Wednesday, 13 December 2017

கமமும் கமக்காறனும் - 7 -

யாழ்ப்பாணக் கமக்காறன்
’ மப்பின்றிக் காலமழை காணா மண்ணிலே
சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது
ஏர் ஏறாது; காளை இழுக்காது;
எனினும், அந்தப்
பாறை பிளந்து பயன் விளைவிப்பான்
என்னூரான்..............’

எனத் தொடங்கும் மகாகவியின் கவிதை யாழ்ப்பண மண்ணையும் விவசாயத்தையும் சொல்ல போதுமாக இருக்கும். விவசாயியை கமக்காறன் என அழைப்பதும் விவசாய நிலத்தை கமம் என அழைப்பதும் யாழ்ப்பாண மண் வழக்கு.

யாழ்ப்பணத்துக் கிராமங்களில் அநேகமாக அனைத்துக் கிராமங்களும் ஓரிரு கோயில்களையேனும் கொண்டிருப்பதோடு மனித முயற்சியால் விளைந்த செழிப்பையும் கொண்டிருப்பதை இன்றுவரை அங்கு காணலாம்.

இம்மக்கள் கல்வியில் சிறந்தவர்களாக விளங்குவதாக இருக்கிறார்கள் என்ற பொதுவான அபிப்பிராயம் வளர; உண்மையென உணர இம் மண்ணில் அவர்களின் விவசாயத்துக்கான பிரயத்தனங்கள் ஒரு முக்கிய காரணம். தென்பகுதிகளைப் போல ஆறுகள், குளங்கள், வளங்கள் இல்லாத காரணத்தால் மக்கள் கல்வி ஒன்றையே தம் வாழ்வின் உயர்வுக்கான ஒரே வழியாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பொன்றும் இல்லை. மறு வளமாக இருந்த ஒரே ஒரு வழி விவசாயமே. அது கடினமான உழைப்பை வேண்டி நிற்கும் ஒன்றெனினும் இன்று வரை விவசாயத்தை ஈடுபாட்டோடும் விருப்போடும் செய்து வரும் கமக்காரர் அநேகர்.

யாழ்ப்பாணத்து மண் செம்மண். வரண்ட பூமி. அங்கு விளைவன சிறு போகப் பயிர்கள். அதாவது வெங்காயம், தக்காளி, மரவள்ளி, ராசவள்ளி, வாழை, புகையிலை, வெற்றிலை போன்றவை. குளங்கள் இல்லாத மண்ணில் கமக்காரனுக்கு வேலை அதிகம். மழையினையும் கிணறுகளையும் நம்பிய விவசாயம் என்பதால்  அதனால் முயற்சியும் பிரயத்தனமும் பிரயாசையும் அதிகம் வேண்டப்படுவன.

மாடு ஆடு போன்ற கால்நடைகளின் எருக்களும் மனித வலுவிலும் கிணற்று நீரிலும் விளையும் மரபு வழி விவசாயம் என்பதால் வட பகுதி விவசாயப் பொருள்களுக்கு தென்பகுதியிலே மவுசு அதிகம். ருசியும் அதிகம்.

மாம்பழம் பலாப்பழம் விளம்பழம் வாழைப்பழம் போன்ற கனி வர்க்கங்களும் சுவையிலும் தரத்திலும்  தனித்துவமானவையே. இரசாயணங்கள் கலக்காததனாலும் மண்ணின் வளத்தினாலும் காலநிலை வேறுபாட்டினாலும் போடப்படும் இயற்கைப் பசளைகளினாலும் அவை இத்தகைய சுவையை பெறுகின்றனவாகலாம்.

ஆடு, மாடு, கோழி, நாய் என அவர்களால் வளர்க்கப் படும் உயிரினங்களும் அவற்ரினுடனான அவர் தம் சினேகிதமும் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர்க்கப் படும் செல்லப் பிராணிகளில் இருந்தும் பராமரிப்பில் இருந்தும் முற்றாக வேறு படுவனவும் ஆகும்.

அங்குள்ள உயிரினங்கள் சுதந்திரமும் அதே வேளை பயன்பாட்டுக்கும் உரியனவாக இருப்பதோடு வேறுபட்டதான ஒரு கவனிப்புக்கும் உரியனவாக இருக்கின்றன.

மாடுகள் எருவுக்கும் உழவுக்கும் பாலுக்கும் பயன்பட ஆடுகள் பாலுக்கும் உணவுக்கும் பயன் பட, நாய்கள் பாதுகாப்புக்காக வளர, கோழிகள் இயற்கையாக மேய்ந்து முட்டைகளைத் தர... என அங்குள்ள விவசாயியின் வாழ்வு மண்ணோடும் பயிரோடும் மட்டும் நின்று விடாது வாய் பேசா ஜீவன்களின் புரிந்துணர்வோடும் உதவி ஒத்தாசைகளோடும் வளருவது ஒரு சிறப்பு. அதே நேரம் இத்தகைய வாய்பேசா ஜீவன்கள் மேல் அவர்கள் காட்டும் காருண்யமும் அக்கறையும் கவனிப்பும் கூட விதந்து பேசத்தக்கது. விரிவுக்கஞ்சி அவற்றை ஒரு நிகழ்ச்சியைச் சொல்வதோடு  நிறுத்திக் கொள்ளுகிறேன்.

