Saturday, 23 September 2023

சில சிறுவர் பாடல்கள் - 3 - இணையத்தில் இருந்து....

1.

 ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு

எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள்.


ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி

நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்

ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை

தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ.


உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக

எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி

ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே

பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே


2.

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்..

காணாத இடமெல்லாம் காணப்போனேன்..

 

கண்டு வந்த புதுமைகள்சொல்லக் கேழும்...

செட்டியார் வீட்டில் கல்யாணம்..

சிவனார் கோவிலில் விழாக்கோலம்..

மீன் பிடி துறையில் சனக்க்கூட்டம்...

கண்டிப்பக்கம் குளிரோ கடுமை..

காங்கேசந்துறையில் வெயிலோ கொடுமை

 

அப்பா மாமா அத்தான் கொழும்பில்

அவர்கள் சுகத்தை அறிவீரோ....

 

பொங்கல் அன்று வருவாராம்

புத்தகம் கொண்டு வருவாராம்

பந்தும் கொண்டு வருவாராம்

பாவை உனக்கு தருவாராம்...

 

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்..

காணாத இடமெல்லாம் காணப்போனேன்.


3.

பவளக்கொடி


பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்

பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்

அங்கவர்க்கோர் நாளில் அடுத்த துயர் கேளீர்

பாற்குடம் சுமந்து பையப் பைய நடந்து

சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது


பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்

முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி

கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே

புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு

குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து

விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே


முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை

வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி

வாசனை செருப்பு வாங்குவேனே விரும்பி


சரிகைச் சேலை பாரீர் தாவணியைப் பாரீர்

என்று யாரும் புகழ்வார் என்னை யாரோ இகழ்வார்

வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து

கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே


பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்

அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்

சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்

பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று

சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்


பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு

மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது


கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்


ஆக்கம் : கல்லடி வேலுப்பிள்ளை


4.

கத்தரித் தோட்டத்து வெருளி


கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று

காவல் புரிகின்ற சேவகா! - நின்று

காவல் புரிகின்ற சேவகா!


மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்

வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்

வேலை புரிபவன் வேறுயார்?


கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்

காவல் புரிகின்ற சேவகா! - என்றும்

காவல் புரிகின்ற சேவகா!


எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக

ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்

ஏவல் புரிபவன் வேறுயார்?


வட்டமான பெரும் பூசினிக்காய் போல

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்

மஞ்சள் நிற உறு மாலைப்பார்!


கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு

கைகளில் அம்பொடு வில்லைப்பார்!


தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்

சோகிபோலே பெரும் பல்லைப்பார்!


கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய

கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா

கட்டை உடைவாளின் தேசுபார்!


பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்

பொல்லாத பார்வையுங் கண்டதோ ?


வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி

வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே


கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு

கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்

கத்திக் கத்திக் கரைந்தோடுமே


நள்ளிரவில் வரும் கள்வனுனைக் கண்டு

நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி

நடுநடுங்கி மனம் வாடுமே


ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்

ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல

ஏவற்காரன் நீயே யென்னினும்


ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே

ஆவதறிந்தன னுண்மையே - போலி

ஆவதறிந்தன னுண்மையே


தூரத்திலே உனைக் கண்டவுடம் அஞ்சித்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்

துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்


சேரச் சேரப் போலி வேடக்காரனென்று

தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று

தெரிய வந்ததுன் வஞ்சகம்


சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்

தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்

தேசத்திலே பலர் உண்டுகாண்


அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா

அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்

அறிவு படைத்தனன் இன்றுநான்.


ஆக்கம்: நவாலியூர் சோமசுந்தரப்புலவர்


5.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!


கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!


பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்

பச்சையரிசி இடித்துத் தெள்ளி


வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல

மாவைப் பதமாய் வறுத்தெடுத்து


வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே

வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து


தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்

சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு


வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி

வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்


பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே

பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே


பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி

போட்டுமா வுருண்டை பயறுமிட்டு


மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்

மணக்க மணக்கவா யூறிடுமே


குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே

குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து


அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை

ஆடிப் படைப்பும் படைப்போமே


வண்ணப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே

வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே


அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க

ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே


வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல

மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்


கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்

கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே


ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!


கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!


ஆக்கம்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்


6.

குருவி


குருவி ஒன்று மரத்திலே

கூடு ஒன்றைக் கட்டியே

அருமைக் குஞ்சு மூன்றையும்

அதில் வளர்த்து வந்தது


நித்தம் நித்தம் குருவியும்

நீண்ட தூரம் சென்றிடும்

கொத்தி வந்த இரைதனை

குஞ்சு தின்னக் கொடுத்திடும்


குருவி தந்த இரையினால்

குஞ்சு மெல்ல வளர்ந்தன

சின்ன இறகு இரண்டுமே

சிறப்பாய் வளரத் தொடங்கின


தனது குஞ்சு பறப்பதை

தானும் பார்க்க ஆவலாய்

தந்தை குருவி சொன்னது

தனயன் பறக்க வேண்டுமாம்


இப்ப என்ன அவசரம்

இறக்கை நன்கு வளரட்டும்

இயல்பாய் குஞ்சு பறப்பதை

இரசிக்கும் காலம் வந்திடும்


சின்ன இறகு வளர்ந்தபின்

சிறப்பாய் பறக்க முடியுமே

இன்றே பறக்க விரும்பினால்

இறப்பில் முடியக் கூடுமே


தாய்க் குருவி சொன்னதை

தடுத்தே தந்தை சொன்னது

எனக்குப் புத்தி சொல்லிடல்

எருமை உனக்குத் தகுதியோ


குஞ்சு நலனைக் கருதியே

குருவி சொன்ன கருத்தினை

உதறித் தள்ளித் தந்தையும்

உடன் பறக்கச் சொன்னது


தந்தை சொன்ன சொல்லினால்

தமது சிறகை விரித்துமே

பிஞ்சுக் குஞ்சு மூன்றுமே

பிரிந்து பறக்கத் தொடங்கின


எந்தன் குஞ்சு பறப்பது

என்ன அழகு என்றுமே

தனது குஞ்சு பறப்பதை

தந்தைக் குருவி ரசித்தது


சீராய் இன்னும் வளர்ந்திடாச்

சிறகால் பறந்த குஞ்சுகள்

சிறிது நேரம் பறந்ததும்

சிறிது களைப்புக் கண்டன


வளியின் வேகம் தாங்கிட

வழி இல்லாமல் குஞ்சுகள்

வானை விட்டும் விழுந்தன

வழியில் உயிரை விட்டன


அழகுக் குஞ்சு இறப்பினால்

அப்பன் குருவி துடித்தது

அருமை மனைவி உரைத்தது

அதனின் காதில் ஒலித்தது.


நன்றி: யாழ் இணையம்


7.

அம்மா இங்கே வா வா


அம்மா இங்கே வா! வா!

ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறு போட்டு

ஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்,

ஊரில் யாவர் உள்ளார்?

என்னால் உனக்குத் தொல்லை

ஏதும் இங்கே இல்லை

ஐயமின்றி சொல்லுவேன்

ஒற்றுமை என்றும் பலமாம்

ஓதும் செயலே நலமாம்

ஔவை சொன்ன மொழியாம்

அஃதே எனக்கு வழியாம்.


8.

பச்சைக் கிளியே வா வா


பச்சைக் கிளியே வா வா!

பாலும் சோறும் உண்ண வா!

கொச்சி மஞ்சள் பூச வா!

கொஞ்சி விளையாட வா!

பைய பைய பறந்து வா!

பாடி பாடிக் களித்து வா!

கையில் வந்து இருக்க வா!

கனியருந்த ஓடி வா!


9.

சின்னச் சின்ன பூனை


சின்னச் சின்னப் பூனை

சிறந்த நல்ல பூனை

என்னைப் பார்த்துத் துள்ளும்

எங்கள் வீட்டுப் பூனை

வட்டமான கண்கள்

வண்ணமான செவிகள்

கட்டையான கால்கள்

காட்டும் நல்ல பூனை

நாயைப் பாத்துச் சீறும்

நகத்தால் மரத்தைக் கீறும்

பாயப் பதுங்கி ஓடும்

பந்தை உருட்டி ஆடும்

உண்ணுஞ் சோறும் பாலும்

ஊட்டி வளர்த்த பூனை

கண்ணைப் போன்ற பூனை

கட்டிக் கரும்புப் பூனை


10.

