Sunday 16 August 2020

கொரோனா வைரஸ் குறித்த அரச தமிழ் துண்டுப்பிரசுரங்கள் - 26 -

 அரசாங்க இணைப்பைக் காண இங்கே அழுத்தவும்

‘கொரோனா வைரஸ் (கோவிட்-19)’-ஐப் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் உண்மைகள்

தவறு: நோயெதிர்ப்பு மருந்துகள் அல்லது மலேரியா எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு ‘கொரோனா வைரஸ்’-இற்குச் சிகிச்சை அளிக்கலாம்

உண்மை: ‘கொரோனா வைரஸ்’-இற்கான தடுப்பூசி அல்லது சிகிச்சை ஏதும் இதுவரை இல்லை.

இந்த வைரஸ்-இற்கான தடுப்பூசி ஒன்றைக் கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர், ஆனால் இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று கணிப்பீடுகள் கூறுகின்றன.

மூட்டு நோவு மருந்துகள், மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் உட்பட, ‘கொரோனா வைரஸ்’ நோய்க்குச் சிகிச்சையளிக்க உதவக்கூடிய வெவ்வேறு மருந்துகளின் பயன்பாட்டைப் பற்றி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். இந்த மருந்துகள் ‘கொரோனா வைரஸ்’ நோயைக் குணப்படுத்தாது, ஆனால், இந்த வைரஸ் தொற்று ஏற்படுபவர்களது எண்ணிக்கையையும், நோயின் தீவிரத்தையும் இவை குறைக்கக்கூடும்.

ஆகவே, தடுப்பூசிக்காகவோ, ‘கொரோனா வைரஸ்’ நோய்க்கான சிகிச்சைக்காகவோ வெறுமனே காத்துக்கொண்டு இருக்கக்கூடாது என்பது முக்கியம் - இதனால்தான் பொது சுகாதாரம் குறித்த இத்தனை நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது.

தவறு:‘கொரோனா வைரஸ்’-ஐ அதிவேகத்தில் பரப்புபவர்கள் குழந்தைகளே

உண்மை: பொதுவாக, நோய்க்கிருமிகளை அதிகம் பரப்புவர்கள் குழந்தைகள் என்று அறியப்படுகிறார்கள், சளி-சுரத்தைப் பொறுத்தவரை இது உண்மையாக இருக்கலாம், ‘கொரோனா வைரஸ்’-ஐப் பொறுத்தவரை அப்படித் தெரியவில்லை. குறைந்தபட்சமாக, இச் சமயம் வரை அப்படித் தெரியவில்லை. குழந்தைகள் மூலமாகத்தான் இந்த வைரஸ் பெருமளவில் பரவியுள்ளது என்பதைக் காண்பிக்கும் ஆதாரங்கள் உலகில் எங்கும் கிடையாது. இப்படி அறவே கிடையாது என்று நாம் அறுதியிட்டுச் சொல்லவில்லை. இது சாத்தியம். ஆனால், குழந்தைகள் ‘கொரோனா வைரஸ்’-ஐ அதிவேகத்தில் பரப்புபவர்கள் என்று இப்போது உள்ள ஆதாரங்கள் காண்பிக்கவில்லை.

தவறு: போதுமான மருத்துவ உபகரணங்களையும் பொருட்களையும் (செயற்கை சுவாசக் கருவிகள் (ventilators, முகக்கவசங்கள், சோதனைக் கருவிகள்) ஆஸ்திரேலியா-வினால் பெற இயலாது

உண்மை: நோயாளிகளுக்கும், குறிப்பாக, அவர்களைப் பராமரிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் நாங்கள் சொல்லும் ஒரே வார்த்தை - ‘ஆம்’ என்பதே. இந்தப் பெருநோயை எதிர்ப்பதற்குப் போதுமான மருத்துவ உபகரணங்கள் ஆஸ்திரேலியாவிடம் உள்ளன. இருப்பினும், கிடைப்பையும் தாண்டிய உலகளாவிய தேவை மற்றும் உற்பத்தித் திறன் ஆகிய காரணங்களை முன்னிட்டு நோய்ச் சோதனைக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் பொருத்தவரை ஒரு நெருக்கம் தற்போது இருக்கிறது.

தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் தொடர்ந்து நமக்கு வந்துகொண்டே இருக்கின்றன என்பதில் பணியாளர்கள் உறுதியான நம்பிக்கை வைக்கலாம், மற்றும் நோயாளிகள் இயலுமான சிறந்த பராமரிப்பைப் பெறுவார்கள் என்பதை இது குறிக்கும். உதாரணத்திற்கு, ‘தேசிய மருத்துவப் பொருள் கிடங்’(National Medical Stockpile)கில் 10 மில்லியன் (1 கோடி)- க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் உள்ளன. இந்தப் பெருநோய் பரவும் சமயத்தில் ‘தேசிய மருத்துவப் பொருள் கிடங்கு’ நன்கு நிரம்பியுள்ளதையும், நமது மருத்துவத் தொழிலர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பு சாதனங்கள் ஆஸ்திரேலியாவிடம் போதுமான அளவிற்கு இருப்பதையும் உறுதிப்படுத்த கூடுதல் முகக்கவசங்களைப் பெறுவதற்கு ஆஸ்திரேலியா செயல்பட்டுவருகிறது. உள்நாட்டு உற்பத்தித் திறனை அதிகரிப்பது இதில் உள்ளடங்கும்.

ஆஸ்திரேலியாவில் செயற்கை சுவாச சாதன வசதி கொண்ட மருத்துவமனைப் படுக்கைகள் 2,200 இருக்கும். கடந்த ஆறு வாரங்களில், மயக்கமருந்து இயந்திரங்களையும், மற்ற உபகரணங்களையும் வேறு காரணங்களுக்காகப் பிரயோகிப்பதன் மூலம் இப்போது நம்மிடம் 4,400 செயற்கை சுவாச சாதன வசதி கொண்ட மருத்துவமனைப் படுக்கைகள் உள்ளன, மற்றும் இதை 7,500 ஆக அதிகரிக்க நாம் திட்டமிட்டு வருகிறோம். ஏப்ரல் மாதத் துவக்கத்தில், செயற்கை சுவாச சாதன வசதி தேவையுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ‘கொரோனா வைரஸ்’ நோயாளிகளின் எண்ணிக்கை 20 ஆக இருந்தது.

அவசியப்படும் சோதனைகள் மட்டுமே செய்யப்படுவதை உறுதி செய்யும்பொருட்டு, நோய்ச் சோதனைத் தேவைப்பாட்டு வழிகாட்டல்களை மீள்மதிப்பீடு செய்வதற்காக ‘ஆஸ்திரேலியத் தொற்று நோய்த் தொடர்புவலை’ (Communicable Diseases Network Australia) தினசரி சந்திப்புகளை மேற்கொண்டுவருகிறது. 

தவறு: ‘கொரோனா வைரஸ்’ காரணமாக அதிகரித்துவரும் தேவைகளை ஆஸ்திரேலிய மருத்துவமனைகளால் சமாளிக்க இயலாது.

உண்மை: ‘கொரோனா வைரஸ்’-இற்கு எதிரான போரில் ஆஸ்திரேலிய அரசாங்க மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் கூட்டாக ஒன்று சேர்ந்துள்ளன. ‘கொரோனா வைரஸ்’-ஐ எதிர்க்க உதவுவதற்கு 34,000 மருத்துவமனைப் படுக்கைகளையும், 105,000 மருத்துவ ஊழியர்களையும் தேசிய அளவில் ஏற்பாடு செய்து கொடுப்பதற்காக வரலாறு காணாத ஒத்துழைப்பு ஒன்றில் ஆஸ்திரேலிய அரசாங்கமும், மாநில, எல்லைப்பகுதி அரசாங்கங்களும், தனியார் மருத்துவத் துறையும் ஒன்றாக இணைகின்றன.

அரசாங்க மருத்துவத் துறைக்கு உதவுவதற்காக, தனது மருத்துவ உபகரணங்கள், படுக்கைகள், பொருட்கள் மற்றும் பணியாளர்களை அளிப்பதன் மூலம் தனியார் மருத்துவத் துறையானது தனது மருத்துவ சேவைகளை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு அளிக்கும். 

‘தேசிய உடலியலாமைக் காப்பீட்டுத் திட்ட’(National Disability Insurance Scheme)த்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் உள்ள நீண்டகால நோயாளிகள், முதியோர் பராமரிப்பு நோயாளிகள் மற்றும் பொதுவான தேவைகள் உள்ள நோயாளிகள் ஆகியோரது தேவைகளுக்கும் இவை தொடர்ந்து ஆரரவுதவியாக இருந்துவரும்.    

இந்தப் பெருநோய் நீடிக்கும் காலத்தில் தேவைகளுக்கேற்ப நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்கு ஆஸ்திரேலியாவின் உலகத் தரம் வாய்ந்த சுகாதார முறைமைகளின் மூலவளங்கள் தயாராகவும் முழு நோக்கோடும் இருப்பதனை இந்தக் கூட்டு ஒத்துழைப்பு உறுதி செய்யும்.