நாட்டில் வளமை நிலை திரும்பியதற்குப் பிறகு போரினால் புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாயகம் திரும்பினார். திரும்பிய போது பொருளாதாரவளமும் வெளிநாட்டு கற்றல் வளங்களையும் கொண்டவர்களாகத் திரும்பினர். அத்தகைய தொழில்சார் கல்வி வளத்தை சொந்த மண்ணில் பரீட்சார்த்த முயற்சியாக ஈடுபட விளைந்தனர். அந்த வகையில் வலிகாமம் வடக்கில் ஓர் இயற்கை முறை விவசாயம் ஒன்று அறிமுகப்படுத்தப் பட்டது. நிலத்தடி நீர் குறைந்து கொண்டு போவதை முன்நோக்காகக் கொண்டு குறைந்தளவு நீரில் செய்யப்படும் விவசாயமாக அது அறிமுகப்படுத்தப் பட்டது. குளாய்களில் வேரடிக்கு மட்டும் பாய்ச்சப்படும் நீரினால் தேவையற்ற நீரின் பாவனை குறைக்கப் படுகிறது என்றும்; வளர்க்கப் படும் மாடுகளுக்கு புல்லுக்குப் பதிலாக............... போடுவது சிறந்தது என்றும் சொல்லப் பட்டது.

மாடுகள் கொட்டிலில் படுத்துக் கிடந்தன. உணவு அதன் இருப்பிடம் தேடி வந்தது. எழுந்து உண்பதும் படுத்து இரைமீட்பதுமே அதன் வேலையாகிப் போய் சிறந்த பாலை அது நல்கியது. தறைகள் காய்ந்து போயிருந்தன; புற்கள் இறந்து போயிருந்தன. பயிர் மரங்கள் மட்டும் செழித்து வளர்ந்திருந்தன.

நான் அண்மையில் அங்கு சென்றிருந்த போது அங்குள்ள விவசாயி ஒருவரிடம்’ அது நல்லதல்லவோ, நீங்கள் ஏன் அப்படி ஒன்றை முயற்சி செய்யக் கூடாது என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் கீழ் வருமாறு.’ மாடு நடமாட வேண்டும் நடந்து திரிய வேண்டும். தனக்குப் பிடித்த புல்லை அது தின்ன வேண்டும். அது அதனுடய சுதந்திரம்; உரிமை. அது தனக்குப் பிடித்ததை தின்ன விடுவது என்பது அதற்கான ஓர் அடிப்படை உரிமை. அதற்கு உரிய நேரத்துக்கு தண்ணீர் கொடுப்பது; மாற்றிக் கட்டுவது என்பதினூடாக அதனோடு நமக்கான பந்தமும் அதற்கு நம்முடனான ஒட்டுறவும் பலம்பெறுகிறது. ‘அவை நமக்கு பயன் தருகின்றன; நாம் அதற்குப் பிரதியுபகாரமாக இவற்றைச் செய்கிறோம் என்ற ஆறுதல் உணர்வு ஓர் விவசாயிக்கு வருகிறது.

தண்ணீர் வாய்க்கால் வழி ஓட வேண்டும். புல்லுக்கும் ஆங்கே பொசிய வேண்டும். அந்தப் புல்லை மாடு சுதந்திரமாக மேய வேண்டும். அதன் சாணமும் கோசலமும் தறையில் விழ வேண்டும்; அவை தானாக உக்க வேணும். அவைகளே தறைக்கான உயிர் சத்துக்கள். சத்துக்கள் நிறைந்த அத் தறையில் இருந்து உணவுப் பயிர்கள் விளைவிக்கப் பட வேண்டும். அதில் இருந்து வரும் பாலும் உணவுமே உன்னதமானது; உத்தமமானது.

வெளி நாட்டில் இருந்து வருவோர் மாடுகளை நடக்க பண்ணாமல் இருந்த இடத்தில் உணவை இடுவதிலும்; வேருக்கு மட்டும் நீரைப் பாய்ச்சுவதிலும் எனக்கு உடன் பாடில்லை; உடன்பாடே இல்லை. அவர்கள் இங்கு வந்து பொறுப்பற்ற விதமாக நடக்கிறார்கள்; மனிதத்தன்மையை மறுக்கிறார்கள்; நஞ்சுகளை விதைக்கிறார்கள்; அறிமுகப்படுத்துகிறார்கள் ‘ என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அது  யாழ்ப்பாணத்துக் கமக்காறன் ஒருவரின் குரல்!

ஆரம்பத்தில் குறிப்பிட்ட மகாகவியில் கவிதை முடியும் போது இவ்விதமாக முடியும்.

‘ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி பற்றி
அதோ பார், பழைய படி கிண்டுகிறான்,
சேர்த்தவற்றை முற்றும்
சிதற வைக்கும் வானத்தைப்
பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்.
வாழி!
அவன்,
ஈண்டு முதலில் இருந்தும் முன்னேறுதற்கு
மீண்டும் தொடங்கும் மிடுக்கு!’

நீர் இறைக்கச் செல்லும் கமக்காறன்( விவசாயி)
கீழே வரும் இப்புகைப்படங்கள் வலிகாமம் வடக்கில் உள்ள ஒரு கோயில் சார்ந்த விவசாயக் கிராமத்தை உங்கள் கண் முன் கொண்டு வரக்கூடும்.


நீர் இறைக்கும் இயந்திரம்


நீர் இறைக்கும் இயந்திரம்

வாய்க்கால் வழி தண்ணீர் ஓடிய தடயம்

தண்ணீர் ஓடிய தடயம் - அண்மைய பார்வை


வாழைத் தோட்டம்

நீர் இறைக்கப் பட்ட வாழைத்தோட்டம்

காலை நேர வெய்யிலூடே....வாழைத்தோட்டம்
கிணறு

துலா இருந்த தடயம்....

புதிய கிணறு

கப்பிகள் என அழைக்கப் படுபவை சிறிய அளவில் வீட்டுத் தேவைகளுக்குத் தண்ணீர் எடுக்கப் பயன் படும் சாதனமாகும். உருளும் தன்மை கொண்டிருக்கும் இச் சக்கர வடிவிலே மத்தியில் கயிறினைக் கோர்த்து ஒரு மூலையில் வாளியைக் கட்டி கீழே இறக்கி கயிறை இழுப்பதன் மூலமாக தண்ணீர் பெறப்படுகிறது.

