Tuesday 19 September 2023

சிட்னியில் சிறுவர் இலக்கிய முயற்சிகள் - 1 -

 கடந்த 10.09.2023 அன்று சிட்னியில் எழுத்தாளர் விழா நடந்தது. அதில் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியில் பல புத்தகங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.

அதிலொரு சிறுவர் இலக்கிய நூல் கண்ணையும் கருத்தையும் கவர்வதாக இருந்தது. தற்போது 50 - 60 வயதுகளுக்குள் இருக்கும் ஈழத்தமிழரின் பால்ய கால நினைவடுக்குகளில் பள்ளிப்பருவ நாட்களைத் தட்டிப்பார்த்தால் இந்தக் ‘கொசுமாமாவும் கொசுமாமியும்’ கதையும் அதற்குள் ஒழிந்திருக்கும். இன்னும் கொஞ்சம் தூசி தட்டி அவர்களை வெளியே கொண்டு வந்தால் ‘கொசுமாமாவும் கொசு மாமியும் பாயாசத்தை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தார்கள்’ என்ற அந்தக் கதை முடிவும் மறக்காமல் நினைவுக்கு வரும்.

அது நிற்க,

புலம் பெயர் நாடுகளில் தமிழை தாய்மொழியாகக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு அவ் அவ் நாட்டு கலாசார, புவியியல் நிலைகளுக்கு ஏற்ற வகையிலான குழந்தைப் பாடல்களும் கதைகளும் வெளிவந்துகொண்டு தான் இருக்கின்றன.

அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரை அதிலும் குறிப்பாக சிட்னியைப் பொறுத்தவரை தமிழ் மொழியை தம் உயர் தரத்தில் ஒரு பாடமாக அரச பாடசாலைகளில் எடுக்கும் வாய்ப்பு தமிழ் மாணவர்களுக்கு உண்டு. அதைத் தவிர தமிழ் சமூகத்தினரால் நடத்தப்படும் பாடசாலைகள் பல வார இறுதி நாட்களில் நடைபெறுகின்றன.

இந் நாடு பல்கலாசார நாடாக இருப்பதனால் தாய் மொழி அறிவை ஊக்குவிப்பதற்கான அரச  ஆதரவும் பயிற்சிப் பட்டறைகளும் வழிகாட்டி நெறிகளும் தமிழ் மொழிக்கு மாத்திரமன்றி ஏனைய பல ஆங்கில மொழி சாராத ஏனைய மொழிகளுக்கும் கிடைத்து வருகிறது.

கவிஞர் அம்பி அவர்கள் தன் ’கொஞ்சும் தமிழ்’ (2005)என்ற சிறுவர் நூலில் கங்காரு, குவாலா, மக்பை போன்ற அவுஸ்திரேலியாவுக்கே உரித்தான உயிரினங்களை மையமாக வைத்து எழுதிய பாடல்கள் நாம் நமக்கான திசையையும் பாதையையும் கண்டறிந்து, தனித்துவமான புதிய பாதையில் அவுஸ்திரேலியத் தமிழர்களாகிய  நாம் பயணிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதற்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

அவற்றின் தனித்துவ சிந்தனை கருதி அப்பாடல்களை இங்கு பதிந்து வைத்தல் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கங்காரு

முன்னிரண்டு காலைத்தூக்கி

முன்னே பாய்பவள்

பின்னிரண்டு காலில் துள்ளி

பாய்ந்து செல்பவள்

சின்னக் குட்டியை வயிற்ருப் பையில்

செருகிச் செல்பவள்

என்னைப் போன்ற அன்னையாரோ

என்று கேட்பவள்.


குவாலா

சின்ன வண்ணக் குவாலா ஒரு

செல்லப் பிள்ளை குவாலா பார்

என்னை என்னைப் பார்த்துப் பார்த்து

ஏறுகிறார் மரக்கிளையில்

வட்ட முகம் வளை செவிகள்

பட்டுமேனி பஞ்சு மெத்தை

குட்டியைப் பார் முதுகினிலே

குந்தி இருக்கும் துணிவைப் பார்

கட்டிக் கொஞ்ச ஆசை ஆனால்

கால்களைப் பார் கூர் நகங்கள்

கட்டிக் கொஞ்சும் ஆசை விட்டு

எட்ட நின்றே பார்த்திடுவோம்.


