கள் தொடர்பான -  நகை தொடர்பான நாட்டமும் அறிவும் அழகுணர்வும் ஆவலும் மேலோங்கி இருப்பதையும்; அங்கு அவை தொடர்பான நகை நிபுணர்கள் மேலோங்கி இருப்பதையும்; சிறப்புப் பயிற்சி பெற்ற நகைக்கலைஞர்களும் அவற்றை விற்கும் ஆபரனக்கடைகளும் தற் காலங்களில் உலக நாடுகளுக்கு குறுகிய காலங்களுக்கு விஜயம் செய்து; பொருட்களை விற்று; தம் வியாபாரத்தைப் பெருக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. பிற நாடுகளில் வசிக்கும் பலர் அங்கு சென்று தமக்கான ஆபரனங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதையும் தற்போதய காலங்களில் காணலாம்.

இலக்கியங்களில் மூக்கணிகள்:

இலக்கியங்களில் விலாக்கு என்ற அணி முல்லாக்கு என்ற பெயரில் அழைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

கன்னட மொழியில் சாமரசன் என்ற ஆசிரியரால் எழுதப்பட்ட  காப்பிய வகையைச் சார்ந்ததும் மொழிபெயர்ப்பு வழி தமிழுக்கு வந்து சேர்ந்ததுமான சிவப்பிரகாச சுவாமிகளின் பிரபுலிங்க லீலையில் வருகின்ற ஒரு பெண்ணினுடய அழகு பற்றிய வருணணையின் போது அப்பெண் அணிந்திருக்கின்ற முல்லாக்கு என்ற அணியில் இருக்கின்ற முத்தானது அவள் பற்களின் அழகில் வெட்கித் தலைகுனிந்து அவள் வீட்டு முற்றத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் போல தோற்றமளிக்கிறது என ஒரு பாடல் வருகிறது.

“யூன்னை நிந்தைசெய் வெண்நகை மேற்பழி சார
மன்னி யங்கது நிகரற வாழ் மனை வாய் தன்
முன்னி றந்திடு வேனென ஞான்று கொள் முறைமை
என்ன வெண்மணி மூக்கணி யொத்திநின் றிட்டாள்”

என்பதிலிருந்து இருந்து அக்காலப் பெண்டிர் அவ்வாறான மூக்கிற்கான அணிகளை அணிந்து இருந்தனர் என அறியமுடிகிறது.

மேற்கோள்:

பிரபுலிங்க லீலை

http://www.shaivam.org/tamil/sta_prabhulinga_leelai_1.htm

லலிதசகஸ்ரநாமம் என்ற பக்தி இலக்கியம் நட்சத்திர தோஷத்தை நிவர்த்தி செய்கின்ற சக்தி மூக்குத்திக்கு உண்டெனக் கூறுகின்றது.அதில் வரும் நாசாபரண (நாசி - மூக்கு, ஆபரணம் - அணி, நகை) பாசுரம் அதனை உணர்த்துகின்றது. அதாவது வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின்  அல்லது கிரகத்தில் இருக்கின்ற நட்சத்திரங்களின் ஒளியை மழுங்கச் செய்து அவற்றின் மூலம் உண்டாகும் குறை, குற்றங்களை இல்லாமல் செய்யும் அல்லது நீக்கச் செய்யும் ஆற்றல் மூக்குத்திக்கு உண்டென அது கூறுகின்றது.

திருக்குற்றாலக் குறவஞ்சியில் வரும் “ மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும் நன்னகர் மூதூர் வீதி” என்ற அடி மூக்கில் முத்தணியை அணிந்திருப்போர் அணிவகுத்து நிற்கும் வீதி என்ற பொருளில் வருவதால் அக்காலங்களில் மூக்கனிகளை அணிந்தோர் இருந்துள்ளனர் என்பது பெறப்படுகின்றது.

(மூன்றாவது தலைமுறைக்கு வந்து சேர்ந்திருக்கின்ற  இந்த புகைப்படத்தில் உள்ள அணிகலனை புகைப்படம் எடுக்க மகிழ்ச்சியோடு அனுமதி தந்த  சகோதரி. திருமதி. சாந்திக்கு நன்றி. புகைப்படம்: யசோதா. 04.11.2012)

(சிறு குறிப்பு:
2013ம் ஆண்டின் நடுப்பகுதியில் எழுதி  அக்ஷ்யபாத்திரத்தில் Draft இருந்த இக்கட்டுரை இன்று இங்கு பிரசுரமாகிறது.)

No comments:

Post a Comment