Wednesday, 20 December 2017

நீர் குவளைகள் மற்றும் நீர் தாங்கிகள் - 15 -

நீர் குவளைகள், நீர் தாங்கிகள் என்றதும் நினைவுக்கு வருவன வாளி, குடம், கூசா போன்றன. பாரம்பரிய வடிவங்கள் கொண்ட இந் நீர்தாங்கிகள் இன்று பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் பிளாஸ்டிக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு சந்தைக்கு வருவதால் உலோகங்கள் மண்பானைகள் பெற்றிருந்த இடங்கள் காலாவதியாகிப் போகின்றன.

வெளி நாடுகளிலோ எனில் வேறு வேறு வடிவங்களில் பீங்கான்களிலும் கண்ணாடிகளிலும் எண்ணிறைந்தவையாக; - தோற்றத்திலும் வண்ணங்களிலும் - பெருவாரியாக பிளாஸ்டிக்கிலும் விற்பனைக்கு வருகின்றன. எனாமல் பேணிகள் ஆங்கிலேயர் அவுஸ்திரேலிய நாட்டைக் கைப்பற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருந்த  18ம் 19ம் நூற்றாண்டுகளில் எனாமல் மற்றும் பீங்கான் குவளைகள் மற்றும் பாத்திரங்கள் புளக்கத்தில் இருந்தமையை இங்குள்ள மியூசியங்களில் வைக்கப்பட்டிருக்கிற காட்சிகளில் இருந்து அறிய முடிகிறது. குடித்து விட்டு எறிந்து விடும் வகையிலான பேப்பர் பிளாஸ்டிக் குவளைகள், போத்தல்கள் போன்ற பொருட்கள் இன்று பெருவாரி.

செம்பு

சில செம்புகளுக்கு சிறிதாக தாங்கி உண்டு; செம்பின் அடிப்புறம்.

வாயகன்ற செம்பு

தாங்கி இல்லாத செம்பு; அடிப்புறம்

அளவில் பெரிய; வாயொடுங்கிய செம்பும் அளவில் சிறிய; வாய் அகன்ற செம்பும்.

பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் செம்புகள்...

தூக்குச் செம்பு

தூக்குச் செம்பின் பிரிவுகள்.

தூக்குச் செம்பு; இன்னொரு ரகம்

இத் தூக்குச் செம்பின் பிரிவுகள்...

இருவகை தூக்குச் செம்பு...

’லோட்டா’ என அழைக்கப் படும் நீர் குவளை

அன்னாந்து குடிகும் மூக்குப் பேணி

மூக்குப் பேணி

குடம்

குடம் நெருங்கிய தோற்றம்

குடமே தான்...

( இக்குடம் யாழ் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை உருவாக்கி வரும் பழம்பொருள் கண்காட்சியகத்தில் 16.10.2017 அன்று எடுத்தது.)

நீர் தாங்கி; சிங்கள பாணி

சிங்கள பாணி நீர் தாங்கிகள்; பல்வேறு அளவுகளில்..
மேலே உள்ள கடைசி இரண்டு ஒளிப்படங்களும் அரச கலைப்பொருள் காட்சிச் சாலையும் விற்பனை அரங்குமான கொழும்பில் உள்ள ’லக்ஸல’ என அழைக்கப்படும் அரசாங்கத்துக்குச் சொந்தமான கலைப்பொருள் கூடத்தில் 5.10.2017 அன்று எடுக்கப்பட்டது. இவற்றின் கை பிடிகள் வேறு பட்டிருத்தலும் தோற்றத்தில் சற்றே ஒடுங்கி நீண்டு கால்களைக் கொண்டமைந்தவையாக அமைந்திருத்தலும் காண்க.

( 22.12.17: சிறுகுறிப்பு:
சிங்கள மக்களினது கலைப்பொருள்கள் பற்றிய பதிவொன்று என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் இன்று இடப்பட்டிருக்கிறது. காண விரும்பின் கீழே வரும் லிங்கில் சென்று காணலாம்.)

