அம்பித்தாத்தாவும் வானொலிமாமாவும் வேந்தனார் இளங்கோவும் முதலாம் தலைமுறை தமிழர்கள்.
தமிழ் பாடசாலைகளின் உருவாக்கத்திற்கும் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டு அதனை ஒரு கட்டம் வரை வளர்த்தெடுத்து இன்று அது ஓர் ஆலமரமாக விழுதுகள் விட்டு வளரக் காரணமாக இருந்தவர்கள்.
அண்மையில் நடைபெற்ற ( 03.09.2023 ஞாயிற்றுக் கிழமை, Wentworthville Library Hall ) வானொலிமாமாவின் நினைவு அஞ்சலிக் கூட்டத்தின் போது எழுத்தாளர் ஆசி. கந்தராஜா அவர்கள் எப்படியாக முதன் முதலில் தமிழ் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது என்பது பற்றியும் அதற்கு வானொலிமாமாவும் அம்பித்தாத்தாவும் வேந்தனார் இளங்கோவும் எப்படியான பங்களிப்பினைச் செலுத்தியிருந்தார்கள் என்பது பற்றியும் தன் சாட்சியத்தைப் பதிவு செய்திருந்தார்கள்.
தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் வழியாக வானொலிமாமா நா. மகேசன் அவர்கள் பாடத்திட்டத்தை எழுதி அதனை அடிப்படையாக வைத்தே முதன் முதலாக Homebush இல் மிக சொற்பமான மாணவர்களோடு ஒரு சமூக சந்திப்பாக அது ஆரம்பிக்கப்பட்டது என்பது பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டு இன்றுவரை பாதுகாத்து வைத்திருக்கும் அந்த முதலாவது கைநூலையும் சபையோருக்குக் காட்டினார்.
ஊர் கூடி தேர் இழுத்து இன்று அது ஒரு குறிப்பிட்டளவு வளர்ச்சியை எட்டி நிற்கிறது. அப்படி என்றால் இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் தமிழ் பாடசாலைகளின் வளர்ச்சி மற்றும் பிரதான பாடசாலையில் தமிழை ஒரு பாடமாக எடுக்க ஆவன செய்தமை, பாடநூல் உருவாக்கம் என்பதற்கப்பால் சிறுவர் இலக்கிய முயற்சிகளில் என்ன என்ன விடயங்கள் நடைபெற்றது என்பதைப் பார்க்கும் போது தான் இந்தக் கொசுமாமாவும் கொசுமாமியும் கண்முன் வந்து நிற்கிறார்கள்.
ஈழத் தமிழரைப் பொறுத்தவரை, இரண்டாம் தலைமுறைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் பெருந்தொகையாகவும் அகதிகளாகவும் புலம்பெயர்ந்தவர்கள். தம் குடும்பத்தை புதிய மண்ணில் உருவாக்கி குழந்தைகளை புதிய மண்ணில் பிறப்பித்தவர்கள். மனதால் இலங்கையராகவும் வாழ்வில் அவுஸ்திரேலியராகவும் இரட்டைப் பண்பாட்டுக்குள் சிக்குண்டவர்கள். அவர்களை Sandwitch Culture க்குள் அகப்பட்டுக் கொண்டவர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு.
அவர்கள் வரும் போது ஒரு சூட்கேஸ் நிறைய தம் பால்யகால நினைவுகளைச் சுமந்து வந்தார்கள். அனுபவங்களையும் துயரங்களையும் இழப்புகளையும் தம்மோடு எடுத்து வந்தவர்கள். தமக்கு மறுக்கப்பட்டவற்றை இங்கு அடைந்து விட மாட்டோமா என்ற தாகமும் வேகமும் அவர்களிடம் இருந்தது. அவர்களின் கனவுகள் எல்லாம் துரத்தியடிக்கப் பட்ட தமக்கு மறுக்கப்பட்ட வாழ்வை புதிய மண்ணில் மீண்டும் உருவாக்குவது என்பதாகவே இருந்தது. பாடசாலைகளும், கோயில்களும் பலசரக்குக் கடைகளும் வானொலி ஊடகங்களும் உத்வேகத்தோடு தோற்றம்பெற அதுவும் ஒரு காரணமாய் அமைந்தது.
