Monday 6 March 2017

அவுஸ்திரேலியா - புகைப்படங்கள் -

அவுஸ்திரேலியாவை நந்தவன நாடு என ( Garden Country )அழைப்பார்கள். இது பல்கலாசார நாடு என பெருமைகொள்வது போலவே  பூக்களும் பல நிறங்களிலும் - மக்களைப் போல; அவர்களின் நிற இன மத மொழி உடை உணவு பண்பாட்டு வாழ்க்கையைப் போல; பல வண்ணங்களில் பூத்திருக்கும்.

 வசந்த காலம் பூக்களுக்கு உவப்பான சீதோஷன காலம். எங்கும் சிரித்தபடி வாசத்தோடு மதில்களின் மேலும்  இயல்பாகச் சடைத்து வளர்ந்து போயிருக்கும் காட்டுமல்லிகைச் செடிகள் மற்றும் கார்டினியா பூக்களின் மரங்கள் அந்தப் பகுதி முழுவதையுமே இரவு நேரங்களில் வாசத்தை வெறுமனே பரப்பிய படி இருக்கும். எந்தப் பராமரிப்புகளும் அவைகளுக்குத் தேவைப்படுவதே இல்லை. அப்பப்போ பெய்யும் மழையில் இருந்தோ என்னவோ எங்கிருந்தோ நீரை உறிஞ்சி செழித்து வளர்ந்து மதிலை அல்லது வேலியைப் பற்றிப்படர்ந்து கேட்பாரற்று வாசத்தை அப்பிராந்தியம் வரை பரப்பிய படி நிற்கும். அதனூடேயான பாதைகளில்  பின் மாலைகளில் நடப்பது ஒரு பரவச அனுபவம்.

இவைகளுக்கு பராமரிப்பும் கொடுத்தால் எப்படி இருக்கும்? என் குடியிருப்புக்கு அண்மையில் உள்ள பரமற்ரா பூங்கா மைதானத்தில் வசந்த காலத்தில் பூத்திருக்கும் பூக்களையும் வசந்த காலக் கொண்டாட்டங்களையும் காண சுற்றுச் சூழலில் இருக்கும் மக்கள் வருவார்கள். நானும் தவற விடுவதே இல்லை.

கீழே வரும் படங்கள் 15.9.2015அன்று பரமற்ரா பூங்கா மைதானத்தில் எடுத்தவை.
















வசந்த காலக் கொண்டாட்டங்களின் போது கைவினைப்பொருட்களின் விற்பனை, குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவு விற்பனை ஐஸ்கிறீம், தேநீர் கடைகள் எனவும் இடம் களை கட்டி இருக்கும். பொதுவாக கடைகளில் வாங்க முடியாத அம்சங்களை அங்கு காணலாம். குழந்தைகளுக்கான குட்டி பஸ் , பென்னாம்பெரிய மோட்டார் சைக்கிள் சவாரி என்பனவும் உண்டு. 
கீழே உள்ள படத்தில் தூரத்தே கைவினைப் பொருள் விற்பனைக் கூடாரம் இருத்தல் காண்க.






















அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கூடாரம் ஒன்றில் இருந்த கீழே உள்ள இப்பொருள் என்னவென்று தெரிகிறதா? நாம் முத்திரை சேகரித்தல் நாணயங்கள் சேகரித்தல் என பொழுது போக்குகள் வைத்திருப்போமே! அது மாதிரி அவுஸ்திரேலிய மக்கள் கீழே உள்ள மாதிரியான கரண்டிகள், விடயங்கள் எழுதப்பட்ட பீங்கான் கோப்பைகள் போன்றவற்றைச் சேகரிப்பதைத் தம் பொழுது போக்காகக் கொண்டிருக்கிறார்கள்.

இவைகள் குறிப்பான  பிராந்தியங்களில் சிறப்பாகக் கணப்படும் ஒரு அம்சத்தை இக் கரண்டிகள் தன் நுனிப்பகுதியில் கொண்டிருக்கும். அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வினை குறிப்பதாக இருத்தலும் உண்டு. 

குறிப்பாகச் சொல்வதென்றால் ஒரு கரண்டி ஒரு வரலாறை அல்லது ஒரு வரலாற்றம்சத்தை அன்றேல் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை சொல்வதாக இருக்கும்.

நான் பார்வை இடச் சென்ற போது ஒரு கடைக்கார முதியவர் இதனை விற்பனைக்கு வைத்திருந்தார். அது ஒரு நல்ல மரத்தினால் இவற்றுக்கெனச் செய்யப்பட்ட சிறு அலுமாரியில் கச்சிதமாக அடுக்கப்பட்டு காட்சி அளித்தது.

ஒரு மனிதரின் ஆயுள்காலச் சேகரிப்பாக இருக்கும் இதை இம் மனிதர் எதற்காக விற்பனைக்காக வைத்திருக்கிறார் என்ற கேள்வி உந்த அதை அவரிடம் கேட்டேன்.

அவர்,அது தன் மனைவியினுடய மிக ஆர்வத்துக்குரிய சேமிப்பாக இருந்ததென்றும்; அவர் இப்போது காலமாகி விட்டதாகவும்; தாம் குடியிருந்த வீடு பிள்ளைகளுக்குக் கைமாறித், தானும் முதியோர் விடுதிக்குச் செல்ல இருப்பதால் இவற்றைத் தான் எங்கு வைப்பது என்று தெரியவில்லை என்றும்; அதனால் விற்பனைக்கு எடுத்து வந்ததாகவும்; எனக்கு, இத்தனை ஆர்வத்தோடு அதன் தார்ப்பரியத்தை அறிந்து கேட்கும் காரணத்தால் அதனை நான் வாங்குவதாக இருந்தால் இரண்டு கூறுகளையும் தான் $50.00 டொலர்களுக்குத் தருவதாகவும் சொன்னார்.