லக்ஸலா...

http://akshayapaathram.blogspot.com.au/2017/12/blog-post_22.html

நிற்க,
முன்னர்  காட்டப்பட்டிருப்பவை இந்திய இலங்கை போன்ற நாடுகளில் நாம் பாரம்பரியமாகப் பயன் படுத்தி வந்த நீர் தாங்கிகள் மற்றும் குவளைகள். செம்பு, வெள்ளி, பித்தளைபோன்ற உலோகங்களில் பரம்பரை பரம்பரையாக பயன் படுத்தத்தக்கதான காத்திரத்தோடும் கலை நயத்தோடும் பல்வேறு அளவுகளிலும் பல்வேறு தோற்றப்பாடுகளோடும் அவை அமைக்கப் பெற்றுப் பயன் படுத்தப்பட்டு வந்தன.

அதே வேளை எனாமல், செம்பு, ஈய உலோகங்களிலும் குவளைகள் செம்பு போன்றவை பாவனையில் இருந்தன. சில்வரின் பாவனை பெரு வரவேற்பைப் பெற்ற இன்னொரு உலோகமாகும். அவை ரம்லர்களாக குடங்களாக, செம்புகளாக தட்டுகளாகஎன பல்வேறு வடிவங்களில் அன்றாடப்பாவனைக்கு புழக்கத்தில் இருந்தன. இன்றும் இருந்து வருகின்றன. டபாரா ரம்லர் என்பது தனித்துவமான தோற்றப்பாடுடய இந்தியச் சிறப்பினை கூறும் ஒரு வித குவளை வடிவமாகும்.

சாதிப்பாகுபாடுகள் நிலவிய யாழ்ப்பாண சமூக அமைப்பில் குறிப்பிட்ட சாராருக்கு தேங்காய் திருவிய சிரட்டையில் நீர் ஆகாரங்கள் கொடுக்கப்பட்டமையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இத்தகைய பொருளாதாரப் பண்பாடுகள் நம் நாட்டு மக்களின் குண இயல்பை; வாழ்க்கை முறையை; பண்பாட்டை; நடத்தைகளை ஆராய்வோருக்கு சிறந்த வழிகாட்டியாகும்.

குடத்தைப் போலவே வாளி இன்னொரு வகையாக தண்ணீரைச் சேகரிக்க உதவின. கிணற்றில் தண்ணீர் அள்ளவும் நீரைச் சேகரித்து வைக்கவும் தண்ணீர் அள்ளிக் குளிக்கவும் இலகுவாக வாயகன்று இருந்ததால் அவற்றின் பாவனை தண்ணீர் குடங்களை விட பிற்காலங்களில் மக்களிடையே பெரு வரவேற்பைப் பெற்றவையாக இருந்தன.


செம்பு ஜக் - தற்காலம்

செம்பு ஜக் - இன்னொரு வகை - தற்காலம்


செம்பு உலோகத்தில் தண்ணீர் போத்தல்

செம்பு உலோகக் குவளை

செம்பு உலோகக் குவளை வேறொரு வடிவம் - தற்காலம்

குவளையும் போத்தலும் - செம்பு உலோகம் -

உலோகங்களில் செம்பு உலோகம் பண்டைய தமிழர் விரும்பிய பாவனைக்கு உகந்ததென அவர்கள் அறிந்து வைத்திருந்த ஓர் உலோகமாகும். அது குறித்து ‘செம்பும் செம்பு வகைகளும்’ என்ற தலைப்பில் என் தாய் வலைப்பதிவான அக்ஷ்ய பாத்திரத்தில் ஏப்பிரல் 2016ல் எழுதிய பதிவொன்று இருக்கிறது. அறிய விரும்பியவர்கள்கீழ் வரும் இந்த லிங்கில் சென்று காணலாம்.

செம்பும் செம்பு வகைகளும்

http://akshayapaathram.blogspot.com.au/2016/04/4.html

பன்னீர் செம்பு குறித்து அறிய கீழ் வரும் அக்ஷ்யபாத்திரத்தில் லிங் உதவக்கூடும்...

பன்னீர் செம்பு

http://akshayapaathram.blogspot.com.au/2012/11/blog-post_21.html


அவ்வாறே பாரம்பரியமான நீர் தாங்கியான கூஜா (கூசா) என அழைக்கப்படும் ஒரு வகையான ஒடுங்கிய நீண்ட வாயையும் அகன்ற குடம் போன்ற அடிப்பகுதியையும் கொண்ட ஒரு வகைப் பாரம்பரிய நீர் தாங்கி பற்றி என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 13.11. 2012 அன்று ஒரு பதிவு இட்டிருந்தேன். ஆர்வமுள்ளவர்கள் கீழ் வரும் அந்த லிங்கில் சென்று விபரங்களைக் காணலாம்.