அண்மைய காலங்களில் பெரும்பாலான வீடுகளில் மோட்டர் இயந்திரத்தினால் தண்ணீர் தொட்டிக்குள் நிரம்பி விடுவதன் மூலம் குளாய்கள் மூலமாக மக்கள் தண்ணீரை வீட்டுப்பாவனைக்குப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். அதனால் மரபு வழியாகப்; பாரம்பரியமாகத் துலா மற்றும் கப்பி மூலமாக தண்ணீர் எடுக்கும் செயல்பாடு அருகி வருகிறது. ஆனாலும் சில இடங்களில் இன்னும் பாவனையில் இருந்து வருகிறது.

( துலா மற்றும் வாளியோடு கூடிய கிணறுகளினை புகைப்படம் எடுக்காத மடமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கொள்ளுகிறேன். இன்னொரு சந்தர்ப்பம் வாய்த்தால் அதனை இங்கு பதிவேற்றுகிறேன்.)


கப்பி

கப்பி; இன்னொரு பக்கத் தோற்றம்

பாவிக்கப்பட்ட கப்பி

பாவிக்கப்பட்ட கப்பியின் இன்னொரு தோற்றம்

கோயிலை அண்டிய விவசாயக் கிராமம்

பயிர் செய்கைக்குத் தயாராக பண்படுத்தப்பட்ட மண்

இரு விதமாக உழுது விடப்பட்டிருக்கிறது

வேலிக்குள்ளே விவசாய நிலம்




மாட்டுத் தொட்டியின் மேற்புறக்கூரை

மாட்டுத் தொட்டி

மாட்டுத் தொட்டியின் மேற்புறக்கூரையின் இன்னொரு பார்வை

வைக்கோல் போர்

எருக் குவியல்
கிருமி நாசினி தெளிக்கும் கருவி
அதன் இன்னொரு புறத் தோற்றம்

இது ஓர் இலங்கைத் தயாரிப்பு!

இன்னொரு வகை கிருமிநாசினி தெளிக்கும் கருவி

அதன் மறு புறத் தோற்றம்

சக்தி கூடிய கிருமி நாசினி விசிறும் கருவி

இராசவள்ளிப் பயிர்

இராச வள்ளிப் பயிர்; இன்னொரு தோற்றம்

செம்பாட்டு மண்ணில் தண்ணீர் ஓடிய தடயம்

மரவள்ளி பயிர்ச் செய்கை

மரவள்ளிப் பயிர் செய்கை; இன்னொரு தோற்றம்

மரவள்ளித் தடிகள்; நடுகைக்காக...
மரவள்ளிப் பயிர்ச்செய்கை இங்கு பிரபலமாக விளங்குகிறது. அதற்குக் காரணம் அப் பயிருக்கு அதிகம் தண்ணீர் தேவை இல்லை என்பதாக இருக்கலாம். மேலே காட்டப்பட்டுள்ளதும் கீழே காட்டப்பட்டதுமான மரவள்ளித் தடிகள் பயிர் செய்கைக்குத் தயாராக இருக்கின்றன. இவற்றைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஊன்றி வளர்ப்பதன் மூலமாக நிலத்தடியில் கிழங்குகளை பெறலாம்.

மரவள்ளித் தடிகள் அண்மைய தோற்றம்

கள்ளிச் செடி; கண்ணூறு படாதிருக்கும் என்ற நம்பிக்கையின் நிமித்தமாக...

புல்லுக்கும் ஆங்கே பொசிந்த தண்ணீரின் தடயம்....

கோயிலை அண்டிய கிராமங்கள்...

கோயில்; வீணியவரை அம்மன் கோயில்

அம்மன் கோயில்; அண்மைய தோற்றம்

எங்கிருந்து பார்ப்பினும் தெரியும் கோயில் கோபுரம்...

கோபுரத்தின் கம்பீரத் தோற்றம்

மண்னையும் தெய்வத்தையும் நம்பிய விவசாயக் கிராமம்

கோயில்; கரைப் புறத் தோற்றம்

கோயில் மூலைப் புறமாக...

கோயில்; இன்னொரு பகுதி...

விதை வெங்காயம் மறு நடுகைக்காக செகரிக்கப் பட்டிருக்கிறது

விதை வெங்காயம்

தாவாரத்தின்; தகரக் கொட்டிலின் கீழே, விதை வெங்காயம், மறு நடுகைக்காக

யாழ்ப்பாணத்து மாம்பழம்

சுதந்திரமாய் திரியும் சேவல்

ஆரோக்கியமாய் இருக்கும் காவல்கார நாய்; தாய்மையோடு...
புல் மேயும் பசு

புல் மேயும் பசு

ஒளிப்படங்கள்; யசோதா.பத்மநாதன்.
இடம்: வலிகாமம் வடக்கு, வீமன் காமம்.
புகைப்படங்கள் எடுத்த திகதி: 10.10. 2017 மற்றும்  11.10.2017.



Friday, 8 December 2017

விளக்குகளும் விளக்கு வகைகளும் - 6 -


விளக்கு என்ற இப்பதம் ஒளி உமிழும் பொருளைக் குறிக்கிறது. மின்சார பாவனை வருவதற்கு முன்னர் எண்ணைகளில் எரியும் விளக்குகள் பரவலாகப் பாவனையில் இருந்தன; இருக்கின்றன. 

வெளிச்சத்துக்காக ஏற்றப்படுவது என்ற பொருள் தொனியில் பார்த்தோமானால் அது கை விளக்கில் இருந்து கலங்கரை விளக்கம் வரைக்குமாக விரியும்.

