Wednesday 27 December 2017

கோயில்கள் - ஒரு குறுக்கு வெட்டுமுகம் - 16 -



யாழ்ப்பாணத்துப் பண்பாட்டை சைவத்தமிழ் பண்பாடென்றும் கந்த புராணக் கலாசாரம் என்றும் கற்றறிந்தோர் வர்ணிக்கும் மரபொன்று உண்டு.

அந்த அளவுக்கு கோயில்கள் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. ஒவ்வொரு கிராமங்களும் சிற்றூர்களும் தத்தமக்கென கோயில்கள் / குலதெய்வங்களைக் கொண்டிருப்பதையும்; சாதிப் பாகுபாடு காணப்படும் இடங்களில் அவரவர் குலங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்ப அவரவர் குலதெய்வங்களைப் போற்றி வழிபாடு செய்யும் மரபும் இன்று வரை நின்று நிலவுகிறது.

கோயில்களை வரலாற்றுப் புகழ் வாய்ந்த கோயில்கள், ஆகம முறைப்படி அமைந்த கோயில்கள், மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த சிறு தெய்வ வழிபாட்டிடங்கள் என வசதி கருதிப் பிரித்துக் கொள்ளலாம்.

எல்லாவற்றையும் இங்கு காட்சிப்படுத்துவதும் விபரிப்பதும் நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதென்பதால் ஒரு குறுக்கு வெட்டு முகமாக ஒளிப்படங்களூடாக சிலவற்றைத் தொட்டுச் செல்வதே இதன் நோக்கமாகும்.

கூடவே இன்றய கால நிலவரப்படி நாட்டில் சுமூக நிலை வளமைக்குத் திரும்பியிருப்பதான தோற்றப்பாடுகள் காணப்படுவதால் அரசாங்கமும் வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழரும் தத்தம் கிராமத்து கோயில்களை புனருத்தாரனம் செய்வதிலும் கும்பாபிஷேகங்களை நடாத்துவதிலும் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அநேக கோயிலகள் கிராமங்கள் தோறும் கோபுரங்களோடு கம்பீரமாகக் காட்சி தருவதை இன்று மிகச் சாதாரணமாகக் காணலாம்.

ஆனால் வரலாறு ஆவணப்படுத்தப்பட வில்லை. அழிக்கப்பட்ட / போரினால் இடர் பட்ட கோயில்களின் ஒளிப்படங்களோ அன்றி வரலாற்றுப் பதிவுகளோ எங்கும் சேகரிக்கப்படவில்லை. நம்மிடையே இத்தகைய ஒரு வரலாற்றைச் சேகரிக்கும் மரபு இல்லை என்பது கவலைக்குரியது. இன்றும் அந்த விட்டேந்தித்தனமும் புறக்கணிப்பும் தொடர்கிறது என்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி. யாழ் நூலகம் அழிக்கப்பட்டதற்கான செய்திகளைத் தவிர வேறு எந்தத் ஆக்கபூர்வமான காட்சித் தடயங்களும் நம்மிடையே இல்லை. 

இதே நிலைமைதான் கோயில்களுக்கும்...

கூடவே யாழ்ப்பாணத்துக் கோயில்களும் நூலகமும் ஒரு சுற்றுலாத்தலமாக விரிவடைந்திருப்பதும் விசனத்துக்குரியதே!

அவசர அவசரமாகக் கோயில்களைப் புனருத்தாரணம் செய்பவர்கள் அதற்கு முன்னமிருந்த நிலைமையைச் சற்றே ஆவணப்படுத்துவீராக!

ஊற்றங்கரைப் பிள்ளையார் கோயில்; தண்ணீரூற்று


புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்

புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் ஒட்டிசுட்டான் தாந்தோன்றீஸ்வரர் ஆலயம்

ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் தீர்த்தக் கேணி - வெளிப்புறத் தோற்றம்.

ஒட்டிசுட்டான் தான் தோன்றீஸ்வரர் தல விருட்சம்

அதன் நெருங்கிய தோற்றம்.