கூசா

http://akshayapaathram.blogspot.com.au/2012/11/blog-post.html


பீங்கான் கோப்பைகள், கேத்தில்...

கலை நயம்....

அழகியலும் கற்பனையும் இணைந்த தோற்றம்....

கேத்திலின் மறுவளம்...

பீங்கான் கோப்பை குடும்பமாக....

பீங்கான்களின் பாதுகாப்பு....

மேலே காட்டப் பட்டிருப்பது மேலைத் தேயத்தவரின் பீங்கான்களில் அவர்கள் பாவிக்கும் நீர் தாங்கிகள் மற்றும் குவளைகளின் ஒரு மாதிரி வடிவம். கிளாஸ் பீங்கான், எனாமல் மூலப்பொருட்களால் ஆக்கப்பட்ட முடிவுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். நம்மிடையையும் பிற்காலங்களில் இவை மிகப் பரவலாக புளக்கத்தில் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. தேநீர் கோப்பி முதலானவைகளை அவர்கள் இதில் அருந்தினர். அவற்றை மிகுந்த கலை நயத்தோடு ஆக்கி அவற்றில் அவர்கள் தேநீரோ கோப்பியோ அருந்தும் செயல் கலை அழகியலோடு கூடியது.

தேநீர்,கோப்பி முதலானவைகள் கேத்தலிலும் சீனி, பால் மற்றும் கலக்கும் கரண்டி முதலானவைகள் தனித்தனியாகவும், அவற்றின் வெளித்தோற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கவர்ச்சிகரமாகவும் விளங்கும் இந்தக் கூட்டை ஒரு தட்டில் ஏந்தி வந்து உரையாடிய படியே அவரவர் தம் ருசி வேறுபாடுகளுக்கேற்ப கலந்து அருந்துவது அவர் தம் பண்பாடு ஆகும்.

நம்முடய பண்பாட்டில் இருந்து வேறுபட்டு தனிச் சிறப்பான தனித்துவங்களை எடுத்துக் காட்டி நிற்கும் இப்பாண்பாட்டு அம்சங்களை விரிக்கப் புகின் அது வேறொரு இடம் நோக்கி நம்மை நகர்த்தி விடும் என்ற பயம் காரணமாக இத்தோடு இதனை நிறுத்திக் கொள்ளுகிறேன்.

வாளி, டபாரா ரம்லர், வெள்ளி மற்றும் சில்வர் குடங்கள் மற்றும் தற்கால பாவனையில் இருந்து வரும் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் மட்டைகளில் வரும் நீர் தாங்கிகள், குவளைகள் இங்கு இடம் பெறவில்லை. அவைகள் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் பொருள்களாகவும் இருக்கும் என்பது என் அனுமானம்....

விரும்புகிறவர்கள் என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 2012 செப்ரெம்பரில் பதிவிட்ட மேலைத்தேயத்தவரின் பீங்கான் குவளைகளின் அழகியல் குறித்த மேலதிக படங்களைக் கீழே வரும் லிங்கில் சென்று காணலாம்.
http://akshayapaathram.blogspot.com.au/search?q=little+bit+of+luxury


Monday, 18 December 2017

பழங்கால / தற்கால வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் - 14 -


றங்குப் பெட்டி

றங்குப் பெட்டி என அழைக்கப் படும் மேற் காட்டப்பட்டிருக்கிற பெட்டி முன் நாட்களில் ஆடைகள், பொருட்கள், பெறுமதியானவைகள் வைக்கப் பயன்பட்ட பாரமான பொருள்.

சூட்கேஸ்

மேலே காட்டப்பட்டிருக்கிற பழங்கால சூட்கேஸ் பயணங்களின் போது பரவலாகப் பயன் பட்டவை. வீடுகளிலும் ஆடைகள் வைக்கப் பயன் பட்டதுண்டு. இப்போது வேறுவகைகள் வடிவங்களில் வண்ணங்களில் மோஸ்தர்களில் கடைகளில் கிடைக்கின்றன.

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
இடம்: சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்.
திகதி: 13.10.2017.

பெண்டுலக் கடிகாரம்

பெண்டுலக் கடிகாரம்

மேலே காட்டப்பட்டிருக்கிற பெண்டுலக் கடிகாரமும் இப்போது புழக்கத்தில் இருந்து மறைந்து வருகிறது.  பற்றறிகளோ மின்சாரமோ தேவைப்படாது சாவியினால் வைன் கொடுத்து ஓடும் தன்மை கொண்ட இப் பெண்டுலக் கடிகாரங்கள்  கீழே அசைந்து கொண்டிருக்கும் பெண்டுலத்தினால்  பெண்டுலக் கடிகாரம் என்ற பெயரைப் பெற்றது. 