பற்றறயில் ஒளி உமிழும் ரோச் லைட்டில் இருந்து சூரிய ஒளியில் இயங்கும் மின் குமிழ் வரைக்குமாக; வாசனையோடு ஒளி உமிழும் மெழுகு வர்த்தியில் இருந்து வண்ண வண்ணமாக விட்டு விட்டு ஒளி உமிழும் Fairy  விளக்குகள் வரையிலுமாக;  விளக்குகளின் வகைகள் எண்ணற்றன. 

அதிலும் ஆண்டிறுதி கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் போது மேலைத்தேய நாடுகளில் ஒளியினால் வண்ணஜாலம் காட்டும் நகர்கள் அநேகம். வீடுகளும் கிறிஸ்மஸ் மரங்களும் கூட ஒளியினால் அழகூட்டப்பட்டிருப்பது ஒரு விதமான அற்புதக் காட்சியாக இருக்கும். 

அது போல சீன தேசத்து மக்கள் சிவப்பு வண்ணக் காகிதங்கள் கொண்டு செய்யும் விளக்குகளும் இலங்கையில் வெசாக் கொண்டாட்டங்களின் போது வண்ணக்காகிதங்களால் செய்யும் அலங்காரக் கூடுகளும் மின்சாரத்தில் இயங்கும் பிரமாண்ட ஒளி ஜாலங்களும் இன்று வரை மனங்களைக் கொள்லை கொள்ளும் ஒளியின் கலை வண்ணங்களே!

அப்போதெல்லாம் ஒளியால் விழித்திருக்கும் தேசங்கள்....

விளக்குகளில் தான் எத்தனை வகை! கை விளக்கு என்ற ஒன்றை எழுதப் புகுந்த போது விளக்கும் வெளிச்சங்களும் பற்றிய புதிய விளக்கங்கள் வெளிப்படத் தொடங்கின. இது பிறகு தன் சொல்ல வந்த இளையைத் தாண்டி வேறெங்கும் சென்று விடும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் ஒளி உமிழும் பொருள்களின் வகைகளை மட்டும் சொல்லி விட்டு நேரே நம் பண்பாட்டில் பயன்பாட்டில் இருந்த இருக்கும் பொருள்களில் கவனம் செலுத்த விளைகிறேன்.

லாந்தர் என அழைக்கப் படும் ஹரிக்கேன் விளக்கு, கைவிளக்கு, மேசை விளக்கு, பெற்றோல் மக்ஸ், குத்து விளக்கு, தூண்டா மணி விளக்கு, சர விளக்கு, ஆத்ம விளக்கு, தெரு விளக்கு,சுட்டி விளக்கு, மின்சார விளக்கு, பற்றரி விளக்கு (ரோச்) மெழுகு வர்த்தி விளக்கு, எனத்தொடரும் இந்த விளக்கு வகைகள் ஈழத்தில் பொருளாதாரத் தடை விதிக்கப் பட்ட காலங்களில் சிக்கன விளக்கென ஒரு விளக்கு கண்டு பிடிக்கப் பட்டதையும் சொல்ல வேண்டும். கூடவே தகரத்தினால் இணக்கப் பட்ட  விளக்குகள் உள்ளூரில் தயாராகி புழக்கத்திலும் வந்தன. 

கீழே வரும் முதல் மூன்று படங்களும் சுட்டி நிற்கும் விளக்கின் பெயர் ‘தூண்டாமணி விளக்கு’ என்பதாகும் ஒரு சங்கிலியினால் பிணைக்கப் பட்டு தொங்கும் பாவனையில் காணப்படும் இவ்விளக்கு தமிழ் இனத்தார் மத்தியில் பூசை அறைகளிலும் கோயில் கர்ப்பக் கிரகத்திலும் பரவலான பாவனையில் இருந்தது. இப்போதும் சில இடங்களில் இருக்கக் கூடும்.

தேங்காய் எண்ணையில் எரியும் இவ்விளக்கின்  சிறப்பம்சம் என்னவெனில் மேற்பகுதியில் காணப்படும் குமிழ் போன்ற அமைப்பினுள் எண்ணையினை ஊற்றி ( கீழே கால் போன்ற அமைப்பினை களட்டி தலைகீழாகக் குமிழைத் திருப்பி எண்னையினை அதற்குள் ஊற்றிய பின் புரியினால் அதன் கால்பகுதியைப் பூட்டி சரியான வளம் திருப்பினால் எண்ணை சரியான அளவுக்கு அதன் கீழ் புறத்தில் வந்து தங்குவதோடு தொடர்ந்து எண்ணை முடியும் வரை சரியான அளவில் எண்னையை அந்த மேல் குமிழ் வெளி விட்ட வண்ணம் இருக்கும். அளவாக எண்ணை அதன் கீழ் புறத்தில் கசிந்து கொண்டிருப்பதால் திரியில் ஏற்றப்படும் விளக்கு தூண்டாமல் எரியத் தக்கதாக இருப்பதாலும் மேலே மணி போன்ற அமைப்பு இருப்பதனாலும் இதற்கு தூண்டாமணி விளக்கு என இதற்கு பெயர் உண்டாயிற்று எனக் கொள்ளலாம். 

இவற்றின் திரி பழைய வெள்ளை பருத்தித் துணிகளை நீளம் அதிகமாகவும் அகலம் சிறியதாகவும் இருக்கும் வண்ணம் வெட்டி அல்லது கிழித்து அதனை சுருட்டி பாவிப்பதுண்டு. பிற்காலங்களில் திரிகள் கடைகளிலும் விற்பனைக்குப் பெற முடிகிறது.

