Friday 29 September 2023

சிறுவர் இலக்கியம் - 5 - காணாமல் போன சுயசரிதைகள் - நான் மரம் ஆனால்....; குடை ஒன்றின் சுயசரிதை....

 இந்தப் பதிவை ஆரம்பிப்பதற்கு முன்பாக noolaham.net இற்கும் அதன் நிறுவனர் மற்றும் ஊழியர்களுக்கும்  தலை வணங்கி இப்பதிவை ஆரம்பிப்பது பொருந்தும் என்று நம்புகிறேன்.

அவர்களுடய பணி தொலைநோக்குப் பார்வை கொண்டது;  இணையம் நிற்குமளவும் நின்று வளம் பெருக்கும்; அறிவொளி பரப்பும்! தமிழர் எல்லோரும் உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் வேண்டும் புத்தகங்களை இலவசமாகத் தரவிறக்கி பார்த்துப் பயன்பெற வைக்கும் அற்புத பணியை அவர்கள் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார்கள்!

நானும் அதன் பயனாளர் என்ற வகையில் அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொல்வதில் நன்றி பாராட்டி மிக்க மகிழ்வு கொள்கிறேன்.

அண்மையில் சிட்னியில் சிறுவர் இலக்கிய முயற்சிகள் மற்றும் சிறுவர் பாடல்கள் பற்றி அறிய முற்படும் போது, ஈழத்தின் சிறுவர் இலக்கியப் பாடல்களின் முன்னோடி த. துரைசிங்கம் அவர்களைப் பற்றி அறிய முடிந்தது. அவரின் ஆக்கங்கள் குறித்து அறிய முற்பட்ட வேளையில் தான் நூலகத்தில் அவரது பெயரின் கீழ் உள்ள அத்தனை படைப்புகளையும் அவர்கள் சேகரித்து வைத்திருப்பதை அறிய முடிந்தது.

ஒரு காலகட்டத்து ஈழத்துச் சிறுவர் இலக்கியத்தின் பொக்கிஷமாக அவை அங்கு சேகரிக்கப் பட்டு வைக்கப்பட்டுள்ளன.

ஈழத்து சிறுவர் இலக்கிய முன்னோடி த.துரைசிங்கம் அவர்களின் நூற்தொகுப்பு

சுமார் 40, 50 வருடங்களுக்கு முன்பாக நாம் படித்தவை; பாடி மகிழ்ந்தவை எல்லாம் அவர் எழுதிய பாடல்கள் என்பதை இப்போது அறிந்து உவகை கொள்கிறேன். அவரையும் நன்றியோடு நினைவு கூருகிறேன்.

சரி, அது நிற்க!

இன்று நான் எழுத வந்தது நாம் சிறுவர்களாக இருந்த போது எழுதி மகிழ்ந்த சுயசரிதைகள் பற்றியதாகும்.

நான் ஒரு மரமானால்...

ஒரு பழந்துணியின் சுயசரிதை....

பேனா / பென்சில்ஒன்றின் சுயசரிதை.....

புத்தகம் ஒன்றின் சுயசரிதை....

நாற்காலி ஒன்றின் சுயசரிதை....

ஆட்டுக்குட்டி ஒன்றின் சுயசரிதை...

நான் நாயானால்....

.....

இப்படி எத்தனை எத்தனை சுயசரிதைகள் நாம் எழுதி இருப்போம்!! அவை எல்லாம் எங்கள் மொழி வளத்திற்கும், கற்பனை ஆற்றல்களுக்கும், விடய அறிவுக்கும், ஜீவகாருண்ய மாண்புக்கும், நற்குணங்களுக்கும்; உலகை - சக பிராணிகளை; சடப் பொருட்களை நேசிப்பதற்கும் அவற்றை காருண்யத்தோடும் கவனத்தோடும் பராமரிப்பதற்கும் எத்தனை உதவியாக இருந்தன!!

இன்று அவை எல்லாம் இல்லாது போயொழிந்தனவே! 

பொருட்களை கவனமாகப் பராமரிக்கும் குணம் இன்று அருகிப் போவதற்கும் சகலவற்றையும் தொழில்நுட்பக் கருவிகளின் வழியாக ஒலி ஒளி வடிவிலேயே பார்த்து விடுவதால் கற்பனை ஆற்றல் தேவைப்படாமலே போய் விட்டதையும்;  சக பிராணிகளின் மேல் பட்சமோ பாசமோ குறைந்து போய் இயந்திரத்தினை; தொழில்நுட்பக் கருவிகளை மட்டுமே பார்த்து வளரும் பிள்ளைகளாக மாணவர்கள் மாறி விட்டதையும் நினைக்கும் தோறும் பச்சாதாபமே மேலுறுகிறது.