அவ் அவ் மணித்தியாலங்களுக்கு பெரிய முள்ளும் சின்ன முள்ளும் வருகிற போது அத்தனை மணிக்குரிய அளவில் ஓசை எழுப்பி எத்தனை மணி என்பதை உரியவர்கள் கடிகாரத்தைப்  பார்க்காமலே அறிந்து கொள்ள இயலுமாக இருப்பது அதன் சிறப்பு.

தற்காலத்து குக்கூ மணிக்கூடு அத் தன்மையை ஒத்தபடி வந்தாலும் அது பற்றறியினால் இயங்குவதும் இது சாவி கொடுத்து இயங்குவதும் தனித்துவமான அம்சங்களாகும்.

ஜேர்மன் தயாரிப்பான இப் பெண்டுலக் கடிகாரம் யாழ்ப்பாணப் பழம் பொருட்கள் விற்கும் கடை ஒன்றில் ஒளிப்படம் எடுக்கப்பட்டது.
ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
திகதி: 12.10.2017.

1973 model FORD car


1973 Model FORD car


1973 model FORD car

மேலே காட்டப்பட்டிருக்கும் கார் என் சினேகிதியின் தந்தையார் ஆசையாய் பேணி வைத்திருப்பது. அவர் லண்டனில் தன் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு 1973ம் ஆண்டு தாயகம் திரும்பியபோது புத்தம் புதிதாய் புளக்கத்துக்கு வந்த இந்தக் காரை வாங்கி வந்ததாகவும் இன்றும் ஓடும் தன்மையில் இருப்பதாகவும் அவர் பெருமையோடு குறிப்பிடுகிறார்.

ஒளிப்படம்: எடுத்தது: யசோதா பத்மநாதன்
இடம்: யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டம்.
எடுத்த திகதி: 12.10.2017.
நன்றி: உரிமையாளர் பூரணச் சந்திரன் அவர்கள்.

றலி சைக்கிள்
றலி சைக்கிள் டைனமோவுடன்...

மேலே காட்டப்பட்டிருக்கிற றலி சைக்கிள் இங்கிலாந்து நாட்டு உற்பத்தி. இலங்கையில் மிக விருப்போடும் பெறுமதியோடும் பயன்படுத்தப்பட்டு வந்த
’அந்தக் காலத்து சைக்கிள்’. இன்றும் அபூர்வமாக ஓடக்கூடிய தன்மையில் இருப்பதொன்றே அதன் தரத்துக்குச் சான்று.

மேலே காட்டப்பட்டிருக்கிற படத்தில் அச் சைக்கிள் (உந்துருளி/ ஈருருளி) டைனமோவோடு கூடிய அதன் original சீட்டோடும் carrier காணப்படுதல் காண்க.

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
எடுத்த இடம்: சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்.
திகதி: 13.10.2017.
நன்றி: உரிமையாளர். என் தம்பி. கோபி.
வாங்கு

வாங்கு

மேலே காட்டப் பட்டுள்ள வாங்குகள் இருக்க, படுக்க இன்றும் பயன் படுவது.

ஸ்ரூல்

ஸ்ரூல்

இவ்வகை ஸ்ரூல்களும் அவ்வாறே. இலகுவாக எடுத்துச் செல்ல, போட்டு இருக்க உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்க என பல்வேறு தேவைகளுக்கும் இன்றும் பயன் பட்டு வருவது.

புகைப்படம்: யசோதா.பத்மநாதன்.
இடம்: வலிகாமம் வடக்கு, வீமன் காமம்.
திகதி: 11.10.2017.
பெண்கள் சைக்கிள் (தற்கால பாவனை)
இன்றும் ஏழைகளின் தோழனாய் ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசம் இன்றி யாவராலும் பயன் படும் உந்துருளி அல்லது ஈருருளி என தமிழில் அழைக்கப் பெறும் சைக்கிள். இது பெண்களுக்கென வடிவமைக்கப் பட்டது.

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
எடுத்த இடம்: அளவெட்டி.
திகதி: 11.10.2017.