தூண்டா மணி விளக்கு

தூண்டா மணி விளக்கு; இன்னொரு தோற்றம்

புரியினால் கீழ் புறம் களற்றப்பட்ட தூண்டாமணி விளக்கு
இப் புகைப்படங்கள் 11.10.2017 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள என் சிறிய தாயாரின் வீட்டின் பழைய பொருள்களின் தொகுதியில் இருந்து படம் எடுக்க முடிந்தது.

கீழே வரும் அடுத்த மூன்று படங்களில் காட்டப்பட்டிருப்பது மேசை விளக்கென அறியப் படுவது. மண்ணெண்னணையில் எரியும் இவ்விளக்கு மேசையில் வைக்கப்பட்டு வெளிச்சம் ஏற்றப்படுவதால் மேசை விளக்கென பெயரை பெற்றது. இதன் திரி மெல்லிய அகல வடிவிலானது. கடைகளில் அவை வாங்கப்பட வேண்டியவை.

மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் இவை எண்ணை தாங்கி, திரிப்பகுதி சிமினி என அழைக்கப்படும் காற்றுக்கு அணையாதிருக்கவும் சுடர் நிலையாக எரியயவும் இடையிலே சொருகப்படுவது. களற்றி இலகுவாகப் பூட்டத்தக்க இவை மினுக்கி பாவிக்கப் படுபவை.

இடையிலே காணப்படும் திரிப்பகுதி திரியைக் கணக்காக தூண்டிவிடத்தக்க குமிழியோடு சேர்ந்து காணப்படும். தத்தம் தேவைக்கு தக்கதாக ஒளியை இதன் மூலம் கூட்டிக் குறைத்துப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஈழ நாட்டில் மின்சாரம் இல்லாக் காலங்களில் மாணவர்கள் இரவுகளில் கல்வி கற்க உதவிய இந்த மேசை லாம்பு பலரின் மனங்களில் நீங்கா நினைவுகளாக நிறைந்திருக்கக் கூடும்.

இந்த மேசை லாம்புகள் இப்போது பரவலான மின்சார பாவனை காரணமாக பாவனையில் இருந்து விலகி வருகிறது. மின் வெட்டுக் காலங்களிலும் கூட ரோச் லைட்டுகளும் மெழுகு வரித்திகளும் அதன் இடத்தைப் பிடித்து விட்டமை நினைவு கூரற்பாலது. இந்த மேசை லாம்பு கொழும்பில் வசித்து வரும் என் மச்சாளின் வீட்டில் ஒரு பழம் பொருட்கள் பற்றிய உரையாடலின் போது அவரால் எடுத்துக் காட்டப்பட்டது. 25.10.2017 அன்று புகைப்படம் எடுக்கப்பட்டது.

மேசை லாம்பு

சிமினி களற்றிய நிலையில் மேசை லாம்பு

தூண்டப்பட்டுள்ள அகலத் திரியைக் காண்க

கீழே வருவது கைவிளக்கு. கூகுள் இமேஜ்ஜிலும் இன்று வரை கண்டு பிடிக்க முடியாதிருப்பதிலிருந்தே இதன் பாவனை எவ்வாறு இல்லாதொழிந்து போயுள்ளது என்பதற்குச் சாட்சியமாகலாம். மண்ணெண்ணையில் எரியும் இவ்விளக்குகள் கைகளினால் இலகுவாகப் பிடிக்கத் தக்க வாகானாவை.
ஒரு பாவனைப் பொருள் எவ்வாறு குறிப்பிட்ட ஒரு பண்பினை; ஒரு பண்பாட்டை விளக்கி நிற்கப் போதுமானதாக இருக்கும் என்பதற்கு இந்தக் கைவிளக்கினை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். 

முன் நாள்களில் வீடுகளில் சமையலறை புகைக் கூட்டினைக் கொண்டிருக்கும். வீட்டுக்கு வெளிப்புறமாகப் பார்த்தாலும் தெரியும் அளவுக்கு அவை உயர்ந்து நின்று அதன் நாற்புறங்களிலும் புகையினை வெளியேற்ற வல்ல சிறு இடைவெளிகளைக் கொண்டு விளங்கும். வீட்டுக்கு ஒரு கம்பீரத்தினையும் தரவல்ல இப் புகைக்கூடுகள் தற்போதய வீடுகளில் வைக்கப் படுவதில்லை என்பதனால் வீடுகளின் அமைப்பும் தற்காலங்களில் மாறி வருகிறது. மின்சார மற்றும் புகையை வெளியேற்றாத வாயு அடுப்புகள் பாவனைக்கு வந்து விட்டதால் இத்தகைய மாற்ரங்கள் நிகழ்வது குறிப்பிடத் தகுந்தது.

விறகுகளினால் ஆன அடுப்புகள் அதன் பறன்களில் கட்டப்பட்டு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மாட்டுச் சாணத்தினால் அடுப்படி மெழுகப்பட்டு ஒரு வித ஒழுங்கோடு 3 அடுக்களை ஒரு சூட்டடுப்பெனக் குறிப்பிடப்படும் அடுப்போடு காணப்படும். இந்த இடம் சற்றே இருட்டாகக் காணப்படுவதால் இரவுக் காலங்களில் சமையல் பெண்டிருக்கு இது வெளிச்சம் தர பயன் பட்டது. இக் கைவிளக்கின் பாவனை காற்று வந்து அணைக்கும் சாத்தியங்கள் குறைவென்பதால் இங்கு தான் அதிகம் காணப்பட்டது. 

மேல் பகுதி திறக்கத் தக்க பாவனையில் உளளது. அதனைத் திறப்பதன் மூலம் கீழ்பகுதிக்குள் மண்ணெண்ணையை ஊற்றி, திரியினைச் சுருட்டி மேலுள்ள துவாரத்தினுள் செலுத்தி மீண்டும் புரியினை பூட்டி விடுவதன் மூலம் விளக்கு எரியத் தயாராகி விடும்.