தல விருட்சம்; மிக நெருங்கிய தோற்றம்
இம் மரத்துக்குள்ளே பனைமரம் நடுவில் நிற்கும் அதிசயம் காண்க... இந்தத் தலவிருட்சம் எதுவெனத் தெரியவில்லை.

ஒளிப்படங்கள்:
ஊற்றங்கரை பிள்ளையார் கோயில்
வற்றாப்பளை அம்மன் கோயில்
ஒட்டிசுட்டான் தாந்தோன்றீஸ்வரர் கோயில்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 20.10.2017.


புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கீரிமலை நகுலேஸ்வரம்

நகுலேஸ்வர ஆலயக் குருக்கள்

குருக்களின் மகனார் தற்போதய ஆலய பூசகர்

கீழே வருவது மருதடி விநாயகர் ஆலய வெளித்தோற்றம்

மருதடிப் பிள்ளையார் ஆலயக் கதவு

ஆலயக் கதவு; இன்னொரு தோற்றம்

ஆலயக் கதவில் மரச் செதுக்கல் சிற்பம்; பிள்ளையார்

ஆலயக் கதவும் மரச் செதுக்கல் சிற்பம்



ஆலய கருங்கல் சிற்பங்கள்

ஆலய கருங்கல் சிற்பங்கள்

ஆலயக் கருங்கல் சிற்பம்

கருங்கல் கட்டுமானம்; தும்பிக்கை ஒடிந்திருத்தல் காண்க

சிற்ப வேலைப்பாடு

சிற்ப வேலைகள்


கருங்கல் சிற்பம்; மயிலின் தலை ஒடிந்திருத்தல் காண்க.
மறுபக்கக் கதவோரமும் அதே சாயலில்...

ஒளிப்படங்கள்: 
கீரிமலை நகுலேஸ்வரம், மருதடிப்பிள்ளையார்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 16.10.2017
அது நிற்க,

இன்றய இந்த பதிவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பள பளவென பலவித வண்ணங்களோடு மின்னும் கோயில்களைத் தவிர்த்து இன்னமும் புனருத்தாரணம் செய்யப்படாததும்; தனித்துவமாய் விளங்குவதுமான இரண்டு கோயில்களை ஒளிப்படங்களோடு இங்கு பதிவேற்றுகிறேன்.
1. தலையிட்டி வரைவர் கோயில்.
2. கூத்தியாவத்தை பிள்ளையார் கோயில்.

முன்னயது ஆகம முறைப்படி முழுக்க முழுக்க கருங்கல்லால் கட்டப்பட்டது. அதற்கு மிக அருகிலே இருக்கும் கூத்தியாவத்தை பிள்ளையார் கோயில் வயல்களின் நடுவே விருட்சமாய் வியாபித்து இருக்கும் ஐந்து மரங்களின் சங்கமத்துக்குள் அமைந்திருக்கும் சிறு வழிபாட்டிடம்.

இவை இரண்டும் அமைந்திருக்கின்ற நிலப்பரப்பு 1989ம் ஆண்டிலிருந்து இராணுவத்தின் பாதுகாப்பு எல்லைக்குள் அமைந்திருந்ததால் எவராலும் சென்று பார்த்து பராமரிக்க முடியாத நிலைமை இருந்தது. அண்மைக்காலமாகத் தான் இந்த நிலப்பரப்பு பொது மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்றுத் தகவலாகும்.

இவை இரண்டும் இன்னமும் மக்களின் சுற்றுலாத் தலமாக ‘விருத்தியடையாத’ / விருத்தியடைய விரும்பாத என் கிராமத்தின் அழகிய இரு வித கோயில்கள். இவை இரண்டும் மாவிட்ட புரம் ரயில் நிலையத்தில் இருந்தும் மாவிட்ட புரம் கந்தசாமி கோயிலின் கிழக்கு வாசல் வீதியிலிருந்தும்  நடந்து போகும் தூரத்தில் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தலையிட்டி வைரவர் கோயில்; முகப்புத் தோற்றம்


தலையிட்டி வைரவர் கோயில் கோபுரம்

கருங்கல்லில் அலங்காரம்

கருங்கல்லில் அலங்காரம்

கருங்கல் அலங்காரம்; நெருங்கிய தோற்றம்

கோயிலின் உள்ளே... மூர்த்திகள்

மேல் விதானம்

விதானத்தில் செய்யப்பட்டிருக்கிற அலங்காரம்

இன்னொரு வகை அலங்காரம்

மற்றொரு வகை...