மக்பை

கக்குவா என்று கதறி நாளும்

கருத்தைக் கவரும் மக்பை - நாம்

பார்க்கும் வேளை எங்கோ பார்த்து

பாவனை செய்வதும் ஏனோ

தின்னத் தீனி தேவை என்றால்

திருடித் தின்னும் மக்பை - ஒரு

சின்னக் குருவி தீனி தின்ன

துரத்திச் செல்வதேனோ

வெய்யிலில் உலரும் வண்ணத்துணியை

விரும்பிக் கவரும் மக்பை - தான்

அயலில் கட்டும் கூட்டில் மெத்தை

அமைத்துக் கொள்ளல் ஏனோ

முட்டை இட்டு மெத்தை மீது 

மூடிக் காக்கும் மக்பை - அதன்

கிட்ட யாரும் செல்லும் வேளை

கொட்டித் துரத்தல் ஏனோ

என்றவாறு அமைந்திருத்தல் அவதானிக்கத் தக்கது. அதே நேரம் பாட்டி வடை சுட்ட கதை தற்கால சிந்தனைகளுக்கேற்றபடி கீழ் வருமாறு அமைக்கப் பட்டிருப்பதும் நோக்கத் தக்கது.

காகமும் நரியும்

பாட்டி சுட்ட வடையைத் தூக்கி 

பறந்து சென்ற காக்கையார்

காட்டில் உள்ள மரத்தின் மீது

களைத்து வந்து குந்தினார்

வாட்டுகின்ற பசியில் அங்கு 

வந்து நின்ற நரியினார்

பாட்டுப் பாட வல்ல மச்சான்

பாடு பாடு என்றனர்

சால வித்தை என்னவென்று

தானறிந்த காக்கையார்

காலில் அந்த வடையை வைத்து 

கா கா என்று பாடினார்

தன்னைக் காக்கை வென்றதென்று

தலை குனிந்த நரியனார்

என்ன செய்வோம் என்று வெட்கி

எடுத்தார் ஓட்டம் காட்டிலே 


என்றவாறு நிறைவுறுகிறது அப்பாடல். 

கவிஞர் அம்பிக்கு இணையாக பாடல்களைத் தந்ததில் வானொலிமாமா நா. மகேசன் அவர்களுக்கும் பங்குண்டு. அவருடய பாடல்கள் அவுஸ்திரேலியப் பாட்டியை படம் பிடித்துக் காட்டுகிறது.

நாங்கள் பார்த்த பாட்டியின் வடிவத்தில் இருந்து  வேறுபட்டு அக; புற மாறுபாடுகளோடு தோற்றமளிக்கும்  அவுஸ்திரேலியப் பாட்டியை இப்போது பார்ப்போமா? வானொலி மாமா காட்டும்  கவிதையால் அவர் வரைந்த  சித்திரப் பாட்டியின் தோற்றம் இது.

எங்கள் பாட்டி

பாட்டி எங்கள் பாட்டி

பல்லுக் கட்டின பாட்டி

வீட்டில் தமிழ் பேசும்

விருப்பம் உள்ள பாட்டி

சிரித்த முகப் பாட்டி

சேலை உடுக்கும் பாட்டி

அரிய கதைகள் சொல்லும்

அன்பு மிக்க பாட்டி

மச்சம் உண்ணாப் பாட்டி

மது அருந்தாப் பாட்டி

கொச்சை ஆங்கிலம் பேசும்

குறும்புக்காறப் பாட்டி


குத்து விளக்கு இரண்டு

குடமும் சின்னன் ஒன்று

பித்தளைத் தட்டு மூன்று

பெரிய படங்கள் நாலு

மூக்குப் பேணி ஐந்து

மூடு சட்டி ஆறு

பாக்கு உரலும் ஒன்று

பழைய சேலை ஏழு

தாத்தாவோடு தானும்

தனித்து இருக்கும் படமும் 

காத்துப் பெட்டி ஒன்றில் 

கட்டி வைக்கும் பாட்டி

செத்துப் போகு முன்னே

செலவுக் காசுக் காக

விற்றுப்போடு பாட்டி

விடியக் ‘கறாச் சேலில்’ ( garage sale)

