Sunday 17 December 2017

குத்தூசி / குப்பை விறாண்டி / ஆமார் - 12 -

குத்தூசி; முழு வடிவம்

குத்தூசி; தலைப்பகுதி.

குத்தூசி; முனைப்பகுதி.

குத்தூசி என அழைக்கப்படும் இச் சாதனம் கிடுகு மற்றும் வரிச்சு வைத்து அடைக்கப்படும் வேலிகளுக்கு அவை அடைக்கப்படும் காலங்களில் மிக இன்றியமையாது வேண்டப்படுவன.

வேலி அடைக்கின்ற பொழுதுகளில் வேலியின் ஒரு புறம் ஒருவரும் வேலியின் மற்றய புறம் வேறொருவரும் நின்று கொள்வர். வரிச்சினை அல்லது கிடுகினை வேலியின் நிலையான கதியால்களுடன் நேராகவும் சீராகவும் வைத்துக் கொண்டு கதியாலின் ஒரு பக்கமாக கிடுகினைச் சேர்த்துக்கொண்டு , ( வேலியின் வெளிப்புறமாக நிற்பவர் )  குத்தூசியின் முன்புற துவாரத்தில் வேலி கட்டும் கயிறினைக் கோர்த்து, கிடுகினை ஊடுருவி குத்த வேலியின் உட்புறமாக நிற்பவர் கோர்க்கப்பட்டிருந்த கயிற்றினை வெளியே எடுத்து விட்டுச் சரி சொல்வார். வெளிப்புறம் நிற்பவர் குத்தூசியை இழுத்து கதியாலின் அடுத்த பக்கம் கிடுகோடு சேர்த்து (கதியாலும் கிடுகும் சேர்த்து இறுக நிற்க வேண்டி ) மீண்டும் வெறும் ஊசியை உள்ளே செலுத்த, கயிறோடு தயாராக நிற்கும் உள்ளே நிற்பவர் குத்தூசியின் துவாரத்தினூடாக கயிறினைக் கோர்த்து விட்டு சரி சொல்ல, வெளியே நிற்பவர் ஊசியை இழுப்பார். 

இப்போது கிடுகு கதியாலோடு சேர்ந்து நேராகவும் சீராகவும் வரத்தக்கதாக இறுகக் கட்ட ஏற்ற நிலை கிட்டி இருக்கும். அதன் பின் கயிறினை இறுக்கி முடிச்சிட்டுக் கட்டுவதன் மூலம் வேலி தன் தோற்றத்தைப் பெறும்.

இக்குத்தூசியின் பயன்பாடு ஏனைய இனங்கள், பிரதேசங்களில் இருக்கிறதா என்பது பற்றித் தெரியவில்லை. ஆனால் வட பகுதியில் இதன் தேவை இன்றும் உள்ளது.

ஆமார்; அடிப்புறம்.

ஆமார்; அடிப்புறம்; இன்னொரு தோற்றம்

ஆமார்; முழு வடிவம்.
ஆமார்; நிமிர்ந்த வடிவம்.
 மேலே காட்டப்பட்டுள்ள ஒளிப்படத்தில் இருப்பது ஆமார் என அழைக்கப்படுவது. கனமான இரும்பு அடிப்புறத்தையும் மரத்தாலான பிடியையும் கொண்டிருக்கும் இவ் உபகரணம் கல்லினை; பாறையினை உடைக்கப் பயன் படுவது என்பது என் அனுமானம். இதனோடு ”பிக்கான்” என அழைக்கப்படும் ஒரு சாதனமும் உண்டு. அது மரப்பிடியில் இருபுறமும் கூரானதும் நீளமானதுமான இரு கரைகளை உடையது. அதில் ஒரு புறம் மிகச் சிறிய அளவில் தட்டையான கூர் பகுதியைக் கொண்டனவாகவும் சில அமைந்திருப்பதுண்டு.

வருங்காலங்களில் அவை பற்றிய ஒளிப்படங்கள் எடுக்கக் கிட்டினால் அவை இங்கு பதிவேற்றப்படும்.

குப்பை விறாண்டி; இருவகை.

குப்பை விறாண்டி; இரு அளவுகளில்...

குப்பை விறாண்டி; தலைப்பகுதி; இரும்பு.

குப்பை விறாண்டி; முழு வடிவம்; இரும்பு.

குப்பை விறாண்டி; மரப்பிடி மற்றும் இரும்பு பிடி.

மரப்பிடியோடு கூடிய குப்பை விறாண்டி.

மேலே காட்டப்பட்டிருப்பவை குப்பை விறாண்டிகள். குப்பை வாரி எனவும் அழைக்கப்படும் இவை, குப்பைகளை வாரி ஒரு இடத்தில் சேர்ப்பிக்க உதவுவன. இவை காய்ந்த இலைகளை மற்றும் நீண்ட நாட்கள் மண்ணில் சேர்ந்திருக்கும் குப்பைகளை ஓரிடத்தில் குவிக்கப் பயன் படுபவை என்று கூறுவதும் பொருத்தமுடையது. இன்றும் பரவலாக பாவனையில் இருப்பவை.

இவைகளும் முழுக்க முழுக்க இரும்பினாலானவையாகவும் முகப்புப் பகுதி மாத்திரம் இரும்பினால் ஆக்கப் பட்டு பிடி மரத்தினால் ஆக்கப்பட்டவையாகவும் பலவித அளவுகள்; ரகங்களில் அமைந்திருப்பதுண்டு.

ஒளிப்படம் எடுத்த திகதி: 11.10.2017.
இடம்: வலிகாமம் வடக்கு, வீமன்காமம்.
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்.



No comments:

Post a Comment