இந்த இரண்டாம் தலைமுறைத் தமிழர்கள் தம்மோடு கொண்டு வந்த அல்லது சுமந்து வந்த பண்பாட்டினுடய அடிப்படையிலேயே இங்குள்ள தமிழ் சமுதாயம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதைப் பல சமூக விடயங்களில் நாம் அவதானிக்கலாம். அது பற்றி விரித்துரைக்க முயன்றால் கட்டுரை வேறொரு வடிவம் எடுத்து விடும் என்பதால் அதனைத் தவிர்த்து நம் சிறுவர் இலக்கிய முயற்சிக்குள் மீண்டும் வருகிறேன்.
தற்போது 50 - 60 வயதுகளுக்குள் இருப்போரை நாம் இரண்டாம் தலைமுறைத் தமிழர் என எடுத்துக் கொண்டால் அவர்கள் இரட்டைக்கலாசார சாராம்சத்தின் மொத்த விளைவுகள் எனலாம். அவர்களுக்கு தமிழும் தமிழர் பண்பாடும் நன்கு தெரியும். அதே வேளை அவுஸ்திரேலிய வாழ்வினையும் பண்பாட்டினையும் வாழ்வு முறைகளையும் அறிந்து கொண்டவர்கள். தம் பிள்ளைகள் அவுஸ்திரேலியப் பாடசாலைகளில் ஆங்கிலத்தை முதன் மொழியாகக் கொண்டு படித்து வருவதை; அவர்களின் சிந்தனை மாற்றங்களைக் கண்டவர்கள்.
அதன் ஒரு விளைவாகத்தான் இந்தக் கொசுமாமா கொசுமாமிக் கதையை என்னால் பார்க்க முடிகிறது. தம் பால்யத்தின் வாழ்வியல் நினைவுகளை தாம் வாழ்ந்த, படித்த, கேட்ட, நல்லவை என தாம் நினைப்பனவற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்த வேண்டும் என்ற இயல்பான ஆசையும் அதே நேரம் முதல்மொழியாக ஆங்கிலத்தைக் கொண்டிருக்கும் தன் மூன்றாம் தலைமுறைக் குழந்தைகட்கு கொடுக்கவும் பொருத்தமான முறையில் ஒரு பக்கம் ஆங்கிலத்திலும் ஒரு பக்கம் தமிழிலுமாக சொல்லப் படும் கதைகள் தாம் தம் பால்யத்தில் படித்தவையாக இருப்பதைக் காணலாம்.
இருமொழிப் புத்தகமாக வண்ணப்படங்களுடன் தாம் தம் பால்ய காலத்தில் படித்த கேட்ட கதைகளை மீளுருவாக்கி தம் அடுத்த அடுத்த சந்ததிகளுக்குக் கொடுக்கும் முயற்சி இரண்டாம் தலைமுறைத் தமிழர்களிடம் கானப்படும் பண்பாக இருக்கிறது. அதிலே ஒன்று தான் வண்ணப்படங்களோடும் இரு மொழியிலுமாக வெளிவந்திருக்கிற இந்த கொசுமாமா கொசுமாமி கதை.
அந்தக் கதை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது இலங்கைப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தது. நானும் அதனை மூன்றாம் வகுப்பில் படித்த ஞாபகம். எதிர்காலத்தில் இப்படியாக மேலும் சில பாடல்களும் கதைகளும் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக தமிழ் குழந்தைகளுக்காக வெளி வரலாம். வெளிவரவேண்டும் என்பது என் அவா.
