Saturday 23 September 2023

நான் படித்த நாட்டார் பாடல்கள் சில - 4 -

 எலிப்பாட்டு


கோட்டிகள் பண்ணாதே 

எலியே நீ வீட்டிலே நில்லாதே

எலியே நீ வீட்டிலே நில்லாதே


நாட்டைப் பயிரை நட்டப் படுத்திறாய் 

நல்ல இளனியை நறுக்கி வீழ்த்திறாய்

வீட்டிலே பண்கள் மிக விசைக்கிறாய்

மேட்டிலோடியே ஓட்டைச் சரிக்கிறாய்

                ( கோட்டிகள் பண்ணாதே)


ஓலைக் கூரையில் ஒதுங்கி நிற்கிறாய்

ஒரு மழை வந்தால் ஒழுகச் செய்கிறாய்

வாலைக் காட்டியே வழியில் ஓடுறாய்

மற்ற இடமெல்லாம் சுற்றித் திரிகிறாய்

            ( கோட்டிகள் பண்ணாதே)


ஆனைக்குட்டி போல அங்கிங்கு ஓடுறாய்

அடிக்கப் போனால் அஞ்சிப் பதுங்குறாய் 

பூனையைக் கண்டு பொறி கலங்குறாய் 

பொல்லாத பூனைக்குப் பின்னர் இரையாகுறாய்

               ( கோட்டிகள் பண்ணாதே)


தேங்காய் பாதியில் சித்திரம் கொத்துறாய்

திண்டு மூடினால் திறந்து வைக்கிறாய்

வாங்கும் சாமானை வாரி இழுக்கிறாய்

மண்ணினை மானிடர் கண்ணிலே போடுறாய்

                ( கோட்டிகள் பண்ணாதே)


படுக்கும் மெத்தையில் பஞ்சை இழுக்கிறாய்

பாத விரல் நகம் பல்லால் கடிக்கிறாய்

அடுக்கும் கறியை அலக் கழிக்கிறாய்

அல்லும் எல்லும் இந்தப் பொல்லாங்கு செய்கிறாய்

            ( கோட்டிகள் பண்ணாதே)


பீங்கான் கோப்பையை பிரட்டிப் போடுறாய் 

பெட்டகத்துக் குள்ளே பிரளி பண்ணுறாய்

தாங்கு லாச்சியைத் தறித் தூளாக்கிறாய்

தட்ட லுமாரிக்குள் குட்டு குட்டென்கிறாய்

          ( கோட்டிகள் பண்ணாதே)


கூரை மீதிலே கூடிக் குலாவுறாய்

குட்டிப் பன்றி போல் குஞ்சுகள் பொரிக்கிறாய்

சாரை விரட்டில் தப்பிப் பிழைக்கிறாய்

சற்றே அகப்பட்டால் செத்துப் போகிறாய்

          ( கோட்டிகள் பண்ணாதே)


வெள்ளெனத் தின்ன வெள்ளாட்டி மூடுவாள்

விழித்துப் பார்க்கப் பின்னே வெட்கித் தழுவுவாள்

கள்ளி யெண்டவள் கன்னத்தடி கொள்வாள்

கன்ம மெலிக்கெண்டு தன்னைத் திட்டுவாள்

             ( கோட்டிகள் பண்ணாதே)


எச்சியைத் திண்டக்கால் இல்லாத நோய் வரும்

எவர் திண்டாலும் ஈளைக் கசம் வரும்

நச்சு வீக்கம் நரம்புத் திமிர் வரும்

நாள் செண்டால் உயிர் மீட்டாத சாவு வரும்.

             ( கோட்டிகள் பண்ணாதே)

( யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அமைந்த இந்த நாட்டுப் புறப் பாடல் 10 ம் ஆண்டுக்குரிய நாட்டர் இலக்கியப் புத்தகத்தில் அமைந்திருக்கிறது.)


வாழ்த்துப் பாடல்

மருத்துவிச்சி வாழ்த்து


அயலும் புடையும் வாழ வேண்டும்

அன்னமும் சுற்ரமும் வாழ வேண்டும்

ஆச்சியும் அப்புவும் வாழ வேண்டும்

அம்மானும் மாமியும் வாழ வேண்டும்


அரிசிப் பொதியோடும் வந்தீரோ தம்பி

அரிசி மலை நாடும் கண்டீரோ தம்பி?


நெல்லும் பொதியோடும் வந்தீரோ தம்பி

நெல்லு மலை நாடும் கண்டீரோ தம்பி?


மஞ்சள் பொதியோடும் வந்தீரோ தம்பி 

மஞ்சள் மலை நாடும் கண்டீரோ தம்பி?


மிளகுப் பொதியோடும் வந்தீரோ தம்பி

மிளகு மலை நாடும் கண்டீரோ தம்பி


உள்ளிப் பொதியோடும் வந்தீரோ தம்பி

உள்ளி மலை நாடும் கண்டீரோ தம்பி?


இஞ்சிப் பொதியோடும் வந்தீரோ தம்பி

இஞ்சி மலை நாடும் கண்டீரோ தம்பி?


உப்புப் பொதியோடும் வந்தீரோ தம்பி

உப்பு மலை நாடும் கண்டீரோ தம்பி?


காசுப் பொதியோடும் வந்தீரோ தம்பி

காசு மலை நாடும் கண்டீரோ தம்பி?


வேந்தர்க்கு வேந்தராய் வந்தீரோ தம்பி

வேந்தர் மணிமுடியும் கண்டீரோ தம்பி?


கோச்சி வாழ கொப்பர் வாழ

பேத்தி வாழ பேரன் வாழ

பூட்டன் வாழ பூட்டி வாழ

கொம்மான் வாழ மாமி வாழ

குஞ்சாச்சி வாழ குஞ்சியப்பு வாழ

பெரியாச்சி வாழ பெரியப்பு வாழ

ஊர் வாழ தேசம் வாழ

குருவுக்கும் சிவனுக்கும் 

நல்ல பிள்ளையாய் இருந்து வாழ்க!


( உறவு முறைப் பெயர்கள் இங்கு சொல்லப் படுவதைக் காண்க. பல உறவு முறைப் பெயர்கள் தற்போது குடும்பங்கள் சுருங்கி விட்டதால் இல்லாது போயின.

கோச்சி, கொப்பர் - தாய் தந்தையரை ஏனையோர் கொச்சையாக அழைப்பது. கொம்மான் என்பது அம்மான் ( மாமன்) என்பதன் கொச்சை மொழி வழக்காகும்.

முதற் பதிப்பு 1976. இரண்டாம் பதிப்பு 1980ம் ஆண்டுக்குரிய புத்தகத்தில் இருந்து....




நன்றி: noolaham.org 

No comments:

Post a Comment