சிறு குறிப்பு:
என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 3.1.2011 அன்று ‘அற்ரைத்திங்கள் அவ் வெண்ணிலவில்’ என்ற தலைப்பில் வீட்டு உபயோகப்பொருட்கள் பற்ரிய பதிவொன்று இடப்பட்டிருக்கிறது. அதன் இணைப்பு முகவரி:

அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்

http://akshayapaathram.blogspot.com.au/2011/01/blog-post_3.html

சமையலறை சாதனங்கள் மற்றும் உபகரணங்கள் - 13 -


அரிக்கன் சட்டி

அரிக்கன் சட்டி

அரிக்கன் சட்டி என அழைக்கப் பெறும் மேற்காட்டப்பட்ட சட்டி அரிசியில் இருந்து கற்களை அகற்றப் பயன் படும் சாதனம். ”அரிசியைக் ‘கிழைந்து’ உலையில போடு” என்ற சொற்தொடர் இந்த அரிக்கன் சட்டியோடு தொடர்பு படுவது.

நெருப்பு அடுப்பில் தண்ணீர் ஊற்றி அரிசிப்பானையை கொதிக்க வைத்து விட்டு இந்த அரிக்கன் சட்டியில் தேவையான அளவு அரிசியை எடுத்து அதனுள் நீர் ஊற்றி கழுவிய பின்னர், மீண்டும் ஓரளவு - அரிசியின் மேல் ஓரிரு பங்கு தண்ணீர் இருக்கத்தக்கதாக வைத்துக் கொண்டு ஒரு வித லயத்தோடு சட்டியை ஒரு கையால் அசைத்துக் கொண்டு மறு கையால் மேலே கிழைந்து வரும் அரிசியை வேறாக்குவர். இவ்வாறு செய்கின்ற பொழுதில் - இறுதியில் அரிசியோடு சேர்ந்திருந்த கற்கள் அதன் பாரத்தின் நிமித்தம் அடியிலே தங்கும்.

சட்டியில் சிறு சிறு படிக்கட்டுகள் போல அமைந்திருக்கும் தன்மை பாரமான கல்லை கீழே வைத்திருக்க உதவும். கிழையப்பட்ட அரிசியை கொதிக்கும் உலைக்குள் போட்டு கஞ்சி வடித்தோ / வடிக்காமலோ சோறாக்குவது வழமை.

கஞ்சி வடித்தால் அக் கஞ்சியைக் கூட வீணாக்காமல் அப்போது கறிகளுக்காக தேங்காய் திருவிய சிரட்டையினுள் கஞ்சியும் உப்பும் சிறிதளவு தேங்காய் பாலும் அவிந்து வந்த சோறில் சிறிதளவும் சேர்த்து கலக்கி குடிப்பது உண்டு.

ஒளிப்படம்: யசோதா.பத்மநாதன்.
இடம்: சிட்னி ( என் சகோதரியின் சேகரம்)
எடுத்த திகதி: 04.01.2017.

தோசைத் தட்டு

தோசை சுட பயன் படும் தோசைக்கல்லு அல்லது தோசைத் தட்டு என அழைக்கப்படும் இக் கருவி இன்றும் புளக்கத்திலும் பாவனையிலும் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் பாவனையில் இருப்பது. தோசையை ஊற்றி மறுவளமாக திருப்பப் பயன் படும் உபகரணம் தட்டகப்பை என அழைக்கப் பெறும். அது தட்டையான மேற்பரப்பை உடையதால் அதற்கு அப்பெயர். (படம் எடுக்கத் தவறி விட்டேன்)

குண்டுத் தோசை சட்டி

குண்டுத் தோசை சுடும் இக் கலம் நல்லெண்ணையும் தாராளமாக விட்டு சுடப்படுவது. உழுந்தும் அரிசிமாவும் கலந்தரைத்த கலவையினால் ஆக்கப் படுவது. இன்றும் பரவலாக புழக்கத்தில் இருப்பது. நல்லெண்ணையை குழியினுள் விட்டு அதனுள் மாக்கலவையை கரண்டியினால் விட்டு வேக வைத்து குச்சி ஒன்றினால் புரட்டி வேக விட்டு எடுப்பர். எண்னை தாராளமாக இருப்பதால் அது ஒட்டும் தன்மை அற்று நல்லெண்ணையில் வேகி வரும்.