OZ Thamil உருவானதற்கான காரணத்தில் அதுவும் ஒன்று என்பதோடு; ஒரு ஆவணப்பதிவாகவும், அதே நேரம் தமிழைத் தேடும் அன்னிய மொழியொன்றைத் தாம் முதல் மொழியாகக் கொண்டிருக்கும் நம் குழந்தைகளுக்காக அவற்றையும் இங்கு பதிவிடலாம் என்று நம்புகிறேன்.
இனி, கீழே வருவன எல்லாம் இணையத்தில் தேடிப் பெற்றவையும் நினைவடுக்குகளில் இருந்து வெளிவந்தனவும் ஆகும். அவைகளில் தவறிருத்தலும் மறந்திருத்தலும் திரிபடைந்திருத்தலுக்கான சாத்தியங்களும் அதிகம் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்க!
பறவைக் குஞ்சு ஒன்று பற்றிய பாடல் ( 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்ததாக ஞாபகம்)
பறவைக் குஞ்சைப் பாரண்ணா பறவைக்குசைப் பாரண்ணா
பறக்கும் இறகு முளைத்திடாத பறவைக்குஞ்சைப் பாரண்ணா
கூடு காற்றில் ஆடி இந்தக் குஞ்சு விழுந்து விட்டதோ
தேடித் தாயும் தூக்க முன்னே செத்துப் போகும் தவிக்குதே
கட்டெறும்பும் ஊருதே காகம் கொத்தப் பார்க்குதே
வட்டம் போட்டுக் கழுகும் இந்த மரத்தை நோக்கி வருகுதே
மரத்தில் ஏறிக் கூட்டிலே வைத்து விடுங்கள் குஞ்சையும்
இரக்கமாக இருக்குதையோ இளைத்துக் கிடந்து துடிக்குதே
.....
எங்கள் வீட்டுப் பூனை
சின்னச் சின்ன பூனை
சிரந்த நல்ல பூனை
என்னைப் பார்த்துத் துள்ளும்
எங்கள் வீட்டுப் பூனை
பாலைக் குடிக்கப் பார்க்கும்
பதுங்கிப் பரணில் இருக்கும்
வாலைப் பற்றி இழுத்தால்
வளைந்து கையைக் கடிக்கும்
நாயைப் பார்த்துச் சீறும்
நகத்தால் மரத்தைக் கீறும்
பாயப் பதுங்கி ஓடும்
பந்தை உருட்டி ஆடும்
எலியைக் கிளியைப் பிடிக்கும்
ஏறி மரத்தில் இருக்கும்
புலியைப் போல நடிக்கும்
புள்ளிக் கோட்டுப் பூனை
உண்ணும் சோறும் பாலும்
ஊட்டி வளர்த்த பூனை
கண்ணைப் போன்ற பூனை
கட்டிக் கரும்புப் பூனை
நன்றி: பாடல்கள்
புள்ளிப் புள்ளி மானே...
புள்ளிப் புள்ளி மானே
துள்ளித் துள்ளி ஓடுறாய்
அள்ளி இந்தப் புள்ளியை
ஆர் உனக்குத் தந்தது?
கண்ணிரெண்டும் கூர்மை
காதிரெண்டும் கேள்மை
பெண்ணினத்தின் சாயல்
தெரியுதுந்தன் வடிவில்
பென்னம் பெரிய காட்டில்
தன்னந்தனி செல்கையில்
உன்னுடலில் முள்ளுகள்
உறுத்துவது இல்லையோ?
கட்டில் மெத்தை தருவேன்
காதணிகள் தருவேன்
குட்டிப் புள்ளி மானே
குதித்து ஓடி வா நீ
எட்டி ஓடும் மானே
என்னிடம் நீ வந்தால்
புட்டிப் பாலும் தந்து
போற்றி உன்னை வளர்ப்பேன்.
தொடரும்....
No comments:
Post a Comment