வாங்கி வந்து விட்டேன்.

இப்போது எனக்கிதனை எங்கு வைப்பது என்று தான் தெரியவில்லை. ஆனால் அதில் இருக்கும் ஒவ்வொரு கரண்டியும் ஒவ்வொரு கதைகளைச் சொல்லும் வரலாறை தன்னுள் உள்ளடக்கி இருக்கிறது.

ஆனால் எப்போது இதனைப் பார்க்கின்ற பொழுதிலும் அந்த முதியவரையும் பிற்கால வாழ்வின் விழிப்பினையும் அது வாங்கி வந்த சம்பவத்தையும் தான் இது  எனக்கு  இன்றும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஓய்வு கிட்டும் ஒரு நாளில் ஒவ்வொரு கரண்டியையும்  பற்றியும் - அதன் வரலாற்று விழுமியங்கள் பற்றியும் எழுத வேண்டும். அது தான் அந்த இறந்து போன அமானுஷமான சினேகிதிக்கும் அம் முதியவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறாக இருக்கும் என்று தோன்றுகிறது.











இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் நான் சொல்ல வேண்டும். இந்தப் பரமற்ரா பூங்கா மைதானம் முன்னர் காலணித்துவ காலத்தில் கவர்னர்களின் சொந்தமாக இருந்தது. அவர்கள் வழிவழியாக வசித்த வீடு இப்போது Cumberland மனநல மருத்துவ மனைக்குச் சொந்தமாக இருப்பதோடு, அங்கு அவர்கள் காலணித்துவ காலத்தில் எவ்வாறு மனநல மருத்தவமனை இயங்கியது என்பது குறித்த பொருள்களை பாதுகாப்பாகச் சேகரித்தும் வைத்திருக்கிறார்கள். இவ் அரும் பொருள் காட்சிச் சாலை வருடத்தில் செப்ரெம்பர் மாதத்தில் வரும் இரு வார இறுதிகளில் மாத்திரம் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து விடப்படும். ஆனால் கண்டிப்பாக படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருப்பதால் அவற்றை இங்கு பதிவிட முடியவில்லை.

இருந்த போதும் அதனைப் பார்க்கின்ற போது ஏற்படும் ஒரு விதமான திகீல் உணர்வு இலகுவில் மனதை விட்டு நீங்காது.

அதனோடு ஒட்டிய விதமாக ஓவியக் கண்காட்சிக் கட்டிடமும் ஒன்று அமைந்திருக்கின்றது. அங்கு ஓவியங்களைக் கண்காட்சிக்கு வைத்து விற்பனையில் வரும் வருமானத்தை இந்த மன நல மருத்துவ மனைக்கு வழங்குகிறார்கள்.

படங்கள் எடுத்தது 15.9.2015
எடுத்தவர்: யசோதா.பத்மநாதன்.

கீழே வரும் படங்கள் அதே இடத்தில்....9.2016 எடுத்தவை.



















கீழே வருவது சீனதேசத்தைப் பின்புலமாகக் கொண்ட பெளத்த மக்களின் புத்த கோயில் அமைந்திருக்கிற பிரதேசம். மிகப்பெரிய கோயிலாக அது இருக்கிறது. சில படங்கள் மட்டும் இபோது பிரசுரமாகிறது.
படம் எடுத்தது: 18.5.2009
எடுத்தவர்: யசோதா.பத்மநாதன்.






கீழே வரும் படங்கள் Culburn என்ற இடத்தில் எடுத்தது. இப் பிராந்தியம் சிட்னி நகரில் இருந்து கன்பரா மாநிலத்துக்கு வீதிவழியாகச் செல்லும் பாதையின் நடுவில் அமைந்திருக்கிறது. இப்பிரதேசம் செம்மறி ஆட்டு வளர்ப்பிலும் கம்பளி நூல் செய்கைக்கும் பெயர் போன இடம் என்பதால் ஒரு குறியீட்டின் அம்சமாக மிகப் பிரமாண்டமான இச் செம்மறி ஆட்டு அமைப்பு வீதி ஓரம் அப்பிரதேசத்தின் அம்சத்தை வெளிக்கொணர்ந்த படி நிற்கிறது.  இதன் கால்களுக்கிடையில் பெரிய விற்பனை நிலையம் அமைந்திருக்கிறது. வீதி வழியே பெரும் பயணம் மேற்கொள்ளுகிறவர்கள் இளைபாறிச் செல்ல வல்ல மையப் பகுதியாகவும் இது அமைந்துள்ளது.

கீழே உள்ள இப்படங்கள் 17.10.2009 அன்று கன்பராவில் வருடாந்தம் இடம்பெறும் பூங்காவனக் கண்காட்சிக்குச் சென்று திரும்பும் வழியில் எடுத்தது. எடுத்தவர்: யசோதா.பத்மநாதன்.






கீழே வருவன 17.10.2009இல் கன்பராவில் பூத்த பூக்களின் காட்சி.





















No comments:

Post a Comment