தவறு: இரண்டு வார காலத் தடைஉத்தரவு ‘கொரோனா வைரஸ்’- இன் பரவலை நிறுத்திவிடும்.

உண்மை: இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, பிறகு அவற்றை நீக்கி சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவது ‘கொரோனா வைரஸ்’- இன் பரவலை நிறுத்தாது.

இரண்டு வார காலத்திற்கு மட்டுமான தடைஉத்தரவு என்பது, ‘கொரோனா வைரஸ்’- இன் கோரத் தாண்டவம் அநேகமாக முன்பு இருந்ததைவிட அதிதீவிரத் தாக்குதலுடன் மீண்டும் தலை தூக்கும் என்பதைக் குறிக்கும்.

மற்ற நாடுகள் செய்துள்ளதை போல ‘முழு அடைப்பு’ (blanket lockdown) ஒன்றை நாம் ஏன் விதிக்கவில்லை என்று சிலர் கேட்டுள்ளனர். இத்தாலி, ஸ்பெயின் மற்றும் இரான் போன்ற நாடுகள் மற்றும், இந்த நோய் வெடிப்புத் தோன்றிய சீனாவிலுள்ள வுஹான் போன்ற நகரங்கள் ஆகியவற்றை விட இந்த விடயத்தில் நாம் அதி துரிதமாக செயல்பட்டிருக்கிறோம் என்பது இதற்கான பதில் ஆகும்.

நடந்துகொண்டிருப்பது என்ன என்று இந்த நாட்டிலுள்ள சுகாதார வல்லுநர்கள் உணரும் வேளையில் ‘கொரோனா வைரஸ்’ ஏற்கனவே கட்டுப்பாடின்றியும், காட்டுத் தீ போலவும் பரவிக்கொண்டிருந்தது. இந்த நோயால் தீவிரமாய்ப் பாதிக்காப்பட்டிருந்தவர்களைச் சமாளிக்க இயலாமல் இந்த நாடுகளிலுள்ள மருத்துவமனைகள் திணறியதற்கு இதுவே காரணம்.

ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நாளும் புதிதாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையையும் நோய்ப்பரவல் எங்கு ஏற்படுகின்றன என்பதையும் நமது சுகாதார வல்லுநர்கள் ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகின்றனர். புதிய விதிமுறைகள் அல்லது கட்டுப்பாடுகளை எதையும் ஏற்படுத்தத் தேவைப்படும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பிறகு அவர்கள் பரிந்துரைகளை ஏற்படுத்துவார்கள். www.australia.gov.au எனும் வலைத்தளத்திற்குச் சென்று நடப்புநாளில் உள்ளக் கட்டுப்பாடுகள் யாவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 

தவறு: ஒவ்வொருவரையும் சோதிப்பது ‘கொரோனா வைரஸ்’-இன் பரவலை நிறுத்திவிடும்

உண்மை: ஒவ்வொருவரையும் சோதிப்பது ‘கொரோனா வைரஸ்’-இன் பரவலை நிறுத்தாது

எந்த ஒரு வைரஸ்-ஐயும் போல, ‘கோவிட்-19’ ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. அனைத்துவேளைகளிலும் சமூகரீதியாக விலகியிருப்பது, மற்றும் நீங்கள் சுகவீனமுற்றிருந்தால் வீட்டிற்குள் உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது ஆகியவற்றால் மட்டுமே இந்த வைரஸ்-இன் பரவலை நிறுத்த இயலும்.

அறிகுறிகள் உள்ள ஒருவருக்கு ‘கோவிட்-19’ இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கான சோதனையை மேற்கொள்வது இந்த நோய் பரவுவதைக் கண்டுபிடிக்கவும் பரவலைக் கட்டுப்படுத்தவும் நமக்கு உதவும். இந்த நோய் ஒருவருக்கு இருக்கிறது என்று தெரிந்தால், அந்த நபர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளலாம், மற்றும் அவர் யாரோடு தொடர்பில் இருந்தார் என்பதைக் கண்டுபிடித்து இந்த நோய் மேற்கொண்டு பரவுவதற்கான ஆபத்தை நாம் குறைக்கலாம். 

