Monday, 18 September 2023

வசந்தகாலத்து வண்ண மலர்கள்

 சிட்னியில் வசந்த காலம்.செப்ரெம்பர் தொடக்கம் நவெம்பர் வரை சீதோஷ்ன நிலை மிக ரம்யமாக இருப்பது வழக்கம்.

என் வீட்டுக்கருகில் அமைந்துள்ள மலர் சோலையில் 17.09.2023 அன்று (நேற்றய தினம்) ஞாயிற்றுக் கிழமை எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்காக கீழே பதிவு செய்கிறேன்.

வருங்காலத்தில் எல்லாம் இவ்வாறு தான் நம் வசந்த காலம் இருக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் இல்லை. பூகோள உருண்டையை பொறுப்பற்ற விதமாக பயன்படுத்திக் கொண்டதன் விளைவை நாம் எல்லோரும் அனுபவிக்கத் தானே வேண்டும்.

20 பாகை செல்சியஸின் முன் அரைப் பகுதிகளில் இருக்கும் நம் வசந்தகால வெப்பநிலை இன்றய தினமே ( 18.9.2023 ) 33 பாகை செல்சியஸிற்கு போயிருக்கிறது. எதிர் வரும் மூன்று நாட்களுக்கு இதை விட அதிகமாக இருக்கும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்திருக்கிறது.

உலகம் பூராவுமே வெள்ளப்பெருக்கும் கடும் வெப்பநிலையும் பூமி அதிர்ச்சியுமாக நிலமடந்தை தன் அதிர்ப்தியீனங்களை வெளிப்படையாகவே காட்டத் தொடங்கி விட்டாள்.

பொறுமைக்கு இலக்கணமாக நாம் சொல்கிற பூமித்தாயே தன் பொறுமையை இழந்து விட்டாள் என்றால் மனிதர்களாகிய நம் உதாசீன மனோ பாவங்களையும் சுயநலம் கொண்ட குணாம்சங்களையும் என்னவென்று சொல்வது!

அரசாங்கங்களும் வல்லரசு நாடுகளும் விரைவாக முன்னேறவேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு களத்தில் இறங்கியுள்ள நாடுகளும் நடாத்தி வரும் ‘போட்டியில்’ சாதாரண குடிமக்கள் தான் விளைவுகளைச் சந்திக்கிறவர்களாக இருக்கிறார்கள். 

ஒரு விதத்தில் நாம் எல்லோரும் கூட பொறுப்பேற்க வேண்டியவர்கள் தான். நம்மிடம் இருக்கிற பொறுப்பற்ற தனங்களை நாம் கேள்வி கேட்க வேண்டிய நிலையில் நாம் இன்று இருக்கிறோம். 

1.ஒரு மரமாவது நட்டோமா?

2. நடக்கிற தூரங்களை நாம் நடந்தே கடந்தோமா?

3. அனாவசியமாக எரிந்தபடி இருக்கும் மின் குமிழை அணைத்திருக்கிறோமா? மின்சார பாவனைகளைக் குறைத்திருக்கிறோமா?

4. தண்ணீரைச் சிக்கனமாகப் பாவித்திருக்கிறோமா?

5.சுற்றுப் புறங்களைச் சுத்தமாக வைத்திருந்திருக்கிறோமா?

6. பிளாஸ்டிக் பாவனைகளுக்கு மாற்றாக ஒரு துணிப்பையைப் பாவித்திருக்கிறோமா?

7. சக மனிதனை / சக உயிரினத்தை நமக்குச் சமனாகக் கருதியிருக்கிறோமா?

8. மரங்களையும் ஓர் உயிர் என்று கருதியிருக்கிறோமா?

.... இப்படி பலவற்றைப் பட்டியலிடலாம். இவை எல்லாம் நம்மால் செய்ய முடியாதவையல்ல; ஆனால் நாம் அவற்றில் அக்கறை கொள்வதில்லை; நம்முடய அக்கறை எல்லாம் அடுத்த இரண்டு வருடங்களில் என்ன விதமான தொழில் நுட்பத்தோடு தொலைபேசி வரப் போகிறது? நான் எவ்வாறு பிரபலமடையலாம்? எவ்வாறு பெரும் பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கைக்கு முன்னேறலாம்? என்ற விதமாகவல்லவா இருக்கிறது....

பூமித்தாய் எத்தனை வருடங்களுக்குத் தான் பொறுப்பாள்....

எதிர்கால சந்ததி ஒரு 10 வருடங்களுக்கு முன்னால் வசந்தகாலம் என்ரு ஒன்று இருந்தது; அதில் பூமித்தாய் இப்படியாக வசீகரத்தோடும் செழிப்போடும் பூத்துக் குலுங்கினாள் என்ரு நம் எதிர்கால சந்ததி அரிந்து கொள்வதற்காகவேனும் நாம் இதனை அவர்கலுடய உலகத்துக்குக் காட்சிப்படுத்ட வேண்டாமா?

அதனால் தான் இந்த முயற்சி.

இந்தத் தேசத்தின் பழங்குடி மக்களையும் அவர்கள் இந்தப் பூமியை பேணிப்பாதுகாத்த அவர்களின் மன விலாசத்தையும் அறிவையும் வணங்கி இப் படங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.



















இடம்: Parramatta Park; Garden. 17.09.2023
படப்பிடிப்பு: யசோதா.பத்மநாதன்

இனி கீழே வருபவை வசந்த காலத்தின் முதல் நாளான 01/09/2023 அன்று அதே இடத்தில் எடுத்தவை. உங்கள் பார்வைக்காக:





































வண்ணாத்திப் பூச்சிகள் ஒன்றைத் தானும் காணவே இல்லை! 

வண்ண மலர்கள் மீது பலவித வண்ணங்கள் கொண்ட வண்ணாத்திப் பூச்சிகள் நோகாமல் வந்தமர்ந்து தேன் குடிக்கும் அழகை எப்படி நாம் அடுத்த சந்ததிக்குச் சொல்லி விளங்க வைக்கப் போகிறோம்? 

தொலைத்து விட்ட அழகுகளின் பட்டியலில் வண்ணாத்திப் பூச்சிகளுமா....?

மேலும் வசந்த காலத்து வண்ன மலர்களைக் காண கீழே உள்ள இணைப்புக்குச் செல்க



No comments:

Post a Comment