என்று நானும் சொன்னேன்

எட்டிப் பிடித்தாள் பாட்டி

கொன்று விடுவேன் உன்னை

குறும்புப் பயலே என்றாள்

கட்டி அணைத்து எந்தன்

கன்னத்தோடே கன்னம் 

முட்டி முத்தம் தந்தாள்

முகம் மலர்ந்து நின்றாள்’

என்று அவுஸ்திரேலியத் தமிழ் குடும்பத்தில் பாட்டியையும் பேரனையும் கண் முன்னே நிறுத்துகிறார் வானொலி மாமா நா. மகேசன் அவர்கள்.

மேலும், தமிழரின் பாரம்பரிய உணவில் ஒன்றான பிட்டு ( புட்டு) பற்றி அவர் புனைந்த சிறுவர் பாடல் ஒன்று இப்படியாக அமைகிறது.

பிட்டு

பிட்டு பிட்டு பிட்டு

பிரிய மான பிட்டு

தட்டில் மாவை இட்டு

தட்டிக் குழைத்த பிட்டு


பிட்டு பிட்டு பிட்டு

பிரிய மான பிட்டு


அடுப்பில் பானை வைத்து

அதிலே குழலை வைத்து

தடுத்து ஆவி போக

தரமாய் அவித்த பிட்டு


பிட்டு பிட்டு பிட்டு

பிரிய மான பிட்டு


அம்மா அவித்த பிட்டு

அருமையான பிட்டு

சும்மா தின்று பாரும்

சுவையைச் சொல்லி தீரும்


பிட்டு பிட்டு பிட்டு

பிரிய மான பிட்டு.

நாம் வாழும் அவுஸ்திரேலியாவை இங்கு பிறந்த பிள்ளைகளுக்கு ‘எங்கள் நாடு’ என்று அறிமுகப்படுத்தும் அவர், அந்த நாட்டினைத் தமிழுக்கும் தமிழ் குழந்தைகளுக்கும் இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்.

எங்கள் நாடு

நாடு எங்கள் நாடு

நாம் வசிக்கும் நாடு

வீடு காடு தோட்டம்

விளங்கும் நல்ல நாடு


கடல் சூழ்ந்த நாடு

கல்வி நிறைந்த நாடு

உடல் வருத்தி உழைக்கும்

உயர்ந்த மக்கள் நாடு


அருவி பாயும் நாடு

அழகு மலை நாடு

குருவி கொக்கு கிளிகள்

குக்கு பரா நாடு


தங்கச் சுரங்க நாடு

தானியம் விளை நாடு

கங்கரு பாய்ந் தோடும்

கரும்பு வளர் நாடு


அன்பு வளர் நாடு

அவுஸ் திரேலிய நாடு

இன்பம் பொங்கும் நாடு

எவர்க்கும் நல்ல நாடு.

அம்பித்தாத்தா, வானொலிமாமா ஆகியோரின் வரிசையில் இடம்பிடிக்கும் மற்றொருவர் வேந்தனார். இளங்கோ அவர்கள். அவர் இயற்றிய அழகழகான சிறுவர் பாடல்கள் இன்று பெற்றோராக இருக்கும் பலரின் இளவயதுக் கால நினைவுகளில் இன்றும் நிலைத்திருக்கும் என்பது திண்ணம். 53 வயது வரை மட்டுமே  வாழ்ந்து மறைந்த அவர் 1992 ல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்தார். 