கைவீசம்மா கைவீசு


கை வீசம்மா கை வீசு…

கடைக்குப் போகலாம் கை வீசு…

மிட்டாய் வாங்கலாம் கை வீசு…

மெதுவாய் தின்னலாம் கை வீசு…

சொக்காய் வாங்கலாம் கை வீசு…

சொகுசாய் போகலாம் கை வீசு…

கோயிலுக்குப் போகலாம் கை வீசு…

கும்பிட்டு வரலாம் கை வீசு


11.

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு


சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சாயக் குயிலே சாய்ந்தாடு

சோலைக் கிளியே சாய்ந்தாடு

சுந்தர மயிலே சாய்ந்தாடு

குத்து விளக்கே சாய்ந்தாடு

கோவில் புறாவே சாய்ந்தாடு

கண்ணே மணியே சாய்ந்தாடு

கற்பகக் கொடியே சாய்ந்தாடு

தேனே மானே சாய்ந்தாடு

கட்டிக் கரும்பே சாய்ந்தாடு

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு


12.

கன்றுக்குட்டி


தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.

நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை

நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி

முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசு – மடி

முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி


13.

வண்ணாத்திப் பூச்சி


வண்ணத்திப்  பூச்சி வண்ணத்திப் பூச்சி

பறக்குது பார் பறக்குது பார்

அழகான செட்டைகள் அழகான செட்டைகள்

அடிக்குது பார் அடிக்குது பார்


சிவப்பு மஞ்சள் நீலம் பச்சை

பொட்டுக்கள் பார் பொட்டுக்கள் பார்

தொட்டது முடனே தொட்டது முடனே

பட்டது பார் பட்டது பார்


பூக்களின் மேலே பூக்களின் மேலே

பறந்து போய் பறந்து போய்

தேனதை உண்டு தேனதை உண்டு

களிக்குது பார் களிக்குது பார்

வண்னாத்திப் பூச்சி வண்னாத்திப் பூச்சி 

பறக்குது பார் பறக்குது பார்.


14.

ஆட்டுக் குட்டி


ஆட்டுக் குட்டி எந்தன் குட்டி

அருமையான சின்னக் குட்டி

ஓட்டம் ஓடி வந்திடுவாய்

உனக்கு முத்தம் தந்திடுவேன்


சுவரில் ஏறிக் குதித்திடுவாய்

சுற்றிச் சுற்றி வந்திடுவாய்

கள்ளன் கொண்டு போய் விடுவான்

கட்டி உன்னை வைத்திடுவான்


ஆட்டுக் குட்டி எந்தன் குட்டி

அருமையான சின்னக் குட்டி


15.

மழைக்காலம்


குடை பிடித்துச் செருப்புமிட்டுப்

புத்தகமுங் கொண்டு

குடுகுடென நடந்து வரும்

குழந்தைகளே கேளீர்

மழைக் காலம் வழி வழுக்கும்

மிகக் கவனம் மக்காள்

வழியருகே வெள்ளமுண்டு

விலகி வரல் வேண்டும்


வெள்ளத்தில் கல்லெறிந்து

விளையாடல் வேண்டாம்

வீண் சண்டையால் வழுக்கி

விழுந்தெழும்ப வேண்டாம்


கண்மணிகாள் நீர்ச்சிரங்கு

காலில் வரும் கவனம்

கண்ணூறக்கம் இல்லாமல்

கதறியழ நேரும்

.........


16.

ஓரினம்


கசட தபற வல்லினம்

கசக்கும் வேம்பு மருந்தினம்

ஙஞண நமன மெல்லினம்

ங ப்போல் உறவைக் காக்கணும்

யரல வழள இடையினம்

இரவில் உணவு குறையணும்

தமிழில் மெய்கள் மூவினம்

தமிழர் எல்லாம் ஓரினம்.


17.

வாகனங்கள்


சல்சல் வண்டி மாட்டுவண்டி

சவாரி போகும் மாட்டுவாண்டி

பூம்பூம் பூம்பூம் மோட்டார்க்கார்

போகுது தெருவில் மோட்டார்க்கார்


றிங்றிங் றிங்றிங் சயிக்கிள் வண்டி

இரண்டு சில்லு சயிக்கிள் வண்டி

சிக்குப்புக்கு சிக்குப்புக்கு புகைவண்டி

சீக்கிரம் செல்லும் புகைவண்டி


பயணம் நாமும் சென்றிடவே

பற்பல வண்டிகள் இன்றுண்டு

பற்பல இடங்களைப் பார்த்திடுவோம்

பத்திர மாகச் சென்றிடுவோம்.