வேறொரு வகை...

சிவதாண்டவக் கோலம் சிற்பமாக...

பக்கக் கருங்கல் சுவரில்...

கருங்கல் பாளங்களால் அமைக்கப்பட்டிருக்கும் கோமுகி...

கருங்கல் இணைக்கப்பட்டிருக்கும் முறைமை...

கருங்கல் பாளங்களிலேயே செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள்....

தளம்; தளமும் கருங்கல் பாளங்களே!

சுவர் கரை; அதுவும் கருங்கல்

மேல் சுவர்

கருங்கள் சுவர்

வைரவர் வாகனம்; கருங்கல்....

நாய் வாகனம்; நெருங்கிய தோற்றம்

மூலஸ்தானத்தின் முன்னே....

சிற்ப அம்சம்...

கரையோரச் சிற்பங்கள்...

படிக்கட்டு; அதுவும் கருங்கல்லே.....

மூலஸ்தானத்து கரைச் சுவர்

சிங்கம் தாங்கி நிற்கும் மேல் விதானம்...

மேல் விதானம்....

தூண்...

இன்னொரு தூண்....

மேல் விதானமும் தூணும் இணையும் தோற்றம்...

பிரதான வாசலில் இருந்து உள்ளே மேல் நோக்கி....

பிரதான வாசலில் இருந்து உள்ளே நிலத்தில் இருந்து...

வெடிப்புகளின் மத்தியில் பரிவார தெய்வம்...

ஒற்றைக்கருங்கல் தூணில் அலங்காரம்

கருங்கல் பாளங்களால் மேல் விதானம்....

கோபுரம்....


சிந்துண்டு கிடக்கும் கோயில் கட்டிட கருங்கல் பாளங்கள்

இக்கோயில் நான் 90களின் மத்தியில் ஊருக்குப் போகையில் பார்த்த போது மிக அற்புதமான அழகோடு காட்சியளித்தது. ஆலயத்தின் மூலஸ்தான விக்கிரகத்துக்கு அபிஷேகத்துக்கான தண்ணீர் மேலே இருந்து shaver பூட்டப்பட்டு அதிலிருந்து பூ போல தண்ணீர் சிந்த அபிஷேகம் நடக்கக் கண்டிருக்கிறேன். மின்சார விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இக்கோயிலைக் காண நான் அங்கு செல்லும் நாட்களில் தவறுவதே இல்லை.

இன்று இக் கோயில் இரு நேரம் ஒரு பூசகர் வந்து விளக்கு வைப்பதோடு நின்று விடுகிறது.

நவீன பல வசதிகளை அக்காலத்திலேயே கொண்டிருந்த இக் கோயில் மாவிட்ட புரத்திலே அலுமீனிய தொழிற்சாலை நடாத்திக் கொண்டிருந்த பெரு வர்த்தகரான சம்பந்தர் என்பாரால் 60களின் இறுதியில் கட்டப்பட்டதென்றும்; வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மாவிட்ட புரம் கந்தசாமி கோயிலோடு கொண்ட முரண்பாட்டின் காரணமாக எழுந்தது இக்கோயில் என்றும் வன்னியில் இருந்து கருங்கல்லும் தென்னிந்தியாவில் இருந்து சிற்பாசாரியார்களையும் கொண்டு இக்கோயில் எழுப்பப் பட்டதென்றும் ஒரு செவி வழிக் கதை கூறுகிறது.

(மேலும் இக்கோயில் பற்றிய சரியான தகவல்கள் கிட்டும் போது அவை இங்கு பதிவேற்றப்படும்....)

மாவிட்ட புரம் கந்தசாமி கோயிலின் கிழக்கு வாசல் புறத்திலிருந்தும் மாவிட்ட புரம் ரயில் நிலையத்தில் இருந்தும் நடந்து செல்லத் தக்க இடத்தில் இயற்கை அரண் சூழ வயல்களின் நடுவே ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இன்னொரு கோயில் கூத்தியாவத்தைப் பிள்ளையார் கோயில்.