2004ல் அவர் இறக்கும் வரை தன்னால் இயன்ற வரை அவுஸ்திரேலியத் தமிழ் குழந்தைகளின் எதிர் காலத்திற்காகப் பாடு பட்டார். இன்று பெற்றார்களாக இருக்கும் பலரின் நினைவுகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடல் அம்மா பாடலாகும்.

அம்மா

‘காலைத்தூக்கி கண்ணில் ஒற்றிக் 

கட்டிக்கொஞ்சும் அம்மா

பாலைக்காச்சி சீனி போட்டு 

பருகத்தந்த அம்மா


புழுதி துடைத்து நீருமாட்டி

பூவுஞ் சூடும் அம்மா

அழுது விழுந்த போதும் என்னை

அணைத்துத் தாங்கும் அம்மா


அள்ளிப் பொருளைக் கொட்டிச் சிந்தி

அழிவு செய்த போதும்

பிள்ளைக் குணத்தில் செய்தாள் என்று

பொறுத்துக் கொள்ளும் அம்மா


பள்ளிக் கூடம் விட்ட நேரம் 

பாதி வழிக்கு வந்து

துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கி

தோளில் போடும் அம்மா


பாப்பா மலர் பாட்டை நானும்

பாடி ஆடும் போது

வாப்பா இங்கே வாடா என்று

வாரித் தூக்கும் அம்மா’.

அது போல அதே தாள லயத்தில் ஒரு தந்தையர்க்கான பாடலை அவர் அவுஸ்திரேலிய தந்தைமாரை நினைவில் வைத்து புனைந்திருக்கிறார். அவுஸ்திரேலியத் தமிழ் தந்தையரை நினைவுறுத்தும் அந்தக் குழந்தைப் பாடல் இது.

அப்பா

பாசமாக எனக்கு வீட்டில்

பாடம் சொல்லும் அப்பா

நேசமாக என்னைத் தூக்கி

நெஞ்சில் போடும் அப்பா


கிறிகெற் சொக்கர் என்று

கிழமை தோறும் என்னை

குறித்த நேரம் எல்லாம்

கூட்டிச் செல்லும் அப்பா


வயலின் படி நீயென்று

வாரம் தோறும் என்னை

பயில விட்டுப் பக்கத்தில்

பார்த் திருக்கும் அப்பா


தள்ளி நானும் சென்றால்

தானே ஓடி வந்து

அள்ளி என்னைத் தூக்கி

அணைத்துக் கொள்ளும் அப்பா


எனக்கு விருப்பம் என்று

இருந்து அடம் பிடித்தால்

சினக்க விருப்பம் இன்றி

சிரித்துக் கொள்ளும் அப்பா.

அது போல அவுஸ்திரேலியாவுக்கே உரித்தான உயிரினமான குவாலாவைப் பார்த்து குழந்தைகளுக்காக அவர் இயற்றிய பாடல் ஒன்று இப்படியாக மலர்கிறது.

குவாலா குவாலா குவாலா

காலைப் பார்த்தால் கட்டை

காதைப் பார்த்தால் வட்டம்

வாலைப் பார்த்தால் இல்லை

வடிவாய் பார்த்தால் குவாலா


குவாலா குவாலா குவாலா


மெல்ல மெல்ல அசையும்

மெதுவாய் இலையைத் தின்னும்

சொல்லத் தேவை இல்லை அதன்

சோம்பல் தனைத்த நானும்


குவாலா குவாலா குவாலா


குட்டியை முதுகில் சுமக்கும்

குளிரிலும் மரத்தில் இருக்கும்

எட்டிப் பிடிக்கப் போனால்

இன்னும் மரத்தில் ஏறும்.

இவ்வாறாக தமிழ் குழந்தைகளுக்கான அவுஸ்திரேலியக் குழந்தைத் தமிழ் இலக்கியம் சிறு சிறு எட்டு வைத்து, குறு குறு நடை நடந்து, தன் தனித்துவத் தமிழ் பாதையில் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது.

தொடரும்...

No comments:

Post a Comment