கீழே வரும் அடுத்த மூன்று படங்களிலும் இருக்கும் கைவிளக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள பழைய சாமான்கள் விற்கும் கடையில் உருக்குவதற்குத் தயாராக இருந்த நிலையில் அவர்களிடம் இருந்து என்னால் விலைக்குப் பெறப்பட்டது. பிறகு மினுக்கப்பட்டு தற்போது என்னோடு வசித்திருப்பது. ( இங்கு வருகின்ற போது இவ்வாறான பழைய சாமான்களோடு வந்திறங்கியது ஒரு சுவாரிஷமான அனுபவம். அங்கிருப்பவர்களுக்கும் நான் ஒரு சுவாரிஷம் :) என்னத்தச் சொல்ல...! அது ஒரு தனி நகைச்சுவை...)

கைவிளக்கு

கைவிளக்கே தான்

புரி களற்றிய படி...

கீழே வரும் அடுத்த மூன்று படங்களில் தெரிவதும் கை விளக்குத் தான். வடிவம் இன்னொரு விதம். அளவில் சிறியது. இதுவும் இப்போது உருகி இன்னொரு வடிவெடுப்பதில் இருந்து தப்பி என்னோடு வசித்திருக்கிறது.:)

சிறிய கைவிளக்கு

புரி களற்றிய படி..

சோடிக் கை விளக்குகள்
இவை போல கால் விளக்குகள் என அறியப்படும் விளக்குகளும் இருந்தன. அவை இதே வடிவத்தை ஒத்தவை எனினும் நீளத்தில் உயரமானவை. சற்றே உயரமான இடத்துக்கு வெளிச்சத்தைப் பரப்ப அவை பயன் பட்டன. என்னால் சென்ற இடங்களில் அத்தகைய விளக்குகளைக் காண முடியவில்லை.

கீழே வருவது காமாட்சி விளக்கு. இன்றும் பரவலாகப் பாவனையில் இருப்பது வீடுகளில் சுவாமி அறைகளில் தேங்காய் எண்னையினைக் கொண்டு ஏற்றப்படுவது. இவைகளும் இப்போது பல ரகங்களில் வருகின்றன. என் வீட்டு பொருள் இது.

காமாட்சி விளக்கு.

கீழே வரும் இவ்விளக்கும் ஒரு வகை சாமி அறைக்குள் வைக்கும் விளக்குத் தான். ஆனால் அதன் அமைப்பு சற்றே வேறுபட்டது. இன்றும் பலரின் வீட்டு சாமி அறைகளை இவ் வகை விளக்குகள் அலங்கரிக்கின்றன.

சிட்னி போன்ற பொருளாதார வளங்கள் கூடிய பிரதேசங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள் விழாக்களின் போது இவ்வாறான பொருட்கள் அக் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்டதன் நினைவாகப் பரிசளிப்பது வழக்கம். அவ்வாறு என்னிடம் வந்து சேர்ந்தவற்றுள் இதுவும் ஒன்று.



சாமி விளக்கு

சாமி விளக்கின் பிரிவுகள்

திரியும் எண்ணையும் இட்ட பின் நடுதுவாரத்திவூடாக பூட்டத் தக்க புரி கொண்டது

இது போல ஆத்ம விளக்கென ஒரு விளக்கு உண்டு. இந்து மக்கள் தம் வீடுகளில் அவசியம் வைத்திருக்க வேண்டும்; அதனை ஏற்ற வேண்டும் என்றொரு நம்பிக்கை இந்து மக்கள் மத்தியில் உண்டு. அது நடுவிலே திரி இட்டு தேங்காய் எண்ணையில் சுடரும். யாழ்ப்பாணத்தில் என் சின்னம்மா வீட்டில் இருந்தது. இதனை எழுதும் இந்த சந்தர்ப்பத்தில் அதனை படம் எடுக்காமல் விட்ட அறியாமையை எண்ணி வருந்துகிறேன். சந்தர்ப்பம் கிட்டினால் பின்னொரு பொழுதில் அதனை இங்கு இணைக்கிறேன்.

கீழே வரும் இச் சிறு விளக்கு பல வருடங்களின் முன் சீனக் கடை ஒன்றில் சிட்னியில் வாங்கியது. மிகச் சிறிய அளவினதான இவ்விளக்கு மேசை லாம்பின் மிகச் சிறிய வடிவம். அழகுக்காக வாங்கியதெனினும் பாவிக்கத் தக்க இயல்பு கொண்டது.




சீன விளக்கு..

திரியோடிருக்கும் பீங்கான் மூலப்பொருளால் ஆக்கப்பட்ட சீன விளக்கு

சீன விளக்கு

அச் சிறு விளக்கின் பிரிவுகள்...

கீழே வருவது சுட்டி விளக்கு. மண்ணினால் ஆக்கப் பெறும் இவை வண்ணங்கள் தீட்டி அழகூட்டப் படுவன. சிட்னியிலுள்ள இந்தியக் கடைகளில் இவ்வாறான சுட்டி விளக்குகளை பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கலாம். கார்த்திகை விளக்கீடு, மற்றும் சுப தினங்கள், கொண்டாட்டங்களின் போது அலங்காரத்துக்காக வைக்கப் படுவனவாகவும் இன்று வரை பரவலாகப் புளக்கத்தில் இருப்பவை. குறிப்பாக இந்திய; பாரத குஜராத்தி, ராஜஸ்தான் மாநிலத்து மக்கள் இதனைப் பரவலாக பாவிக்கிறார்கள். தமிழ் நாட்டு தமிழர்களும் ஈழத்து தமிழர்களும் தான்.