   -கவிஞர். த. துரைசிங்கம்


18.

கண்ணன் பாட்டு


கண்ணன் எங்கள் கண்ணனாம்

கார்மேக வண்ணனாம் 

வெண்ணெய் உண்ட கண்ணனாம்

மண்ணை உண்ட கண்ணனாம் 

கண்ணன் எங்கள் கண்ணனாம்

கார்மேக வண்ணனாம் 

குழலினாலே மாடுகள் 

கூடச்செய்த கண்ணனாம் 

கூட்டமாகக் கோபியர்

கூடஆடும் கண்ணனாம் 

கண்ணன் எங்கள் கண்ணனாம்

கார்மேக வண்ணனாம் 

மழைக்கு நல்ல குடையென 

மலைபிடித்த கண்ணனாம் 

நச்சுப் பாம்பு மீதிலே 

நடனமாடும் கண்ணனாம் 

கண்ணன் எங்கள் கண்ணனாம்

கார்மேக வண்ணனாம் 

கொடுமை மிக்க கம்சனைக் 

கொன்று வென்ற கண்ணனாம் 

தூதுசென்று பாண்டவர் துயரம் 

தீர்த்த கண்ணனாம் 

கண்ணன் எங்கள் கண்ணனாம்

கார்மேக வண்ணனாம் 

அர்ஜூனர்க்கு கீதையை

 அருளிச் செய்த கண்ணனாம் 

நல்லவர்க்கு அருளுவான்

 நாங்கள் போற்றும் கண்ணனாம்

கண்ணன் எங்கள் கண்ணனாம்

கார்மேக வண்ணனாம் 


19.

மனிதனும் மிருகமும்


உணவு தேடிக் காக்கையார்

ஊரைக் கூட்டி உண்ணுவார்

பணத்தைத் தேடி மனிதர் நாம்

பதுக்கி வைத்து வாழ்கிறோம்.


பாலில் நீரை நீக்கியே

பருகவல்லார் அன்னத்தார்

மாவில் கலப் படங்கள் செய்து

மற்றவர்க்குக் கொடுக்கிறோம்.


தேடி அலைந்து சத்துணவைத்

தேனீ நமக்குத் தருகிறார்

நாடி நாம் மற்றவர்க்கு

நன்மை புரிய முயன்றிலோம்.


வயலைப் பூச்சி அழித்திடாமல்

வெட்டுக்கிளியார் உதவுவார்

மயிலைப் பிடித்து சிறகொடித்து

மகிழ்ந்து நாமும் வாழ்கிறோம்.


பாலைத் தந்து நமதுடலைப்

பசுவார் பேணி வளர்க்கிறார்.

ஆடு மாடு விரும்பியுண்ணும்

அறிவிலியாய் வாழ்கிறோம்.


இரக்கம் நமது உள்ளத்தில்

இருக்க வேண்டும் தம்பிகாள்

சுரக்கும் அருள் இறைவனும்

தோன்றி நமக்கு அருளுவார்.


கவிதை – வேலாயுதம்.தங்கராசா


20.

கோழி


கொக்கர கொக்கர கோழியது

குஞ்சை வளர்க்கும் கோழியது

கிக் கிக் கிக் கிக் குஞ்சுகட்கு

கிளறிக் கொடுக்கும் குப்பையது


பருந்து வானில் பறந்திட்டால்

பார்த்து கோழி கொர்… என்னும்

பயந்த குஞ்சுகள் மறைவினிலே

பதுங்கி நின்று பட்படக்கும்


பருந்து போன பின்னாலே

பார்த்த கோழி குஞ்சுகளைக்

கொக்… கொக்… என்று கூப்பிடுமே

குஞ்சுகள் ஒன்றாய்க் கூடிடுமே.


    கவிஞர். த .துரைசிங்கம்.


நன்றி: https://tamizamutamsurrey.blogspot.com/2010/11/blog-post_01.html?m=1

No comments:

Post a Comment