தாச்சி / இரும்புச் சட்டி

இரும்புச் சட்டி என்றும் தாச்சிச் சட்டி எனவும் அழைக்கப் பெறும் இச் சட்டி மா வறுக்க, பொரிக்க, கறிவைக்க என பல செயல்களுக்கும் பயன் படுவது.

சருவம்
கிடாரம்

மேலே காட்டப்பட்டிருக்கிற சருவமும் கிடாரமும் குளிப்பதற்கான சுடுதண்ணீர் வைக்க மற்றும் பெரிய சமையல்கள் செய்கின்ற போது பதார்த்தங்களை ஆக்கப் பயன் படுவது.

கிடாரம் ஒளிப்படம்: எடுக்கப்பட்ட இடம்: சண்டிலிப்பாய்.
திகதி: 13.10.2017.
சுளகு


சுளகு; இன்னொரு கோணம்
மேலே காட்டப்பட்டிருக்கும் சுளகு புடைக்க, கொழிக்க என பயன் படுவது. அரிசியில் இருந்து நெல்லை வேறாக்க; பதர்களை வேறாக்க; அரிசியில் இருந்து குறுனலை வேறாக்க; மற்றும் புட்டுக்கு மா குழைக்கும் போது மணி மணியாக புட்டுக்கான முடிவுப் பொருளை உருவாக்க என இதன் பயன் பாடு பலதிறப்பட்டவை.

ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சுளகுகளை வைத்திருப்பவர்கள் உண்டு.

சுளகுக்குள் இருக்கும் பொருளை மேலே உயர்த்தி கீழே இறக்கி புடைக்கும் லாவகம் ஒரு கலை. இன்றும் புளக்கத்தில் இருப்பது.
பெட்டி

கடகங்கள்

கடகம்

கடகம்
மேலே காட்டப்பட்டிருக்கும் பெட்டிகள் மற்றும் கடகங்கள் பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு எடுத்துச் செல்ல பயன் படுவது. அதன் அளவு மற்றும் தன்மைக்கேற்ப அதன் பயன்பாட்டு இயல்புகள் மாறு படும்.

பனை வளம் நிறைந்த ஈழத்தின் வடபகுதியில் இத்தகைய பொருட்கள் பல அளவுகளிலும், பல தரங்களிலும், பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் கிடைக்கும். உணவுப் பொருட்களையும் மூடு பெட்டியில் வைத்து எடுத்துச் செல்வதுண்டு. மற்றும் புட்டு இடியப்பம் போன்ற உணவுப் பொருட்கள் சுடச்சுட இவற்றில் இறக்கி வைக்கப் படும் போது அவற்றின் சூடு இந்த பனை ஓலையின் பட்டு ஒரு வித வாசத்தை கொடுப்பதோடு அதில் அமைந்திருக்கும் நீக்கல்கள் சூட்டினை பாதகமின்றி வெளிவிடும் தன்மையால் உணவுப் பொருட்கள் தனி ஒரு தரத்தில் விளங்கும்.

இயற்கையோடு வாழ்ந்த வாழ்வியலுக்கு இது வும் ஒரு உதாரணமே!

மிகச் சிறிய கொட்டைப்பெட்டியில் இருந்து மிகப்பெரிய கடகங்கள் வரை ; அடுக்குப் பிட்டியில் இருந்து நீற்றுப் பெட்டி வரை அதன் வியாபகம் பெரிது...

இவை குறித்து மேலும் சில ஒளிப்படங்கள் அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் என்ற தலைப்பில் என் தாய் வலைப்பதிவான அக்ஷ்யபாத்திரத்தில் 3.1.2011 அன்று பதிவிடப்பட்டிருக்கிறது.
ஊறுகாய் ஜாடி

ஊறுகாய் ஜாடி மேற்புறத் தோற்றம்


ஊறுகாய் ஜாடியின் இன்னொரு தோற்றம்

ஊறுகாய் ஜாடியின் மூடி

மேலே காட்டப்பட்டிருப்பவை ஊறுகாய் ஜாடிகள். பின் நாளில் இவைகள் பினைந்த புளிகளை வைக்கவும் பயன் பட்டவை. இந் நாட்களில் இதன் புளக்கம் அருகியே வருகிறது.

மேலே இணைக்கப்பட்டிருக்கிற ஒளிப்படங்களெடுத்தது: யசோதா.பத்மநாதன்.
இடம்: வலிகாமம் வடக்கு, வீமன் காமம்.
திகதி: 11.10.2017.