சுட்டி விளக்கும் அதை தாங்கும் அலங்கார பீடமும்

சுட்டி விளக்கின் இன்னொரு வடிவம்


சுட்டி விளக்கு வைக்கப்பட்ட நிலை

சுட்டி விளக்கு; பக்கவாட்டுத் தோற்றம் பீடத்தோடு....

இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளுயரக் குத்து விளக்குகள், பாவை விளக்குகள் போன்றனவும் குத்து விளக்கின் வடிவில் ஒளி உமிழும் பகுதி மிகச் சிறிய மின் குமிழால் கச்சிதமாக இணைக்கப்பட்டு தூரத்தில் இருந்து பார்ப்போருக்கு எண்னையும் நெருப்பும் இல்லாமலே குத்து விளக்கு தீபம் போன்ற மின்சாரக் குத்து விளக்குகளும் ஒளிகாகவும் அழகுக்காகவும் பாவிக்கப் படுவன என்பது குறிப்பிடத் தக்கது.

இலக்கிய வரலாற்று மூலங்களில் விளக்கின் பாவனை பற்றிய சான்றுகள் பல பரவலாக சங்க இலக்கியங்களிலும் தேவார பாசுரங்களிலும் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. இவைகள் எல்லாவற்றையும் சொல்லப் புறப்பட்டால் அவை தொடர்கதை எனவே விரியும் ஆபத்து இருப்பதோடு அது தான் சொல்ல வந்த விடயத்தில் இருந்து விலகிப் போகும் அபாயமும் இருப்பதால் இத்தோடு நிறுத்துவது உசிதம் என்று தோன்றுகிறது.

என்றாலும் போவதற்கு முன் சிட்னியில் பரமற்றா நகரிலுள்ள 
Brislington Medical and Nursing மியூசியத்தில் காணப்பட்ட அவுஸ்திரேலிய குடியேற்ற காலத்தில் பயன் படுத்தப்பட்ட  ஹரிக்கேன் விளக்கின் படத்தோடு இந்தப் பதிவை நிறைவு செய்து கொள்ளுகிறேன். இப்புகைப்படம் 15.6.2017 அன்று எடுக்கப்பட்டது.






Wednesday, 6 December 2017

பந்திப்பாய் - 5 -

ஒரு பொருள் பற்றி பேசப்புறப்படும் போது அதனைப் பின்பற்றி பண்பாடு சார்ந்த பல பின் புலங்கள் புலப்படத் தொடங்கும். பந்திப்பாய் குறித்த இந்தக் குறிப்பினை எழுதப் புகும் போது மக்கள் தம் உணவுப்பழக்க வழக்கங்கள், விருந்தோம்பும் முறை, இலக்கியங்கள் குறித்து வைத்துள்ள உணவுப் பண்பாடு குறித்த செய்திகள்,... என இப்படி விரிந்து கொண்டே போகும்.

பந்திப்பாய் என்ற கட்டுக்குள் நின்று கொண்டாலும் கூட பாயின் பண்பும் மூலப்பொருள், செய்முறை, தொழில் குறித்த துறை, பயன் பாடு, மக்கள் தம் வாழ்வியலில் அதன் இடம் என இன்னொரு விதமாக நீளும்.

இவைகளைத் தவிர்த்து சிறு குறிப்பினைத் தருவதென்னவோ மனதுக்கு திருப்தியைத் தருவதில்லை. அதனால் எங்கிருந்து இதனை எடுத்துச் செல்வதென தெரியவில்லை. 

இந்தப் பாய்கள் இன்று புழக்கத்தில் இல்லை. அதனைச் செய்வாரும் இல்லை. உணவுப் பண்பாட்டின் ஓரங்கமாக விளங்கிய இவை சபையோர் நிலத்தில் சப்பாணி வெட்டி இருந்து உணவுண்ணுவதற்குப் பயன் படுத்தியது.

மக்களிடம் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுவிட்ட பல மாற்றங்களே இன்று இவை புழக்கத்தில் இருந்து மறைந்து போனமைக்கு முக்கிய காரணம். முன்னொரு காலத்தில் கொண்டாட்ட காலங்கள் குறிப்பாக திருமண நாள்கள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்ற நிகழ்வுகளின் போதும்; அந்தியேட்டி, திவசம் போன்ற நினைவு நாள்களின் போதும் சொந்த மனைகளில் அக்கம் பக்கத்தில் உள்ள அயலாரும் இரத்த சொந்தங்களுமாக முதல் நாள் இரவு மரக்கறிகள், பழ வர்க்கங்கள், தேங்காய், புளி போன்ற இதர பொருட்களும் மனிதர்களுமென வீடு களை கட்டி இருக்கும்.

 அவர்களுக்கான தேநீர், விருந்துபசாரங்களும் பாக்கு வெற்றிலை உபசரிப்புகளுமாக இன்னொரு நிகழ்வு நடந்த வண்ணமாக இருக்க, பலகார தயாரிப்புகள், பலகாரச் சூடுகளும் மரக்கறி வெட்டுதல், தேங்காய் துருவுதல், சமைத்தலுக்கான முன் ஏற்பாடுகளைச் செய்தல் என வீடு களை கட்டிப் போயிருக்கும். குழந்தைகள், சிறுவர்கள் ஆங்காங்கே விளையாடிய வண்ணமும் பெற்றோர் பாதுகாவலர் இடையிடையே அவர்களின் நடமாட்டங்களைக் கண்காணிப்பவர்களாகவும் விளங்குவர்.

அக்கம் பக்கத்தாரும் உறவினர்களும் கதைகள் பேசி கலந்துரையாடிய படி வேலைகளைப் பகிர்ந்து செய்த படி இருப்பர்.வீட்டுச் சொந்தக் காரர் அக்கறையோடு நேரத்துக்கு அவருக்கான உபசாரங்களில் ஈடுபட மறக்க மாட்டார்கள்.