மேலே சொல்லப்பட்ட வைரவர் கோயில் மனித வலுவால் அமைக்கப்பட்டிருக்க அதற்கு மிக அருகே அமைந்திருக்கிற இந்தக் கோயில் இயற்கையாய் அமைந்த குளம், சூழ வயல் நிலங்கள் மற்றும் சில் என்று வீசும் காற்றோடு ஒரு அடியில் ஐந்து வகையான மரங்கள் ஒன்று சேர அமைந்த சூழலில் அமர்ந்திருக்கிறார் இந்த கூத்தியாவத்தைப் பிள்ளையார். வயல்காரரின் இஸ்ட தெய்வமான இவர் வயல் நெல்லின் முதல் அறுவடையின் போது பொங்கலும் மோதகம் கொழுக்கட்டையும் சாப்பிடும் விவசாயிகளின் செல்லப் பிள்ளையும் ஆவார். பிள்ளைகள் ஊஞ்சலாடி மகிழ மரம் வளைந்து தன் கிளையை பரப்பி இருப்பதும்; இயற்கையாய் அமைந்திருக்கிற வேர் பொந்தினுள் பிள்ளையார் இருக்க வசதியாய் இடம் அமைந்திருப்பதும் இயற்கையாய் அமைந்த அனுகூலமே! 

சில் என்று வீசும் காற்று, சுற்றிவர வயல்சூழ் நிலங்கள், அருகிலே அமைந்திருக்கின்ற குளம் பெரு விருட்சமென வியாபித்து நிற்கும் பென்னாம்பெரிய அடி கொண்ட விருட்சம், ஆடி மகிழ அதன் கிளை என ஒவ்வொருவரும் இந்தப் பிள்ளையாருடன் ஒரு வித அன்னியோன்னிய உறவை கொண்டிருப்பது இக் கிராமத்துக்கே ஒரு வித சோபையைத் தரும் அழகு!

நமக்கும் இங்கே ஒரு வயல் நிலம் அமைந்திருக்கின்றமையால் இங்கு வருகின்ற போது இவரையும் நான் தரிசிக்காமல் செல்வதில்லை.

இன்று வயல் நிலங்கள் எல்லைகளை இழந்து விட்டன, பத்தைகள் சூழ்ந்து விட்டன. குளம் தூர்ந்து விட்டது, பொந்துக்குள் இருந்த பிள்ளையாரைக் காணோம். யாரோ அருகில் ஒரு சிறு மண்டபம் கட்டி ஒரு பிள்ளையாரை அங்கிருத்தி இருப்பதாகத் தெரிகிறது.....

சோபை இழந்த போதும் அவரை - அந்த இடத்தை - போய் பார்த்து வந்ததில் ஓர் அலாதி இன்பம்; ஆறுதல், ஆசுவாசம் எனக்கு....



புதிதாக கட்டப்பட்டிருக்கிற ஒரு சிறு மண்டபம்

வியாபித்து கிளைபரப்பி நிற்கிற விருட்சம்

விருட்சத்தின் அடி

தூர்ந்து விட்ட குளம்

அகன்ற் அதன் அடி காணீர்!

கமறாவுக்குள் அடக்க முடியாத அதன் அடி....

சிறுவர்கள் விளையாடவென கிளைபரப்பி நிற்கும் சினேகமான அதன் கிளை....

கிளை கிளர்ந்து மேலே... மேலே....

அடிப்பகுதி பின் புறம்.

அடிப்பகுதி இன்னொரு புறம்....

மரவேர்கள் பிணைந்துள்ள காட்சி....

அதன் இன்னொரு தோற்றம்

இவ்விரு கோயில்களினதும் சரியான வரலாற்றுத் தகவல்கள் கிட்டும் போது அவை இங்கு பதிவேற்றப்படும்....

ஒளிப்படங்கள்:
தலையிட்டி வைரவர் கோயில் மற்றும் கூத்தியாவத்தைப் பிள்ளையார் கோயில்: ஒளிப்படம்: யசோதா.பத்மநதன்.
திகதி: 16.10.2017.

No comments:

Post a Comment