இருப்பினும், ‘கோவிட்-19’ உங்களுக்கு இல்லை என்று சோதனையில் தெரியவந்தால், இது ஏற்படுவதற்கான ஆபத்து உங்களுக்கு இல்லை அல்லது உங்களால் மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை என்ற அர்த்தம் அல்ல. ‘கோவிட்-19’-ஐ நீங்கள் எதிர்கொண்ட பிறகு, ஆனால் நோயறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு, உங்களுக்குக்‘கோவிட்-19’ இல்லை என்று சோதனை முடிவுகள் சொல்லலாம். ‘கோவிட்-19’ உங்களுக்கு இல்லை என்று சோதனை முடிவுகள் கூறிய அடுத்த நாளே ‘கோவிட்-19’ தொற்று உங்களுக்கு ஏற்படலாம். நல்ல சுகாதாரப் பழக்கங்களையும், சமூக விலகலையும் நீங்கள் பின்பற்ற வேண்டியது மிக முக்கியம் என்பதற்கும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர நீங்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்பதற்கும் இதுவே காரணம். ‘கோவிட்-19’-இன் பரவலை மட்டும் அல்லாமல் மற்ற நோய்களின் பரவலைத் தடுக்கவும், நமது சுகாதார சேவைகளின் மீது ஏற்படும் அழுத்தத்தினைக் குறைக்கவும் இது உதவும்.

தவறு: சோதனை உபகரணங்கள் துல்லியமானவை அல்ல

உண்மை: மிகவும் துல்லியமான ‘நியூக்ளியிக் அமில உருப்பெருக்கம் (போலிமெரேஸ் தொடர் வினை (PCR)’ (nucleic acid amplification (Polymerase chain reaction (PCR)) எனும் முறையைத் தற்போதைய ‘கோவிட்-19’ சோதனை பயன்படுத்துகிறது. இந்தச் சோதனையின்போது, சுகாதாரத் தொழிலர் ஒருவர் ஒரு நபருடைய தொண்டை மற்றும் நாசியில் இருந்து சிறிது ‘மாதிரி’(specimen)யை ஒத்தி எடுப்பார். தற்போது அனைத்து சோதனைக் கருவிப் பாகங்களும் பெரும்பான்மையாக ஐரோப்பா மற்றும் ஆசியாவில் தயாரிக்கப்படுகின்றன. மாநிலங்கள் மற்றும் எல்லைப்பகுதிகளிலும் அவற்றிற்கு இடையேயும் உள்ள பல சோதனைக் கருவிப் பாகங்களை வழங்குவோரும் ஆய்வுக்கூடங்களும் வெவ்வேறு பாகங்களைப் பயன்படுத்தும் அதே வேளையில் ஒரே மாதிரியான சோதனை முறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பது முக்கியமான விடயமாகும். வழங்கு-திறன் மற்றும் உற்பத்தித் திறனையும் பேரளவு தாண்டிய உலகளாவிய தேவை இருப்பதால் சோதனை சம்பந்தப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ‘சிகிச்சைத் தள நோயெதிர்ப்பி சோதனைகள்’ (point of care antibody tests) துல்லியமானவை அல்ல, ஆகவே, நோயறிவுக் காரணங்களுக்காக அவை பரிந்துரைக்கப்படுவதில்லை.

‘கொரோனா வைரஸ்’ சோதனைகளை மேற்கொள்வதற்கான வல்லமையையும் திறனையும் ஆஸ்திரேலியா கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தேவைப்படும் பொருட்களைப் பெறவும், இதற்கான மாற்றுவழிகளை ஆராயவும் ‘பொது சுகாதார ஆய்வுக்கூடத் தொடர்புவலை’ (Public Health Laboratory Network) மற்றும் வழங்குநர்களுடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் நெருக்கமாகச் செயலாற்றிவருகிறது.

‘கோவிட்-19’-இற்கு எதிரான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கைகளைப் பற்றித் தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்த வலைத்தளத்தினைத் தவறாமல் பார்த்துவாருங்கள்.

‘கோவிட்-19’-ஐப் பற்றி உங்கள் மொழியில் உள்ள பலவகைப்பட்டத் தகவல்கள் SBS-இடமும் உள்ளன. அரசாங்கத் தகவல்களை மொழிபெயர்க்க ‘மொபைல் தொலைபேசிப் பயன்பாடுக’( mobile phone apps)ளையும் ‘வலைத்தேடல் நீட்டிப்புக’(browser extensions)ளையும் நீங்கள் பாவிக்கலாம். உங்களுடைய தேவைக்கு ஏற்றது எது என்பதற்கான தேடலை மேற்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்திலுள்ள மேலதிகத் தகவல்களைப் பெற www.australia.gov.au எனும் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

No comments:

Post a Comment