இவ்வாறாக சமைக்கப் படும் பண்டங்கள் விஷேஷ நாளின் நிகழ்வுகளின் பின்னால் விருந்தாளிகளுக்கு விருந்தளிப்பதற்கு தயாராக இருக்கும். 

அந்த விருந்தோம்பலின் ஒரு பிரதான பகுதி இந்தப் பந்திப் பாய். நிலத்தில் பந்திப் பாய் விரித்து; வாழை இலை போட்டு; முதலில் குழந்தைகள், பின்னர் ஆண்கள், அதன் பின் பெண்கள் என வரிசையாக அமரப் பண்ணி நான்கு கிண்ணங்கள், மற்றும் மூன்று கிண்ணங்கள் ஒட்டி இருக்கும் கறிக் கிண்ணங்களை; பெரிய பாத்திரங்களில் சோறு அப்பளம் என இவைகளை எடுத்து உபசரித்த படி பெண்கள் எல்லோருக்கும் உணவு பரிமாறுவார்கள்.  

உணவு பரிமாறுவதிலும் முறைகள் உண்டு. ‘ஊரார் வீட்டு நெய்யே; என் பெண்டாட்டி கையே’ என வழங்கும் பழமொழி ஒரு காலத்தில் இந்தப் பந்திப்பாயில் நிலத்தில் இருந்து உணவு உண்ணும் செயல் எத்தனை பிரபலமாகப் புழக்கத்தில் இருந்ததென்பதற்கு அச்சொட்டான சாட்சி. 

இதன் பொருள் என்னவெனில் ஒரு வீட்டில் ஒரு விசேட நிகழ்வு நடைபெறும் போது அயலார் வந்து உதவும் மரபுக்கேற்ப விருந்துபசாரம் நடக்கும் போதும் அயல் வீட்டுப் பெண்மணி உணவு பரிமாறும் செயலில் ஈடு பட்டிருப்பார். அந்தப் பந்தியில்  அப் பெண்மணியின் கணவரும் அமர்ந்துணவு உண்ணும் போது அவரின் மனைவிக்கு தன் கணவரை உபசரிக்கும் அல்லது உணவு பரிமாறும் சந்தர்ப்பம் கிட்டுமல்லவா? அப்போது தாராளமாக, ‘இலவசமாக’  ‘உபசாரம்’ செய்யலாம் தானே! அதனால் தான் அந்தப் பழமொழி வழக்கில் வந்தது.

இப்போது பந்தி வைத்து உணவு பரிமாறும் வழக்கம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மருவி வருகிறது. சில வேளைகளில் கிராமப் புறங்களில் அல்லது சிறு கொண்டாட்டங்களின் போது சிற்றூர்களில் இவ்வாறு நிகழக் கூடும்.

இப்போது கதிரை மேசைகளில் சில்வர் மற்றும் பீங்கான் தட்டுகளில் ஏற்கனவே ஓடர் செய்து விலைக்குப் பெற்றுக் கொண்ட உணவுப் பதார்த்தங்களை பொதுவாக வைப்பதும்; விருந்தாளிகள்  தாமாகவே தமக்கான உணவுகளை தமக்கு பிடித்த அளவுகளில் தாமே தமக்குப் பரிமாறிக் கொள்ளும் வண்ணம்  அமைந்திருப்பதுமாக ஒரு வாழ்க்கைமுறையே மாறி இருக்கிறது.

இதன் காரணமாக அன்னியோன்யமாக இருந்த அயலார் உறவினர் அன்பு,உறவு, நட்பு, ஒருவருக்கு ஒருவர் கைகொடுக்கும் இயல்பு, உணர்வு பூர்வமாக ஒருவரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் உள்ளார்ந்தஅக்கறை கலந்த அன்பு... என இவைகளும் வேறொரு கட்டத்துக்கு நகர்ந்து விட்டன.

பந்திப் பாய்; 50 - 55 வருடங்கள் பழமையானது

பந்திப்பாய் நீளபாட்டுக்கு...

அதன் பக்கவாட்டுத் தோற்றம்

பந்திப்பாய் இன்னொரு தோற்றம்

பந்திப்பாய்; நெருங்கிய தோற்றம்

இந்தப் பந்திப் பாய்களும் ஏனைய பாய்களைப் போல அதே மூலப் பொருள்களினாலேயே ஆக்கப் பட்டவை. இதன் ஒரே ஒரு வேறுபாடு என்னவெனில் இதுஅகலம் குறைந்தவையாகவும் நீளம் மிக நீண்டவையாகவும் காணப்படுவது தான்.

விருந்தாளிகள் நீளமாக ஒரு வரிசைக்கு அமர்ந்து உணவுண்ண பயன் படும் வண்ணம் அமைந்தது.

குளக்கரைகளில் விளையும் ஒருவித கோரை நாணல் புல்லினைப் பதப்படுத்தி சாயம் பூசி, பின்னப்படும் இப் பந்திப் பாய்கள் சுருட்டி வைக்கத் தக்கவையாகவும் ஓரங்கள்  சிலும்பாமல் துணியினால் மடித்துத் தைக்கப் பட்டவையாகவும் அழகியல் வேலைப்பாடுகள் கொண்டவையாகவும்  காணப்படும்.

மேலே படத்தில் காட்டப்பட்டிருக்கிற பந்திப் பாய் சுமார் 50, 55 வருடங்கள் பழமையானது. எனக்கு முதல் சந்ததியினர் தம் வீட்டு நிகழ்வுகளின் போது பயன் படுத்தியது. போர் காலங்களின் பின்னரும் பாதுகாப்பாக நம்மோடு இன்றும் நிலைத்திருப்பது....அண்மையில் தாயகம் சென்றிருந்த போது காணக்கிட்டியது.

          (படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன். ( யாழ்ப்பாணம். 11.10.2017)