ஒரு மரமொன்று தன் சுயசரிதையைச் சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

அதனை எழுத ஆரம்பிக்கும் மாணவன் தன்னை ஒரு மரமாகக் கற்பனை பண்ணிக் கொள்கிறான். கற்பனை சிறகடித்துப் பறக்க, தான் எங்கிருந்து விதையாக விழுந்தேன்; எப்படி வளர்ந்தேன்; என்னெவெல்லாம் தனக்கு நடந்தது; யார் தன்னை எடுத்துப் போனார்கள்; மழை / தண்ணீரில் வெய்யிலில் தான் எப்படி எப்படி எல்லாம் வளர்ந்தேன், மேலும், அருகில் நின்ற மரம் பற்றி; தான் கொடுத்த நிழல் பற்றி; தான் கொடுத்த பயன் பற்றி, தான் கொடுத்த பூ, பழம், இலை, விறகு இவை பற்றி... அது மனிதர்கள் பற்றி என்னவெல்லாம் நினைக்கக் கூடும் என்பது பற்றி, அதன் வாழ்வு பற்றி.......

இப்படி இப்படி எத்தனை எத்தனை விடயங்களை அது சொல்லல் கூடும்....

அடுத்தமுறை ஒரு மரம் ஒன்றைப் பார்க்கும் போது எங்கள் கண்ணோட்டமே வேறு விதமாக இருக்குமல்லவா!

இதன் வழியாக மாணவனுக்கு மொழி வளம் பெருகும்; கற்பனை ஆற்றல் வளரும்; ஒரு மரத்தை நேசிக்கப் பழகுவான். ஒரு மரத்தின் சாயலில் தன்னை கற்பனை பண்ணிப் பார்ப்பதே ஒரு சுவாரிசமான அனுபவம் அல்லவா...? ஒரு வகுப்பில் எல்லா மாணவர்களும் ஒரு தலைப்புக் குறித்துக் கட்டுரை எழுதும் போது மற்றய மாணவர்கள் அதே தலைப்பிற்கு எப்படி எப்படி எல்லாம் கற்பனை பண்ணி இருக்கிறார்கள் என்பது பற்றி அறியும் ஆவல் பெருகும். படிக்க ஆசை வரும். புத்தகங்கள் படிக்கப் பிடிக்கும். 

அற்பமாக நாம் நினைத்து பார்க்காமலே கடந்து போனவை எல்லாம் நமக்கு புதிய கதைகள் சொல்ல ஆரம்பிக்கும். ஒர் எறும்புக்குக் கூட வாழ்க்கை இருக்கிறது என்பது புரிய ஆரம்பிக்கும். சக உயிரினங்களை நேசிக்கத் தொடங்குவோம்.

அவற்றை எல்லாம் நம் மாணவர்கள் இழந்து விட்டார்களே!...

எதிர் கால எழுத்தாள செல்வங்களை நாம் இழந்து விட்டோமே!

இலக்கியப் படைப்பாளர்களின் வளர்ச்சிக்கான மூல வித்து இது தானே! அதை நாம் கொடுக்கத் தவறி விட்டோமா?

நம் எதிர்காலச் செல்வங்களை இயந்திரத்திற்குள்ளேயே மூழ்கடித்து விட்டோமா? என்ற கவலையே மீதுரப் பெறுகிறது.

இன்று அவ்வாறான ஒரு கட்டுரை எழுத்து வடிவமே தெரியாத சந்ததி ஒன்று வந்து விட்ட காரணத்தால் கவிஞர். த. துரைசிங்கம் அவர்களுடய ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைத் தொகுதி ஒன்றில் இருந்து ஒரு கட்டுரையை இங்கு மீள் பதிவு செய்கிறேன். ஏன் உங்களை அப்படி ஒரு கட்டுரைக்குள் மட்டும் குறுக்கிப் போட வேண்டும்? ஏன் நீங்கள் அந்தப் புத்தகத்தையே பார்த்து விடுங்களேன்! 

செல்வங்கள் எல்லாம் இலவசமாகக் கொட்டிக் கிடக்கிறதே! 

அதன் இணைப்பு கீழே இடப்பட்டிருக்கிறது. அந்த இணைப்பை அழுத்தி அந்தப் புத்தகத்தையே நீங்கள் பார்த்து விடலாம்.

குடை ஒன்றின் சுயசரிதை

மேலுள்ள இணைப்பின் வழியாகப் புத்தகத்தை வாசிப்பதோடு சுயசரிதையையும் வாசித்து விடுங்கள். அதனைப் படித்துக் கொண்டு போகும் போது பழந்துணி ஒன்றும் தன் சுயசரிதையைச் சொல்லக் காண்பீர்கள். பிறகு பத்து ரூபாய் தாள் ஒன்று தன் சுயசரிதையைச் சொல்லக் காண்பீர்கள். பாழடைந்த கிணறு வேறு தன் கதையைச் சொல்கிறது.

வாசித்துப் பாருங்கள் குழந்தைகளே! 

நீங்களும் அது போல ஒன்றைக் கற்பனை பண்ணி எழுதித் தான் பாருங்களேன்!

அது உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்!

No comments:

Post a Comment